Tuesday, 30 July 2019

பெரியபுராணம் \ திருஞானசம்பந்தர் \ GnanaSampantar1920


திருவாதிரை நாளில் ... 
 • மடை, வயல் முதலான இடங்களில் வளம். இடங்களில் முனிவர். 1911
 • பிரமபுரம், வேணுபுரம், புகலி, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், முன்வருபுறவம், சண்பைநகர், (சீர்)காழி, கொச்சை, வயம், கழுமலம் – இப்படி 12 பெயர் கொண்டது அந்த ஊர். 1912 
 • இந்த ஊரில் அந்தணர் குடியில், கவுணியர் கோத்திரத்தில், சிவபாத இருதயர் என்பவர் இருந்தார். அவர் தவம் செய்யும் இயல்பினர். 1913  
 • அவர் மனைவி பகவதி என்பவர் கணவன் கருத்தறிந்து நடப்பவர். 1914    
 • அவர்கள் சிவநெறி பாலிக்கும் தன்மையராய் வாழ்ந்து வந்தனர். 1915 
 • அக்காலத்தில் சமணர், சாக்கியர் (பௌத்தர்) கை ஓங்கியிருந்தது. 1916
 • பர சமயங்களை விலக்கி, சைவத்தை நிலைநாட்ட ஒரு மகனைப் பெறவேண்டும் என்று தவம் செய்தார். 1917  
 • தோணிபுர நாச்சியார் அருளால் பகவதி வயிற்றில் கரு தோன்றியது. 1918
 • இறைவனைப் போற்றி இன்புற்றார். 1919
 • சூரியன் முதலான கோள்கள் உச்சத்தில் இருக்கும்போது திருவாதிரை நாளில் ... 1920 

பாடல்

1911 
மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம்
புடை எங்கும் மலர்ப்பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவு
கிடை எங்கும் கலைச் சூழல் கிளர் எங்கும் முரல்அளிகள்
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி   6.1.13

1912 
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப்
பொருவில் திருத் தோணிபுரம் பூம்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம்
பரவு திருக்கழுமலம் ஆம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்     6.1.14

1913 
அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை
கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்
செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத இருதயர் என்று 
இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்   6.1.15

1914 
மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு
பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார்
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்  6.1.16

1915 
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார்
அரவு அணிந்த சடை முடியார் அடி லால் அறியாது
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் 6.1.17

1916 
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம் மிகுந்த
ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால்
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு
ஏதம் இல் சீர் சிவபாத இருதயர் தாம் இடர் உழந்தார்     6.1.18

1917 
மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்
அனைய நிலை தலை நின்றே ஆய சேவடிக் கமலம்
நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும்
புனை மணிப் பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்    6.1.19

1918 
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித்
திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக்
கருத்து முடிந்து இடம் பரவும் காதலியார் மணி வயிற்றில்
உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக 6.1.20

1919 
ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல்முறைச் சடங்கு
நாள் உடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக்
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வு று நாள்   6.1.21

1920 
அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்   
திருக் கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பர சமயத்
தருக்கு ஒழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க   6.1.22
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 6.01. திருஞானசம்பந்தசுவாமிகள் புராணம் - முதல் பகுதி- 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி