Friday, 19 July 2019

காவிரிக்கரைத் தலங்கள் -Tirunavukkarasar 5.1.194


 • அருள் கடலும் அன்புக் கடலும் கலந்தது போல் ஞானக்கன்றும் அரசும் சேர்ந்து கோயிலுக்குச் சென்றனர். \ 1451 \ 5.1.185
 • கோபுரத்தைப் பணிந்து, விமானத்தை வலம்வந்தனர். அப்போது அப்பரைப் பாடும்படிப் பிள்ளையார் வேண்டினார். அப்பரும் பாடினார். \ 1452 \ 5.1.186
 • பார் கொண்டு மூடி – என்னும் பதிகம் பாடினார். பின்னர் பிள்ளையார் மடத்துக்குச் சென்று தங்கியிருந்தார். \ 1453 \ 5.1.187
 • அப்போது காவிரிக்கரைத் தலங்கள் பலவற்றையும் வழிபட அப்பர் விரும்ப பிள்ளையாரும் உடன் செல்ல ஒப்புக்கொண்டார். \ 1454 \ 5.1.188
 • கோலக்கா, கருப்பறியலூர், புன்கூர், குறுக்கை, நின்றியூர், நனிபள்ளி, - சென்றனர். \ 1455 \ 5.1.189
 • செம்பொன்பள்ளி, மயிலாடுதுறை, பொன்னிக்கரைத் துருத்தி, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, கோடிக்கா, ஆவடுதுறை – சென்று பாடினர். \ 1456 \ 5.1.190
 • திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை, திருச்சந்த விருத்தம் – என்று செந்தமிழ்த் தொடைகள் பாடினர். \ 1457 \ 5.1.191
 • திருவிடைமருதூர், திருநாகேச்சுரம், பழையாறு, சத்திமுற்றம் – சென்று பாடினர். \ 1458 \ 5.1.192
 • சத்திமுற்றத்து மலைமகளுக்குத் தமிழ்மாலை சாத்தினார். \ 1459 \ 5.1.193
 • திருநல்லூருக்கு வா – என்று சிவன் அருள் செய்தான். \ 1460 \ 5.1.194

பாடல்

1451 
அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்
தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே
5.1.185

1452 
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக்கோபுரத்தைப் பணிந்து ள்புக்கு
விண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி
5.1.186

1453 
பெரிய பெருமாட்டியுடன் தோணிமீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று
பரிவுறு செந்தமிழ் மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள்போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில்
5.1.187

1454 
அத் தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்
மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்
5.1.188

1455 
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்பு கொண்டு
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திரு நின்றியூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்
5.1.189

1456 
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச்செம்பொன்பள்ளி பாடிக்
கா யரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப் பதி பலவும் பணிந்து போந்தே
றும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணிந்து ஆவடுதண்துறையைச் சார்ந்தார்
5.1.190

1457 
ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத்தாண்டகம் முன்அருளிச் செய்து
மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு
பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித்தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவினோடும்
பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிவுறுகைத் தொண்டு போற்றிச் செய்வார்
5.1.191

1458 
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடைமருதைச் சென்று எய்தி அன்பினோடு
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்
பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ் மாலை புனைந்து போந்து
செறி விரை நன்மலர்ச்சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்திமுற்றத்திற் சென்று சேர்ந்தார்
5.1.192

1459 
சென்று சேர்ந்து திருச் சத்திமுற்றத்து இருந்த சிவக்கொழுந்தை
குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும்
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து தமிழ்மொழி மாலைகளும் சாத்துவார்
5.1.193

1460 
கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என்று அலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று
நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில்
வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்
5.1.194
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி