Sunday, 31 March 2019

கம்பராமாயணம் 201 KambaRamayanam 201

மக்கள் படை சென்றபோது புழுதி வெள்ளம் எழுந்து வானம், கடல் அனைத்தையும் தூர்த்தது 76

சங்கு, பணைமுரசு, கொம்பு, தாளம், காளம், மங்கல பேரிகை - செய்த ஒலி கேட்டுத் தேவரும் மருண்டனர். 77

மந்திர ஓதை, வலம்புரி ஓதை, அந்தணர் ஆசி வழங்கிய ஓதை, முரசு, களிறு ஆகியவற்றின் ஓதை - எல்லாத் திசைகளிலும் அதிர்ந்தது.   78

புழுதி விண்ணுலகை மண்ணுலகாக மாற்றியது 79

நாற்படை நடந்தபோது கடலாடை உடுத்த நிலமகளே நெளிந்தாள். 80

இவ்வாறு சென்ற மக்கள் படை இரண்டு யோசனை தூரம் கடந்து "இந்து" (சந்திர சயிலம்) என்னும் மலைச்சாரலில் தங்கிற்று. 81

பாடல்

ஆர்த்தது, விசும்பை முட்டி; மீண்டு, அகன் திசைகள் எங்கும்
போர்த்தது; அங்கு, ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமைத்
தீர்த்தது; செறிந்தது ஓடி, திரை நெடுங் கடலை எல்லாம்
தூர்த்தது, சகரரோடு பகைத்தென, - தூளி வெள்ளம்.         76

சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட,
தொங்கலும் குடையும் தோகைப் பிச்சமும் சுடரை ஓட்ட,
திங்கள் வெண்குடை கண்டு ஓட, தேவரும் மருள, - சென்றான்                77

மந்திர கீத ஓதை, வலம்புரி முழங்கும் ஓதை,
அந்தணர் ஆசி ஓதை, ஆர்த்து எழு முரசின் ஓதை,
கந்து கொல் களிற்றின் ஓதை, கடிகையர் கவியின் ஓதை,-
இந்திர திருவன் செல்ல-எழுந்தன, திசைகள் எல்லாம்.     78

நோக்கிய திசைகள் தோறும் தன்னையே நோக்கிச் செல்ல,
வீக்கிய கழற் கால், வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப,
தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர் தாளும்
ஆக்கிய தூளி, விண்ணும் மண்ணுலகு ஆக்க,-போனான்.             79

வீரரும், களிறும், தேரும், புரவியும் மிடைந்த சேனை,
பேர்வு இடம் இல்லை; மற்று ஓர் உலகு இல்லை, பெயர்க்கலாகா;
நீருடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால்,
'பார் பொறை நீக்கினான்' என்று உரைத்தது எப் பரிசு மன்னோ?         80

இன்னணம் ஏகி, மன்னன் யோசனை இரண்டு சென்றான்;
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான்;
மன்மதக் களிறும், மாதர் கொங்கையும், மாரன் அம்பும்,
தென்வரைச் சாந்தும், நாறச் சேனை சென்று, இறுத்தது அன்றே           81

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம்  14. எழுச்சிப் படலம்
கம்பன் தமிழ் வளம் - கதை 


கம்பராமாயணம் 200 KambaRamayanam 200

யானை, குதிரை, தேர் வீரர் சூழ்ந்து வர, பரதன் சத்துருக்கன் இருவரும் வசிட்ட முனிவருக்குத் துணையாக அவர் பின் சென்றனர். 71 

தயரதன் சூரியனை வணங்கிய பின்னர் 
மறை வல்லவர்களுக்கு மணி, பொன், பசு  தானம் வழங்கிய பின்னர் 
மங்கல நாளில் புறப்பட்டான். 72 

அந்தணர் 8,000 பேர் மணிக் கலசத்து நீரைத் தெளித்துப் பல்லாண்டு பாடிக்கொண்டு அவனுக்கு முன் சென்றனர். 73 

"என்னைக் கண்டனன்", "என்னைக் காணவில்லை" என்று சொல்லிக்கொண்டு வேந்தர்கள் தயரதனுடன் சென்றனர். 74 

மன்னர்கள் கைகூப்பித் தொழ, மகளிர் சூழ, தயரதன் மற்றொரு கதிரவன் செல்வது போல் மணித்தேரில் சென்றான். 

பாடல்

பொரு களிறு, இவுளி, பொன் தேர், பொலங் கழல் குமரர், முந்நீர்
அரு வரை சூழ்ந்தது என்ன, அருகு முன் பின்னும் செல்ல,
திரு வளர் மார்பர், தெய்வச் சிலையினர், தேரர், வீரர்,
இருவரும், முனி பின் போன இருவரும் என்ன, போனார்.             71

நித்திய நியமம் முற்றி, நேமியான் பாதம் சென்னி
வைத்த பின், மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும்,
பத்தி ஆன் நிரையும், பாரும், பரிவுடன் நல்கி, போனான் -
முத்து அணி வயிரப் பூணான், மங்கல முகிழ்ந்த நல் நாள்.          72

இரு பிறப்பாளர் எண்ணாயிரர், மணிக் கலசம் ஏந்தி,
அரு மறை வருக்கம் ஓதி, அறுகு நீர் தெளித்து வாழ்த்தி;
வரன் முறை வந்தார், கோடி மங்கல மழலைச் செவ்வாய்ப்
பரு மணிக் கலாபத்தார், பல்லாண்டு இசை பரவிப் போனார்.                73

'கண்டிலன் என்னை' என்பார்; 'கண்டனன் என்னை' என்பார்;
'குண்டலம் வீழ்ந்தது' என்பார்; 'குறுக அரிது, இனிச் சென்று' என்பார்;
'உண்டு கொல், எழுச்சி?' என்பார்; 'ஒலித்தது சங்கம்' என்பார்;
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர், மருங்கு மாதோ.   74

பொற்றொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார்ப் புரவி வெள்ளம்,
சுற்றுறு கமலம் பூத்த தொடு கடல் திரையின் செல்ல,
கொற்ற வேல் மன்னர் செங் கைப் பங்கயப் குழாங்கள் கூம்ப,
மற்று ஒரு கதிரோன் என்ன, மணி நெடுந் தேரில் போனான்.     75

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம்  14. எழுச்சிப் படலம்
கம்பன் தமிழ் வளம் - கதை 


கம்பராமாயணம் 199 KambaRamayanam 199

மஞ்ஞை, அன்னம், கிளி, பூவை, பாவைசாமரை, முதலாவற்றைக் கையில் ஏந்திக்கொண்டு மங்கையர் பலர் அவர்களுடன் சென்றனர். 66 

கஞ்சுகம் என்னும் போருடை அணிந்த மெய்காப்பாள மகளிர் அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றனர். 67 

கூன், குறள், சிந்து, சிலதியர் குழாம் முதலானோர் சூடிய பூக்களில் வண்டு மொய்க்கக்  குதிரையில் சென்றனர்.  68 

பவளம், மணி, பொன், மரகதம், முத்து ஆகியவை பதித்த பல்லக்கில் 60,000 பேர் சூழ்ந்து வர அவர்கள் சென்றனர். 69 

அருந்ததி கணவன் வசிட்டன் வெள்ளைப் பல்லக்கில் அன்னத்தில் செல்லும் பிரமன் போல் சென்றான். 70 

பாடல்

செங் கையில், மஞ்ஞை, அன்னம், சிறு கிளி, பூவை, பாவை,
சங்கு உறை கழித்த அன்ன சாமரை, முதல தாங்கி,
'இங்கு அலது, எண்ணுங்கால், இவ் எழு திரை வளாகம் தன்னில்
மங்கையர் இல்லை' என்ன, மடந்தையர், மருங்கு போனார்.      66

ஏவல்மாந்தர் சுற்றிலும் காவல் புரிந்து செல்லுதல்

காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார்,
வீர வேத்திரத்தார், தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார்,
தார் அணி புரவி மேலார், தலத்து உளார், கதித்த சொல்லார்,
ஆர் அணங்கு அனைய மாதர், அடி முறை காத்துப் போனார்.  67

கூனொடு குறளும், சிந்தும், சிலதியர் குழாமும், கொண்ட
பால் நிறப் புரவி அன்னப் புள் எனப் பாரில் செல்ல,
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து செல்லப்
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார்.    68

துப்பினின், மணியின், பொன்னின், சுடர் மரகதத்தின், முத்தின்,
ஒப்பு அற அமைத்த வையம், ஓவியம் புகழ ஏறி,
முப்பதிற்று - இரட்டி கொண்ட ஆயிரம், முகிழ் மென் கொங்கைச்
செப்ப அருந் திருவின் நல்லார், தெரிவையர் சூழப் போனார். 69

வசிட்டன் சிவிகையில் செல்லுதல்

செவி வயின் அமுதக் கேள்வி தெவிட்டினார், தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார், ஆயிரத்து இரட்டி சூழ,
கவிகையின் நீழல், கற்பின் அருந்ததி கணவன், வெள்ளைச்
சிவிகையில், அன்னம் ஊரும் திசைமுகன் என்ன, சென்றான்.                70

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம்  14. எழுச்சிப் படலம்
கம்பன் தமிழ் வளம் - கதை 


கம்பராமாயணம் 198 KambaRamayanam 198

மதம்  கொண்ட யானைகள் பிடியைத் தழுவிக்கொண்டு சென்றன. 61 

தயரதனின் நேய மங்கையராகிய பிற மனைவிமார் தேர் யானை குதிரை முதலானவற்றில் சென்றனர். 62 

கைகேயி 1000 பேர் சூழ்ந்துவரப் பல்லக்கில் சென்றாள். 63 

சுமத்திரை 2000 பெர் சூழ்ந்துவரப் பல்லக்கில் சென்றாள். 64 

இராமனைப் பெற்ற கோசலை வானத்து மீன்கள் போல எண்ணிறந்தோர் சூழ்ந்து வரப் பாண்டில் என்னும் மூடாக்கு வண்டியில் சென்றாள். 65 

பாடல் 

அருவி பெய் வரையின் பொங்கி, அங்குசம் நிமிர, எங்கும்
இரியலின் சனங்கள் சிந்த, இளங் களிச் சிறு கண் யானை,
விரி சிறைத் தும்பி, வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து, மாதர்
சுரி குழல் படிய, வேற்றுப் பிடியொடும் தொடர்ந்து செல்ப.         61

நிறை மதித் தோற்றம் கண்ட நீல் நெடுங் கடலிற்று ஆகி,
அறை பறை துவைப்ப, தேரும், ஆனையும், ஆடல் மாவும்,
கறை கெழு வேல் கணாரும், மைந்தரும், கவினி, ஒல்லை
நெறியிடைப் படர, வேந்தன் நேய மங்கையர் செல்வார்.              62

பொய்கை அம் கமலக் கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன,
கைகயர் வேந்தன் பாவை, கணிகையர் ஈட்டம் பொங்கி
- இருநூறு சூழ, ஆய் மணிச் சிவிகைதன்மேல்,
தெய்வ மங்கையரும் நாண, தேன் இசை முரல, போனாள்.         63

விரி மணித் தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர்த் தடங் கண் நல்லார் ஆயிரத்து இரட்டி சூழ,
குரு மணிச் சிவிகைதன் மேல், கொண்டலின் மின் இது என்ன,
இருவரைப் பயந்த நங்கை, யாழ் இசை முரல, போனாள்.             64

வெள் எயிற்று இலவச் செவ் வாய் முகத்தை வெண் மதியம் என்று,
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி,
தெள் அரிப் பாண்டிற் பாணிச் செயிரியர் இசைத் தேன் சிந்த,
வள்ளலைப் பயந்த நங்கை, வானவர் வணங்க, போனாள்.          65

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம்  14. எழுச்சிப் படலம்
கம்பன் தமிழ் வளம் - கதை 


கம்பராமாயணம் 197 KambaRamayanam 197

"மகளிர் வருகின்றனர். விலகிச் செல்லுங்கள்" என்று சொல்லிக்கொண்டு  ஆடவர் விலகிச் சென்றனர். 56 

மகளிரின் மெல்லிய காலடிகள் நொந்ததால் "போதல் கடினமாக உள்ளது" என்றனர். 57 

பறை முழக்கம் கேட்டு வண்டியில் பூட்டிய எருதுகள் மருண்டு ஓடின. 58 

பாற்கடல் கடைந்தபோது தோன்றிய யானை போல இங்குச் சென்ற யானைகள் நீர்நிலைகளில் நனைந்து மகிழ்ந்து சென்றன. 59 

விறலியர் பாடச் செயிரியர் யாழ் மீட்டுவது கின்னர தேவர் இரட்டையராகக் காணப்படுவது போல் இருந்தது. 60 

பாடல்  

முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள் என்னும்
திருக் கிளர் கமலப் போதில் தீட்டின கிடந்த கூர் வாள்,
'நெருக்கு இடை அறுக்கும்; நீவிர் நீங்குமின் நீங்கும்' என்று என்று,
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகலப் போவார்.     56

நாந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்குண்டு அற்று,
காந்தின மணியும் முத்தும் சிந்தின, கலாபம் சூழ்ந்த
பாந்தளின் அல்குலார்தம் பரிபுரம் புலம்பு பாதப்
பூந் தளிர் உறைப்ப, மாழ்கி, 'போக்கு அரிது' என்ன நிற்பார்.     57

கொற்ற நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப, பண்டிப்
பெற்ற ஏறு, அன்னப் புள்ளின் பேதையர் வெருவி நீங்க,
முற்று உறு பரங்கள் எல்லாம், முறை முறை, பாசத்தோடும்
பற்று அற வீசி ஏகி, யோகியின் பரிவு தீர்ந்த.            58

கால் செறி வேகப் பாகர் கார்முக உண்டை பாரா,
வார்ச் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காணப்
பால் செறி கடலில் தோன்றும் பனைக் கை மால் யானை என்ன,
நீர்ச் சிறை பற்றி, ஏறா நின்ற - குன்று அனைய வேழம்.  59

அறல் இயல் கூந்தல், கண் வாள், அமுது உகு குமுதச் செவ் வாய்,
விறலியரோடு, நல் யாழ்ச் செயிரியர், புரவி மேலார்,
நறை செவிப் பெய்வது என்ன, நைவள அமுதப் பாடல்
முறை முறை பகர்ந்து போனார், கின்னர மிதுனம் ஒப்பார்.      60

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம்  14. எழுச்சிப் படலம்
கம்பன் தமிழ் வளம் - கதை 


கம்பராமாயணம் 196 KambaRamayanam 196

படை செல்வதால் எழுந்த புழுதி மேகம் போல் கிளம்பித் திசையானைகளின் செவியை அடைத்தது. 51 

யானை சிந்திய மதத்தில் வழுக்கி விழுந்துவிடாமல் மகளிரை ஆடவர் அணைத்துக்கொண்டு சென்றனர். 52

வயல்களிலும் மடுவிலும் பூத்திருந்த 
நெய்தல் மலர் தம் கைகள் போலவும், 
குமுதம் முகம் போலவும். 
கமலம் வாய் போலவும் 
தோன்றியதால் அவற்றைப் பறித்துத் தருமாறு மகளிர் தம் கொழுநரை வேண்டினர். 53 

யானையைக் கண்டு அஞ்சிய மகளிர் தம் கூந்தலையும், ஆடை அணிகலன்களையும் தழுவிக்கொண்டு மயில் போல் ஓடினர். 54 

குடை, கொடி பறத்தலால் பகல் போலவும்
அவற்றின் நிழலால் இரவு போலவும் 
எங்கும் தோன்றியது. 55 

பாடல்

குசை உறு பரியும், தேரும், வீரரும், குழுமி, எங்கும்
விசையொடு கடுகப் பொங்கி வீங்கிய தூளி விம்மி,
பசை உறு துளியின் தாரைப் பசுந் தொளை அடைத்த, மேகம்;
திசைதொறும் நின்ற யானை மதத் தொளை செம்மிற்று அன்றே         51

கேட்கத் தடக் கையாலே, கிளர் ஒளி வாளும் பற்றி,
சூடகத் தளிர்க் கை, மற்றைச் சுடர் மணித் தடக் கை பற்றி,
ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் - ஆற்றில்,
பாடகக் காலினாரை, பயப் பயக் கொண்டு போனார்.    52

செய்களின் மடுவில், நல் நீர்ச் சிறைகளில், நிறையப் பூத்த
நெய்தலும், குமுதப் பூவும், நெகிழ்ந்த செங் கமலப் போதும்,
கைகளும், முகமும், வாயும், கண்களும், காட்ட, கண்டு,
'கொய்து, அவை தருதிர்' என்று, கொழுநரைத் தொழுகின்றாரால்      53

பந்தி அம் புரவிநின்றும் பாரிடை இழிந்தோர், வாசக்
குந்தள பாரம் சோர, குலமணிக் கலன்கள் சிந்த,
சந்த நுண் துகிலும் வீழ, தளிர்க் கையால் அணைத்து, 'சார
வந்தது வேழம்' என்ன, மயில் என இரியல் போவார்.          54

குடையொடு பிச்சம், தொங்கல் குழாங்களும், கொடியின் காடும்,
இடை இடை மயங்கி, எங்கும் வெளி சுரந்து இருளைச் செய்ய,
படைகளும், முடியும், பூணும், படர் வெயில் பரப்பிச் செல்ல-
இடை ஒரு கணத்தினுள்ளே, இரவு உண்டு, பகலும் உண்டே!       55

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம்  14. எழுச்சிப் படலம்
கம்பன் தமிழ் வளம் - கதை 


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி