Friday, 26 July 2019

பெரியபுராணம் – குலச்சிறையார் – Kulachiraiyarகுலச்சிறை நாயனார்
 • பாண்டி நாட்டில் நெல், கரும்பு, பாக்கு விளையும் வளம் மிக்க ஊர் மணமேற்குடி. \ 1700 \ 5.2.1
 • அந்த ஊரில் பெருநம்பி என்று போற்றப்படுபவர் குலச்சிறையையார். \ 1701 \ 5.2.2
 • யாராய் இருந்தாலும் வணங்கி அன்போடு பேசுபவர். \ 1702 \ 5.2.3
 • குலம் கெட்டவர் ஆனாலும், சிவனடியார் எனில் பணிபவர். \ 1703 \ 5.2.4
 • தீயவர் ஆனாலும், சிவனடியார் எனில் பணிபவர். \ 1704 \ 5.2.5
 • பலர் வந்தாலும், ஒருவர் வந்தாலும் அமுது ஊட்டுபவர். \ 1705 \ 5.2.6
 • விபூதி பூசிக்கொண்டு, கோவண ஆடையுடன் ஐந்தெழுத்து ஓதுபவர். \ 1706 \ 5.2.7
 • தென்னவன் நெடுமாறனுக்கு அமைச்சர். \ 1707 \    5.2.8
 • பாண்டிமாதேவி விரும்பும் தொண்டுக்கு இவர் மெய்த்தொண்டர். \ 1708 \ 5.2.9
 • அமணர் பொய்யை அழித்து, தென்னாடு திருநீற்று நாடாக விளங்க, ஞானசம்பந்தரை அழைத்து வந்தவர். \ 1709 \ 5.2.10
 • வாதில் தோற்ற அமணரைக் கழுவில் ஏற்றி அழித்தவர். இவரைப் போற்றிய நான் இனி மிழலைக் குறும்பரைப் போற்றுவேன். \ 1710  \ 5.2.11

திருச்சிற்றம்பலம்
பாடல்

1700 
பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச்
செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல்
துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மணமேற்குடி   5.2.1

1701 
அப்பதிக்கு முதல்வர் வன்தொண்டர் தாம்
ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய
செப்பரும் சீர்க் குலச்சிறையார் திண்மை
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர்     5.2.2

1702 
காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே
வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் 5.2.3

1703 
குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில்
செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார் 5.2.4

1704 
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில்
தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார்    5.2.5

1705 
பண்பு மிக்கார் பலராய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார்    5.2.6

1706 
பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து
ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை
ஓது நா வணக்கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார்  5.2.7

1707 
இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த்
தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ்
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார்
ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார்     5.2.8

1708 
ஆய செய்கையர் ஆயவர் ஆறணி
நாயனார் திருப் பாதம் நவின்று உளார்
பாய சீர் புனை பாண்டி மா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார்     5.2.9

1709 
புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும்
தென்னர் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்   5.2.10

1710 
வாதில் தோற்ற அமணரை வன் கழுத்
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர் தாள்     5.2.11

திருச்சிற்றம்பலம்
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.02. குலச்சிறை நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி