Sunday, 21 July 2019

படிக்காசு -Tirunavukkarasar 5.1.264


 • நாவுக்கரசும்  ஞானசம்பந்தரும் திருவீழிமிழலை சிவனை வழிபட்டுக்கொண்டு அங்குத் தங்கியிருந்த காலத்தில் பொன்னி ஆற்றில் நீர் இல்லாமல் உணவுத் தட்டுப்பாட்டால் உயிரினங்கள் தத்தளித்தன. மக்கள் வறுமையில் வாடினர். \ 1521 \ 5.1.255
 • திருவீழிமிழலை சிவன் இருவர் கனவிலும் தோன்றினார். \ 1522 \ 5.1.256
 • “வருந்த வேண்டா. உங்களை வழிபடுவோருக்கு அளிக்கப் படிக்காசு தருகிறோம்” என்றார். அவ்வாறே வழங்கினார். \ 1523 \ 5.1.257
 • விமானத்தின் கிழக்கில் ஞானசம்பந்தருக்கும், மேற்கில் நாவுக்கரசுக்கும் நாள்தோறும் படிக்காசு வைத்தார். அதனைக்கொண்டு இருவர் தம் அடியாரும் பசியாறி வந்தனர். \ 1524     \ 5.1.258
 • “எல்ல்லாரும் வாருங்கள்” என்று பறை சாற்றி அனைவருக்கும் சோறு வழங்கி வறுமையை இருவரும் போக்கிவந்தனர். \ 1525 \ 5.1.259
 • உமைப்பால் உண்ட ஞானசம்பந்தர் வாசியுடன் கூடிய காசு பெற்றார். நாவுக்கரசு வாசி இல்லாக் காசாக இருந்த்து. \ 1526 \ 5.1.260
 • இரண்டு மடத்துக்கும் வந்தவர்கள் இன்புற்று இருந்தனர். \ 1527 \ 5.1.261
 • பின்னர் வானம் பொழிந்து, வறுமை நீங்கியது. இருவரும் தமிழ்மாலை பாடினர். பிற ஊர்களுக்குச் சென்று வழிபடும் எண்ணம் கொண்டனர். \ 1528 \ 5.1.262
 • திருமறைக்காடு சென்றனர். \ 1529 \     5.1.263
 • கோயிலை வழிபட்டனர். \ 1530 \ 5.1.264

பாடல்

1521 
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின்
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால்    5.1.255

1522 
வையம் எங்கும் வற்கடம் ஆய்ச் செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும்
கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச்
செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் அருள் செய்வார்  5.1.256

1523 
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்ருளிக் குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்  5.1.257

1524 
விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறும் காசு படி வைத்து அருள நானிலத்தில்
எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும்   5.1.258

1525 
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார்  5.1.259

1526 
ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால்
தேசம் உய்ய உண்டவர் தாம் திரு மாமகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர்    5.1.260

1527 
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக்காசால்
ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள்
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில்    5.1.261

1528 
காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி
நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார்     5.1.262

1529 
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை கொண்டு
பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ் பதிகள்
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார்  5.1.263

1530 
மன்றல் விரவும் மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டுக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக் கோவும் அரசும் திரு முன்பு     5.1.264
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி