Tuesday, 30 July 2019

பெரியபுராணம் \ திருஞான சம்பந்தர் \ GnanaSampantar 1910


கழுமலம்
 • வேதம், சைவம் தழைக்க வாழ்ந்த புகலித் திருஞான சம்பந்தரைப் பரவுவாம். \ 1899
 • வளவரின் பொன்னி நாட்டில் கழுமலம் என்னும் மூதூர். \ 1900  
 • சோலை சூழ்ந்த இந்த ஊர் எப்போதும் கடலில் மிதப்பது போல் தோன்றும். \ 1901 
 • ஊழி வெள்ளத்தில் மிதந்த இந்த ஊர் கடல் கடையும்போது நிறுத்தப்பட்ட மந்தர மலை போலக் காணப்பட்டது. \ 1902
 • வயல்களுக்கு இடையே தோன்றும் இந்த ஊர் கடலில் பூத்த தாமரை போல் காணப்பட்டது. \ 1903  
 • இரவில் ஓமப் புகை, பகலில் திருநீற்றுக் கோலத்து மக்கள் – என்று இவ்வூர் காட்சி தந்தது. 1904
 • வயலில் தாமரை தோன்றுவதாலும், சோலையில் பூவிலிருந்து தேன் ஒழுகுவதாலும் இந்த ஊர் வேள்விச்சாலை போல் காணப்பட்டது. 1905
 • இரவில் தோன்றும் மதியம் போல் காணப்பட்டது. 1906
 • வண்டுகள் இசை பாடும். 1907
 • வடமீன் போல் கற்புள்ள மகளிர் பொலியும் மாடங்கள் அங்கு இருந்தன. 1908
 • வேதம் ஓதும் சிறுவர் கிண்கிணி ஒலிப்ப அங்குச் சிறுதேர் உருட்டுவர். 1909
 • அங்குள்ள மாடங்கள் இரவில் விண்மீன்கள் போலத் தோன்றும். 1910  

பாடல்

1899 
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்    6.1.1

1900 
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம்
மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர்
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால்
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர்   6.1.2

1901 
அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே
செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ
ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே    
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால்     6.1.3

1902 
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள்
விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள்
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில்
வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால்  6.1.4

1903 
வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த
தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால்
களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி
இளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல     6.1.5

1904 
உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும்
கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்து
அளந்து அறியாப் பலூழி ஆற்றுதலால் அகல் இடத்து
விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை     6.1.6

1905 
பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில்
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய்
நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர்
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால் 6.1.7

1906 
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம்
சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப்
பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி
மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால்   6.1.8

1907 
காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும்
தாமரையும் புல்லிதமும் தயங்கிய நூலும் தாங்கித்
தூமரு நுண் துகள் அணிந்து துளி வருகண்ணீர் ததும்பித்
தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால் 6.1.9

1908 
புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும்
கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின்
மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள்  6.1.10

1909 
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும் 
பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப
ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும்
வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு 6.1.11

1910 
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம்
தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல்
உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால்    
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம் 6.1.12
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 6.01. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - முதல் பகுதி - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி