Friday, 31 August 2018

பகல் வந்தன்றால் Agananuru says 160

நெய்தல்
குமுழி ஞாழலார் நப்பசலையார் பாடல்

தோழி வரைவு மலிந்து சொல்லியது.
"முன்பு அவர் தேர் 
இர  (இரவு) வந்தன்றால் 
இப்போது அவர் தேர்
பகல் வந்தன்றால்"
தோழி தலைவிக்குச் சொல்கிறாள்
நிறைவுற்ற என் நெஞ்சம் ஆர்வத்தில் படபடக்கிறது
உனக்கும் அப்படியா

கழிமுகத்தில் ஆமை மணலைப் பறித்து முட்டையிடும் (நேரலை)
கோடு போட்டு விளையாடும் வட்டு போல் அந்த முட்டை இருக்கும்

அந்த முட்டை குஞ்சாகும் தருணத்தில் முட்டையிட்ட பெண்-ஆமையின் கணவன் வெளிவரும் அந்தக் குஞ்சுகளைக் காப்பாற்றும்

இப்படிப்பட்ட கானல் நிலத்தின் சேர்ப்பன்  அவன்

 • அவன் தன் தேரில் பூட்டிய குதிரைகளைத் தார்க்கோலால் குத்தி ஓட்டாமல் வார் சாட்டையால் தட்டி மெதுவாக ஓட்டிக்கொண்டு வருவான் 
 • அவன் தேர்ச்சக்கரம் ஏறி நெய்தல் மலர் பாம்பு படமெடுப்பது போல் தலையைத் தூக்கும் 

இப்படி இரவு வேளையில் வருவான்  

 • இப்போது ஆரவாரத்துடன் நம் ஊருக்கே தம் இளையருடன் வந்திருக்கிறான் 

பகலில் வந்திருக்கிறான் 
இது திருமண முயற்சி  


ஆமை மணல் குழியில் முட்டையிடும் 

ஒழிகல் அடுப்பு Agananuru says 159

பாலை
ஆமூர்க் கவுதமன் சாதேவனார் பாடல்

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

வண்டியில் ஏற்றிச் சென்று உப்பு விற்கும் உமணர் வண்டி மாடுகளை அவிழ்த்து மேய விட்டுவிட்டு, சமைத்து உண்ட பின் சும்மா இருக்கும் அடுப்பில் 

ஆனிரை கவர்ந்து வரும் ஆடவர்
உடுக்கு அடித்துக்கொண்டு
உவலை மாலை சூடிக்கொண்டு
உன் கறியைச் சுட்டுத் தின்பர்

அன்புத் தோழியே
இப்படிப்பட்ட வழியில் காதலர் சென்றுள்ளார் என்று
அவலம் கொள்ளாதே

குறும்பொறை நாட்டுக்குக் கிழக்கில்
வானவன் யானைப் படையைத் துணையாகக்  கொண்டு
கொடுமுடி மன்னவன் காக்கும்
உயர்ந்த மதில் கொண்ட ஆமூர்க் கோட்டை போன்ற
செல்வத்தைப் பெற்றாலும்

பூண் அணிந்த உன் முலையைத் தழுவுதலை விட்டுவிட்டு
அங்கேயே தங்க மாட்டார்


ஆகம் தழுவுதல்
கண்ணன்

அஞ்சுவள் அல்லளோ Agananuru says 158

குறிஞ்சி
கபிலர் பாடல்

தலைமகன் சிறைப்புறத்தானாக, 
தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய், 
தலைமகன் கேட்பச் சொல்லியது.

அன்னை

 • மழை பொழியும் நள்ளிரவு 
 • காதில் அணியும் குழை மின்னல் போல் ஆட 
 • பின்னிய கூந்தல் கலைய 
 • மலையிலிருந்து இறங்கும் மயில் போல மெதுவாக நடந்து 
 • இவள் வருவதைப் பார்த்தேன் 

என்று இவளை அடிக்காதே

நம் படப்பையை அடுத்துள்ள அச்சம் தரும் காட்டில் அணங்கு வரும் என்பது உனக்குத் தெரியுமே 
நனவில் நிகழ்வது போல, கனவிலும் நடக்குமல்லவா 

இவள் வெளிச்சம் இல்லாமல் தனியே செல்ல அஞ்சுவாளே
ஊர்ப் பொது மன்ற மரத்தில் இருந்துகொண்டு கூகை குழறினாலும் நெஞ்சம் பதைத்து உன்னைத்  தழுவிக்கொள்வாளே

மேலும்

 • புலிக்கூட்டம் போன்ற நாய்களும் 
 • முருகன் போன்ற சீற்றமும் 

கொண்ட இவள் தந்தையும் இங்கு இல்லை

இந்த நிலையில் வெளியில் செல்ல இவள் அஞ்சுவாள் அல்லவா 


மலையிலிருந்து இறங்கும் மயில் போல வந்தாள் 

வினை அழி பாவை Agananuru says 157

பாலை
வேம்பற்றூர்க் குமரனார் பாடல்

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

அரியல் பெண்டிர் (கள் விற்கும் பெண்)
அல்கில் சொம்பில் (குறுகிய வாயையுடைய சொம்பில்)
பாளையின் குவிந்த முலை சுரந்த கலுழிக் கள்ளை ஊற்றித் தர
போருக்குச் செல்லும் ஆடவர் உண்பர்

அவர்களின் வில்லுக்கு இரையானவர் கிடக்கும்  பதுக்கைகள் இருக்கும்
கோங்கு, பூத்திருக்கும் அதிரல் போன்றவற்றை வளைத்து யானை கவளம் கவளமாக விடியற் காலத்திலேயே தின்னும்

இப்படிப்பட்ட வழியில் தனியே செல்கிறேன் என்று அவரே சொல்கிறார்

தோழி

போர் முடிந்த மன்றத்தில் மழையில் நனைந்து வெயிலில் காயும் வினையழி  பாவைச் சிலை போல் மனையில் கிடப்பவர்களுக்கு மட்டுமே பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியும்

என்னால் அவர் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாது


பாளையின் குவிந்த முலை சுரந்த கலுழிக் கள்
வினையழி பாவை
செயலற்ற சிலை

பொய்தல் ஆடிப் பொலிக Agananuru says 156

மருதம்
ஆவூர் மூலங்கிழார் பாடல்

தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.

ஊர 

 • முரசு முழங்கும் செல்வம் கொண்டவர் தன் குதிரைத் தலையில் சூட்டும் கவரி போல நெல் கதிர் வாங்கும் 
 • அதனைக் கன்று போட்டிக்கும் முதிய பசு மேய்கிறது என்று அந்தப் பசுவைத் தடுத்து, பாகல் கொடி, பகன்றைக் கொடி ஆகியவற்றால் காஞ்சி மர நிழலில் கட்டி, கரும்பை உணவாகத் தரும் உழவர் வாழும் ஊரின் தலைவன் நீ 

இவள் குவளை போன்ற கண் கொண்டவள் 
வயலில் இருந்த அம்பல் தழைகளால் தழையாடை புனைந்து உடுத்திக் கொண்டோம் 
வெயில் காயாமல் இருக்க இவ்வாறு உடுத்திக்கொண்டோம் 
பொய்தல் ஆடிப் பொலிவு பெறலாம் (விளையாடி மகிழலாம்) என வந்தோம் 

அப்போது உன்னோடு சிரித்து விளையாடினோம் 
இது தவறா 

அன்னை முருகனுக்கு வெறியாட்டு நடத்துகிறாள் 
கள் படைக்கிறாள் 
கண்ணி சூட்டுகிறாள் 
தொங்கும் காது கொண்ட ஆட்டுகடாவைக் காவு கொடுக்கிறாள் 

அப்போதும் மணி போன்ற என் மேனியில் ஏறிய பொன்னிறக் காமநோய் மாறவில்லை 

அன்னை செய்வது சரியா 


தலையில் கவரிக் குஞ்சம் சூட்டிய குதிரை
இந்தக் குஞ்சம் போல் நெல் கதிர் வாங்கும்

விரல் ஊன்று வடு Agananuru says 155

பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

அறத்தில் கடைநிலை பெறாமல் முதல்-நிலை பெறும் வாழ்க்கை
பிறர் வாயிலில் நின்று தரும்படி வேண்டாச் செம்மாப்பு 
இரண்டையும் செல்வம் தரும் 

என்று சொல்லி என் தலையைத் தடவிக்கொடுத்தார் 

எனவே
தோழி

நாம் துன்புற்றாலும் பரவாயில்லை
அவர் பொருளீட்டும் வினையை முடித்துக்கொண்டு வரட்டும்

வெயில் காற்றே வெம்பும் காட்டு வழியில அவர் சென்றுள்ளார் 
கோவலர் நீருக்காகத் தோண்டிய பத்தல் பள்ளம் அங்கு இருக்கும் 
அது நீர் இல்லாமல் காய்ந்திருக்கும் 
அதில் யானை, புலி போன்றவற்றின் காலடி பதிந்து காயந்து செதும்பாக மாறியிருக்கும் 

அது வயிரியர் முழக்கும் முழவில் அவர்களின் விரல் பதிவுகள் தோன்றுவது போலக் காணப்படும் 

அத்தகைய வழியில் அவர் சென்றுள்ளார் 
அவர் செயல் சிறக்கட்டும் பகுவாய்த் தேரை Agananuru says 154

முல்லை
பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் பாடல்

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

மழை நீரில் தவளைகள் கத்துகின்றன 
பல இசைக்கருவிகள் முழங்குவது போலக் கத்துகின்றன
குரவம் பூக்கள் மணலில் கொட்டிக் கிடக்கின்றன
கோடல் மலர் பாம்பு படம் விரித்து ஆடுவது போலப் பூத்திருக்கிறது
காடே கவின் பெற்றுத் திகழ்கிறது
தெளிந்த நீரைப் பருகிய மான்கள் துணையுடன் இருக்க வேண்டும்
எனவே
வலவ
தேர் மணி ஒலிக்காவண்ணம் குதிரைகளை மெதுவாக ஓட்டு
நம்மை விரும்பும் அரிவையைத் துன்னித் தழுவ வேண்டும்


குரவம் மலர்

கை விடு சுடர் Agananuru says 153

பாலை
சேரமான் இளங்குட்டுவன் பாடல்

மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது.

என் உள்ளம் நொந்துகொண்டிருக்கிறது

பந்தோடு ஓடியாடினாலும் அவள் அடி நோகும் என்று போற்றி வளர்த்தேன்
இப்போது அவள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள்

கல் நெஞ்சக்காரன் அவளைத் தழுவிக்கொண்டு சொன்ன சொல்லை நம்பிச் சென்றுவிட்டாள்
நான் படும் துன்பத்தை அவள் நினைத்துப் பார்க்கவில்லை

காற்று மோதி உரசி மூங்கிலின் தீ பற்றி வெடித்துச் சிதறும் காட்டில் நடந்து செல்ல அவள் காலடிகள் தாங்குமா 

கோங்க மரத்தில் பூத்தும், உதிர்ந்தும் கிடக்கும் பூக்கள் வானில் இருக்கும் விண்மீன்கள் போன்று தோன்றும் காட்டு வழியில் சென்றுவிட்டாளே


கோங்கம் பூ - விண்மீன் போலத் தோன்றுதல் 

களிமயில் கலாவம் Agananuru says 152

குறிஞ்சி
பரணர் பாடல்

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

நான் தொலைவில் இருக்கும்போதும் அவள் தோள் மணம் என்னை ஆட்டிப்படைக்கிறதே

அவள் என்னிடம் இருந்துவிட்டு ஊர் திரும்புகிறாள்
அவள் ஐம்பால் ஒப்பனை அவள் தோளில் தொங்குகிறது

தித்தன் வெளியன் கானலம் பெருந்துறை அரசன்
அவன் துறைக்குச் செல்வத்துடன் வரும் கலம் (கப்பல்)  சிதையுமாறு இறா மீன் கூட்டம் தாக்கும்

இந்த மீன் கூட்டம் போல் பிண்டன் படையுடன் வந்து தாக்கினான்
இவனை நன்னன் வென்றான்

இவன் ஆர நன்னன் - சந்தன மரத்தைக் காவல் மரமாகக் கொண்டவன் 
பாரம் இவனது தலைநகர்
நாடு ஏழில் மலை இருக்கும் பாழிச் சிலம்பு
இந்தப் பாழி என்னும் சோலையில் இருக்கும் மயில் போன்று கூந்தல் தொங்கும் தோள் கொண்டவள் அவள்

அவள் தோள் நள்ளி மலைக் காட்டில் பூக்கும் கடவுள் மலர் காந்தள் போல் புதுமையாக மணக்கும்

வல்லவரோ வல்லவர் அல்லாதவரோ  - யாராய் இருந்தாலும் சென்றவர்களுக்கெல்லாம் யானைகளைப் பரிசிலாக வழங்ஙகுபவன் ஆய் அரசன்
ஆய் கானத்துத் தலையாறு மலையில் வளரும் மூங்கில் போன்றது அவள் தோள்

நான் அவளை விட்டு மிகத் தொலைவில் இருந்தாலும் அவள் தோள் வீசும் காந்தள்-மணம் என்னை நினைவூட்டித் துன்புறுத்துகிறது


தோளில் கூந்தல்

அரிக் கோற் பறை Agananuru says 151

பாலை
காவன்முல்லைப் பூதரத்தனார் பாடல்

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

தம்மை நயந்து வாழ்பவரைத் தாங்க வேண்டும்
இனிய உறவுக்காரருடன் பாதுகாப்பாக வாழ்ந்து மகிழ வேண்டும்
இப்படி வாழாதவர் நல்கூர்ந்தார்

என்னும் நினைவோடு பொருள்  ஈட்டச் சென்றுள்ளார்
அவர் அருளைப் பிறிது என்று எண்ணுபவர் ஆகிவிட்டார்

தோழி! 

காற்று வீசும்போது உழிஞ்சில் நெற்று ஒலிக்கும் 
அந்த ஒலி ஆடும் மகள் ஆட்டத்திற்குத் தாளமாக ஒலிக்கும் அரிகோல் பறையின் ஒலி போல் இருக்கும் 

உழிஞ்சில் ஒலிக்கும் கள்ளிமுள் பதுக்கை நிழலில் தங்க வேண்டும் 

எனக்கு நிகழ்வதை அங்கு அவருக்கு மணியொலி போல் ஒலித்துப் பல்லி சொல்லும்

அப்படிப்பட்ட காட்டு வழியில் சென்றுஉள்ளார்


ஆடுமகள் ஆட்டத்திற்கு அரிகோல் பறை முழக்கல் 

Thursday, 30 August 2018

எல்லினை பெரிது Agananuru says 150

நெய்தல்
குறுவழுதியார் பாடல்

பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் 
தோழி, 
தலைமகளை இடத்து உய்த்து வந்து, 
செறிப்பு அறிவுறீஇ, 
வரைவு கடாயது.

 • பின்ன நெறித்திருக்கும் கூந்தல 
 • மார்பில் தோன்றும் சுணங்கு அழகு 
 • கச்சத் துணியைக் கிழித்துக்கொண்டு பிதுங்கும் முலை 
இவற்றைப் பார்த்த தாய்
"பருவப் பொலிவு பெற்றுவிட்டாய்" என்று கூறிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு அவளை வீட்டிலேயே செறித்து வைத்துவிட்டாள்

இவள் நீ இவளுடன் இருந்த கழியையும் கானலையும் பார்த்து,
நீ வராத காலத்தில்
"அவர் வரவில்லை போலும்" என்று
காலையும் மாலையும்  புலம்பிக்கொண்டிருக்கிறாள்

நான் என்ன செய்வேன் - என்கிறாள் தோழி


கண் உருத்து எழுதரு முலை

அரிது செய் விழுப்பொருள் Agananuru says 149

பாலை
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடல்

தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.

புற்றிலிருக்கும் கறையான் இரை சலித்துவிட்டால் கரடிக் கூட்டம் இரும்பைப் பூக்களைத் தேடி உண்ணும் வழியில் சென்று
அரிதாகப் பெறக்கூடிய விழுமிய பொருளை
எளிதாகப் பெறுவதாயினும்
இவளைக் கண்ணீர் சோர விட்டுவிட்டு
நெஞ்சே
உன்னுடன் வரமாட்டேன்

முசிறியில் சுள்ளி என்னும் பேராறு ஓடும்
யவனர் அந்த ஆற்றில் நுரை கலங்குமாறு மரக்கலங்களை ஓட்டிச் செல்வர்
அந்த மரக்கலங்கள் பொன்னை விலையாகக் கொடுத்துவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லும்

இந்த முசிறியைச் செழியன் முற்றுகை இட்டான்
போரில் வெற்றியும் கண்டான்

வெற்றியை, கூடல் நகருக்கு மேற்கிலுள்ள மயிலேறும் முருகப் பெருமானின் திருப்பரங்குன்றத்தில் கொண்டாடினான்

அந்தக் குன்றத்துச் சுனையில் பூத்திருக்கும் நீல மலர் போன்ற கண்ணினை உடையவள் இவள்
இவள் கண்களில் பனிநீர் மல்க விட்டுவிட்டு
நெஞ்சே
உன்னுடன் பொருளீட்ட வரமாட்டேன்


யவனர் தந்த வினை மாண் நன் கலம் பொன்

மாலை வருதல் வேண்டும் Agananuru says 148

குறிஞ்சி
பரணர் பாடல்

பகல் வருவானை ''இரவு வருக'' என்றது.

பனை மரம் போன்ற கையும், வண்டுகள் மொய்க்கும்படி ஒழுகும் மதமும் கொண்ட ஆண்யானை
மரங்களைக் குத்திச் சாய்த்துவிட்டு
புலி உருமும்படி அதனைக் குத்திவிட்டு,
தினை வயலில் மேயும்

இப்படிப்பட்ட நாட்டை உடையவன் நீ

ஆய் எயினன் குதிரை வீரன்
தேர் வீரன் மிஞிலி என்பானோடு  போரிட்டுப் போர்க்களத்திலேயே மண்டான்
எயினன் பறவைகளைப் பேணி வளர்த்த வள்ளல் 
அதனால் இறந்து கிடந்த அவன் உடலைக் காணக்கூட, பிணம் தின்னும் கூகை செல்லவில்லை
அதுமுதல் எப்போதும் பகலில் செல்வதில்லை  
புலவர் தற்குறிப்பேற்றம் 

கூகை போல் உன்னைப் பிரிந்து இவள் துன்புறுகிறாள்
அதனால் நீ பகலில் வர வேண்டாம்
மாலையில் வருக
துய்க்கலாம் 


கூகை

முடங்கர் நிழத்த Agananuru says 147

பாலை
ஒளவையார் பாடியது

செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

மலைச் சிலம்பில் பிடவ மலரும் வேங்கை மலரும் பூத்து அருகருகு காணப்படுவது போல் வரிப்புலி இருக்கும்

பெண் வரிப்புலி ஒன்று மூன்று குட்டி போட்ட ஈர வயிற்றுடன் கல்லுக் குகை நிழலில் படுத்திருந்தது.

அதன் பசியைப் போக்க ஆண்புலி ஆண்மான் குரல் எங்கேனுமிருந்து வருகிறதா என்று கேட்டுக்கொண்டிருக்கும்

அப்படிப்பட்ட வழியில் நான், என்னை விட்டுவிட்டுப் பொருள்தேடச் சென்ற அவரை தேடிக்கொண்டு செல்லத் தீர்மானித்திருக்கிறேன்

வெள்ளி வீதியாரைப் போலத் தேடிக்கொண்டு செல்ல விரும்புகிறேன்

உண்ணாமல் உடல் இளைத்து, உயிர் சென்றுகொண்டிருக்கையில், தோளும் பொலிவிழந்து கிடக்கையில் இருந்து என்ன செய்யப் போகிறேன்


ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
துறுகல் விடர் அளைப் பிணவு
3 குட்டிகளுடன் புலி
பிடவம்

வேங்கை

தளி பொழி மலர் Agananuru says 146

மருதம்
உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் பாடல்

வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.

எருமைக் கடா பெண் எருமையைத் தழுவிக்கொண்டு பகலெல்லாம் பனிமலர்ப் பொய்கையில் கிடந்த பின் படப்பையிலும் பழன வயல்களிலும் தங்கும் ஊரினை உடையவன் இந்த ஊரன்

அணிகலன் ஒப்பனை கொண்ட மகளிர் வாழும் சேரியில் இவன் தேர் செல்கிறது

யார் என்னைப் போல் இரக்கம் கொள்ளத் தக்க அந்த ஏமாளிப் பெண்

நான் மாயப் பரத்தன் சொன்ன சொற்களை நம்பி ஏமாந்தேன்
என்னைப் போல் அவனிடம் ஏமாந்தவள் யார்
அவள் இரக்கம் கொள்ளத் தக்கவள்

தாய் என்னைப் பேணி வளர்த்த நலனை விரும்பாமல், ஆயத்தாரும் அயலாரும் மருளும்படி இவனுடன் வந்து மழையில் நனைந்து துளி சிந்தும் மலர் போலக் கண்ணீர் விட்டக்கொண்டிருக்கிறேன்

அகநானூறு 146

மழையில் நனைந்து துளி சிந்தும் மலர்


மடக் கண் எருமை மாண் நாகு தழீஇச் செல்லல்

அஞ்ஞையை அலைத்த கை Agananuru says 145

பாலை
கயமனார் பாடல்

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

என்மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள் என்கின்றனர்

 • சிள்வீடு (சில்லுவண்டு) மரப் பொந்துகளில் இருந்துகொண்டு ஒலிக்கும் 
 • ஓந்தி வற்றிய ஞெமை மரத்தில் ஓடும் 
 • புலியால் தாக்கப்பட்ட யானை புண்ணுடன் ஓடி இடி போல் முழங்கும்  
இப்படி ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு வழியில் சென்றுவிட்டாள் என்கின்றனர்

யானை பிளிறும்போது குருகு எதிரொலி கொடுக்கும் வளமனையில் தந்தையுடன் வாழ்ந்தவள் என் மகள் 
அப்போது வெளியிடத்தில் காலடி வைக்கும்போது நொந்துவிடுவாள் என்று அவள் கூந்தலைப் பற்றி என் கையில் உள்ள கோலால் முதுகில் அடிப்பேன் 
அப்போதெல்லாம் "இந்த முருகு என்னுடையது, அம்மா" என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டாள் 
அவளை அப்படி அடித்த என் கை துன்புற வேண்டும் 
 • குறுக்கைப் பறந்தலையில் போர் * குறுகூர்ப் போர்க்களம் * நம்மாழ்வார் வாழ்ந்த தென்குறுகூர் * 
 • இவ்வூர் அரசன் திதியன் 
 • இவன் காவல் மரம் புன்னை 
 • அரசன் அன்னி இந்தப் புன்னை மரத்தைத் துண்டு துண்டாக வெட்டினான் 
 • அந்தப் புன்னை மரம் போல என் மகளை அடித்த என் கை துன்புற வேண்டும் 
இவ்வாறு செவிலி கூறி வருந்துகிறாள்

அன்னி திதியன் போர் - அன்னி கொல்லப்பட்டான் என்பது போரின் முடிவு


ஓந்தி

அறன் அஞ்சலரே Agananuru says 144

முல்லை
மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் பாடல்
வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், 
பாகற்குச் சொல்லியது.

"சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
உவக்குநள் வாழிய, நெஞ்சே!
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே."

 • வருவேன் என்று சொன்ன நாளும் பொய்யாகப் போயிற்று 
 • என் கண்ணில் நீர் நிற்கவில்லை 
 • அவர் இல்லாமல் முல்லைப் பூ தலையில் சூடாமல் அழகு இழந்து காணப்படும் என் கூந்தலைப் பற்றியும் அவர் நினைக்கவில்லை 
 • அருள்-கண் (இரக்க உணர்வு) மாறினாலும் அவர் மாறட்டும் 
 • அறநெறிக்குக் கூட அவர் அஞ்சவில்லையே 
என்று தன் தோழியிடம் சொல்லிப் புலம்புவாள்

என்றாலும் ஊடல் கொள்ளாமல் என்னைத் தழுவி இன்பம் காண்பது போல் மகிழ்வாள் அல்லவா

இங்குப் பாசறையில் யானை, இடி போல் முழங்குகிறது
பகைவர்களைக் கொன்று ஓடும் குருதி மான் காலடி வைத்த பள்ளங்களில் நின்று வானத்து மீன்கள் போலத் தோன்றுகிறது

இப்படி நாம் கண்ட வெற்றியை அவளது உறவுக்கரர்கள் அவளிடம் சொல்வ்வார்கள்

அதனைக் கேட்கும்போது என்னைத் தழுவி இன்பம் காண்பது போல் மகிழ்வாள் அல்லவாசேறும் என்ற சிறு சொல் Agananuru says 143

பாலை
ஆலம்பேரி சாத்தனார் பாடல்
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, 
தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, 
செலவு அழுங்குவித்தது.

பொருள் செய்யும் வினைக்காகத் தலைவன் பிரிய நினைப்பதைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்
தலைவி கண்ணீர் வடிக்கிறாள்
அவள் கண்ணீர் வடிக்கும் செய்தியை தோழி தலைவனிடம் கூறுகிறாள்

 • வெயிலால் இலையில்லா மரங்களுடன் காணப்படும் அழகழிந்த காடு 
 • உதிர்ந்து கிடக்கும் தேக்கிலையை மக்கள் சேமிப்பர் 
 • பற்றி எரியும் தீயின் வெடிப்பொலி குகைகளில் எதிரொலிக்கும் 
 • இப்படிப்பட்ட வழியில் அவர் செல்கிறார் 

என்றேன்

வானவன் மறவன் பிட்டன் 
அவன் நாடு குதிரை மலைக் கணவாய்ப் பகுதி
அங்குப் பூத்திருக்கும் நீலம் மலர் போன்றது அவள் கண்
அது பனியைக் கொட்டுகிறது
நீ பிரிந்து சென்றால் என்ன ஆவாள் - என்றாள், தோழி

கேட்ட தலைவன் பிரிந்து செல்வதை நிறுத்திக்கொண்டான்


குதிரை மலை * தோற்றத்தால் பெற்ற பெயர்

ஓவினைப் பொலிந்த பாவை Agananuru says 142

குறிஞ்சி
பரணர் பாடல்
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

நெஞ்சே மகிழ்ச்சி கொள்
காதலி வந்து முயங்கினாள்
நெஞ்சே மகிழ்ச்சி கொள்

 • செந்நாப் புலவர் போற்றும் மாந்தரம் பொறையன் கடுங்கோ * மாந்தரஞ்சேரல் இரும்பொறை * வேந்தனைப் பாடிச் சென்ற புலவர்களின் வாங்கும் கலம் நிறைந்து வழிவது போல மகிழ்ச்சி கொள் 

தெரிந்தால் பலரும் அலர் தூற்றுவார்களே என்று எண்ணி, யாருக்கும் தெரியாமல் வந்து முயங்கினாள்

 • நன்னனின் படைத்தலைவன் மிஞிலி. இவன்  அதிகன் என்பவனை நன்னனின் பாழி நகரில் இருந்த பேய்-தெய்வத்தக்குப் பலி கொடுத்து வாளைச் சுழற்றிக்கொண்டு ஆடியதைப் பலரும் அறிந்து பேசிக்கொண்டது போல கள்ளக் காதல் உறவைப் பலரும் தூற்றாமல் இருக்கும்படி வந்து தழுவினாள் 
 • அதிகன் பறவைகளைப் போற்றி வளர்த்த வள்ளல் 
தோளில் அணிந்திருந்த வளையல் என் உடலில் வடு உண்டாக்கும் அளவு இறுக்கமாகத் தழுவினாள்

 • அவள் அணிந்திருந்து அழகிய வெள்ளி வளையல் 
 • அவள் கூந்தல் ஆற்று ஆறல்-மணல் படிவு போல் நெளிநெளியாக இருந்தது 
 • கூந்தலில் சூடியிருந்த அணிகலன்களும் அவள் முதுகில் தொங்கின 
கடல் மீன்களும் உறங்கும் நள்ளிரவு வேளையில் வந்து முயங்கினாள்

 • சிலை நடந்து வருவது போல வந்தாள் 
 • மழை அலையில் பூ பொன்னிறத் தாதுகளையும் தேனையும் கொட்டுவது போல இன்பத்தைக் கொட்டினாள் 
 • யாழ் போல் கொஞ்சிக்கொண்டே முயங்கி இன்பத்தைக் கொட்டினாள் 

அகநானூறு 142

தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்

மறுகு விளக்குறுத்து Agananuru says 141

பாலை
நக்கீரர் பாடல்
''பிரிவிடை ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
பாடலுக்குரிய அகவலோசையில் பாடலைப் கேளுங்கள்


அம்ம வாழி, தோழி! 

இரவில் கனவும் இனிமை 
பகலில் புள் குறியும் நன்று 
என் நெஞ்சம் மகிழ்கிறது 

கார்த்திகை நிறைமதி நாள்
தெருவெங்கும் விளக்கு 
நம் பழமையான ஊர் விழா கொண்டாடுகிறது * கார்த்திகை விளக்கு 

பொருளீட்டச் சென்ற அவர் நாமும் அவருடன் சேர்ந்து கொண்டாட அவர் வரவேண்டும்

கார்த்திகைத் திருநாளில் தகரம் பூசி மணக்கும் கூந்தலில் பூ சூடிக்கொண்டு மகளிர் பால்-உலையில் போடுவதற்காகப் புதுநெல்லில் அவல் இடிப்பர்

அந்த உலக்கை  ஒலி கேட்டு வீட்டு வாழை மரத்தில் அமர்ந்திருக்கும் நாரை மா மரத்துக்கு ஓடி அமர்ந்துகொண்டு உலக்கை ஒலிக்கு ஒத்திசை எழுப்பும்

கரிகாலன் * பெரும்பெயர்க் கரிகால் * குடிபெயராவண்ணம் மக்களைக் காப்பாறியவன்

அவன் இடையாறு என்னும் ஊரில் வைத்திருந்த கருவூலம் போலப் பொருள் ஈட்டவேண்டும் என்று சென்றுள்ளார்

புலி நிறம் போல் பூத்துக் கொட்டிய வேங்கை மலரும் நரந்தம் மலரும் கொட்டிக்கிடக்கும் வேங்கட மலைக் காட்டைக் கடந்து சென்றுள்ளார்

அவர் வர வேண்டும்


அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; மறுகு விளக்குறுத்து,
கார்த்திகை விளக்கு 

Wednesday, 29 August 2018

கதழ் கோல் உமணர் Agananuru says 140

நெய்தல்
அம்மூவனார் பாடல்
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

அவள் உமணரின் காதல் மகள்

 • கடற்கழி வயலில் உழவு செய்யாமல் உப்பு விளைவிப்பவர் உமணர் 
 • உப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று அவர்கள் அந்த உப்பை விற்பர் 
 • கதழ் கோல் (வண்டி மாட்டை அதட்டும் கோல்) வைத்துக்கொண்டு அவர்கள் வண்டி மாட்டை ஓட்டுவர் 
 • அவர்களுடன் சென்று அவள் உப்பு விற்பாள் 
 • வளையல் கையை வீசிக்கொண்டு நடந்து உப்பு விற்பாள் 
 • உப்புச் சமமாக நெல்லை அளந்து வாங்கிக்கொள்வாள்  
 • அவளைப் பார்த்து நாய் குரைக்கும் 
அதனைப் பார்த்த எனக்குக் காம நோயால் பெருமூச்சு வாங்குகிறது

புனவன் புனக்காடு வெட்டிக் கொளுத்தும்போது தோன்றும் புகைநிழலில் மாட்டிக்கொண்டது போல் பெருமூச்சு வாங்குகிறது

அவள் தந்தை ஓட்டிசெல்லும் வண்டி சேற்றில்  மாட்டிக்கொண்டபோது வண்டி இழுக்கும் எருதுகள்  பெருமூச்சு வாங்குவது போல எனக்குப் பெருமூச்சு வாங்குகிறதுஉப்பு வண்டி - கூட்டு வண்டி - மாட்டு வண்டி - உமணர் வண்டி

வாலா வெண் மழை Agananuru says 139

பாலை
இடைக்காடனார் பாடல்
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

 • தூங்குவது போல இருண்டு
 • இமைப்பது போல மின்னி
 • ஏறுவது போல ஒன்று கலந்து
 • நடுங்குமாறு இடித்து 
மழை பொழிந்த கடைசி நாள்
வாலா வெண்மழை * ஏதுமில்லாத வெண்மேகம்
மலைமேல் ஆடுகிறது

பதவுப் (அறுகு) புல்லை மேய்ந்த ஆண்-பெண் மான்கள் * வெண் புறக்கு (முதுகு) கொண்ட மான்கள் * பிடவ மர நிழலில், ஆற்று மணலில் துணையுடன் சேர்ந்து இருக்கின்றன

மூதாய்ப் பூச்சிகள் அரக்கு நிறத்தில் நீரோடும் பகுதியில் மேய்கின்றன

கார்காலம் வரும்போது திரும்புவேன் என்ற காதலர் கார்காலம் முடிந்தும் வரவில்லை

தோழி
அவர் நிலைமை என்னவென்று தெரியவில்லையே


இரலைமான் தன் துணைவியுடன் 

கடம்பும் களிறும் பாடி Agananuru says 138

குறிஞ்சி
எழூஉப்பன்றி நாகன் குமரனார் பாடியது
தலைமகன் சிறைப்புறத்தானாகத், 
தோழிக்குச் சொல்லுவாளாய்த் 
தலைமகள் சொல்லியது.

தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.

அன்பு கொண்ட தோழியே கேள்! 

குவளை மலர் போன்ற கண்கள் வறிதாகும்படி, பனி பொழிந்து நான் வருந்தக் கண்ட அன்னை வேறொன்று நினைத்துக்கொண்டாள்.

மணம் கொண்ட வேம்புப் பச்சிலை, நீல மலர் ஆகியவற்றைச் சூடிய படையுடன் சென்று தென்னவன் பகைவரைத் தாக்கினான். 

அவனது மலையிலிருந்து இறங்கும் அருவி போல் இசைக் கருவிகள் முழங்கின. 

கைதொழுது வணங்கி, முருகன் தெய்வத்தைத் தாய் இல்லத்துக்கு வரவழைத்தாள். (முருகு - வெறியாட்டு)

அவனுடைய கடப்பம் பூவையும் அவனுடைய ஊர்தி யானையையும் போற்றிப் பாடினர். 

பூக்கொத்துகளையும், மாலைகளையும் கையில் வைத்துக்கொண்டு வளைந்து வளைந்து பலர் நாள் முழுவதும் ஆடினர். 

இது நன்றோ? தோழி, நீயே சொல்.

உனக்குத் தெரியும். 
மலைநாடன் நீண்ட நாளாக நாம் சொல்லும் குறியிடத்துக்கு வருகிறான். 
கண்ணை மறைக்கும் இருள் வழியில் வருகிறான் 
அங்கே நாகம் மணியை உமிழ்ந்திருக்கும். 
பூத்துக் கிடக்கும் காந்தள் பூவில் தேன் உண்ணும் வண்டு நாகமும் அதன் மணியும் போல் தோன்றி அச்சம் ஊட்டும். 

அதனை நெஞ்சில் நினைத்து நான் வருந்திக்கொண்டிருக்கிறேன். 

தாயோ இப்படி ஆட்டிப் படைக்கிறாள். 
இது நன்றோ, தோழி நீயே சொல்.


கடம்பு | கடப்பம் பூ | வெண்கடம்பு

சிறு பல் கேணி Agananuru says 137

பாலை
உறையூர் முதுகூத்தனார் பாடல்
''தலைமகன் பிரியும்'' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் 
தோழி சொல்லியது.

வழிப்போக்கர்கள்  சேற்றைக் கிண்டித் தெளியும் நீரை உண்ணும் சிறுசிறு கேணிகள் பலவற்றில் பெண்யானைக்கு நீரூட்டி, தான் அதனைத் தொட்டுக்கொண்டு ஆண்யானை நடந்து செல்லும் காட்டாற்று வழி அது

அந்த வழியில் செல்ல அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை

தற்குள் உன் நெற்றி பசப்பூறிப் பாழ் பட்டுக் கிடக்கிறது 

 • விறற்போர்ச் சோழர் உறையூரில் பங்குனித் திருவிழா (பங்குனி முயக்கம்) நடைபெற்ற மறுநாள் திருவரங்கச் சோலையிலுள்ள அடுப்புகள் வெறிச்சோடிக் கிடப்பது போல் உன் நெற்றி பாழ்பட்டுக் கிடக்கிறது 

தெண்கடல் முத்துக்கு உரிய திண்தேர்ச் செழியனின் பொதியமலையில் வளரும் மூங்கில் போன்ற உன் தோள் பண்டைய அழகினை இழந்து காணப்படுகின்றன 

இவற்றைக் கண்டு என் நெஞ்சம் நோகிறது 


அக்காலத்தில் உறையூரில் நடைபெற்ற பங்குனி முயக்கம் - திருவிழாவில் இப்படித்தான் பொங்கல் வைத்தனர். 

உயிர் உடம்படுவி Agananuru says 136

மருதம்
விற்றூற்று மூதெயினனார் பாடல்
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் 
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
சங்ககாலத் திருமணம்

நெய்ச்சோற்று விருந்து அளிக்கப்பட்டது
பெரியவர்கள் பேணி வரவழைக்கப்பட்டனர்
புள் (நல்ல நேரம்) பார்க்கப்பட்டது
வானம் தெளிவாக விளங்கிய காலம்
முழுநிலா ஒளிச்சக்கரத்துடன் தோன்றும் காலம்
திருமணப் பந்தல் போடப்பட்டது
கடவுள் வழிபாடு நடைபெற்றது
முழவு, பணை ஆகிய மேளங்கள் மணவொலி எழுப்பின
மக்கள் கூட்டம் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது
வாகை, அறுகு, முல்லை பூக்கள் சேர்த்துக் கட்டப்பட்ட மாலை சூட்டப்பட்டது

அவள் தூய ஆடை உடுத்தியிருந்தாள்
பந்தலில் மழை பொழிந்தது போல ஈர மலர் பரப்பப்பட்டிருந்தது
இழை (தாலி) கட்டப்பட்டது
அவள் உறவினர் அவளை எனக்குத் தந்தனர்

அன்று தலைநாள் (முதல் இரவு) 
அவள் உவர்ப்பு நீங்கிய கற்பினள் (ஊடல் இல்லாத கற்பு கொண்டவள்) 
உயிர் உடம்படுவி என் உயிரை தன்னுடன் படுத்திக் கொண்டவள் 
முகத்தை மூடிக்கொண்டு நின்ற அவளிடம் நான் பேசினேன்

உன் நெற்றியிலிருக்கும் வியர்வை நீங்க உன் முத்தைத் திற - என்று சொல்லிக்கொண்டே அவள் ஆடையைக் களைந்தேன்

அவள் உடல் உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாள் போல மின்னியது
அவளால் எந்த உருப்பையும் மறைக்க முடியவில்லை

‘ஒய்’ என நாணத்தோடு என்னை வணங்கிக்கொண்டு நின்றாள்

அவள் தலையில் சூடியிருந்த மலரைத் தடவிக்கொண்டு அவள் கூந்தலுக்குள் நான் ஒளிந்துகொண்டேன்

அகநானூறு 136

உறை கழி வாள் - வாள் போல் மின்னினாள்

வாகை-மலர், முல்லை-மலர், அறுகம்பாவை
ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிய மாலையைத்
திருமண வதுவைச் சடங்கில் சூட்டுதல்
பண்டைய வழக்கம்

பேதுற்றிசினே Agananuru says 135

பாலை
பரணர் பாடியது
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது.

என் மாந்தளிர் மேனி வனப்பை இழக்க
நெற்றியில் பீர்க்கம்பூ போலப் பசலை பாய
கண் கலுழ
காம நோயால் துன்புற்று
ஆதிமந்தி போல்
அறிவு பிறிதாகி
பேதுற்றிசின் - பித்துப் பிடித்துள்ளேன் 

வெயில் காற்றில் இரும்பைப் பூ கொட்டும் காட்டு வழியில் அவர் சென்றுள்ளார்  

14 வேளிர் குடியினர் ஒருங்கிணைந்து கழுவுள் அரசனின் காமூரைத் தாக்கியபோது காமூர் கலங்கியது போல என் நெஞ்சம் கலங்குகிறது 


இரும்பை - இலுப்பை மலர்

இடி மறந்து ஏமதி Agananuru says 134

முல்லை
சீத்தலைச் சாத்தனார் பாடியது
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது.

கார் கால மழை பொழிந்துள்ளது 
பூவைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன - நீல நிறம்
அதன் மேல் மூதாய்ப் பூச்சிகள் மேய்கின்றன - சிவப்பு நிறம்
முல்லைப் பூக்கள் உதிர்ந்துள்ளன - வெள்ளை நிறம் 
அதனால் முல்லை நிலம் வல்லோன் வரைந்த ஓவியம் ("செய்கை") போலத் தோன்றுகிறது 

குதிரையின் கால்கள் மெல்ல ஒதுங்கிச் செல்லுமாறு, விரைந்து செல்ல இடிக்காமல் தேரை ஓட்டு

வாழைப் பூவில் இதழ்கள் உதிர்ந்த பின் வாழைப்பூவின் நுனித்தண்டு போல் காணப்படும் கொம்புகள் கொண்ட ஆண்மான் தன் பெண்மானோடு சேர்ந்திருக்கும் கூட்டம் தேரொலி கேட்பின் தடைபட நேரும்

அதனால் குதிரைகளை இடிக்காமல் தேரை மெல்ல ஓட்டு

அகநானூறு 134

திரிமருப்பு ஏற்றொடு கணைக் கால் அம் பிணைக்
காமர் புணர் நிலை 
கடுமான் தேர் ஒலி கேட்பின், தடைப்படும் 


செம் புற மூதாய்

மணி மருள் பூவை - காயா
முல்லை

வில் எறி பஞ்சி Agananuru says 133

பாலை
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது
''பிரிவிடை ஆற்றாளாயினாள்'' எனக் கவன்ற தோழிக்குத், 
தலைமகள், ''ஆற்றுவல்'' என்பது பட, சொல்லியது.

அது முல்லை நிலம் 
கார் மழை பொழிந்து குன்றிமணி போல் கண் கொண்ட வெள்ளெலி கிண்டிய செம்மண் புழுதியில் வேங்கை மலர்கள் உதிர்ந்திருக்கும்  
வில்லால் அடித்த பஞ்சு போல் வெண்மேகம் மேயும்
பாறைகளில் காயாம் பூக்களும் இலவம் பூக்களும் உதிர்ந்திருக்கும்
பூக்களை அடித்துக்கொண்டு காட்டாறு ஓடும்
தூறல் காற்று வீசும்
அந்த வழியில் செல்லலாம், என்னுடன் வருகிறாயா என்று அவர் என்னிடம் வினவினார்
சும்மாதான் கேட்டார் 
விட்டுவிட்டுப் போய்விட்டார்
வெட்சி, குருந்து பூத்திருக்கும் மேட்டு நிலத்தில் இருக்கும் மரல் புல்லை முறுக்கிய கொம்பு கொண்ட ஆண்-இரலை மானும், அதன் பிணை பெண்மானும் கறிக்கும் காட்டு வழியில் சென்றுவிட்டார்


இரலை & பிணை - மான்கள்

கொண்டனை சென்மோ Agananuru says 132

குறிஞ்சி
தாயங்கண்ணனார் பாடல்
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, 
தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, 
வரைவு கடாயது.

தினை அறுவடை ஆயிற்று 
இவள் தினைப்புனம் வர முடியவில்லை
அதனால் இவள் முகம் வாடிக் கிடக்கிறது 
ஊரார் ஏதேதோ பேசுகின்றனர் 

அம்பு எய்து யானையைக் கொன்று வாழும் கானவரின் தங்கை இவள் 

இவள் கொடிச்சி
மூங்கில் போல் தோள்
இதழ் போல் ஈரக் கண்
தளரும் நடை
ஆகியவற்றைக் கொண்ட கொடிச்சி

நுண்பூண் மார்ப

இவளுக்கு இன்பம் தர விரும்பினால் இவளை உன்னுடன் கூட்டிச் செல்

உன் மலைச்சாரலில்  உள்ள தேனீக்கள்
சுனையில் உள்ள பூக்களில் தேன் உண்ணும்
காந்தள் தேனை உண்ண அதன் இலையில் உறங்கும்
யானை மதத்தை மொய்க்கக் கனா காணும்

இப்படிப்பட்ட இனிய உன் ஊருக்கு இவளை அழைத்துச் செல்


காந்தள்

வேல் ஊன்று பலகை Agananuru says 131

பாலை
மதுரை மருதன் இளநாகனார் பாடல்
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

உயர்ந்த இகணை மரம் பசுமையான மெல்லிய இலைகளைக் கொண்டது 
அதன் இலைகள் நெருக்கமாக இருப்பது போன்ற கூந்தல் கொண்டவள் அவள் 
அதில் வண்டு மொய்க்கும் மணம் இருக்கும் 

நெஞ்சே! 

இவளுடன் இருப்பதைக் காட்டிலும் ஈதல் சிறந்தது என்று பொருளீட்டச் செல்வாய் ஆயின் உன்னுடன் நான் வரமாட்டேன் 

மழவர் வீளை ஒலி போல் அம்பு எய்து பட்டப் பகலில் ஆனிரைகளைக் கவர்ந்து வருவர் 
மீட்பவர் பசுவை மீட்டுக் கொண்டுவந்து கன்றின் கண்ணீரைத் துடைப்பர் 
இப்படி மீட்கும்போது மாண்டவருக்கு நடுகல் வைக்கப்படும் 
அதில் அவரது பெருமையும் பெயரும் எழுதப்பட்டிருக்கும் 
நடுகல்லுடன் வேலும் கேடயமும் நடப்பட்டிருக்கும் 
இது போர்முனை போலக் காணப்படும் 

இப்படி அச்சம் தரும் காட்டில் என்னோடு வருக என்று, என் நெஞ்சே, என்னை அழைப்பாய் ஆயின், என்னவளை விட்டுவிட்டு நான் வரமாட்டேன் 

உன் வினை வாய்க்கட்டும் 
இவ்வாறு தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுகிறான் 


இகணை போல் கூந்தல்
"விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்"
இகணை

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி