Tuesday, 30 April 2019

குறுந்தொகை 310 Kurunthogai 310

பறவைகளின் ஒலி அடங்கிற்று
தாமரை கூம்பிற்று 
கானல் நிலத்தில் அமைதி
என்னைப் போல அவை மயங்கிக் கிடக்கின்றன
பொழுது போய்விட்டது

தோழி
அவரை எண்ணிக்கொண்டு இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஞாழல் மணக்கும் ஊரிலிருக்கும் அவருக்கு யாராவது சொன்னால் நல்லது

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 308 Kurunthogai 308

ஆண்யானை வாழையின் சுருண்ட குருத்தை வளைத்துத்
தன் முதுகைச் சொரிந்துகொள்ளும்
அதனால் வாழை வருந்துமே தவிர யானையின் அரிப்பு அடங்காது

அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும்  பெண்யானை ஆண்யானையைத் தடவிக்கொடுக்கும் 
ஆண்யானை நீர் கசியும் மண்ணில்  மகிழ்வாக உறங்கும்

இப்படிப்பட்ட நாட்டை உடைய மலைநாடன் அவன்
அவன் நட்புறவு ஒரு வகையில் தாழ்வுடையதே

தலைவி தோழியிடம் கூறுகிறாள்குறுந்தொகை 309 Kurunthogai 309

களை பறிப்போர்
விளைவயலில்
வண்டு உண்ணும்படி மலர்ந்திருப்பும் நெய்தல் மலர்களைக்
களைந்து எறிவர்

வீசிய இடத்தில்
பூவின் மணம்
நிலத்தில் ஊறிக்கொண்டு
அந்த நெய்தல் வாடிக் கிடக்கும்

"கொடியவர்கள் களைந்து எறிந்துவிட்டார்களே
வேறு இடத்துக்குச் சென்று பூப்போம்"
என்று எண்ணாமல் அந்த மலர்கள்
அதே வயலில் மீண்டும் பூக்கும்

அதுபோல

நீ
எனக்குக்
கொடுமைகள் பல செய்தாலும்
உன்னை விட்டு என்னால் வாழமுடியாது

தலைவி தலைவனிடம் கூறுகிறாள் Monday, 29 April 2019

காதணி ear ornaments

தமிழக மகளிர் காதணி 
காதின் மேல்பக்க அணிகலன்கள்


பெயர்களின் வட்டார வழக்கு மாறுபடலாம்

மகளிர் அணிகலன்

குறுந்தொகை 307 Kurunthogai 307

அவள் பிறை நிலாவிட்டம் சொல்லித் தன் கவலையை வெளிப்படுத்துகிறாள்

நிலாவே
உடைந்து கிடக்கும் வளையல் போல் வியப்பாகத் தோன்றித்
துன்பத்தைத் தோற்றுவிக்கிறாய்

அவர் என்னை மறந்துவிட்டாரா

அவர் துன்பம் தரும் காட்டு வழியில் சென்றுள்ளார்

தண்ணீர் கிடைக்காமல்
பெண்யானை வருந்துவதைப் பார்த்து
ஆண்யானை
யா மரத்தைக் குத்திப் பிளந்து
அதன் நாரைப் பெண்யானைக்குச் சுவைக்கத் தந்துவிட்டு
ஆண்யானை தன் ஈரக் கைகளைச் சுவைத்துக்கொள்ளும்
காட்டு வழியில் சென்றுள்ளார்

என்னை அழ விட்டுவிட்டுச் சென்றுள்ளார்
என்ன செய்வேன்குறுந்தொகை 306 Kurunthogai 306

அவன் சேர்ப்பன்
பூத்திருக்கும் மாமரத்தில் வண்டு மொய்க்கும் கானல் நிலத்துச் சேர்ப்பன்

நெஞ்சே

அவனைக் கண்டாய்
அவனிடம் பேசு என்று சொன்னேன்

அவனிடம் நீ
மென்மையாகவோ
இனிமையாகவோ
அவன் விரும்பும்படியோ
பேசவில்லலை

நெஞ்சே

இப்போது அவனை மறந்துவிடு என்கிறேன்
இதையும் செய்யவில்லை
என்ன செய்வேன்

தலைவியின் கலக்கம் குறுந்தொகை 305 Kurunthogai 305

என் கண் அவரைப் பாரத்து எனக்குக் காமத் தீயை மூட்டிவிட்டது
அந்தக் காமத் தீ என்னைச் சுட்டெரிக்கிறது
எலும்பை உருக்குகிறது
நான் சென்று தழுவ முடியாத இடத்தில் அவர் இருக்கிறார்
அவர் என்னைக் கொண்டுசென்று என் துன்பத்தை நீக்கியபாடு இல்லை

குப்பையில் இரண்டு கோழிகள் சண்டையிட்டுக்கொள்ளும்
அதனை விலக்கிவிடுபவர் யாரும் இல்லை
உடலில் வலிமை இல்லாமல் தாமே அவை விலகிச் சென்றால்தான் உண்டு

என் காமமும் அப்படித்தான்
தானே தணிந்தால்தான் உண்டு
போக்குவார் யாரும் இல்லை

தலைவி தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 304 Kurunthogai 304

தண்ணீர் நிலத்தில்
திமிலில் செல்லும் பரதவர்
நீண்ட மூங்கிலில் உளியைக் கட்டி
மீன்களை எறிந்து வெட்டுவர்

அவர்கள் வெட்டும் ஒலியைக் கேட்டு
பூக்கள் நிறைந்த பகுதியில் இருக்கும் அன்னப் பறவைகள்
பறந்து ஓடும் துறை

கைதை வளர்ந்திருக்கும் துறை

அதன் துறைவன்

அவனிடம் ஒரு நட்பு
பகையைத் தரும் நட்பு

நண்பன் பகைவன் ஆகிறானே

தலைவி தன் தோழியிடம் கூறி வருந்துகிறாள் குறுந்தொகை 303 Kurunthogai 303

துறைவ

கழியில் இரை தேடி உண்ட குருகு
கடலலை ஒலி தாலாட்ட
அங்குள்ள தாழைமர மடல்களில்
உறங்கும் துறைவ

புன்னைமர நிழலில்
நண்டு விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு
என்னோடு இருக்கும்போது
நீ இல்லாததால் 
என் தலைவி
பசப்பு ஊர்ந்து காணப்படுகிறாள்
அவள் வளையல்கள் கழன்று விழுகின்றன

தோழி தலைவனிடம் கூறுகிறாள் குறுந்தொகை 302 Kurunthogai 302

தோழி
எனக்குத் தெளிவுபடுத்து
இது நல்லதா

ஊரே உறங்கும் நேரத்தில்
அவன் என் நெஞ்சில் மட்டும் வருகிறான்
நேரில் வரவில்லை

அதனால் ஏற்படும் துன்பத்தையும் தாங்க முடியவில்லை
சாகவும் மனம் வரவில்லை
இன்னும் அவனும் நானும் பிரியாமல் இருக்கிறோமே
அவன் வரும்போது நான் இல்லாவிட்டால் எப்படி

தோழி
சொல்

தலைவி தோழியை வினவுகிறாள் குறுந்தொகை 301 Kurunthogai 301

முரசு போல் அடிமரம்  கொண்டது பனைமரம்
அதன் மடலில் இருந்துகொண்டு கருவுற்றிருக்கும் அன்றில் நள்ளிரவில் அகவும்.

அவர் என்னை நாடி வரவில்லை
என்றாலும் அவர்  வரும்போது அவர் தேரின் மணியொஒலி கேட்பது போல் அன்றில் அகவும் ஒலி கேட்கும்.

தோழி
அதைக் கேட்டதும் என் கண்கள் தூக்கத்தை விட்டுவிட்டன

தலைவி தோழியிடம் கூறுகிறாள் மனித நேயம் | Sugi Sivam'...

மனித நேயம்
மங்கி மறைகிறதா
பொங்கிப் பெருகுகிறதா


Sunday, 28 April 2019

குறுந்தொகை 300 Kurunthogai 300

கூந்தலில் குவளை மணம்
வாயில் ஆம்பல் மணம்
தாமரைப் பொகுட்டு போல் மேனி நலம்
கொண்டவளே

உன்னைக் கைவிட்டு விட்டால் இந்த உலகமே என் கைக்குள் வருவதாயினும் உன்னைக் கைவிடமாட்டேன்.
நீ அஞ்ச வேண்டாம்

தன்னை ஏற்றுக்கொண்ட தலைவியைத் தலைவன் தேற்றல் குறுந்தொகை 299 Kurunthogai 299

தோழி
இது ஏன்

கடலலை மோதி மீன் மேயும் பறவைகள் திளைக்க இருக்கும் கானலில்
புன்னை மலர்கள் கொட்டிக் கிடக்கும் நிழலில்
இருவரும் புணர்ந்தபோது என் கொண்கனை நான் கண்ணில் கண்டேன்
அவர் சொல்லைக் காதில் கேட்டேன்
அவன் என்னைத் தழுவினான்
அதனால் என் தோள் நலம் பெற்றது

அது சரி
அவன் பிரிந்திருக்ககும்போது என் தோள் வாடுவது ஏன்

தலைவி தன் கவலையைத் தோழியிடம் தெரிவிக்கிறாள் குறுந்தொகை 298 Kurunthogai 298

தோழி தலைவன் நிலையைத் தலைவிக்குத் தெரிவிக்கிறாள்

அவன் நம் தெருவுக்கு மெல்ல மெல்ல வருகிறான்
ஏதோ சில சொற்களை இனிமையாகப் பேசுகிறான்
நாள்தோறும் இப்படி வந்து போகிறான்

தோழி

அவன் நோக்கத்தை நீ புரிந்துகொள்ள வேண்டும்

அகுதையின் தந்தை
குறி சொல்லும் அகவல் மகளிர்க்கு
பெண்யானைகளைப் பரிசாக வழங்கினான்

அதன் நோக்கம் வேறு

அவர்கள் குறி சொல்லும்போது அவனை நல்லவன் என்று பாடவேண்டும் என்பதாகும்

அதுபோல  நீ

அவனை நல்லவன் என்று நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் - என்பதாகும்குறுந்தொகை 297 Kurunthogai 297

அம்பைத் தீட்டி வில்லில் வைத்து வழியில் செல்வோரை எய்து கொள்ளை அடித்து மேட்டில்  குவித்துப் பதுக்கையாக்கி வைத்திருக்கும் வழி

என்றாலும்

நல்ல வழியில் எடுத்துரைத்து என்னவளை என்னுடன் என் ஊருக்கு அந்த வழியில் கொண்டு செல்வதே பொருளுடைய செயல் - என்று

 தலைவன் நினைக்கிறான்குறுந்தொகை 296 Kurunthogai 296

தோழி

துறைவனைக் கண்டால்
"உன் மனைவி வளையல் கழன்று வாடும்போது நீ அவளை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் தொடர்பு கொண்டிருத்தல் தகுமா"
என்று கடுமையாகக் கேட்காதே

புன்னை மரத்தில் இருக்கும் நாரை கழியில் உள்ள மீனைத் தின்று சலித்துவிட்டால் அருகில் வயலில் விளைந்திருக்கும் நெல்லை மேயும் ஊரின் தலைவன் அவன்

அந்த நாரை போலத்தானே அவன் நடந்துகொள்வான்

உலகியல் உணர்ந்த தலைவி கூறுகிறாள் குறுந்தொகை 295 Kurunthogai 295

தழையாடை புனைந்த ஆயத்தாருடன் விழாக்கோலம் பூண்டு நீ வந்தாய்
அங்கே ஒருத்தி வந்தாள்
அவள் ஒரு பசுவை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துபவள்
அவள் பெருநலக் குறுமகள்
பரத்தை
அவள் ஊருக்கெல்லாம் விழாக்கொண்டாட்டமாக மாறிவிட்டாள்

தலைவி தன் கணவனிடம் ஊடிக் கூறுகிறாள் குறுந்தொகை 294 Kurunthogai 294

கடலில் என்னுடன் விளையாடினான்
கானலில் என்னுடன் இருந்தான்
தொடலை மாலை அணிந்துகொண்டு விளையாட்டுத் தோழிமாரோடு தழூஉ ஆடினான்
ஏதோ புதியவன் போல வந்து என்னைத் திடீரெனத் தழுவினான்

இதனால் ஊராரின் அலர் தோன்றியது

அதன் பின்னரும் அவன் என்னை விட்டு அகலவில்லை
என் துடையை ஒட்டிக்கொண்டிருக்கும் தழையாடை போல என்னை ஒட்டிக்கொண்டிருக்கிறான்

இவற்றால் அவன் எனக்குத் தந்தது என்ன

என் தாய் என்னை எங்கும் செல்ல விடாமல் தன் அருகிலேயை காத்துக் கொண்டிருக்கும்படிச் செய்ததுதான்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 293 Kurunthogai 293

அரசன் ஆதி அருமன் நாட்டில் பனைமரம் மிகுதி
முதலில் கள் தந்து மக்களை மகிழ்விக்கும் பனைமரம் பின்னர் நுங்கு தந்து மகிழ்விக்கும்.

அதுபோல

அந்தப் பரத்தை என் கணவனை முதலில் மயக்குவாள்
பின்னர் இன்பம் தருவாள்

அதற்காக அவள் ஆம்பல் தழையால் செய்த தழையாடையைத் தன் தொடை அழகு தோன்றும்படி உடுத்திக் கொண்டு தெருவில் வருகிறாள்
நான் மனம் நொந்து வருந்துகிறேன்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 292 Kurunthogai 292

ஒருநாள் அவன் வந்தான்
என்னைப் பார்த்துச் சிரித்தான்
அதுமுதல் என் தாய் கண்ணுறங்கவில்லை
என்னை அப்படிப் பாதுகாக்கிறாள்

அவள் நரகத்துக்குச் செல்லட்டும்

அரிவை ஒருத்தி நீராட ஆற்றுக்குச் சென்றாள்
நீரில் மிதந்து வந்த மாங்காயை எடுத்துத் தின்றுவிட்டாள்

அது அரசன் நன்னனின் காவல் மரமான மாமரத்து மாங்காய் என்று அவளுக்குத் தெரியாது

காவல் மரத்து மாங்காயை உண்ட குற்றத்துக்காக நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதித்தான்

அந்தப் பெண்ணின் உறவினர்கள்
81 யானைகளையும்
அவள் எடைக்கு எடை பொன்னையும் தண்டமாகத் தந்து அவளைத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டினர்

அதனை ஏற்றுக்கொள்ளாமல் நன்னன் அவளைக் கொலை புரிந்தான்

பெண்கொலை புரிந்த குற்றத்துக்காக நன்னன் நரகம்  (நிரையம்) அடைந்தான்

பெண்ணின் இன்பத்துக்குத் தடை நிற்கும் தன் தாயும் நன்னன் போல் நரகத்துக்குச் செல்ல வேண்டும் என்பது மகள் தலைவியின் விருப்பம்

இதனைத் தலைவி தோழியிடம் சொல்கிறாள் குறுந்தொகை 291 Kurunthogai 291

மரத்தை வெட்டிச் சாய்த்துச் சுட்டு புனம் உருவாக்கினர்
அதில் விதைத்த தினை விளைந்திருந்தது
கொடிச்சி தன் கையில் வைத்திருந்த குளிர் என்னும் இசைக்கருவியில் ஓசை உண்டாக்கிக் கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டினாள்

குளிர் எழுப்பிய ஓசை அவள் குரல் ஒலி போல் இனிமையாக இருந்தது
எனவே கிளிகள் ஓடவில்லை
அதனால் அவள் நொந்தாள்
அழுதாள்

அழுத அவள் கண்கள் எப்படி இருந்தன
சுனையில் பூத்த குவளைப்பூ வண்டு மொய்க்க மலர்ந்து மழைத்துளியில் நனைந்தது போல் இருந்தது

தலைவன் தலைவிஇ பற்றிப் பாங்கனிடம் சொல்கிறான் 


மழைத்துளியில் நனைந்த குவளை

Saturday, 27 April 2019

குறுந்தொகை 290 Kurunthogai 290

வெள்ளத்தில் வரும் நுரை கல்லில் மோதும்போது இல்லாமல் போகும்
அதுபோல நான்
காமத்தில் மோதி இல்லாமல் போகிறேன்

காமத்தைத் தாங்கிக்கொள்ளுமாறு எனக்கு அறிவுரை கூறுகின்றனர்
இப்படிக் கூறுபவர் காமத்தை உணராதவர் போலும்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 289 Kurunthogai 289

அவர் உறவாலால் என் மேனி வளர்பிறை போல வளம் பெற்றது
அவர் பிரிவால் என் தோள்வளையல் நெகிழ்கிறது
அவர் பிரிவு நோயால் கீரை போல் துவண்டு போனேன்

தோழி

இப்போது மழையும் பொழிகிறது
அவர் திரும்புவதாகச் சொன்ன கார்காலம் இது
அவர் வரவில்லை
அவருக்காக நான் ஏங்குகிறேன்
என்னைக் காட்டிலும் ஊரார் என்மீது இரக்கம் கொள்கின்றனர்

தலைவி தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 288 Kurunthogai 288

அவன் பெருங்கல் நாடன்
அந்த நாடு மிளகுக் கொடி படரும் மலையடுக்கம்
மிளகுக் கொடியின் கொழுந்துகளைக் குரங்குகள் அருந்தும்

நாடன் இனியவன்
அவனோடு எனக்கு உள்ள உறவைச் சொல்லி என் உறவுக்காரர்கள் என்னைக் கொடுமைப்படுத்துகின்றனர்

இந்த இனிய கொடுமையை விட
இனிது என்று சொல்லப்படும் தேவர் உலகம் எனக்கு இனிது ஆகுமா
ஆகாது

தலைவி தோழியிடம் கூறுகிறாள் 

ஒப்புநோக்குக 

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு 
நீரியைந்து அன்னார் அகத்து - திருக்குறள் 1323குறுந்தொகை 287 Kurunthogai 287

கருவுற்றிருக்கும் ஏழு மாதப் பிள்ளைத் தாய்ச்சி புளிக்கும் பொருள்களைத் தின்ன விரும்புவாள்

அவள் பிள்ளையை வயிற்றில் சுமப்பது போல நீரைச் சுமந்துகொண்டு வானத்தில் மலைக்குன்றுகளை நோக்கி மேகங்கள் செல்கின்றன.

தோழி

இந்தக் கார்கால மேகங்களைக் கண்டும்
கார்காலத்தில் திரும்புவேன் என்று சொன்னவர்
திரும்பவில்லையே

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 286 Kurunthogai 286

கூர்மையான பல்
அமிழ்தம் ஊறும் சிவந்த வாய்
அகில் சந்தனம் புகையூட்டிக் கமழும் கூந்தல்
என்னை எதிர்த்துப் போரிடும் ஈரமுள்ள கண்கள்
புன்னகை
மதமதப்பான பார்வை

இவற்றைக் கொண்ட கொடிச்சி அவள்
அவள் என் நினைவை விட்டு அகலாமல் இருக்கிறாள்

பாங்கனிடம் தலைவன் கூறுகிறான் குறுந்தொகை 285 Kurunthogai 285

இருட்டிலும் வரவில்லை
பகலிலும் தோன்றவில்லை
எங்கே இருக்கிறாரோ

திரும்புவேன் என்று சொன்ன பருவமும் இதுதான்

பெண்புறா ஆண்புறாவைக் கூப்பிடும்
கண் இமைக்கும் பொழுதில் ஞெமை மரத்தில் இருந்துகொண்டு பருந்து அந்த ஆண்புறாவைத் தின்றுகொண்டிருக்கும்
இப்படிப்பட்ட மலை வழியில் அவர் செல்கிறார்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 284 Kurunthogai 284

புலியுடன் பொருத யானை தன் காயங்களில் குருதி ஒழுகிக் காணப்படுவது போல பாறாங்கல்லில் காந்தள் மலர்கள் ஏறிப் படர்ந்திருக்கும் நாடன் அவன்

அவன் அற நெறி உடையவனோ அல்லனோ எப்படிப்பட்டவனாக இருந்தாலும் இந்த ஊர் மக்கள் அவனை ஏசுவது இல்லை
என்னைத்தான் ஏசுகின்றனர்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் Friday, 26 April 2019

குறுந்தொகை 283 Kurunthogai 283

அவர் பொருளீட்டச் சென்றுள்ளார்

செல்லும்போது

  • மூதாதையர் சேமித்து வைத்திருப்பதை அழித்துக் கொண்டிருப்பவர் உயிர் வாழ்பவராகவே கருதப்பட மாட்டார் 
  • பொருள் இல்லாதவராக வாழ்தல் பிறரிடம் கேட்டு வாங்கும் இரவு வாழ்க்கையை விட இளிவைத் தரும் 

ஆதலால் பொருளீட்டச் செல்கிறேன்
என்று சொல்லிவிட்டுச் செஎன்றார்
இது நல்லதுதான் 

தோழி

  • அவர் செல்லும் வழியில் கூற்றுவன் போன்ற மறவர்கள் வில்லை வைத்துக்கொண்டு கொன்று வழிப்பறி செய்யக் காத்திருப்பர் 
  • அவர்கள் கொன்ற பிணத்தைத் தின்னப் பருந்துகள் காத்திருக்கும் 

இதனை எண்ணிக் கலங்குகிறேன்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 282 Kurunthogai 282

பொருளீட்டச் சென்ற அவர்
கார் காலத்தில்
வரகு முளைக்கும் இலைகளை
அன்று பிறந்த நவ்வி மான் கவ்வி விளையாடுவதைப் பார்ப்பார் 

நீரோட்டம் உள்ள நிலத்தில்
உள்ளே துளை உள்ள கூதாளம் பூ
கழன்று விழுவது போல
என் கையிலுள்ள வளையல்கள் கழன்று விழுகின்றன

என் வளையல் கழன்று விழாது என்று அவர் எண்ணுவாரோ

தலைவி தன் தோழியிடம் இவ்வாறு சொல்லிக் கலங்குகிறாள் குறுந்தொகை 281 Kurunthogai 281

பனம் பூ
வேப்பம் பூ
இரண்டையும் தலையில் சூடிக்கொண்டு
குன்றுகள் நிறைந்த காட்டு வழியில் நம்மவர் சென்றாரோ

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 280 Kurunthogai 280

தோழனே கேள்

என் நெஞ்சைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் குறுமகள்
மெல்லிய தலைமுடி
பருத்த தோள்
மென்மையான மார்பகம்
கொண்டவள்

ஒருநாள் அவளோடு உறவு கொண்டிருந்தால் போதும்
மேலும் அரைநாள் கூட உயிருடன் வாழ விரும்ப மாட்டேன்

தலைவன் தன் பாங்கனிடம் கூறுகிறான் குறுந்தொகை 279 Kurunthogai 279

யாமத்தில் நான் தனிமையில் இருக்கிறேன்
நான் புலம்பும்போதெல்லாம் எருமை கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலி கேட்கிறது
இப்படிப்பட்ட நேரத்திலும் அவர் வரவில்லை

புழுதி படிந்த யானை போல் பாறைகள் இருக்கும் காட்டு வழியில் அவர் செல்கிறார்

என் தோளை அவர் நினைக்கவில்லையே

தலைவி தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 278 Kurunthogai 278

என் மகளின் காலடி மாந்தளிர் போல் மென்மையானது
தன் காதலனுடன் எப்படி நடந்தே சென்றாளோ

அவள்
தான் விளையாடிய பாவையையோ
என்னையோ
நினைக்கவில்லை

மரத்தில் ஏறிப் பழங்களை ஆண்குரங்கு உதிர்க்கும் 
குட்டியை வைத்திருக்கும் பெண்குரங்கு மரத்தடியில் இருந்துகொண்டு உண்ணும்

இப்படிப்பட்ட மலை வழியில் எப்படி நடந்து சென்றாளோ
அழைத்துச் சென்றவன் கொடியன்

தாய் சொல்லிக் கலங்குகிறாள்குறுந்தொகை 277 Kurunthogai 277

அறிவரே
என் தலைவர் வருவதாகச் சொன்ன வாடைக்காலம் எப்போது (இப்போதே) வரும் என்று சொல்லுங்கள்
தெருத் தெருவாக
வீடு வீடாகச்
சோறு கேட்டு அலைய வேண்டாம்

என் ஒரே இல்லத்தில் நெய் ஊற்றிப் பொங்கிய சோற்றை வயிறார உண்ணும்படித் தருகிறேன். 

என்கிறாள், தலைவிகுறுந்தொகை 276 Kurunthogai 276

இந்தக் குறுமகள் பருத்த தோள் கொண்டவள்
வண்டல் மண்ணில் பாவை செய்து கோரைப் புல்லில் கிடத்தி விளையாடுகிறாள்
இவள் முலையில் தொய்யில் எழுதி அழகுபடுத்தியுள்ளனர்
இது ஆண்களைக் கவர்கிறது
இவளைக் கவர்ச்சி உள்ளவளாக மாற்றிய குற்றத்தை அரசவையில் முறையிட்டால் இந்த ஊர் நிலைமை என்ன ஆகும்

அவள் அழகில்  மயங்கிய அவன் கூற்று குறுந்தொகை 275 Kurunthogai 275

தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள் 

மணி ஓசை கேட்கிறது
அது
ஆனிரை இல்லம் திரும்பும் மணியோசையா
சென்ற செயல் முடிந்து செம்மாப்புடன் என் தலைவர் திரும்பும் தேர்மணி ஓசையா
என்று தெரியவில்லை.

தோழி
முல்லை பூத்துப் படர்ந்திருக்கும் பாறைமேல் ஏறிப் பார்த்துவிட்டு வரலாம் - போகலாமாகுறுந்தொகை 274 Kurunthogai 274

உகா என்ன்னும் மரம் புறா முதுகு போன்ற நிறம் கொண்டது
அதன் காய் இறா மீன் போல் இருக்கும்

வழிப்பறி செய்யும் ஆடவர் அதன் கிளை மேல் ஏறி இருந்துகொண்டு அம்பு எய்வர்
அவர்களுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தால்  நீர்ப்பசை உள்ள ஒருவகை நாரை மென்று அதன் சாற்றை உறிஞ்சித் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்வர்

உன்னை அழைத்துச் செல்லும் காட்டுவழி அத்துணை வறண்டது
எனினும்
மடந்தையே
உன்னைத் தழுவிக்கொண்டு சென்றால் அது எனக்கு இனியது 

உடன்போக்கு பற்றித் தலைவன் தலைவிக்குத் தெரிவிக்கிறான் குறுந்தொகை 273 Kurunthogai 273

பூ மணம் வீசிக்கொண்டு அசைந்து வரும் தென்றல் போல மணக்கும் நெற்றி கொண்டவளே
நீ என்னைக் கண்டு நோகிறாய் என்றால் ஒன்று சொல்கிறேன் கேள்
ஏணி மேல் ஏறித் தேன் எடுக்க முயல்பவன் ஏமாந்து திரும்புவான்
ஆனால் நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்

தலைவன் தன் மனவுறுதியை வெளிப்படுத்துகிறான் குறுந்தொகை 272 Kurunthogai 272

வாயில் வீளை ஒலி எழுப்பிக்கொண்டு
வில்லேந்திய வேட்டைக்காரர்கள்
கல்லுப் பதுக்கையில் இருந்துகொடு
ஆண்மானை அம்பு எய்து வீழ்த்துவர்

அந்த மானிலிருந்து அவர்கள் பிடுங்கிய அம்பு போல்
சிவந்த கடைக்கண் கொண்டவள் அவள்
மணக்கும் கூந்தலை உடையவள்
அவள் கொடிச்சி

இந்தக் கோடிச்சி தோளை நான் தொடவும் முடியுமா

தலைவன் ஏக்கம் குறுந்தொகை 271 Kurunthogai 271

அவன் அருவி ஆறாகிப் பாயும் நாடன்.
அவன் என்னைத் தழுவியது ஒருநாள் மட்டுமே
என் தோளில் பசலை நோய் பல நாளாக இருக்கிறதே

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் Thursday, 25 April 2019

குறுந்தொகை 270 Kurunthogai 270

நான் செய்யவேண்டிய பணியைச் செய்து முடித்துவிட்டேன்

இனி
இருள் கிழியுமாறு மின்னட்டும்
முரசு போல் வானம் இடி முழங்கட்டும்
மழை பொழியட்டும்

செம்மாந்த உள்ளத்துடன் என்னவளிடம் செல்லப் பறப்படுவிட்டேன்
குவளை மணக்கும் அவள் கூந்தல் மெத்தையில் உறங்குவேன்

தலைவன் மகிழ்ச்சியில் தனக்குள் சொல்லிக்கொள்கிறான் குறுந்தொகை 269 Kurunthogai 269

என் தந்தை
சுறா மீன் கடித்த புண் ஆறி மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டான்

என் தாய் உப்பை விற்று நெல் வாங்கி வர ஊருக்குச் சென்றுவிட்டாள்

அதனால்
இவளை எளிதாகப் பெறலாம்
என்று அவரிடம் தூது சொன்னால் நல்லது
நெடுந்தொலைவில் இருக்கும் அவரிடம் குதிரையில் விரைந்து சென்று தூது சொன்னால் நல்லது

தூது அனுப்பி உதவும்படித் தலைவி தோழியை  வேண்டுகிறாள் குறுந்தொகை 268 Kurunthogai 268

வானத்தில் இடி முழங்குகிறது
நள்ளிரவு நேரம்
படமெடுத்து ஆடும் பாம்பும் நடுங்குகிறது

அவர் வந்தார்
என்னைக் கட்டித் தழுவிக்கொண்டார்

சென்றுவிடுங்கள் - என்று சொல்லவும் முடியவில்லை
வாருங்கள் - என்று ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

தோழி
நான் என்ன செய்வது

தலைவி தோழியிடம் கூறுகிறாள் 


இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்குறுந்தொகை 267 Kurunthogai 267

கூற்றம் உயிர்களைக் கொல்லும்
அறம் இல்லாமல் கொல்லும்
இதனை அறிந்தவர் தன் மனைவியைத் தனியே விட்டுவிட்டுப் பொருளுக்காகத் தனியே பிரிந்து செல்லமாட்டார்.

உலகிலுள்ள வளமெல்லாம் ஒருங்கே கிடைப்பதாயினும் பிரிந்து செல்லமாட்டார். 

கரும்பு வெட்டும் கருவியின் முனை கருப்பஞ் சாற்று ஈரத்துடன் இருப்பது போல் வெண்மையான பற்களைக் கொண்டவள் மனைவி

தோழி தலைவனுக்கு அறிவுரை கூறுகிறாள் குறுந்தொகை 266 Kurunthogai 266

அவர் நம்மிடம் சொல்லாமல் நம்மை விட்டுவிட்டுப் பொருளீட்டச் சென்றுவிட்டார்.
பரவாயில்லை
அவரும் நானும் இருந்த வேங்கை மரத்துக்காவது அதன் பறவைகளைத் தூது அனுப்பும்படிச் சொல்லியிருக்கலாம்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் வழிவழி offspring

குறுந்தொகை 265 Kurunthogai 265

தோழி
உன் காதலன் வெற்பன் நல்ல நெஞ்சம் கொண்டவன்

வண்டு தேன் உண்ணுவதற்காக, காந்தள் பூ தன் இதள்களை விரித்துக்கொண்டே இருக்கும் வெற்பன் அவன்

சான்றோரைக் கண்டால் கடமை உணர்ந்தவர் இடம் தந்து விலகுவர்
அதுபோல வண்டுக்காகக் காந்தள் விரியும்

நீ அவனுக்காக அப்படித்தானே இருக்கிறாய்

இதனை அவனிடம் நான் சொன்னபோது அவன் நாணிணான்

தோழி தலைவியிடம் கூறுகிறள் குறுந்தொகை 264 Kurunthogai 264

அவன் நாடன்

மழை பொழியும் காட்டாற்றங் கரையில் மயில் அகவும் (குரல் எழுப்பும்) நாடன்

அவன் நட்புறவு எனக்குப் பசலை நோயைத் தந்துள்ளது
இந்தப் நோயைத் தாங்க முடியவில்லையே

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 263 Kurunthogai 263

ஆட்டுக் குட்டியின் குரல்வளையை அறுத்து
அதன் குருதியில் தினையைப் பிணைந்து தூவி
பிறம்பால் என்னை அடித்து
பல்வகை இசைக் கருவிகள் முழங்க
என் காதல் நோய்க்கு மருந்து ஆகாத வேறு பெருந்தெய்வம் முருகனை வாழ்த்தி
இவளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறுகின்றனர்

தோழி
இது என்னை நோகச் செய்யும் செயலாகும்.

இவற்றால்
குன்ற நாடன் உறவை நான் மறக்க மாட்டேன்.

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 262 Kurunthogai 262

ஊரார் அலர் தூற்றுகின்றனர்
அதனைக் கேட்ட தாய் என்னைத் துன்புறுத்துகிறார்
இவை ஒருபக்கம் இருக்கட்டும்

நெல்லிக்காய் தின்று துவர்க்கும் வாய் நீர் உண்ணத் தூண்டுகிறது
அவர் நாட்டில்
கரும்பு நட்ட பாத்தியில்
யானை மிதித்த காலடியில்
நிற்கும் நீரைப் பருக விரும்புகிறேன்.

தலைவனுடன் செல்ல விரும்புவதைத் தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள் குறுந்தொகை 261 Kurunthogai 261

புற்றிலிருந்து வெளிவரும் கறையான் இடைவெளி விட்டு அடிக்கடி ஒரு மென்மையான கூட்டொலி எழுப்பும்
சேற்றிலிருந்து வெளியேறிய எருமை யாமத்தில் ஒலி எழுப்பிக் கரையும்

கறையான் எழுப்பும் மெல்லிய வலியையும்.
பெண்-எருமை ஆண்-எருமைக்காகக் கரையும் ஒலியையும் கேட்டுக்கொண்டு நான் நள்ளிரவில் தூங்காமல் இருக்கிறேன்

காவலர் பிறர் எழுதிய கணக்கை உன்னிப்பாக ஆராய்வது போல
நான் என் காதலரையே உன்னிப்பாக எண்ணித் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன் 

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் Wednesday, 24 April 2019

குறுந்தொகை 260 Kurunthogai 260

மழைக்காலம் வந்தது போல் குகுகுப் பறவைகள் வானில் பறக்கின்றன
பூத்துக் குலுங்கும் புதர்களில் வண்டுகள் மொய்க்கின்றன
என் தோளில் வளையல் செறிந்து தோள் விம்மிதம் கொள்கிறது

தோழி
இவை அவர் வருகிறார் என்பதன் அறிகுறிகள் அல்லவா

தொண்டையர் யானைப்படை கொண்டவர்
தன்னிடம் போரிடுவோரின் நாட்டு மண்ணைத் தனதாக்கிக் கொள்வர்
அவர்களின் காட்டில் வழை மரங்கள் மிகுதி
அங்குக் கன்று இல்லாத பசுக்களும் கவலை இல்லாமல் மேயும்
அந்தக் காட்டு வழியாக அவர் பொருளீட்டச் சென்றார் அல்லவா

அவர் வருகிறார் போலத் தோன்றுகிறது

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 259 Kurunthogai 259

காந்தள் பூமணம் கமழும் நெற்றி
மழை போன்ற குளுமையான கண்கள்
மாயம் செய்யும் மாமை நிறம்
இவற்றைக்  கோண்டவளே

உன் மேன்மையை நீ உணர்ந்து பார்
அதற்கேற்ப நடந்துகொள்

நீ எனக்கு உடன்பட்டாலும் சரி
என்னைக் கொன்றாலும் சரி

உன் மனத்தில் இருக்கும் ஆசையை மறைத்துப் பொய் பேசுகிறாயே
என் நெஞ்சு உன்னிடம் இருக்கிறதே

காதலன் காதலியிடம் கனிகிறான் குறுந்தொகை 258 Kurunthogai 258

எம் தெருப் பக்கம் வராதே
உன் மாலையை என் தலைவிக்குத் தராதே

உன்னை எண்ணி என் தலைவியின் மேனி நலம் அழிகிறது

அரசன் சேந்தனின் தந்தை இளம் போர் வீரர்களின் தலைவன்
ஆர்க்காடு அவர் ஊர்
என் தலைவி அவன் ஆர்க்காடு போல் அழகு மிக்கவள்

அந்த அழகு நலம்  அழிந்தது ஊருக்கெல்லாம் தெரிந்துவிட்டது

பலரும் நீராடும் துறையில் இருக்கும் மருத மரத்தில் சேந்தன்-தந்தை தன் யானையைக் கட்டி வைத்தான்
அது ஊருக்கெல்லாம் தெரிவது போல என் மேனிநலம் தொலைந்தது ஊருக்கெல்லாம் தெரிந்துவிட்டது 

அதனால் எம் தெருப்பக்கம் வராதே

தலைவி சார்பாகத் தோழி தலைவனிடம் கூறுகிறாள். குறுந்தொகை 257 Kurunthogai 257

அவன் வெற்பன்
வேர்
அடிமரம்
கிளை
எல்லா இடங்களிலும் பலாப்பழம் தொங்கும் நாடன் அவன்

காமம்
அவன் வரும்போது வருகிறது - சரி
அவன் போகும்போது போகவேண்டியதுதானே
போகவில்லையே

காதல் உணர்வில் துடிக்கும் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 256 Kurunthogai 256

மன்னனுக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றிவிட்டு
அறுகம்புல்லலை மேயும் மான்கள் துள்ளி விளையாடும் காட்டு வழியில்
வெற்றியுடன் திரும்புவேன்

பூங்குழையே
தாங்கிக் கொள்கிறாயா
என்றான் தலைவன்

தலைவி கண்களில் தோன்றிய கண்ணீர் அவள் பார்வையை மங்கச் செய்தனTuesday, 23 April 2019

குறுந்தொகை 255 Kurunthogai 255

ஆண்யானை
யா மரத்தைக் குத்தி
அதன் நடுவில் சோறு போன்று இருக்கும் பகுதியைத்
தன் பெண்யானை கூட்டத்துக்கு ஊட்டி
அவற்றின் பசியைப் போக்குவதை

பொருள் ஈட்டித்
தன் கடமையை நிறைவேற்றச்
சென்றிருக்கும் அவர்
வழியில் காண்பார்

உன் நினைவு வரும்
விரைவில் திரும்புவார்

தோழி தலைவியிடம் சொல்கிறாள் குறுந்தொகை 254 Kurunthogai 254

கோங்க மரம் பூக்கத் தொடங்கியிருக்கிறது 
இலையே இல்லாமல் பூத்திருக்கிறது
அவர் இன்னும் திரும்பி வரவில்லை - என்று வருந்தாதே

இரவெல்லாம் தூங்காமல் இருக்கிறார்
வேண்டிய அளவு விரும்பிய பொருளைச் சேர்த்துவிட்டார் - என்னும் செய்தியுடன் தூது வந்துள்ளது
வருந்தாதே

தோழி தலைவியைத் தேற்றுகிறாள் குறுந்தொகை 253 Kurunthogai 253

பஞ்சு மெத்தை போன்ற உன் மென்மையான மேனியின் நலம் தொலைந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியாது.

யாராவது சொல்லக் கேள்விப்பட்டால் திரும்பி வரக் காலம் தாழ்த்த மாட்டார்.

புலி தின்றுவிட்டுக் குக்கையில் போட்டிருக்கும் மீதக் கறித் துண்டுகள் வழிப்போக்கர்களுக்கு உணவாகப் பயன்படும்.
அந்த வழியில் அவர் சென்றுள்ளார்.

தோழி தலைவியைத் தேற்றுகிறாள் குறுந்தொகை 252 Kurunthogai 252

உன் தோள்வளையல் நழுவும்படிக் கொடுமை செய்த உன் காதலன் குன்ற நாடன் இங்கு வரும்போது அவனுக்கு இன்முகம் காட்டாமல் "மடவை மன்ற நீ" என்று சொல்லி அவனிடம் பிணக்கிக்கொள்.

அவன் சான்றோன்
புகழுக்கே நாணும் சான்றோன் பழியைத் தாங்கிக்கொள்வானா
இனி வளை நழுவ விடமாட்டான்

தோழி தலைவியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 251 Kurunthogai 251

தோழி தலைவியைத் தேற்றுகிறாள் 

மழை பெய்தது என்று மயில்கள் ஆடுகின்றன
இகுளை (தோழி)
இந்த மயில்கள் மடமையால் பிழையாக உணர்ந்து கொண்டுள்ளன

பிடவம் பூக்கள் பூத்துள்ளன

இது கார்காலம் அன்று

மேகங்கள் தன்னிடமுள்ள நீரைக் கொட்டினால் தானே புதிய நீரைக் கொண்டுவர முடியும் 
அதற்காக நீரைக் கொட்டுகின்றன

மேகத்துக்ககுப் பகையோ நட்போ இல்லாத வானமும் அப்படித்தான் இடி இடிக்கிறது

நீ உன் நினைவுத் துன்பத்தை விட்டு அகல்ககுறுந்தொகை 250 Kurunthogai 250

வினை முற்றி மீளும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்
பரல் கற்களுக்கு இடையில் ஓடும் நீரைப் பருகிய இரலைமான் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்.
மாலைக்காலம் வருவதற்குள் இல்லம் சேருமாறு தேரைக் காற்றைப் போல் விரைந்து ஓட்டிச் செல்
என் மனைவி வியப்பில் கொஞ்சிப் பேசுதலைக் கேட்க வேண்டும்குறுந்தொகை 249 Kurunthogai 249

மயில் ஏறி அகவும் மரம்
அதில் இருக்கும் ஊகம் என்னும் குரங்கு நடுங்கும்படி இடி முழங்கும் மலைச்சாரல்
தோழி
அது அவர் நாட்டுக் குன்று
அதனைப் பார்த்தேன்
அதனால் என் நெற்றி பசந்துவிட்டதைப் பார்த்தாயா

தலைவி தன் வருத்தத்தைத் தன் தோழியிடம் தெரிவிக்கிறாள் குறுந்தொகை 248 Kurunthogai 248

பனைமரம் ஓங்கி உயர்ந்து நிற்கும்
காற்று  பெருமளவில் மணலைக் கொண்டு வந்து கொட்டி அங்கு மணல்மேடு உண்டாகும்
அப்போது அந்தப் பனைமரத்தின் உயரம் சிறிதாக மாறிவிடும்
அதில் அடும்புக் கொடி ஏறிப் படரும்
இப்படிப்பட்ட துறையை உடையவன் அவன்
அவனை என் தாய் பெரிது படுத்திப் பேசுகிறாள்

இனி அவன் வருவதற்குத் தடை இல்லை
திருமண இடைவெளி நாட்களும் குறுகிவிடும்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 247 Kurunthogai 247

உறவு கொண்ட மாந்தர் நீந்தப் புணை வேண்டும்
அது எழில் உடையதாக இருக்க வேண்டும்
அது அவர்களுக்கு அணிகலன் என்று போற்றப்படும்
அது அறவழி ஆகும்

தோழி
அது எது என்று நான் கண்டுகொண்டேன்

வேங்கைப் பூ தன்மேல் உதிர யானை உறங்கும் நாடன் அவன்
அவன் மார்பில் நான் உறங்கும் நட்புதான் அந்தப் புணை 

தலைவி தன் நிலைமையைத் தோழிக்குச் சொல்கிறாள் குறுந்தொகை 246 Kurunthogai 246

உச்சிப் பொழுது

சிறிய வெள்ளைக் காக்கை யானைக் காது போன்ற இலைகளில் அமர்ந்துகொண்டு குளிர்ந்த உப்பங்கழியில் மீன்களை உண்ணத் தேடும் உச்சிப்பொழுது

இந்த உச்சிப் பொழுதில் தேர் ஒன்று வந்து சென்றது என்று சிலர் என் தாயிடம் கூறினர்.
அதற்காக என் தாய் என்னை கோலால் அடிக்கிறாள்

அங்கே இள மகளிரும், மைந்தரும், இளைஞர்களும், மடவாரும் இருந்தனர்.
அவர்களை அவர்களது தாயர் அடிக்கவில்லை.
அவர்கள் நற்பேறு பெற்றவர்கள்.

தலைவி தன்  தோழியிடம் கூறுகிறாள் Monday, 22 April 2019

குறுந்தொகை 245 Kurunthogai 245

அவனை எண்ணி என் மேனி நலம் தொலைகிறது
இதைக்காட்டிலும் துன்பம் தருவது  ஒன்று உண்டு
அவன் செய்த கொடுமையைப் பலரும் அறிந்தால் அது என் மேனி நலம் தொலைந்ததைக் காட்டிலும் துன்பம் தரும்

அவன் மெல்லம் புலம்பன்
தாழை மரம் வேல் ஊன்றிய வேலி போல் இருக்கும் கடல்சார் நாட்டுத் தலைவன்.

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். குறுந்தொகை 244 Kurunthogai 244

ஐய
பலரும் உறங்கும் நள்ளிரவில் வலிமை மிக்க யானை போல் வந்து நீ நாங்கள் உறங்கும் வீட்டுக் கதவைத் தட்டும் ஓசை எங்களுக்குக் கேட்காமல் இல்லை
கேட்டோம்
ஆனால் என்ன செய்வது
உன் காதலி புரளும்போதெல்லாம் அவளை அவள் தாய் கட்டி அணைத்துக்கொள்கிறாள்
அவள் அறநெறி இல்லாதவள்

வலையில் மாட்டிக்கொண்ட மயில் போல உன் காதலி மாட்டிக்கொண்டாள்

தோழி தலைவனிடம் சொல்கிறாள் குறுந்தொகை 243 Kurunthogai 243

அவன் சேர்ப்பன்

மானின் அடி போன்ற பிளவு பட்ட இலைகளைப் கொண்டது அடும்மபு மலர் பூக்கும் கொடி
அதன் மலர் மாட்டின் கழுத்ததில் கட்டிய மணி போல் பூத்திருக்கும்
இந்த மலர்களைப் பறித்து மகளிர் தாம் செய்து விளையாடும் வண்டல் பாவைக்குச் சூட்டி மகிழ்வர்
இப்படி மகளிர் விளையாடும் சேர்ப்பு நிலத்தின் தலைவன் அவன்.

தோழி
அவனை நான் நினைக்க மாட்டேன்
நினைத்தால் என் கண்களுக்குத் தூக்கம் வரவில்லலை

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 
குறுந்தொகை 242 Kurunthogai 242

தன்மீது விழும் பனித்துளிகளை உதறித் தள்ளிவிட்டு காட்டுக்கோழி பூத்திருக்கும் முல்லை நிலத்தில் செறிவாக இருக்கும்

அவள் கணவன் வேந்தன் ஆணைப்படிச் செயல்படத் தேரில் சென்றுள்ளான்
அதனால் அவன் மனைவி தனக்ககு வரும் இன்னல்களை உதறித் தள்ளிவிட்டு வாழ்கிறாள்

மகள் வாழ்வைக் கண்டு தாய் மகிழ்ந்தது குறுந்தொகை 241 Kurunthogai 241

அவன் குன்ற நாடன்
நான் அவன்மீது கொண்டுள்ள காதல் உணர்வுகளை அடக்கிக் கொள்கிறேன்

சிறுவர்கள் தம் கன்றுக்குட்டிகளை ஆற்றுப்படுத்திவிட்டு (மேய விட்டுவிட்டு) வேங்கைப் பூ பூத்துக் குலுங்குவதைப் பார்த்து அந்த மரத்தில் ஏறாமல் கூச்சலிடும் பூசல் குன்றத்துப் பிளவுகளில் எதிரொலிக்கும் நாடன் அவன்

ஆனால்
அவனைக் கண்ட கண்கள் அழுகின்றன
அதற்கு நான் என்ன செய்வேன்

அழாதே என்று தேற்றும் தோழிக்குத் தலைவி கூறும் விடை  குறுந்தொகை 240 Kurunthogai 240

கிளியின் வாய் போல் அவரை பூத்திருக்கிறது
பூனையின் பல் போல் முல்லை பூத்திருக்கிறது
இவற்றின்மீது பட்டு வாடைக்காற்று வீசுகிறது
தோழி
அங்கே பார்
கடலில் மூழ்கும் கப்பல் போல் ஞாயிறு மலையில் மறைகிறது
அவரை நாடி என் மனம் ஏங்குகிறது

தலைவி தன் ஏக்கத்தைத் தோழியிடம் சொல்கிறாள் குறுந்தொகை 239 Kurunthogai 239

அவன் மலை கிழவன்

நில வெடிப்பில் காந்தள் பூத்திருக்கும்
அதில் தேன் உண்ணும் வண்டு அமர்ந்திருக்கும்
பூத்திருக்கும் காந்தள் மலர் படமெடுத்தாடும் பாம்பு போலவும்
அதில் அமர்ந்திருக்கும் வண்டு அந்தப் பாம்பு உமிழும் மணி போலவும் காணப்படும்
இப்படிப்பட்ட மலையைத் தனக்கு உரிமையாகக் கொண்டவன் அவன்

அவனை நினைத்து என் வளையல் கையை விட்டு நழுவிகிறது
தோள் வாடுகிறது
என் நாணம் என்னிடம் இருக்குமா

தலைவி தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 238 Kurunthogai 238

தொண்டி நகரம் போன்றது என் நலம்
மகிழ்ந
பொருள் ஈட்டிக்கொண்டு வருவேன் என்று சூள் உரைக்கிறாய்
அதற்காக நீ செல்வாய் ஆயின் தொண்டி நகரம் போன்ற என் அழகினை என்னிடமே தந்துவிட்டுச் செல்க.
பிரிந்தால் உன்னை எண்ணி என் நலம் வாடிவிடும் அல்லவா

வயலில் உள்ள உரலில் நெல்லைப் போட்டு அவல் இடிக்கும் பெண்டிர் தம் உலக்கையை வரப்பில் சாய்த்து வைத்துவிட்டு வண்டல் இழைத்து விளையாடுவர்
இதுதான் தொண்டி நகர நலன்.

தலைவன் தன்னை விட்டுப் பிரியக் கூடாது என்கிறாள், தலைவி குறுந்தொகை 237 Kurunthogai 237

என் நெஞ்சுக்கு அச்சம் என்பது இல்லை
அது விரும்பும் துணையாகிய அவனைத் தழுவிக்கொண்டது
என்னைப் பிரிந்து சென்றுவிட்டது
அவனைக் கை நழுவ விடாமல் இறுகத் தழுவிக்கொண்டது

இருவரும் மிகத் தொலைவில் இருக்கிறோம்
சோலையில்  இருக்கும் நினைவு
கடல் போல் முழங்கும் புலி நடமாடும் சோலை அது
நாங்கள் தழுவுவது எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்

தலைவியின் நினைவலை குறுந்தொகை 236 Kurunthogai 236

சேர்ப்ப

குன்றம் போல் குவிந்திருக்கும் மணல் அடைந்த கரையில் புன்னை மரத்தின் கிளைகள் நிலத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் பகுதியில் புதிதாக அங்கு வரும் நாரைகள் கூடு கட்டிக்கொண்டிருக்கும் சேர்ப்பு நிலத் தலைவனே

அம்பு வெளியேறிப் பாய்வது போல் என் வாழ்நாள் என்னை விட்டுச் செல்லும் நாள் வரட்டும்
அப்போது நீ நொந்துகொள்ளலாம்
இப்போது நீ எடுத்துக்கொண்ட என் நலனைத் தந்துவிட்டுச் செல்

தலைவன் தன்னை விட்டுப் பிரியக் கூடாது என்பதைத் தலைவி இவ்வாறு தெரிவிக்கிறாள் குறுந்தொகை 235 Kurunthogai 235

வாடைக் காற்றே
வீசித் தாக்காதே

அவள் ஊர் இங்குதான் இருக்கிறது.
பாம்பு உரித்த தோல் போல அருவி கொட்டும் இந்த இடத்துக்கு அருகில்தான் இருக்கிறது
முற்றத்தில் கிடக்கும் நெல்லிக் காய்களை மான்கள் வயிறார உண்ணும் ஊர் இது
இங்கு இருக்கும் புல் வேய்ந்த குடிசையில்தான் அவள் இருக்கிறாள்.
அவளைத் தழுவி இருவரும் நீ வீசும் வாடையின் குளிரைப் போக்கிக் கொள்வோம்

தலைவன் வாடைக்காற்றோடு பேசுகிறான் 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்

குறுந்தொகை 234 Kurunthogai 234

வானம் சிவந்து பொழுது மறையும் காலத்தைத்தான் காதல் மயக்கம் தரும் மாலை என்று கூறுகின்றனர்

நினைத்துப் பார்த்தால்
காதல் துணை இல்லாதவர்களுக்கு
கோழி கூவும் விடியற் காலமும் மாலை
பகல் காலமும் மாலை
காதல் நினைவை உண்டாக்கும் மாலை

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்

குறுந்தொகை 233 Kurunthogai 233

என் காதலியின் தந்தை பெருஞ் செல்வன்
வழி பிரியும் கவலையில் கல்லைத் தோண்டிய குழி நிறையுமாறு கொன்றைப் பூக்கள் உதிர்ந்து கிடப்பது போலப் பெட்டியில் பொன்னணிகளை நிறைய வைத்திருப்பவன்
உயர்ந்தவர்களுக்கு நீருடன் தாரை வார்த்துத் தானமாக வழங்கிய செல்வம் போக எஞ்சிய செல்வத்தைக்கொண்டு வருபவர்களுக்கெல்லாம் சோறாக வழங்கும் வள்ளல் அவன்

இது அவன் ஊர்

தலைவன் தன் பாங்கனிடம் தன் காதலியின் செல்வ வளம் பற்றிக் கூறுகிறான் 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்

Sunday, 21 April 2019

குறுந்தொகை 232 Kurunthogai 232

அவர் மலை வழியில் சென்றுள்ளார்
மரல் என்னும் வெயில்நீரை உண்ட இரலை மான் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யா மர நிழலில் உறங்கும் வறண்ட மலைவழி அது
அந்த வழியில் செல்லும்போது நம்மை நினைப்பாரோ மாட்டாரோ
நினைத்தாலும் வாயால் பேசிப் பரிமாற வாய்ப்பு இல்லாததால் வராமல் இருக்கிறாரோ

தலைவி தோழியிடம் கூறுகிறாள் 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்

குறுந்தொகை 231 Kurunthogai 231

அவர் நான் வாழும் இதே ஊரில்தான் வாழ்கிறார்.
எனாலும் நான் இருக்கும் இந்தத் தெருவுக்கு வருவதில்லை
இந்தத் தெருவுக்கு வந்தாலும் என்னை ஆரத் தழுவுவதில்லை
பக்கத்து வீட்டில் அடுப்பு எரிவது போலக் கண்டும் காணாமல் போய்விடுகிறார்

என் வீட்டு அடுப்பு எரிந்தால்தானே எனக்குச் சோறு
அறிவில்லாமல் நாணத்தை விட்டுவிட்டு என் காமம்  பாய்கிறது
வில்லிலிருந்து பாயும் அம்பு போல் தொலைவில் உள்ள அவரிடம் பாய்கிறது.

தலைவி தன் தோழியிடம் தன் உணர்வை வெளிப்படுத்துகிறாள். 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்

குறுந்தொகை 230 Kurunthogai 230

என் கொண்கன் என்னிடம் வந்து சென்றான்
வலிமை மிக்க சுறா மீன் மேயும் வழியில் வந்து சென்றான்

இப்போது சில நாட்களாக வரவில்லை
வராமல் இருக்க அவன் நினைத்திருக்க மாட்டான்
நான் என் அறியாமையால் ஏதோ அவனை நோகும்படிச் செய்திருப்பேன்

தலைவி தோழியிடம் சொல்கிறாள் 
தமிழ்ப்பெண்ணின் தகைமை உள்ளம் குறுந்தொகை 229 Kurunthogai 229

இவன் இவள் கூந்தலைப் பிடித்திருக்கிறான்
இவள் இவன் தலைமுடியைப் பிடித்திருக்கிறாள்
இருவருக்கும் இடையே காதல்-பிணக்கு
செவிலி தடுத்தும் தீராத காதல் பிணக்கு

இது இவர்களிடையே தோன்றும் நல்ல விளைவு (பால்)

விதியே
இதனை நான் காணும்படிச் செய்தாயே
நீ மிகவும் நல்லை

காதல் பிணக்கைக் கண்ட செவிலி மனம் மகிழ்ந்து இவ்வாறு கூறுகிறாள் குறுந்தொகை 228 Kurunthogai 228

அவர் தொலைவிலுள்ள நாட்டில் இருக்கிறார்
முற்றத்தில் மரத்திலிருந்து விழுந்த தாழை மடல் கொக்ககின் சிறகு போல் தோன்றும் நாடு அவர் நாடு

அவர் தொலைவில் இருந்தாலும் என் நெஞ்சு அவருக்கு அருகில்தான் இருக்கிறது

தலைவி தன் தோழியிடம் இப்படிச் சொல்லி ஆறுதல் பெறுகிறாள் குறுந்தொகை 227 Kurunthogai 227

என் காதலன் தேரில் வந்து சென்ற அடையாளம் தெரிகிறது 
அவன் தேர்ச்சக்கரம் அறுத்துத் துண்டாக்கிய நெய்தல் கொடி வாடிக் கிடக்கிறது 
ஆனால் நான் சொன்ன குறியிடம் தவறி என்னிடம் வராமல் வந்து போயிருக்கிறான். 
என்ன செய்வேன் 

தலைவி தன் தோழியிடம் சொல்லிக் கலங்ஙகுகிறாள் 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்


குறுந்தொகை 226 Kurunthogai 226

அவன் சேர்ப்பன்
அலை மோதும் தாழை மரத்தில் குருகுப் பறவை போல் தாழம்பூ மலரும் துறை கொண்ட நீர்ச் சேர்ப்பன்

அவனுடன் சிரித்து மகிழ்வதற்கு  முன்னர்
தாமரை போன்ற என் கண்ணும்
மூங்கில் போன்ற என் தோளும்
பிறை போன்ற என் நுதலும்
நல்லனவாகத்தான் இருந்தன.

இப்போது அவன் வராததால் அவை நல்லனவாக இல்லை
அவன்மீது ஏக்கம் கொண்டு வாடுகின்றன.

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 225 Kurunthogai 225

பெருங்கல் நாட
கன்று தன் மடியில் பால் குடித்துக்கொண்டிருக்கும்போது பெண்யானை முற்றத்தில் காயும் தினையை உண்ணும் நாடன் நீ

கேடுற்றிருக்கும் காலத்தில் உதவியவனை மறந்துவிடும் மன்னன் போல நீ இல்லாமல் இருந்தால்

மயில் பீலி போன்ற இவள் கூந்தல் உனக்கே உரியது
அதில் நீ உறங்கலாம்

தோழி தலைவனுக்குக் கூறுகிறாள் குறுந்தொகை 224 Kurunthogai 224

இரவு வேளையில் குரால் பசு கூவல் கிணற்றில் விழுந்துவிட்டதைப் பார்க்கும் ஊமையன் நிலை போல் என் நிலைமை ஆகிவிட்டது.

அவர் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்
அதனால் பருவ நோயால் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்
இதனை எப்படிச் சொல்வது

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 223 Kurunthogai 223

தோழி
திருவிழா பார்க்கச் செல்லலாம் என்கிறாய்
அங்கு நல்லவர்கள் பலர் வருவார்கள்.

நான் கிளி ஓட்டும்போது அவன் வந்து, கிளி ஓட்ட உதவும் தழல், தட்டை ஆகிய கருவிகளை எனக்குத் தந்துவிட்டு என்னை எடுத்துக்கொண்டான்.

நான் அவனுடையவள் ஆகிவிட்டேன்.
என்னைப் பிறர் பார்ப்பார்களே
எனவே நான் திருவிழா பார்க்க வருவது சரி அன்று

தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.குறுந்தொகை 222 Kurunthogai 222

முன்புறம் நகரும் படகில் நான் சென்றால் அவளும் முன்புறமாக நகரும் படகில் என்னைப் பின் தொடர்ந்து வருகிறாள்

பின்புறம் நகரும்படகில் நான் சென்றால் அவளும் பின்புறமாக நகரும்
படகில் என்னைப் பின் தொடர்ந்து வருகிறாள்

படகை விட்டுவிட்டு நீந்திச் சென்றால் அவளும் நீந்திக்கொண்டு பின்தொடர்ந்து வருவாள் போல் தெரிகிறது

அவள் பித்திகைப் பூவைக் கொண்டையில் வைத்திருக்கிறாள்
அவளுக்கு மழை போன்று குளுமையான கண்கள்
மழையில் நனைந்த தளிர் போன்ற மேனி

பரத்தை தன்னைப் பின்தொடர்வதைத் தலைவன் தன் பாங்கனிடம் கூறுகிறான் குறுந்தொகை 221 Kurunthogai 221

முல்லை பூத்துக் கிடக்கிறது
இடையன் ஆடுகளை விட்டுவிட்டுப் பறித்தோலில் பாலை எடுத்துக்கொண்டு வருகிறான்
மீளும்போது அதில் தான் உண்ணுவதற்காக உணவை எடுத்துச் செல்கிறான்.
அவன் தலையில் முல்லைப் பூவைச் சூடியிருக்கிறான்

எங்கும் முல்லைப் பூக்கள்
அவர் என்னுடன் இல்லாததால் நான் முல்லைப் பூவைச் சூடவில்லை
இதுதான் என் நிலைமை

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்Saturday, 20 April 2019

குறுந்தொகை 220 Kurunthogai 220

மழை பழையதாகி விட்டது
வரகு விளைந்திருக்கிறது
இரலை மான் அதனை மேய்கிறது
வரகு கதிர் இல்லா இருவி ஆகிவிட்டது

அதன் பக்கத்தில் முல்லை பூத்திருக்கிறது
காட்டுப்பூனையின் பற்கள் போன்ற முல்லை மொட்டுகள் பூக்கின்றன

இப்படி இருக்கும் காட்டில் வண்டுகள் மொய்க்கின்றன
அவர் என்னை மொய்க்க வரவில்லை

தோழி
பொருளுக்காகப் பிரிந்த அவர் நிலையைப் பார்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 219 Kurunthogai 219

பயப்பு (பசப்பு) என் மேனியில் இருக்கிறது
நயப்பு (விருப்பம்) அவர் நெஞ்சத்தை விட்டு நீண்ட தொலைவில் இருக்கிறது

செறிவு (அடக்கம்) என்னை விட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டது
அறிவு , அவர் இருக்கும் இடத்துக்குச் செலவோம் எழுக - என்கிறது

இங்கே இப்படி வல்லமை இல்லாத சொற்களைக் கூறிக்கொண்டிருக்கிறேன்
அவன் தாழை நிலச் சேர்ப்பு இருக்கும் நாடன்
அவரிடம் சென்று "எப்படி இருகிறீர்" என்று கேட்டால் என்ன

தலைவி தோழியை வினவுகிறாள் குறுந்தொகை 218 Kurunthogai 218

என் உயிருக்கு அவர் உயிர் போன்றவர்.
அவர் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது
இது அவருக்குத் தெரியும்
இருந்தும் என்னை மறந்து அவர் வாழ்கிறார்

மலையடுக்கப் பிளவில் சூலி (காளி) கோயில் இருக்கிறது
அந்தத் தேவதையிடம் நான் வேண்டிக்கொள்ளலாம்

நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்ளலாம்
கையில் நூல்-காப்பு கட்டிக்கொள்ளலாம்
அவர் வருகிறாரா என்று புள்-சகுனம் பார்க்கலாம்
பிறர் கூறும் விரிச்சி சகுனம் கேட்கலாம்

இவற்றைச் செய்ய நான் நினைக்கவும் இல்லை

சூலி கொடியோரைத் தண்டிக்குமே என்றும்
சகுனம் நல்லதாக அமையாவிட்டால் என்ன செய்வது என்றும்
எண்ணிக்கொண்டு எதுவும் செய்யவில்லை

இவ்வாறு தலைவி தன் தோழிடிடம் கூறுகிறாள். குறுந்தொகை 217 Kurunthogai 217

தினைப்புனத்தில் கிளி ஓட்டுவதற்கே பொழுது போதவில்லை
இரவில் நீ வருவதால் உனக்கு ஊறு நேருமோ என அஞ்சுகிறேன்
என் ஆசைத் துன்பத்தைப் போக்க நான் என்ன செய்வேன்

இப்படி நான் சொன்னதைக் கேட்டு பெருமலை நாடன் பெருமூச்சு விட்டான்

என்னிடம் பூத்திருக்கும் முதுக்ககுறைமைப் பருவம் ஒரு பக்கம்
பழி வருமே என்னும் அச்சம் ஒரு பக்கம்

என்ன செய்வேன்

தலைவியின் கலக்கம்குறுந்தொகை 216 Kurunthogai 216

விழுப்பொருள் ஈட்டிக்கொண்டு வருவதற்காக அவர் சென்றுள்ளார்
இலையின் பசுமை நிறம் வாடாத வள்ளி (கள்ளி) தழைத்திருக்கும் காட்டு வழியில் சென்றுள்ளார்

நானோ இங்கு என் படுக்கையில் அவர் நினைவாகவே இருக்கிறேன்
என் வளையல்கள் கழன்றோடுகின்றன

அவர் வருவதாகச் சொன்ன கார்காலம் வந்துவிட்டது
மின்னலுடன் பெருமழை பொழிகிறது
இது என் உயிரை வாட்டுகிறது

தலைவி தன் கவலையைத் தோழியிடம் சொல்கிறாள் 


"பாசிலை வாடா வள்ளி"
கள்ளி


குறுந்தொகை 215 Kurunthogai 215

பையப் பைய நகரும் கோடைக்கால ஞாயிறும் மலையில் மறைகிறது
தோழி
இன்றேனும் அவர் வருவாரா

மலைக்காடுகளில் நீர் இல்லாத கயங்களில் நீரைத் தேடிப் பெறாத யானை தாக்க வரும் புலியிலிருந்து  தன் பெண்யானையைத் தழுவிக் காப்பாற்றிக்கொண்டு செல்லும் சுர வழியில் அவர் சென்றுள்ளார்

தலைவி தோழியை வினவுகிறாள் 
குறுந்தொகை 214 Kurunthogai 214

தலைவி கொடிச்சி தினைப்புனம் காத்துக்கொண்டிருந்தாள்
அவள் இடையில் அணிந்துகொள்ளத் தலைவன் அசோகந்தளிரால் புனைந்த தழையாடையை அன்று வழங்கினான்

அதன் விளைவு இன்று அவளுக்கு அரளிப்பூ மாலை சூட்டி ஊரார் முருகாற்று விழா நடத்துகின்றனர்.

அவனுக்காக இவள் ஏங்குவதை
முருகன் வருத்துகிறான் என்று எண்ணி
முருகனை வழியனுப்ப
முருகாற்றுப் படுக்கும் விழா நடத்துகின்றனர்

தோழியின் நினைவோட்டம் 
குறுந்தொகை 213 Kurunthogai 213

தோழி
அவருக்கு உன் மேல் அன்பு அதிகம்
அவர் செல்லும் வழியில் மான்கள் மேயும்
வெயிலில் மேயும்போது கிளைக் கொம்புகளை உடைய கலைமான் தன் பெண்மானுக்கு நிழல் தந்துகொண்டு நிற்பதைப் பார்ப்பார்
உன் நினைவு வரும்
விரைவில் திரும்பிவிடுவார்

தோழி தலைவியைத் தேற்றுகிறாள் 
குறுந்தொகை 212 Kurunthogai 212

அவன் என்னைக் கொண்ட கொண்கன்
அவன் வந்த தேர்மணி ஒலியுடன் கடலோரமாகத் திரும்பிச் செல்கிறது
அவன் என்னுடன் அன்று இருந்தவன்
அதனால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.
இன்று என்னிடம் வரவில்லை
அதனால் என் காமம் சாக வேண்டியதுதானா
வருந்திக்கொண்டிருக்கிறேன்

தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள் 
குறுந்தொகை 211 Kurunthogai 211

அழகிய கூந்தலை உடையவளே
வளையல் நெகிழ நீ வருந்துவதை எண்ணி அவர் அருளவில்லை
உன்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்
ஏதோ பிழைத்திருக்கிறோம்

தோழி
வாழி

காயும் மரா மரத்தில் தளிர்களை மொய்த்துவிட்டுத் தேன் பசி நீங்காமல் வண்டுகள் பறந்து செல்லும் காட்டு வழியில் அவர் சென்றுள்ளார் - என்பதை நினைத்து அவர்மீது இரக்கம் காட்டு

தோழி தலைவியைத் தேற்றுகிறாள் 
குறுந்தொகை 210 Kurunthogai 210

தோழி
தோள் மெலிந்து நான் வாடிக்கொண்டிருக்கிறேன்.

காக்கை கரைகிறது
காக்கை கரைந்தால் விருந்து வரும்
எனக்கு விருந்து அவர்
அவர் வருகிறார் என்று சொல்லிக் காக்கை கரைகிறது

இப்படி நல்ல செய்தியைத் தெரிவிக்கும் காக்கைக்கு நாம் என்ன தரலாம்

நள்ளி நாட்டில் வாழும் அண்டர் ஆனிரை மேய்ப்பர்
அந்தப் பசு கறந்த பாலில் செய்த நெய்யில் சோற்றைப் பிணைந்து தரவேண்டும்
தொண்டியில் விளந்த நெல்லரிசிச் சோற்றில் பிணைந்து தரவேண்டும்
பிணைந்து ஏழு பாத்திரங்களில் தரவேண்டும்
அப்படித் தந்தாலும் அது சிறிதளவே கைம்மாறு செய்ததாக அமையும்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 
குறுந்தொகை 209 Kurunthogai 209

அவள் வெட்சி மலர் மணக்கும்படித் தன் கூந்தலில் சூடியிருப்பாள்
புலிக்குட்டி மறைந்திருப்பதை நெல்லிக்காய்கள் மறைக்கும் வழியில் நான் சென்றுகொண்டிருக்கிறேன்.
இந்தப் பாதையில் குறுகுறு என நடக்கும் பறவையைப் பார்க்கிறேன்
அவள் நட்பு என் நினைவுக்கு வருகிறது

பொருள் தேடச் செல்லும் வழியில் தலைவன் நினைக்கிறான் 
Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி