Saturday, 27 July 2019

பெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – Karaikal Ammaiyar 1730


புனிதவதி
  • அறநெறி வணிகர்கள் குலவி வாழும் ஊர் காரைக்கால். \ 1722 \ 5.4.1
  • கப்பல்கள் பல வரும் காரைக்கால் வணிகர்களின் தலைவன் தனதத்தன். அவனுக்கு மகளாகப் பிறந்தவர் புனிதவதியார். \ 1723 \ 5.4.2
  • புனிதவதியார் இளமையிலிருந்தே சிவத்தொண்டில் ஈடுபட்டார். \ 1724 \ 5.4.3
  • உறவினர் பாராட்ட வளர்ந்தார். \ 1725 \ 5.4.4
  • வண்டல் விளையாட்டிலும் சிவனை நினைத்தார். சிவத்தொண்டர் வரின் தொழுவார். \ 1726 \ 5.4.5
  • பருவம் வந்ததும் இவளுக்கு மணம் பேசத் தொடங்கினர். \ 1727 \ 5.4.6
  • நாகை வாழ் நிதிபதி மகனுக்கு மகள் கேட்டுக் காரைக்கால் வந்தனர். \ 1728 \ 5.4.7
  • வந்தவர்கள், நிதிபதி மகன் தத்தனுக்குப் புனிதவதியாரை மணம் முடித்துத் தருமாறு தனதத்தனை வேண்டினர். \ 1729 \ 5.4.8
  • தனதத்தன் ஒப்புக்கொண்டார். மகிழ்ந்த நிதிபதி திருமண ஏற்பாடுகளைச் செய்துவந்தார். \ 1730 \ 5.4.9

பாடல்

1722 
மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்
ஊனம் இல் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக்
கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்    5.4.1

1723 
வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்
அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்  5.4.2

1724 
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின்
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத்
தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்   5.4.3

1725 
பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம்
செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால்
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்   5.4.4

1726 
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள்
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதக் கொள்கையினில் குறுகினார் 5.4.5

1727 
நல்ல ன உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி 1
மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால்
இல் கவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்
தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார்  5.4.6

1728 
நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண்
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத்
தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் 5.4.7

1729 
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து
தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த
பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்     5.4.8

1730 
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச் சென்று
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப்
பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும்
சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான் 5.4.9
  • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.04. காரைக்கால் அம்மையார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி