Thursday, 18 July 2019

சிவ இலச்சினை Tirunavukkarasar 5.1.154


 • சமணம் தழுவியிருந்த பல்லவ அரசனும் மனம் மாறி, நாவுக்கரசரைப் பணிந்து, சைவனாக மாறினான். \ 1411 \ 5.1.145
 • (இந்தப் பல்லவன் பெயர் காடவன். / காடவர் கோமான்) காடவன் பாடலிபுரத்தில் இருந்த அமண் பள்ளிகளையும், பாழிகளையும் இடித்துவிட்டுக் குணபரவீச்சரம் கட்டினான். \ 1412 \ 5.1.146
 • நாவுக்கரசர் ஊர் ஊராகச் சிவன் கோயில் பலவற்றிற்கும் சென்று தமிழ்மாலை பாடினார். \ 1413 \ 5.1.147
 • திருவெண்ணெய் நல்லூர், திருவாமத்தூர், திருக்கோவலூர், – சென்று பாடினார். \ 1414 \ 5.1.148
 • பெண்ணாகிடம் தூங்கானை மாடம் சென்று பாடினார். \ 1415 \ 5.1.149
 • அமண் சமயத் தொடர்பு கொண்டு வாழ்ந்த உடலோடு வாழத் தரியேன். சிவ இலச்சினை இட்டு அருளவேண்டும் என்று சிவனை வேண்டிப் பாடினார். \ 1416 \ 5.1.150
 • பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம்” – என்று தொடங்கி விருத்தம் பாடினார். \ 1417 \ 5.1.151
 • சிவபூதம் ஒன்று தோன்றி, அவர் தூங்கும்போது, அவரது இரண்டு தோள்களிலும் சூலம், விடை ஆகிய இலச்சினைகளைப் பதித்துச் சென்றது. \ 1418     \ 5.1.152
 • தோளில் பொறிக்கப்பட்டிருந்த சிவ-இலச்சினை கண்டு மகிழ்ந்தார். \ 1419   \ 5.1.153
 • பின்னர் திருவரத்துறை, திருமுதுகுன்றம் சென்று வழிபட்டுத் தமிழ் பாடினார். \ 1420 \ 5.1.154

சான்று - செய்திகள்
 • மதம் மாறிய பல்லவன் ஐயடிகள் காடவர் கோன்
 • வைணவர் தோளில் சங்கு, சக்கரம் பொறித்துக்கொள்வது போல, சைவர் சூலம், காளை ஆகிய சின்னங்களைப் பொறித்துக்கொண்டனர்.
 • பெண்ணாடகம் என்று இக்காலத்தில் வழங்கப்படும் ஊரின் பெயர் பெண்ணாகிடம்.
 • பாடலிபுரம் என்பது இப்போதுள்ள கடலூரின் பகுதியாக விளங்கும் பாடலீசுரர் கோயில் இருக்கும் ஊர். திருப்பாதிரிப் புலியூர் என்றும் இது வழங்கப்படுகிறது. \ திருநாவுக்கரசர் மருணீக்கியாராக, தருமசேனர் பட்டம் பெற்று வாழ்ந்தது இந்தப் பாடலி என்று கருதுவது சரியா - என்று எண்ணவேண்டி உள்ளது. 
 • இவரது அக்கா தொண்டு செய்த கோயில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்
பாடல்

1411 
புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து
வல் மணர் தமை நீத்து மழ விடையோன் தாள் அடைந்தான் 5.1.145

1412 
வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமண்பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான்    5.1.146

1413 
இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல்
பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச்
சொல் நாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார்    5.1.147

1414 
திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும்
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப்
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார்   5.1.148

1415 
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்
சீர் உடை அந்தணர் வாழும் செழும்பதியின் அகத்து எய்தி
வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப்
பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார் 5.1.149

1416 
புன்நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன்
தன்னுடனே உயிர் வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார்  5.1.150

1417 
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து
முன் ஆகி எப்பொருட்கும் முடிவாகி நின்றானைத்
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை
நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும் 5.1.151

1418 
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற
ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவ பூதம்
மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திருத்தோலில்
சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த 5.1.152

1419 
ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத்
தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து
தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால்
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார்     5.1.153

1420 
தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடி பரவிப்
பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள்
பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத்துறையும்
தேங்காவின் முகில் உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து    5.1.154
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி