Sunday, 21 July 2019

கதவம் திறக்கப் பாடியது -Tirunavukkarasar 5.1.274


 • மறைக்காட்டுக் கோயில் கதவம் குடமுழுகுச் செய்த நாளுக்குப் பின் திறக்கப்படாமல் பூட்டப்பட்டே இருந்தது. \ 1531 \ 5.1.265
 • மக்கள் ஒரு புழைவாயில் ஒன்றின் வழியாகச் சென்று வழிபட்டு வந்தனர். \ 1532 \ 5.1.266
 • இதனை அறிந்த ஞானசம்பந்தர் நாம் நேரே சென்று வழிபடக் கதவம் திறக்குமாறு பாடும்படி நாவுக்கரசரை வேண்டினார். \ 1533 \ 5.1.267
 • “பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ” என்று விளித்துத் கதவம் திறக்க வேண்டிப் பாடினார். \ 1534 5.1.268
 • மணிக்கதவம் திறந்து கொண்டது. கண்ட அனைவரும், ஞானசம்பந்தரும் நாவுக்கரசரைத் தொழுதனர். \ 1535 \ 5.1.269
 • இருவரும் அடியாருடன் உள்ளே சென்று வழிபட்டுத் தமிழ்மாலைகள் பாடினர். வெளியே வந்தனர். \ 1536 \ 5.1.270
 • கதவம் அடைக்கும்படிப் பாடவேண்டும் என்று ஞானசம்பந்தரை நாவுகரசு வேண்டினார். \ 1537 \ 5.1.271
 • ஞானசம்பந்தர் பாடினார். கதவம் காப்பிட்டுக்கொண்டது. \ 1538 \ 5.1.272
 • இருவரும் பதிகம் பாடினர். \ 1539 \ 5.1.273
 • அடியார் அனைவரும் வியந்து இருவரையும் தொழுதனர். இருவரும் மடத்துக்குச் சென்றனர். \ 1540 \ 5.1.274

பாடல்

1531 
பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில்
அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து
உரவக் கதவம் திருக்காப்புச் செய்த அந்நாள் முதல் இந் நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார்     5.1.265

1532 
தொல்லை வேதம் திருக்காப்புச் செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார் 5.1.266

1533 
ஆங்கு அப்பரிசை அறிந்து அருளி ஆழித் தோணி புரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத்
தேங்காது இருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர் 5.1.267

1534 
உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே
பண்ணினேரும் மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்  5.1.268

1535 
வேத வளத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம்
காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்தது ம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் 5.1.269

1536 
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும்
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி
என்புகரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார்     5.1.270

1537 
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திருமுலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என  5.1.271

1538 
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பமைந்த நுதல் காள கண்டர் அருளால் கடிதுடனே
திண் பொன் கதவம் திருக்காப்புச் செய்து எடுத்த திருப் பாட்டில் 5.1.272

1539 
அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார்
எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல்    5.1.273

1540 
அங்கு நிகழ்ந்தஅச் செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின்    5.1.274
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி