Monday, 15 July 2019

திருநாவுக்கரசர் பிறந்த நாடு 5.1.10


திருநாவுக்கரசர் பிறந்த திருமுனைப்பாடி நாடு
 • வாகீசர் எனப் போற்றப்படும் திருநாவுக்கரசர் பெருமைகளைப் போற்றத் தொடங்குகிறேன். \ 1271 \ 5.1.1
 • சிவனை வணங்கும் குடிமக்களைக் கொண்டது திருமுனைப்பாடி நாடு \ 1272 \ 5.1.2
 • பெண்ணை ஆறு வளமாக்கிக்கொண்டிருக்கும் நாடு இது \ 1273 \ 5.1.3
 • நீர் வளமும் நில வளமும் நிறைந்நத நாடு அது \ 1274 \ 5.1.4
 • கருப்பஞ்சாறும் தேனும் கலந்தோடும் நாடு அது \ 1275 \ 5.1.5
 • யானைக்கை போல் தார் ஈன்ற வாழை, குதிரைக் குடுமி போல் நெற்கதிர், தேர் போல் உழவர் வண்டிகள், போர் வீரர் ஆரவாரம் போல் உழவர் முழக்கம் – இவற்றுடன் அந்த ஊரின் மருத நிலம் போர்க்களம் போல் தோன்றிற்று \ 1276 \ 5.1.6
 • பாக்கு மரத்தில் உள்ள பாக்குக் குலைகள் மகளிர் கழுத்தணி போல் காணப்படும் \ 1277 \ 5.1.7
 • கடலில் படியும் மேகம் போல் குளங்களில் எருமைகள் படியும் \ 1278 \ 5.1.8
 • நீரில் தோன்றும் நிலாவானது நிலமகள் நிலாமகளை அணைப்பது போல் தோன்றும் \ 1279 \ 5.1.9
 • மாடங்களில் மகளிர் மயில் கூட்டம் போல் தோன்றுவர் \ 1280 \ 5.1.10

பாடல்

1271 
திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ
வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ்
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில்
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்     5.1.1

1272 
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச்
சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள்
மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு  5.1.2

1273 
புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர்
இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும்
வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும்   5.1.3

1274 
காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன்
பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு
சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்
மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை   5.1.4

1275 
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்
புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப
உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும்   5.1.5

1276 
கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட
மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப்
பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க
நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம் 5.1.6

1277 
நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல்
பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித்
துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை
நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால் 5.1.7

1278 
மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும்
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்
வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும்
கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி     5.1.8

1279 
மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச்
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப
மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை
வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை  5.1.9

1280 
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்
பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும்
வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி
மயில் குலமும் முகில் குலமும் மாறாட மருங்கு ஆடும்  5.1.10

 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல் 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி