Monday, 15 July 2019

தருமசேனர் என்னும் பெயருடன் சமணத் தலைவர் ஆனது 5.1.40 • வேந்தனுக்காகப் போரிடப் போய் வென்ற பின்னர் கலிப்பகையார் மாண்டார். மாண்டதற்குக் காரணம் திலகவதியாரை மணம் பேசி முடித்த ஊழ்வினைத் தோடமே என்று ஊரார் பேசிக்கொண்டதைத் திலகவதியார் கேட்டார். \ 1301 \ 5.1.31
 • தந்தையும் தாயும் கலிப்பகையாருக்குத் தன்னை மணம் முடித்துத் தர ஒப்புக்கொண்டமையால் அவரே என் கணவர் – அவர் உயிரோடு என் உயிரையும் துறப்பேன் – என்று கூறித் திலகவதியார் தன் உயிரைத் துறக்க முனைந்தார். அப்போது அங்கு வந்தவர் அடிகளில் மருள்நீக்கியார் விழுந்தார். \ 1302 \ 5.1.32
 • நீ இறந்தால் நானும் உன்னுடன் இறப்பேன் என்று மருண்நீக்கியார் கூறினார் \ 1303 \ 5.1.33
 • தம்பி உயிர் வாழவேண்டும் என்பதற்காகத் திலகவதியார் தன் முடிவை மாற்றிக்கொண்டு அணிகலன்களைத் துறந்து அருள் மேற்கொண்டு மனையிலேயே தவம் புரிந்துகொண்டு வாழ்ந்து வந்தார் \ 1304 \ 5.1.34
 • உணவு வழங்கும் அறச்சாலை, தண்ணீர்ப் பந்தல் முதலான அறங்களைச் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார் \ 1305 \ 5.1.35
 • காடு வளர்த்தல், குளம் வெட்டல், நாவலர்க்கு நல்கல் முதலான ஈகை அறம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார் \ 1306 \ 5.1.36
 • நில்லா உலகையையும், நிலையா வாழ்க்கையையும் எண்ணி, மருண்நீக்கியார் கொல்லாமை மறைந்து உறையும் அமணர் / சமணர் சமயத்தைத் தழுவினார். 1307 \ 5.1.37
 • பாடலிபுத்திரம் சென்றார். சமணர் பள்ளியில் சேர்ந்தார். வீடு பேறு அறியும் நெறி இது என அவர்களுக்கு எடுத்துரைத்தார். \ 1308 \ 5.1.38
 • சமணர் நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்து சிறந்து விளங்கிய மருள்நீக்கியாருக்குச் சமணர்கள் ‘தருமசேனர்’ என்னும் பட்டம் கொடுத்துப் போற்றிவந்தனர். \ 1309 \ 5.1.39
 • அங்கிருந்த சமணர் பலரைக் கருத்துப் போரில் வென்று சமணர் சமயத்தின் தலைவர் ஆனார். \ 1310 \ 5.1.40

பாடல்

1301 
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய்
அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத்
தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச்
செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார்     5.1.31

1302 
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள்
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய
வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார்     5.1.32

1303 
அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன்
என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் 5.1.33

1304 
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி
இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் 5.1.34

1305 
மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித்
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க்
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால்
ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார்  5.1.35

1306 
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்
யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார்  5.1.36

1307 
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின்
நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்     5.1.37

1308 
பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்
கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார்   5.1.38

1309 
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்
பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத்
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்
தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார்     5.1.39

1310 
அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில்
சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண்
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய
வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார் 5.1.40
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி