Thursday, 31 January 2019

அகநானூறு Agananuru 182

பலாச்சுளையில் விளைந்த தேறல் சாற்றினை இளையரோடு சேர்ந்து உண்டவன் குன்ற நாடன்.
குறவர் இரவில் முள்ளம்பன்றியை வேட்டையாடும் வழியில் இவன் தன் காதலியை நாடி வருகிறான்.
இதனால் அவனுக்குத் தீங்கு நேருமோ எனக் கருதி இவளது காதலியின் தோழி இவனை மிளகுக் காயைத் தின்ற காரத்தில் குரங்கு அங்கும் இங்கும் ஓடும் காட்டு வழியில் பகலில் வரலாமே என்று அறிவுறுத்துகிறாள்.
குறிஞ்சி
கபிலர் பாடல்
பாடல் பகுதி
பானாட் கங்குல், 10
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும்,
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால்,
கடும் பகல் வருதல் வேண்டும்

அகநானூறு Agananuru 181

 • காட்டு வழியில் முன்னேறிச் செல்ல விரும்பாமல் அவளை நினைத்துக்கொண்டு தயங்குகிறாய். நெஞ்சே! உன் நிலைமை என்ன - சொல். 
 • மிஞிலி பெரும் படையுடன் சென்று போரிட்டான். ஆய் எயினன் போரில் வீழ்ந்தான். விழுந்தவன் உடலில் வெயில் படாமல் அவன் வளர்த்த பறவைகள் மேலே பறந்து அவனுக்கு நிழல் தந்தன. காவிரி ஆற்று மணலை அள்ளிக்கொண்டு வந்து அவன் மேல் கொட்டின. இப்படிக் கொட்டிய ஊர் புகார் நாட்டில் உள்ள ஆலமுற்றம். 
 • இந்த ஆலமுற்றத்தில் மகளிர் கையால் பாவை செய்து விளையாடிய பின்னர் காவிரி ஆற்றுத் துறை நீரில் இறக்குவர். அங்கே அவள் இருக்கிறாள். 
 • நெஞ்சே, நீ என்ன செய்யப்போகிறாய்? பொருள் தேடச் செல்லும் வழியில் தலைவன் நினைவலை. 
பாலை
பரணர் பாடல்
பாடல் பகுதி
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
என் நிலை உரைமோ நெஞ்சே!

அகநானூறு Agananuru 180

 • தோழி! தோழியருடன் நாம் வண்டல் விளையாடிக்கொண்டிருந்தோம். அவன் தேரில் வந்தான். குவளை மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து என் தலையில் அணிவித்தான். என் முலையை உற்று நோக்கினான். ஏதோ நினைவோடு அங்கே நில்லாமல்  போய்விட்டான். எனக்குச் சிரிப்பு வருகிறது. 
 • தாழை, ஞாழல், புன்னை பூந்தாதுகள் என்மேல் உதிர்ந்திருப்பதைப் பார்த்து மேனியில் பசலை என்று எண்ணிக்கொண்டு இந்த ஊர் மக்கள் உருத்துப் பார்க்கின்றனர். தலைவி தோழியிடம் சொல்கிறாள். 
நெய்தல்
கருவூர்க் கண்ணம்பாளனார் பாடல்
பாடல் பகுதி
சுரும்பு ஆர் கண்ணி
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து,
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்;

அகநானூறு Agananuru 179

வெயில் வெண்தேர் (கானல்நீர்) ஓடும் நிலப்பரப்பு, யானை தண்ணீர் பெறாமல் வேறு இடத்துக்குச் செல்லும் நிலம், இப்படிப்பட்ட வழியில் செல்ல விரும்புகிறாய் என்றால், அழகே உருவான  இவளை விட்டுவிட்டு உன்னால் அங்கு இருக்க முடியுமா? தோழி தலைவனை வினவுகிறாள். 
பாலை
கோடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் பாடல்
பாடல் பகுதி
இன் நகை,   10
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்,
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம்
மதி ஏர் வாள் நுதல் புலம்ப,
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?

அகநானூறு Agananuru 178

 • உறங்கும் முள்ளம் பன்றி குருகு போல் பூத்திருக்கும் கூதளம் பூ மோதி உதிர்ந்த தாதுகளால் நனைந்து பொன்னை மாற்றறுப் பார்க்கும் கட்டளைக்கல் போலக் காணப்படும் கோலத்தில் தினை விளைச்சலை மேய்ந்தது. பின்னர் அந்த மலையில் உறங்கிற்று. இந்த முள்ளம்பன்றி போன்றவன் உன் காதலன் என்பதை நீ உணர்ந்துகொண்டால் நீ குறைபாடு இல்லாத உலகில் வாழலாம். 
 • தோழி! இரவு பகல் என்று பாரக்காமல் பனிக்காலத்தில் தனிமையில் செல்லுதல் துன்பம் என்று அவர் உணர்ந்துகொண்டார். அதனால், கனவிலும் அவர் உன்னைப் பிரியமாட்டார். முன்பை விட இனி உனக்கு அதிகமாக அருள் செய்வார். தோழி தலைவியிடம் கூறுகிறாள். 
குறிஞ்சி
பரணர் பாடல்
பாடல் பகுதி
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது'' என,
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை   20
முன் தான் கண்ட ஞான்றினும்
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே.

அகநானூறு Agananuru 177

 • மேனி நலம் குன்றுகிறது. அவர் இன்னும் வரவில்லை என்று சொல்லிப் புலம்பவதை விட்டுவிடு. 
 • உன்  ஐம்பால் சடையில் நீ  பூ முடிக்க வேண்டும். 
 • அவர் அயிரியாறு பாயும் காட்டைக் கடந்து சென்றுள்ளார் . அங்குச் சென்றாலும் நீண்ட காலம் தங்கமாட்டார். 
 • காவிரி ஆற்றுக்கு வடக்கில் பண்ணன் ஊரில் (சிறுகுடி) இருக்கும் மாமரத் தளிர் போன்ற உன் மேனியிலுள்ள முலையில் அவர் தொய்யில் எழுதியதை மறக்காமல் விரைந்து வருவார். 
 • தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.  
பாலை
செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் பாடல்
பாடல் பகுதி
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. 20

அகநானூறு Agananuru 176

 • ஊர! வயலில் தாமரையோடு இருக்கும் நண்டு குருகு பிடிக்க வரும்போது பகன்றைப் பூப் பக்கத்தில் ஓடி ஒளிந்துகொள்ளும் நாடன் நீ. 
 • உன் உடலுறவுக் காதலி உன்னோடு பிணக்குப் போட்டுக்கொண்டளோ? தழையாடை அணிந்துகொண்டு அவள் உன்னைத் தழுவி ஆடவில்லை போலும். 
 • என்னைப் போல் புதல்வனைப் பெற்று, வாழ அவள் எந்த வகையில் கடமைப்பட்டிருக்கிறாள். என்றாலும் நீ இல்லை என்ற ஏக்கத்தால் அழுதுகொண்டிருப்பாள். தன் விரலைத் திருகி என்னை வைது நெட்டி முரித்துக்கொண்டிருப்பாள். கூர் மழுங்கிய பல்லைக் காட்டி  ஊர் முழுவதும் உன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பாள். 
 • அவளைக் காணச் செல். 
 • தோழி தலைமகனை வாயில் மறுத்தது.
மருதம்
மருதம் பாடிய இளங்கடுங்கோ பாடல்
பாடல் பகுதி
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
கூர்நுனை மழுகிய எயிற்றள் 25
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.

Wednesday, 30 January 2019

எழுத்துள்ள மொழி languages with scripts

உலகில் எழுத்துக்களைக் கொண்ட மொழிகள் எத்தனை என்று திட்டமாகக் கூறமுடியாது. காரணம் ஒரே மொழியில் திசைமொழிகள் பல உள்ளன. என்றாலும் ஒரு அளவீடு 

 • 6000 மொழிகளுக்கு எழுத்து வடிவம் உள்ளது. 
 • இதில் கருத்து மாறுபாடுகள் உள்ளன. 2000 என்று சிலர் காட்டுகின்றனர். பேச்சு மொழிகள் spoken languages

உலகில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பதை நாம் திட்டமாகக் கூற முடியாது. என்றாலும் ஒருவாறு அளவிடலாம்.

5000 மொழிகளுக்கு மேல் முதல்-மொழிகளும், கிளைமொழிகளுமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பேசப்படுகின்றன.  மேலும் 800 மொழிகள் இந்தியாவில் பயிலப்படுகின்றன.

 • சீனாவின் வடபகுதியில் 70 கோடி  மக்கள் மந்தாரின் (Mandarin) மொழியைப் பேசுகின்றனர். 
 • அடுத்ததாக 33 கோடி மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். 
 • அடுத்ததாக 30 கோடி மக்கள் ஸ்பானிஷ் (Spanish) மொழி பேசுகின்றனர். 

அருகில் உள்ள மக்களோடு பேசிப் பழகுவதால் ஒருவருடைய மூளை 20, 25 மொழிகளைப் பதிவாக்கிக் கொள்ளும் வல்லமை கொண்டதாக உள்ளது.

 • கார்டினல் மெசோபாண்டி (Cardinal Mezzofanti) (1774 - 1849) என்பவர் 26-28 மொழிகள் பேசினாராம். 
 • அமெரிக்காவில் சொல்லியல் துறையில் பணியாற்றிய ஜார்ஜ் ஹெண்டிரி ஸ்மித் (Mr. George Henry Schmidt  who was the chairman of the Department of Terminology of the United Nations) 31 மொழிகளைச் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றிருந்தாராம். 

தமிழ் உயர்தனிச் செம்மொழி Tamil is a classical language

ஒரு கணக்கீடு
பேச்சு மொழி
எழுத்து மொழி

தமிழை 
உயர்தனிச் செம்மொழி 
என்கிறோம் 
Tamil is a classical language அகநானூறு Agananuru 175

 • வழிப்பறி செய்வோர் வழியில் செல்லும் வம்பலர் (புதியவர்) உயிரைக் கொல்வர். பருந்தினம் அவர் உடலைத் தின்னும். 
 • இப்படிப்பட்ட வெஞ்சுரத்தைக் கடந்து சென்றுள்ள காதலர் என் வளையல் கையைப் பற்றிக்கொண்டு மழைக்காலம் வந்ததும் வினையை முடித்துக்கொண்டு வந்துவிடுவேன் என்று சொன்னார் அல்லவா? 
 • தோழி! மழை பொழிகிறது. அவர் சொன்ன சொல் என்ன ஆயிற்று?  
 • தலைவி தன் தோழியை வினவுகிறாள். 
பாலை
ஆலம்பேரி சாத்தனார் பாடல்
பாடல் பகுதி
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும், ''வினைமுடித்து
வருதும்'' என்றனர் அன்றே தோழி!

அகநானூறு Agananuru 174

 • நான் போருக்கு வந்திருக்கிறேன் என்பது அவளுக்குத் தெரியாது. 
 • முல்லைக்கொடி குழைய மழை பொழியும் காலத்தில் என்மீது பிணக்குப் போட்டுக்கொண்டு தன்னை வருத்தும் பசலை படர்ந்த மேனியுடன் எப்படி இருக்கிறாளோ? 
 • வேங்கைப் பூ உதிர்ந்து கிடப்பது போன்று சுணங்கழகு கொண்ட மேனியுடன் அந்த மாயோள் என்னோடு மணலில் நடந்து வந்தாளே! 
 • பாசறையில் இருந்துகொண்டு கணவன் தன் மனைவியை நினைக்கிறான். 
முல்லை 
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடல்
பாடல் பகுதி
கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
யாங்கு ஆகுவள்கொல்

அகநானூறு Agananuru 173

 • அறம் திறம்பாமல் வாழ்தல், உறவினர் துன்பத்தைப் போக்கல், இரண்டும் பொருளால் கைகூடும். அதனால், நான் பொருள் கொண்டுவரச் செல்கிறேன். நீ உன் துன்பத்தைச் சில நாள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் - என்று உன் கையிலுள்ள வளையல்களைச் சுழற்றிக்கொண்டே கூறினார் - என்கிறாய். 
 • அப்படியானால், தோழி, அவர் விரைவில் வந்துவிடுவார். 
 • அவர் நன்னன் ஆளும் பொன்படு நெடுவரைப் பகுதியைத் தாண்டிச் சென்றுள்ளார். வழியில் உமணர் வண்டி செல்லும். மூங்கில் நெல் முத்துக்கள் கொட்டும். 
 • விரைவில் திரும்புவார். கவலை வேண்டாம். 
 • தோழி தலைவியைத் தேற்றுகிறாள். 
பாலை
முள்ளியூர்ப் பூதியார் பாடல்
பாடல் பகுதி
''அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்'' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 

அகநானூறு Agananuru 172

 • பலாப்பழத்தில் பிழிந்து பதப்படுத்திய மகிழ் சாற்றைக் கானவன் பருகுவான் 
 • சந்தன ஞெகிழியில் (விறகில்) சமைத்துச் சுற்றத்தாருடன்  மகிழ்ந்து உண்பான் 
 • இப்படிப்பட்ட குன்ற நாட்டின் தலைவன் நீ
 • நீ அன்பு இல்லாதவனாக இருப்பாய் என்பது முன்பே தெரியவில்லை. தெரிந்திருந்தால் இந்தக் குறுமகள் உன் உறவை நினைத்து நினைத்து மேனி நலம் சிதைந்து பசலை பூக்காமல் இருக்கும் அல்லவா? 
 • தோழி தலைவனை வினவுகிறாள்.  
குறிஞ்சி
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடல்
பாடல் பகுதி
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
அறியேன் யான்; அஃது அறிந்தனென் ஆயின்  15
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
மணி ஏர் மாண் நலம் சிதைய,
பொன் நேர் பசலை பாவின்று மன்னே!

அகநானூறு Agananuru 171

 • பெருங்கை எண்கு (கரடி) இரும்பைப் பூவைத் தின்னும் ஊர்க்காட்டு வழியைக் கடந்து அவர் பொருளீட்டிக் கொண்டிருக்கிறார்
 • கரடி ஒலி கேட்டால் சிற்றூர் மக்கள் வில்லம்பை எடுத்துக்கொண்டு ஓடி வழிச் செல்வோருக்குப் பாதுகாப்பாக இருப்பர்
 • தோழி! அவர் உன்னிடம் விரைவில் வந்து சேர்வார். அழுதுகொண்டிருக்காதே. கவலை இல்லாமல் இரு. 
 • தோழி தலைவியைத் தேற்றுகிறாள். 
பாலை
கல்லாடனார் பாடல்
பாடல் பகுதி
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப்
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய,
கருங் கோட்டு இருப்பை ஊரும்
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! 15

அகநானூறு Agananuru 170

 • காதலி நண்டைத் தூது விடுகிறாள். 
 • என் காதலன் என்னோடு இருந்ததை கானலோ கழியோ சாட்சி சொல்லாது. 
 • தேன் உண்ணும் மலர்களைக் கொண்ட புன்னை மரமும் பேசாது. 
 • வண்டுகளும் களிப்பில இருக்கும். 
 • ஆகவே நண்டே! நீதான் எனக்குச் சாட்சி சொல்ல வேண்டும். கடற்காக்கை தாழை மடலில் அமர்ந்துகொண்டு இறா மீனைப்பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கும். 
 • கடற்காக்கை உன்னைப் பிடிக்காமல் உன் துன்பத்தைப் போக்கிய நான் என் துன்பத்திலிருந்து நிலையாக விடுபடுவேனா - நீ தான் அவரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும் 
நெய்தல்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடல்
பாடல் பகுதி
கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,    5
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ!

அகநானூறு Agananuru 169

 • நான் இங்கே இருக்கிறேன். 
 • இங்கு வெயிலால் கரியும் மரம். புலி கொன்ற யானைக்கறியை மறவர் உப்புக்கண்டம் போட்டு உண்கின்றனர். 
 • உப்பு விற்க வந்த உமணர் அதனை ஞெலிகோலில் மாட்டிச் சுட்டு உண்கின்றனர். 
 • அங்கே என் மனைவி தனிமையில் வருந்திக்கொண்டிருப்பாள். 
 • நான் அவளுடன் இல்லாததால் விரல்களை நெற்றியில் முட்டுக் கொடுத்துக்கொண்டு கவலையுடன் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பாள். 
 • என்ன செய்வேன். 
 • தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
தொண்டி ஆமூர்ச் சாத்தனார் பாடல்
பாடல் பகுதி
நம் வயின் படர்ந்து; நனி
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து,
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை    10
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயல் உமிழ் நீரின் கண் பனி வார,
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால், அளியள், திருந்திழைதானே!

Tuesday, 29 January 2019

அகநானூறு Agananuru 168

 • வெற்ப! யாமம் முழுவதும் உன்னோடு கழித்தேன். 
 • இப்பொழுது கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறேன். 
 • குழுமூர் அரசன் உதியன் அட்டிலில்  (சமையல் கூடத்தில்) உணவு உண்போர் ஒலி கேட்பது போல் அருவி ஒலிக்கும் மலை வழியில் நீ வருகிறாய். கன்றும் பிடியும் களிறும் நடமாடும் வழியில் வருகிறாய். கல்லுக் குகையில் புலி உருமும் வழியில் வருகிறாய். 
 • கானவர் இருளில் மான் வருகிறது என்று நினைத்துக்கொண்டு அம்பு எய்தால் நிலைமை என்ன ஆகும்? 
 • எனவே திருமணம் செய்துகொண்டு என்னுடனேயே இருந்துவிடு. 
 • காதலி காதலனிடம் கூறுகிறாள். 
குறிஞ்சி
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் பாடல்
பாடல் பகுதி
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, 10
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்;
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?

அகநானூறு Agananuru 167

 • நெஞ்சே! இன்று என் மனைவி மாயோளுடன் மாளிகை மெத்தையில் இருக்கிறேன். 
 • நாளை இவள் இல்லாமல் உறக்கம் வராமல் கொடுவில் ஆடவர் சாத்து வணிகர்களைக் கொன்று பாழாக்கிப் பீர்க்கங்கொடி படர்ந்திருக்கும்  மன்றத்தில், தாயிடம் பால் குடிக்கும் குட்டி நாய்கள் விளையாடும் மன்றத்தில், பந்தல் கால்களில் கறையான் ஏறியிருக்கும் பகுதியில் சாய்ந்துகொண்டு இருப்பேனோ? 
 • அவன் பொருள் ஈட்டச் செல்ல விரும்பவில்லை. 
பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடல்
பாடல் பகுதி
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
இனிது உடன் கழிந்தன்று மன்னே;

அகநானூறு Agananuru 166

 • பரத்தை வினவுகிறாள்: 
 • என்னோடு உறவு கொண்டிருந்த அவள் கணவன் தன் மனைவியிடம் வேளூர் தெய்வத்தை சொல்லி சத்தியம் செய்கிறானாம். 
 • "நீ சொல்கிறவளோடு எனக்குத் தொடர்பு இருக்குமாயின் வேளூர்த் தெய்வம் என்னை வருத்தட்டும்" என்கிறானாம். 
 • இப்படிச் சொல்லி அவன் சூளுரைக்கிறான் என்றால், யானை-முகப் புனையில், காவிரி ஆற்றுப்  புதுப்புனலில், என்னைத் தழுவிக்கொண்டு நீராடியது யார்?   
மருதம்
இடையன் நெடுங்கீரனார் பாடல்
பாடல் பகுதி
மனையோட் தேற்றும் மகிழ்நன் ஆயின், 10
யார்கொல் வாழி, தோழி! நெருநல்
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ,
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு,
புதுவது வந்த காவிரிக்
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே?  15

அகநானூறு Agananuru 165

 • யானையை வீழ்த்தும் பயம்புக் குழியில் தாய்-யானை விழுந்துவிட்டது என்று தந்தை-யானை ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் வேளையில் யானைக் கன்று எருமை மாட்டில் பால் குடிக்கும் நாடுகள் பலவற்றைக் கடந்து என் மகள் சென்றுவிட்டாள். 
 • அவள் நன்னராட்டி (நல்லது செய்தவள்).
 • அவள் இல்லாமல் அவளது தோழியர் கூட்டமே வருந்திக்கொண்டிருக்கிறது
 • "என் உயிரை மீட்டுத் தாருங்கள்" என்று தாயும் கதறிக்கொண்டிருக்கிறாள்
 • நொச்சி நிழலில் அவள் கிடத்திய பாவையை எடுத்து அதன் கண்ணையும் நெற்றியையும் நீவி மணலில் கிடத்தித் தழுவிக்கொண்டு அழுகிறாள். 
 • மகள் காதலனுடன் சென்றதால் தாய் வருந்தும் நிலைமையைக் கண்டவர்கள் சொல்கின்றனர்.
பாலை
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
பாடல் பகுதி
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ,           10
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
''தருமணற் கிடந்த பாவை என்
அருமகளே என முயங்கினள் அழுமே!

அகநானூறு Agananuru 164

வெயில் நீங்கி மழை பொழிந்திருக்கிறது. முல்லையும் தோன்றியும் பூத்து காடே மணக்கிறது. "அவர் நிலை என்ன" என்று எண்ணி என் மனைவி கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பாள். அவள் நலம் பெறத்  தக்க காலம் இது. பகைவர் மதில் கதவுகளைக் குத்திச் சிதைந்த கொம்புகளுடன் யானை கட்டியிருக்கும் முளையை ஒடித்துக் கொண்டிருக்கிறது. சினத்துடன் காணப்படும் வேந்தன் போர் வினையைக் கைவிட்டால் இது நல்ல நேரம். 
பாசறையில் இருக்கும் தலைமகன் நினைவலை 
முல்லை
மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார் பாடல்
பாடல் பகுதி
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்    10
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
கந்து கால் ஒசிக்கும் யானை,
வெஞ் சின வேந்தன் வினை விடப் பெறினே!

அகநானூறு Agananuru 163

குளிர் கொள் வாடை! அவர் வரவை நினைத்துக்கொண்டு ஆசையோடு  காத்திருக்கிறேன். என்மீது இரக்கம் இல்லாமல் வீசுகிறாய். யானை பெருமூச்சு விடுவது போல் நீர் திவலைகளைத் தெளித்துக்கொண்டு வீசுகிறாய். நீர்ப்பூக்களே கரியும் முன்பனி பொழியும்போது எனக்காகவே வீசுவது போல் தோன்றுகிறது. பொருளே மூச்சாகத் தேடிக்கொண்டிருக்கும் அவர் இருக்குமிடத்தில் வீசக்கூடாதா? ஒருவேளை அவர் என்னை நினைக்கக் கூடும் அல்லவா? வாடைக் காற்றோடு பேசுகிறாள், 
பாலை
கழார்க்கீரன் எயிற்றியார் பாடல்
பாடல் பகுதி
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி!

Agananuru 163

You Northern wind in chillness! It is the last day of rainy season after the heavy rain that slashed flowers. I am here, pondering my husband's arrival. My bangles are falling from my hands because of my body becomes thin having no enjoyment with my husband. He left me for earning wealth in a distant place. By this time you are attacking me without mercy. You are blowing as elephant sigh-breathing with water drops. It seems that you are attacking me only. Instead of blowing here, if you blow where he is, he may think about me and decide to return back here immediately. 

The wife (heroine) speaks with the wind. 
A poem on aired land of culture, by the poet Kalar Kiran Eitriyar

அகநானூறு Agananuru 162

 • என் காதலியின் தந்தை வளமனையின் ஒரு பக்கம் நின்றுகொண்டிருந்தேன். 
 • அவள் தன் அழகெல்லாம் தெரிரியும்படி மழைக் காற்றில் ஆடும் தளிர் போல் நடுங்கிக்கொண்டு வந்தாள்.  என் காமநோய் தீரும்படித் திரும்பத் திரும்ப ஆரத் தழுவினாள். 
 • அதிகன் மலையில் பசும்பூண் பாண்டியன் தன் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டான். அவன் கொடி பறப்பது போல அந்த மலையில் கொண்டும் அருவியில் சூரர மகளிர் தோன்றுவர். 
 • அவர்களை யாராலும் அடைய முடியாது. அந்த மகளிர் போன்று பெற முடியாத அவள் வந்து என்னை ஆரத் தழுவினாள். 
 • காதலியின் தழுவிதலைப் பெற்ற காதலன் நினைவு 
குறிஞ்சி
பரணர் பாடல்
பாடல் பகுதி
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்,
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி,
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது,    15
நோய் அசா வீட முயங்கினள்

அகநானூறு Agananuru 161

 • கொடுமைக்கார ஆடவர் அம்பு எய்து புதிதாக வழியில் செல்வோர் உயிரைக் கொல்வர். 
 • கொல்லப்பட்டவர் உடலைத் தின்னக் கழுகு தன் கூட்டத்தைக் கூவி அழைக்கும். 
 • இப்படிப்பட்ட வழியில் பொருளீட்டச் செல்லப் போகிறீர் என்பதைத் தெரிந்துகொண்டு இவள் கண்ணீர் சிந்துகிறாள். 
 • பொருளீட்ட நீ பிரிதல் இனி எப்படி முடியும்? 
 • தோழி தலைவனை வினவுகிறாள். 
பாலை
மதுரைப் புல்லங்கண்ணனார் பாடல்
பாடல் பகுதி
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்,  10
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய;
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே.

அகநானூறு Agananuru 160

 • முன்பெல்லாம் அவர் தேர் இரவில் வரும். 
 • இப்போது பகலில் வருகிறது. 
 • பெண்-ஆமை இட்ட முட்டையை ஆண்-ஆமை பாதுகாக்கும் நிலப்பரப்பில் அவன் தேர் மெதுவாக வருகிறது. 
 • அவர் திருமணம் செய்துகொள்ள வருகிறார். 
 • என்  நெஞ்சம் ஆர்வத்தில் படபடக்கிறது. 
 • தோழி! உனக்கும் அப்படியா? 
 • தோழி தலைவியை வினவுகிறாள். 
நெய்தல்
குமுழி ஞாழலார் நப்பசலையார் பாடல்
பாடல் பகுதி
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது    15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச் சீறூர் காண,
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.

அகநானூறு Agananuru 159

 • வண்டியில் ஏற்றிச் சென்று உப்பு விற்கும் உமணர் வண்டி மாடுகளை அவிழ்த்து மேய விட்டுவிட்டு, சமைத்து உண்ட பின் சும்மா இருக்கும் அடுப்பில் ஆனிரை கவர்ந்து வரும் ஆடவர் ஊன் கறியைச் சுட்டுத் தின்பர். 
 • அப்படிப்பட்ட வழியில் காதலர் சென்றுள்ளார் என்று அவலம் கொள்ளாதே
 • குறும்பொறை நாட்டுக்குக் கிழக்கில் வானவன் யானைப் படையைத் துணையாகக்  கொண்டு கொடுமுடி என்னும் மன்னவன் காக்கும் ஆமூர்க் கோட்டை போன்ற செல்வத்தைப் பெற்றாலும் உன் முலையைத் தழுவுதலை விட்டுவிட்டு அவர் அங்கேயே தங்க மாட்டார். 
பாலை
ஆமூர்க் கவுதமன் சாதேவனார் பாடல்
பாடல் பகுதி
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர், நின்    20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.

அகநானூறு Agananuru 158

 • அன்னை! மழை பொழியும் நள்ளிரவில், காதுக் குழை மின்னல் போல் ஆட, பின்னிய கூந்தல் கலைய இவள் வருவதைப் பார்த்தேன் என்று இவளை அடிக்காதே. 
 • நம் படப்பையை அடுத்துள்ள காட்டில் அணங்கு வரும் என்பது உனக்குத் தெரியுமே! 
 • நனவில் நிகழ்வது போல, கனவிலும் நடக்குமல்லவா?
 • இவள் வெளிச்சம் இல்லாமல் தனியே செல்ல அஞ்சுவாளே!  கூகை குழறினாலும் நெஞ்சம் பதைத்து உன்னைத்  தழுவிக்கொள்வாளே! 
 • பாதுகாக்கும் இவள் தந்தையும் இங்கு இல்லை. இந்த நிலையில் வெளியில் செல்ல இவள் அஞ்சுவாள் அல்லவா?  
 • செவிலித்தாய்க்குச் சொல்லுவாள் போலத் தலைவனுக்குக் கேட்குமாறு தோழி  தலைவியிடம் சொல்லல் 
குறிஞ்சி
கபிலர் பாடல்
பாடல் பகுதி
புலிக் கணத்தன்ன நாய் தொடர் விட்டு,  15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?

Monday, 28 January 2019

அகநானூறு Agananuru 157

 • கள் விற்கும் அரியல் பெண்டிர்  குறுகிய வாயையுடைய அல்கில் சொம்பில் பாளை சுரந்த கலுழிக் கள்ளை ஊற்றித் தரப் போருக்குச் செல்லும் ஆடவர் உண்பர். 
 • அவர்களின் வில்லுக்கு இரையானவர் கிடக்கும்  பதுக்கைகளில் பூத்திருக்கும் கோங்கு, அதிரல் போன்றவற்றை வளைத்து யானை கவளம் கவளமாக விடியற் காலத்திலேயே தின்னும். 
 • இப்படிப்பட்ட வழியில் தனியே செல்கிறேன் என்று அவரே சொல்கிறார். 
 • தோழி! போர் முடிந்த மன்றத்தில் மழையில் நனைந்து வெயிலில் காயும் செயலற்ற  பாவைச்சிலை போல் மனையில் கிடப்பவர்களுக்கு மட்டுமே பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியும். 
 • என்னால் அவர் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாது
 • தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
பாலை
வேம்பற்றூர்க் குமரனார் பாடல்
பாடல் பகுதி
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்,
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை,

அகநானூறு Agananuru 156

 • ஊர! 
 • வெயிலின் வெப்பத்தைத் தணிக்க, நெல் வயலில் பூத்திருந்த ஆம்பல் கொடிகளால் தழையாடை புனைந்து உடுத்திக்கொண்டோம். 
 • அப்போது உன்னோடு சிரித்து விளையாடினோம். இது தவறா? 
 • அன்னை வேறு வகையாக எண்ணிக்கொண்டு இவளுக்கு முருகாட்டு விழா நடத்துகிறாள். ஆட்டுக்கடாவை முருகனுக்குப் பலி கொடுக்கிறாள். அப்போதும் இவளது காமநோய் தணியவில்லை. 
 • அன்னை செய்வது சரியா? 
 • தோழி தலைவனை இவ்வாறு வினவித் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள். 
மருதம்
ஆவூர் மூலங்கிழார் பாடல்
பாடல் பகுதி
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கி அன்ன,
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,     5
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
தீம் புனல் ஊர! 

அகநானூறு Agananuru 155

 • அறத்தில் கடைநிலை பெறாமல் முதல்-நிலை பெறும் வாழ்க்கை பிறர் வாயிலில் நின்று தரும்படி வேண்டாச் செம்மாப்பு இரண்டையும் செல்வம் தரும் என்று சொல்லி என் தலையைத் தடவிக்கொடுத்தார். 
 • எனவே, தோழி! 
 • நாம் துன்புற்றாலும் பரவாயில்லை. அவர் பொருளீட்டும் வினையை முடித்துக்கொண்டு வரட்டும். 
 • வெயிலில் காற்றே வெம்பும் நீரில்லாக் காட்டு வழியில் அவர் சென்றுள்ளார். 
 • அவர் செயல் சிறக்கட்டும். 
 • தோழியிடம் தலைவி சொல்கிறாள். 
பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்
பாடல் பகுதி
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!'' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம் ஆயினும், தாம் தம்  5
செய் வினை முடிக்க; தோழி! 

Agananuru 155


The heroine tells her friend-maid."Wealth helps to help others and not to need help from others; I'm going to come to earn wealth, - he said combing my hair with his fingers.
Even if we are suffering, it's okay. Let him finish his work - she continues.
He went through the way with dry pits, dig by cow-herd in the past, to feed water to their cows, that appears with the foot-prints of animals such as elephants and tigers.
The footprints of the animal are found on the face of the drum as the fingerprints on its face
Poem by PerungadunKo, famous in writing poems on the culture of arid land

அகநானூறு Agananuru 154

 • மழை நீரில் தவளைகள் பல இசைக்கருவிகள் முழங்குவது போலக் கத்துகின்றன. குரவம் பூக்கள் மணலில் கொட்டிக் கிடக்கின்றன. கோடல் மலர் பாம்பு படம் விரித்து ஆடுவது போலப் பூத்திருக்கிறது. காடே கவின் பெற்றுத் திகழ்கிறது. 
 • தெளிந்த நீரைப் பருகிய மான்கள் துணையுடன் இருக்க வேண்டும். 
 • எனவே, வலவ! தேர் மணி ஒலிக்காவண்ணம் குதிரைகளை மெதுவாக ஓட்டு. நம்மை விரும்பும் அரிவையைத் துன்னித் தழுவ வேண்டும்
 • தலைவன்  இரக்க உணர்வு 
முல்லை
பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் பாடல்
பாடல் பகுதி
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;     10
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! 

அகநானூறு Agananuru 153

 • பந்தோடு ஓடியாடினாலும் அவள் அடி நோகும் என்று என் மகளைப் போற்றி வளர்த்தேன். 
 • இப்போது அவள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள். 
 • கல் நெஞ்சக்காரன் அவளைத் தழுவிக்கொண்டு சொன்ன சொல்லை நம்பிச் சென்றுவிட்டாள். 
 • நான் படும் துன்பத்தை அவள் நினைத்தும் பார்க்கவில்லை. 
 • காற்று மோதி உரசி மூங்கிலின் தீ பற்றி வெடித்துச் சிதறும் காட்டில் நடந்து செல்ல அவள் காலடிகள் தாங்குமா? 
 • செவிலி நினைக்கிறாள். 
பாலை
சேரமான் இளங்குட்டுவன் பாடல்
பாடல் பகுதி
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
வெம்பும்மன், அளியள்தானே இனியே,

அகநானூறு Agananuru 152

 • தித்தன் வெளியன் ஆளும் கானலம் பெருந்துறைக்குச் செல்வத்துடன் வரும் கப்பல்  சிதையுமாறு இறா மீன் கூட்டம் தாக்கும். 
 • இந்த மீன் கூட்டம் போல் பிண்டன் படையுடன் வந்து பாரம் நகரைத் தாக்கியபோது அதன்  அரசன் நன்னன் வென்றான். 
 • இந்த நன்னனின் பாழி என்னும் சோலையில் இருக்கும் மயில் போன்ற கூந்தல் கொண்டவள் என் காதலி. 
 • அவள் தோள் நள்ளி கானத்துக் காந்தள் போல் மணக்கிறது. 
 • யானைகளைப் பரிசிலாக வழங்கும் ஆய் அரசன் ஆய் கானத்துத் தலையாறு மலையில் வளரும் மூங்கில் போன்றது அவள் தோள். 
 • நான் அவளுடன் சேர்ந்திருந்தேன். 
 • இப்போது நான் தொலைவில் இருக்கும்போதும் அவள் தோள் மணம் என்னை ஆட்டிப்படைக்கிறதே! 
குறிஞ்சி
பரணர் பாடல்
பாடல் பகுதி
வல்லினும், வல்லார் ஆயினும், சென்றோர்க்குச்
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், 20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று

அகநானூறு Agananuru 151

 • தம்மை நயந்து வாழ்பவரைத் தாங்கியும். உறவினருடன் மகிழ்ந்தும் வாழாதவர் நல்கூர்ந்தார் ஆவார் என்னும் நினைவோடு பொருள்  ஈட்டச் சென்றுள்ளார். 
 • அவர் அருளைப் பிறிது என்று எண்ணுபவர் ஆகிவிட்டார். 
 • கழைக்கூத்து ஆடும் பெண் ஆட்டத்திற்குத் தாளமாக ஒலிக்கும் அரிகோல் பறையின் ஒலி போல் உழிஞ்சில் நெற்று ஒலிக்கும் கள்ளிமுள் பதுக்கை நிழலில் அவர் தங்க வேண்டுமே என்று தலைவி தோழியிடம் சொல்லிக்கொண்டு வருந்துகிறாள். 
பாலை
காவன்முல்லைப் பூதரத்தனார் பாடல்
பாடல் பகுதி
''தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!'' என,
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆபமன் வாழி, தோழி! 

Saturday, 26 January 2019

தொல்காப்பியம் 1-1 நூன்மரபு Tolkappiyam 1-1

தொல்காப்பியம்
1-1
நூன்மரபு
நூல் மரபு
இலக்கண நூலோர் கண்ட மரபு
எழுத்து & எழுத்தொலி
 • தமிழ் எழுத்து 30. (உயிர் 12 + மெய் 18) மற்றும் சார்பெழுத்து 3 [1] * குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்னும் மூன்றும் சார்பெழுத்து [2]
 • அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் குறில் (மாத்திரை 1) [3] * ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் நெடில் [4] (மாத்திரை 2) * எந்த எழுத்தும் 3 மாத்திரை ஒலிக்காது [5] மேலும் ஒலிக்க வேண்டின் நெடில் எழுத்தோடு அதன் உயிர்க்குறிலை அளபெடையாக எழுதிக் காட்டி ஒலிக்க வேண்டும் [6]  இயல்பாகக் கண்ணிமை நொடிக்கும் காலம் மாத்திரை என்று கொள்ளப்படும். [7] 
 • அ முதல் ஔ வரை உள்ள 12 எழுத்துக்களும் உயிர்-எழுத்து [8] * க முதல் ன வரை உள்ள 18 மெய்-எழுத்து [9] * மெய் எழுத்தோடு கூடி நின்றாலும் உயிரெழுத்து தன் மாத்திரை ஒலியில் மாறாது [10] * மெய்யெழுத்துக்கு மாத்திரை அரை [11] * சார்பெழுத்தும் அரை மாத்திரை ஒலிக்கும் [12] * ம் எழுத்து இசையில் அரை மாத்திரையிலும் குறையும் [13] * 
 • அப்போது ம் உள்ளேயும் புள்ளி வைத்து எழுதிக் காட்டப்படும் [14] * மெய்யெழுத்து புள்ளி இட்டு எழுதப்படும் [15] * எ ஒ எழுத்தும் புள்ளி இட்டு எழுதப்படும் [16] * மெய்யெழுத்து புள்ளி இல்லாவிட்டால் அ ஒலியும், உருவம் திரிந்து பிற உயிரொலியும் பெறும் [17] * முதலில் மெய்யொலியும் அடுத்து உயிரொலியும் எழுத்தில் இணையும். இது ஒலி மயக்கம் [18] * 
 • `க, ச, ட, த, ப, ற' - 6 வல்லினம் [19] *  `ங, ஞ, ண, ந, ம, ன' - 6 - மெல்லினம் [20] *  `ய, ர, ல, வ, ழ, ள' - 6 - இடையினம். [21] * 
 • இந்த 3 இன 6 (18) மெய்யொடு மெய் எவ்வாறு மயங்கும் (இயைந்தொலிக்கும்) என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் [22] * ட, ற, ல, ள, எழுத்தோடு க, ச, ப, எழுத்து வந்து சேர்ந்து மயங்கும். [23] * ல ள எழுத்தோடு ய வ எழுத்து இணைந்து ஒலிக்கும் [24] *  ங, ஞ, ண, ந, ம, ன, எழுத்தோடு இசை ஒத்த க ச ட த ப ற எழுத்து இணைந்து ஒலிக்கும். [25] * ண ன ஒலியாடு க, ச, ஞ, ப, ம, ய, வ ஒலி இணையும் [26] * ஞ, ந, ம, வ ஒலியோடு ய ஒலி சேரும். [27] * ம ஒலியோடு ய ஒலி இணையும். [28] * ய, ர, ழ, ஒலியோடு ங ஒலி இணையும் [29] * ர ழ மெய்யொலி மயங்காது (சேராது) [30] * 
 • அ இ உ 3 எழுத்து சுட்டுப் பொருள் தரும் [31] * ஆ ஏ ஓ எழுத்து வினாப்பொருள் தரும் [32] * 
 • இசைக்கும் யாழ் நரம்புடன் சேர்த்துப் பாடும்போது எந்த எழுத்தும் மாத்திரை அளவினைக் கடந்து ஒலிக்கும். [33] 
நூற்பா
 1. எழுத்து எனப்படுப, \ அகரம் முதல் \ னகர இறுவாய், முப்பஃது' என்ப \ சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 
 2. அவைதாம், \ குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற \ முப்பாற்புள்ளியும், எழுத்து ஓரன்ன. 
 3. அவற்றுள் \ `அ, இ, உ, எ, ஒ' என்னும் அப்பால் ஐந்தும் \ ஓர் அளபு இசைக்கும், `குற்றெழுத்து' என்ப. 
 4. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் \ அப்பால் ஏழும் \ ஈர் அளபு இசைக்கும், `நெட்டெழுத்து' என்ப. 
 5. மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 
 6. நீட்டம் வேண்டின், அவ் அளபுடைய \ கூட்டி `எழூஉதல்' என்மனார் புலவர். 
 7. கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை \ நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 
 8. ஒளகார இறுவாய்ப் \ பன்னீர்-எழுத்தும் `உயிர்' என மொழிப. 
 9. னகார இறுவாய்ப் \ பதினெண் எழுத்தும் `மெய்' என மொழிப. 
 10. மெய்யொடு இயையினும், உயிர் இயல் திரியா. 
 11. மெய்யின் அளபே `அரை' என மொழிப.
 12. அவ் இயல் நிலையும், ஏனை மூன்றே.
 13. அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே; \ இசையிடன் அருகும், தெரியும் காலை. 
 14. உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 
 15. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.
 16. எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.
 17. புள்ளி இல்லா எல்லா மெய்யும் \ உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும், \ ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும், \ ஆயீர் இயல-உயிர்த்தல் ஆறே.
 18. மெய்யின் வழியது, உயிர் தோன்று நிலையே.
 19. `வல்லெழுத்து' என்ப - `க, ச, ட, த, ப, ற'
 20. `மெல்லெழுத்து' என்ப - `ங, ஞ, ண, ந, ம, ன' 
 21. இடையெழுத்து' என்ப - `ய, ர, ல, வ, ழ, ள' 
 22. அம் மூ-ஆறும் வழங்கு இயல் மருங்கின், \ மெய்ம்மயக்கு, உடனிலை, தெரியும் காலை.
 23. ட, ற, ல, ள, என்னும் புள்ளி முன்னர், \ க, ச, ப, என்னும் மூஎழுத்து உரிய.
 24. அவற்றுள், \ லளஃகான் முன்னர், யவவுந் தோன்றும்.
 25. ங, ஞ, ண, ந, ம, ன, எனும் புள்ளி முன்னர், \ தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 
 26. அவற்றுள், \ ண-னஃகான் முன்னர், \ க, ச, ஞ, ப, ம, ய, வ ஏழும் உரிய. 
 27. ஞ, ந, ம, வ என்னும் புள்ளி முன்னர், \  யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே.
 28. மஃகான் புள்ளி முன் `வ'வ்வும் தோன்றும்.
 29. ய, ர, ழ, என்னும் புள்ளி முன்னர், \ முதல் ஆகு எழுத்து, ஙகரமொடு தோன்றும். 
 30. மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் \ தம் முன் தாம் வரூஉம்-ர, ழ, அலங்கடையே.
 31. அ, இ, உ அம் மூன்றும் சுட்டு.
 32. ஆ, ஏ, ஓ அம் மூன்றும் வினா.
 33. அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், \ `உள' என மொழிப;-`இசையொடு சிவணிய \ நரம்பின் மறைய' என்மனார் புலவர்.


தளம் பார்வை page viewers

அடியேன் தளம்
தளம் திறந்தோர்
மார்ச்சு 2017

248,339
சுமார் இரண்டரை லட்சம் பார்வைகள்


541 at a time 

விக்கிப்பீடியாவில் பொதுவன் vikipedia, Podhuvan, contrbution

விக்கிப்பீடியாவில் அடியேன் பங்குகள் 
சிலவற்றை அந்தத் தளம் காட்டுகிறது
இவை 
தமிழ் படிப்போர் திருவடிகளுக்குக் காணிக்கை

 1. அனைத்து விக்கிப்பீடியாக்களிலும்
 2. தொடங்கிய கட்டுரைகள் 
 3. பதிவேற்றிய படங்கள் 
 4. தொல்காப்பியம் ஆங்கில மொழிபெயர்ப்பு
 5. புலவர் கால மன்னர் சங்ககாலப் புலவர்கள் யார் யார் எப்போது, சம காலத்திலா, பிற்காலத்திலா,  என்ன பாடினர் என்பதைக் காட்டும் ஒரு கட்டுரை 


அகநானூறு Agananuru 150

 • பிதுங்கும் முலையைப் பார்த்த தாய் தன் மகளை, "பருவப் பொலிவு பெற்றுவிட்டாய்" என்று கூறிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு அவளை வீட்டிலேயே செறித்து வைத்துவிட்டாள். 
 • இவளோ, நீ இவளுடன் இருந்த கழியையும் கானலையும் பார்த்து "அவர் வரவில்லை போலும்" என்று காலையும் மாலையும்  புலம்பிக்கொண்டிருக்கிறாள். 
 • நான் என்ன செய்வேன். 
 • தலைவனிடம் தோழி சொல்கிறாள். 
நெய்தல்
குறுவழுதியார் பாடல்
பாடல் பகுதி
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
''வாரார்கொல்?'' எனப் பருவரும்
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!

அகநானூறு Agananuru 149

 • யவனர் முசிறியில் ஓடும் சுள்ளி என்னும் பேராற்று நுரை கலங்குமாறு மரக்கலங்களை ஓட்டிச் சென்று பொன்னை விலையாகக் கொடுத்துவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வர். 
 • இந்த முசிறியைச் செழியன் முற்றுகை இட்டான். போரில் வெற்றியும் கண்டான். இந்த வெற்றியை முருகப் பெருமானின் திருப்பரங்குன்றத்தில் கொண்டாடினான். 
 • அந்தக் குன்றத்துச் சுனையில் பூத்திருக்கும் நீல மலர் போன்ற இவள் கண்களில் நீர் மல்க விட்டுவிட்டு உன்னுடன் பொருளீட்ட வரமாட்டேன்
 • தலைவன் நினைவலை 
பாலை
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடல்
பாடல் பகுதி
சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
வளம் கெழு முசிறி

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி