Thursday, 18 July 2019

திருவதிகையில் Tirunavukkarasar 5.1.144


 • தமிழ்மாலைகள் பாடிக்கொண்டு திருவதிகை செல்ல எண்ணினார். \ 1401 \ 5.1.135
 • திருமாணிக் குழியில் தமிழ்மாலை பாடினார். கெடில ஆற்றைக் கடந்து சென்றார். \ 1402 \ 5.1.136
 • சமணர் செய்த கொடுமைகளிலிருந்து மீண்டவர் வருவது எண்ணி திருவதிகை மக்கள் ஊரை மங்கலக் கோலம் ஆக்கினர். 1403 \ 5.1.137
 • தோரணம் கட்டினர். குலையுடன் பாக்கு, வாழைமரம் கட்டினர். திண்ணைகளை மெழுகி மாலைகளைத் தொங்க விட்டனர். \ 1404 \ 5.1.138
 • இசை முழக்கினர். மணப்பொடியும் பூவும் தூவினர். \ 1405 \ 5.1.139
 • வெண்ணீற்று மேனியுடன் பதிகம் பாடிக்கொண்டு தெருவில் சென்றார். \ 1406 \ 5.1.140
 • கண்டவர்கள் தலைமேல் கை கூப்பித் தொழுதனர். இவருக்குத் தீங்கு செய்யச் சமணர்க்கு எப்படித்தான் மனம் வந்ததோ எனப் பேசிக்கொண்டனர். \ 1407 \ 5.1.141
 • கோயிலுக்குள் சென்றார். \ 1408 \ 5.1.142
 • உன்னை மறந்திருந்தேனே – என்று தாண்டகம் பாடினார். \ 1409 \ 5.1.143
 • பல தமிழ்பாட்டுகள் பாடிப் பணி செய்துகொண்டிருக்கும் நாளில் ... \ 1410 \ 5.1.144
பாடல்

1401 
மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி
வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால்
உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள்
செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார்  5.1.135

1402 
தேவர் பிரான் திரு மாணிக்குழியும் தினை நகரும்
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப்
பூவலர் சோலை மணம் அடி புல்லப் பொருள் மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடிலத்தைக் கடந்து அணைந்தார்     5.1.136

1403 
வெஞ் சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள
மஞ்சு இவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் 5.1.137

1404 
மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி
இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும்
தணிவில் பெருகு ஒளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் 5.1.138

1405 
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார்
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப்
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே  5.1.139

1406 
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும்
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப்
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல்
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே     5.1.140

1407 
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால்
மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம்
உண்டாயி வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும்
தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே    5.1.141

1408 
இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல
அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவளச்
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே    5.1.142

1409 
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே
எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று
தம் பரிவால் திருத்தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்     5.1.143

1410 
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத்
தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக்கரசு மனம்
பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பல பாடிப் பணி செயும் நாள் 5.1.144
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி