Sunday, 28 July 2019

பெரியபுராணம் \ அப்பூதி அடிகள் \ Apputhi Adigal \ 1810


அறிமுகம்
 • சிவத் தொண்டால் இம்மையிலும் பிழைக்கலாம் என்று தெளியக் காட்டிய திருநாவுக்கரசு பெயரை நான் எழுத, நீர் அவரை வேறொருவர் பெயர் என்று சுடுசொல் சொல்கிறீர். \ 1801 \ 5.5.14
 • கடலில் கல் மிதப்பப் பிழைத்து வந்த அவரை அறியாதவர் உளரோ? சிவ வேடத்துடன் இவ்வாறு சொன்னீர். நீர் எங்கு வாழ்கிறீர்? நீர் யார்? என அப்பூதி அடிகள் சினத்துடன் வினவினார். \ 1802 \ 5.5.15
 • சூலை நோய் தீர்ந்து வந்த சிறுமையேன் யான் – என்றார் நாவுக்கரசர். \ 1803 \    5.5.16
 • திருநாவுக்கரசு தன்னை அறியும்படி அப்பூதி அடிகளுக்குச் சொல்ல, அப்பூதி அடிகள் மெய் சிலிர்த்து, தலைமேல் கை குவித்து, நாவக்கரசர் அடிகளில் வீழ்ந்தார். \ 1804 \ 5.5.17
 • நாவுக்கரசு அவரை வணங்கி, தம் கைளால் அவரைத் தூக்கினார். தம் செல்வத்தை இழந்தவர் மீண்டும் பெற்றது போல் மகிழ்ந்தார். களிப்பில் கூத்தாடினார். \ 1805 \ 5.5.18
 • மனையில் உள்ளவரகளுக்கும் தெரிவித்தார். சுற்றத்தாரை அழைத்துவந்தார். \ 1806 \ 5.5.19
 • வீட்டிற்குள் அழைத்துச் சென்று திருவடிகளைக் கழுவிப் பூ இட்டு உள்ளம் பூரித்தார். \ 1807 \ 5.5.20
 • இருக்கையில் அமரச் செய்தார். “எம் இல்லத்தில் அமுது செய்ய வேண்டும்” என்று வேண்டினார். நாவுக்கரசும் ஒப்புக்கொண்டார். \ 1808 \ 5.5.21
 • பேறு பெற்றோம் என்றார். மனைவி திரு அமுது ஆக்கினார். \ 1809 \ 5.5.22
 • வாழைக் குருத்து கொண்டுவர, தன் மகன் மூத்த திருநாவுக்கரசை அனுப்பினார். \ 1810 \ 5.5.23

பாடல்

1801 
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பது என என் போல்வாரும் தெளியச்
செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுத
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி 5.5.14

1802 
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை
அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்
எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார் 5.5.15

1803 
திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர்
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேற
அருளும் பெரும் சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த
தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார்     5.5.16

1804 
அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம்
கர கமலம் மிசை குவியக் கண் அருவி பொழிந்து இழிய
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத்
தரையின் மிசை வீழ்ந்தவர் தம் சரண கமலம் பூண்டார்  5.5.17

1805 
மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு மறையோர்
முற்றவும் களி கூற முன் நின்று கூத்தாடி
உற்ற விருப்புடன் சூழ ஓடினார் பாடினார்     5.5.18

1806 
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்து ஆர்வம் உறப்
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார்   5.5.19

1807 
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதல் உடன்
முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும்
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார்     5.5.20

1808 
ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன்
வாசம் நிறை திரு நீற்றுக் காப்பு ஏந்தி மனம் தழைப்பத்
தேசம் உய்ய வந்த வரைத் திரு அமுது செய்விக்கும்
நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார்    5.5.21

1809 
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி
எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்று
மை திகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றே
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் 5.5.22

1810 
தூய நல் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழை
மேய பொன் குருத்துக் கொண்டுவா என விரைந்து விட்டார்    5.5.23
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.05. அப்பூதி அடிகள் நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி