Tuesday, 31 July 2018

வாகை History in Purananuru 331

மூதில் முல்லை.
உறையூர் முதுகூத்தனார் பாடியது.

அது சிற்றூர்
அந்த ஊர் மக்கள் வில்லால் உழுது உண்பர். வேட்டையாடி உண்பர் 
இந்த ஊரில் ஒரு வல்லாளன் வாழ்ந்தான்
அவன் வறுமையில் வாடுபவன்
என்றாலும் தன்னிடம் இல்லாததையும் உண்டாக்கித் தர வல்லவன்

இடையன் வைத்திருக்கும் தீக்கடைக் கோலில் தீ இருக்காது
என்றாலும் இடையன் மாலை வேளையில் தீயை உண்டாக்கித் தருவான்

அதுபோல இவன் தன்னிடம்  இல்லாததை உண்டாக்கித் தர வல்லவன் இந்த வல்லாளன்

அக்கால மகளிர் தன் வீட்டில் இருப்பது மிகச் சிறிதளவே என்றாலும் எத்தனைப் பேர் வந்தாலும் அதனைப் பகிர்ந்தளித்து உண்பர் 

அதுபோல இவன் தன்னிடம் வந்தவர்களுக்குச் சிறிதேனும் சிறப்புச் செய்வான் 

போருக்குப் போகும்போது அரசன் போகுபலி (பெருஞ்சோறு) அளிப்பது அக்கால வழக்கம் 

தன்னிடம் இருக்கும்போது இந்த வல்லாளன் அரசன் அளிக்கும் போகுபலி போல உணவளிக்கவும் வல்லவன். வாகை History in Purananuru 330

மூதில் முல்லை.
மதுரைக் கணக்காயனார் பாடியது.
புலவர் நக்கீரன் தந்தை

இவன் கடல் அரிப்பைத் தடுக்கும் அணை போன்றவன்
பகைவேந்தன் படையுடன் வந்தாலும் இவன் ஒருவனாகவே நின்று உள்ளே நுழையாமல் தடுக்கும் வல்லமை படைத்தவன்

இவனைப் பாடிக்கொண்டு சென்றவர்களுக்கும் வழங்குவான்
கொடுக்க வேண்டும் ஆசையால் மற்றவர்களுக்கும் வழங்குவான்

இப்படிப் படையிலும், கொடையிலும் சிறந்தவன், இவன்.வாகை History in Purananuru 329

மூதில் முல்லை.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.

அவன் பலரும் புகழும் நெடுந்தகை
இவன் பாதுகாக்கும் ஊர் எப்படிப்பட்டது
ஊரில்வாழும் மக்கள்

 • வீட்டில் காய்ச்சி உண்ணும் கள்ளைப் பருகுவர் 
அருகில் நடுகல் கோயில் இருக்கும்
 • நாள்தோறும் அதற்கு உணவு படைப்பர் 
 • நடுகல்லை நீராட்டுவர் 
 • நறுமணப் புகை ஊட்டுவர் 
 • அந்த மணம் ஊரெல்லாம் மணக்கும் 

அது ஒரு போர்க்கள முனை

 • பகைவர்க்கு இது பாம்பு தங்கும் புற்று போன்றது 

இரவலர்க்கு வேண்டியவற்றை வழங்கும் இடம் இதுசிதைந்த பாடல் - வாகை History in Purananuru 328

மூதில் முல்லை.
பங்கு ............................. பாடியது.

அவன் சிற்றூர் மன்னன்
பாண
அவனை நீ பாடிச் சென்றால் விரும்பியது பெறலாம்

அவன் ஊர் முல்லை நிலம்
அங்கு நெல் விளையாது
விளைந்த வரகு, தினை எல்லாவற்றையும் கேட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டான்
அவனிடம் ஏதும் இல்லை

ஆயினும்
பாண

வெள்ளம் அளவு பாலில் துளி பிறை ஊற்றினால் திரிந்துவிடுவது போல் இவன் தோன்ற, பகைவர் திரிந்து ஓடுவர்

களாப்பழம் புளிப்போடு கலந்த இனிப்புச் சுவை உடையது. அது போன்றவன் அவன்

நீ சென்றால்,

வற்றல் போட்ட கறித் துண்டுகளைத் தாளித்துச் சமைத்து வெண்ணிற நெல்லரிசிச் சோற்றோடு தருவான்

அவன் இவ்வாறு வழங்கும் முற்றத்தில் தாளியில் வளர்ந்திருக்கும் முஞ்ஞைத் தளிரை முயல் வந்து கறித்துக்கொண்டிருக்கும்
இது அவன் வீட்டுக்கு அடையாளம்


செடி வளரும் தாளி

வாகை History in Purananuru 327

மூதில் முல்லை.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இவன் மூதில் நெடுந்தகை

 • ஏரில் எருதைப் பூட்டி உழாமல் தெளித்து, சிறிய அளவில் வரகு விளைந்திருக்கும் 
 • அதனை விளையவைத்த கடவுளக்கு முதலில் ஒரு கூறு கொடுப்பான் 
 • மிச்சத்தில் சமைத்த உணவைப் பசித்திருக்கும் பாணரோடு சேர்ந்து உண்பான் 
 • மேலும் மிச்சம் இருப்பதை சுற்றத்தார் மகிழுமாறு கொடுப்பான்
 • அதுவும் தீர்ந்து போனால் தன் ஊரில் சேமித்து வைத்திருக்கும் சிறு-புல்லாளரிடம் கடனாக வாங்கிக்கொள்வான்
இப்படி வாழ்பவன்தான் இந்த நெடுந்தகை
அரசன் தன் படைச் சுற்றத்துடன் வந்தாலும் தாங்கிக் காப்பாற்றும் வல்லமை பெற்றவன் இவன்வாகை History in Purananuru 326

மூதில் முல்லை.
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.

அந்த ஊர்

 • பழமையான வேலி 
 • அதில் காட்டுப் பூனை இரையை வைத்துக்கொண்டு தின்னும் 
 • வீட்டில் பருத்தி எடுத்து நூற்று ஆடை நெய்து வாழும் பெண் - பருத்திப் பெண்டு - குடியிருப்பாள் 
 • வீட்டில் சிறிய விளக்கு எரியும் 
 • அந்த வெளிச்சத்தில் சமைக்கும் தினையில் இருக்கும் சிறை (சொங்கு), செற்றை (தூசி) ஆகியவற்றைப் புடைப்பாள் 
 • அவள் புடைக்கும் ஒலி கேட்டு, தாய்க் காட்டுப் பூனை தந்த இரையை உண்ணாமல் போட்டுவிட்டுக் குட்டிப் பூனை கத்தும் 
 • அங்கே சேவல் வரும். அது முள்முருங்கைப் பூ போன்ற கொண்டை கொண்டிருக்கும் 
 • சேவலைப் பார்த்ததும் குட்டிப் பூனை கத்துவதை நிறுத்திக்கொள்ளும் 
அந்தக் காவல்காடு இருக்கும் ஊரில் வாழ்பவன் மூதில் மகன்
அவன் மனைவி

 • அவனும் அவளும் பெற்றெடுத்த சிறுவர்கள் நீண்ட தொலைவு செல்லாமல் அவர்களின் படப்பையில் மேயும் உடும்புகளைப் பிடித்து வருவர் 
 • அவன் மனைவி கொழுப்புடன் சேர்த்துச் சமைத்த உடும்பைத் தயிரில் போட்டு வைத்திருப்பாள் 
 • இதில் நல்லனவற்றை விருந்தினராக வரும் பாணர்க்குத் தந்து உண்பதில் விருப்பம் கொண்டவள் 
கணவனாகிய கிழவனும் போரில் பகைவர் யானையை வீழ்த்தி அதன் முகத்தில் இருந்த பொன்-ஓடையை அரசனிடமிருந்து பரிசாகப் பெற்றுவருவான்
அதனை அவன் பாணர்க்குப் பரிசாக வழங்குவான்


சேவல் கொண்டை

வாகை History in Purananuru 325

வல்லாண் முல்லை.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

வேந்தனே தன் படையுடன் வந்தாலும் அத்தனைப் பேரையும் காப்பாற்றும் தகைமையாளன் அவன்
அவன் ஊர் எப்படிப்பட்டது தெரியுமா

நிலம் நீர் இல்லாமல் வெடித்துக் கிடக்கும்
யானை அதன் புழுதியை வாரித் தன்மேல் தெளித்து வெயிலின் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளும்
மழைமேகம் எப்போதாவது காலம் கடந்து பெய்யும்
அப்போது குழியில் தேங்கிய நீரை குரால் நிறப் பசுக்கள் உண்ணும்
மக்கள் சேற்றைக் கிண்டித் தெளியும் நீரை உண்பர்
இப்படி நிறைவு இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் அவன் நாட்டு மக்கள்

அவர்கள்  முள்ளம்பன்றியை வேட்டையாடிக் கொண்டுவருவர்
உடும்பை அடித்துக் கொண்டுவருவர்
சிறு குடிசை முற்றத்தில் அவற்றைக் கூறு போடுவர்
கொள்ளிக் கட்டைத் தீக் கனப்பில் அவற்றைச் சுடுவர்
அது  தெருவெல்லாம் மணக்கும்.

அங்கே மதுகை மன்றம் இருக்கும் இருக்கும் 
தம் திறமைகளை வெளிப்படுத்தும் மன்றம் மதுகை மன்றம் 
யானைக் குட்டி போன்ற தலை கொண்ட சிறுவர்கள் அம்பு எய்து அங்கு விளையாடுவர் 

ஊரைச் சுற்றிலும் மிளை என்னும் காவல்-காடு 

இப்படிப்பட்ட ஊர்த்தலைவன்-தான் படையுடன் வரும் வேந்தனையும் காப்பாற்றக் கூடியவன் 


முளவு
முள்ளம்பன்றி
என் அப்பாவைப் பெற்ற தாயின் பெயர்
அப்பாயி பெயர் - முளவம்மா

வாகை History in Purananuru 324

வல்லாண் முல்லை.
ஆலத்தூர் கிழார் பாடியது.

இவன் சிற்றூர் நெடுந்தகை மன்னன்

 • இவன் குடிமக்கள் வேட்டுவர் 
 • வேட்டுவச் சிறுவர் கயந்தலை (யானைக் கன்று) போல் கூர்மையான பார்வை கொண்டவர்கள் 
 • பறவைக் கறி தின்று நாறும் வாயை உடையவர்கள் 
 • ஊகம் புல்லில் அம்பு செய்து சப்பாத்தி முள்ளை அதன் நுனியில் செருகி வைத்திருப்பர் 
 • வலார் குச்சியை வளைத்து வில் செய்திருப்பர் 
 • வேலிக் பருத்தி படர்ந்திருக்கும் வேலியில் மேயும் கருப்பை என்னும் வெள்ளெலிகளை வேட்டையாடுவர் 
இப்படிப்பட்ட நிலப்பகுதிதான் இவன் ஆளும் ஊர்
இவன்

 • குமிழம் பழம் வெள்ளை வெளேர் என்று உதிர்ந்து கிடக்கும் பந்தல் நிழலில் பாணர்களுடன் இருப்பான் 
 • இடையன் நெய் ஊற்றி அங்கே விளக்கு ஏற்றி வைத்திருப்பான் 
 • இவன் நாணத்துடன் அடக்கமாக இருப்பான் 
வெற்றி முழக்கம் செய்யும் வேந்தன் துன்புறும் காலத்தில் அவனது நம்பிக்கைக்கு உரிய துணைவன் இவன்தான்சிதைந்த பாடல் History in Purananuru 323

................டார் கிழார் பாடியது.

அவன் வேலோன் 
வேண்டியதை எல்லாம் சுரக்கும் ஈகை உள்ளம் கொண்டவன் 
ஊரில் வளர்க்கப்படும் பசு காட்டுப் பசுவின் கன்றுக்குப் பாலூட்டும் ஊரை ஆளும் வேலோன் 
இவன் வேலையோ, வில்லையோ, வாளையோ போரிட வரும் வேந்தனின் யானையைத் தாக்குவதற்கு அல்லாமல் வேறு யார் தாக்க வந்தாலும் அவை வைத்திருக்கும் தன் உறையிலிருந்து வெளியே எடுக்க மாட்டான் 


வாள் & உறை

வாகை History in Purananuru 322

திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
ஆவூர் கிழார் பாடியது.

இவன் வேலோன்

மண்ணைக் குத்தி முறிந்து போன காளையின் கொம்பு போல் கவைமுள் இட்ட வேலியுடன் நிற்கும் கள்ளி மர நிழலில் இருந்துகொண்டு புதுவரகு அறுவடை செய்த வயலுக்கு வரும் கருப்பை என்னும் எலியைப் பிடிக்க ஊர்ச் சிறுவர்கள் வில்லைக் கையில் ஏந்திக்கொண்டு ஆரவாரம் செய்வர்

அந்த ஆரவார ஒலியைக் கேட்டு பெரிய கண்ணை உடைய சிறிய முயல் மன்றத்தில் பாயும்

இப்படிப்பட்ட வன்மையான நிலப்பகுதியின் தலைவன் இவன்

இவன் தாக்குவானோ என்று நினைத்துக்கொண்டு நீர்வளம் மிக்க நாட்டை ஆளும் வேந்தன் தூங்காமல் கிடக்கிறான்

கரும்பில் சாறு பிழியும் எந்திரத்தின் ஒலியைக் கேட்டு அங்குள்ள நீரில் மேயும் வாளை மீன் துள்ளிப் புரளும்  வளமான நாட்டை உடையவன் அந்த வேந்தன்


கரும்பின் எந்திரம்
கரும்பாலை

சிதைந்த பாடல் வாகை History in Purananuru 321

வல்லாண் முல்லை.
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

குருசில் = செம்மல் = தலைவன்

அவன் எம் செம்மல்
அவன் தலையில் வாள் வெட்டுப் பட்டு ஆறிய தழும்பு இருக்கும் போர்மறவன்
அவன் நீர்வளம் இல்லாத வன்புல நிலப்பகுதியை ஆளும் தலைவன்

 • பொறிப்பொறியான தோற்றம் கொண்ட குறும்பூழ்ப் பறவை அங்கு மேயும் 
 • மேலே உள்ள தோலைக் களைந்த பின்னர் வெள்ளை வெளேர் என்று தோற்றம் தரும் எள் விளையும் 
 • இதனைக் காயவைத்து வட்டமாக இருக்கும் சுளகு முறத்தில் போட்டு அதனைக் கல் இல்லாமல் நேம்புவர் 
 • வாளைப் பூவின் இதழ் போல் காதுகளைக் கொண்டு மரக்கிளையில் ஏறி விளையாடும் கோட்டு எலிகளை அங்குள்ள மக்கள் பிடிப்பர் 
 • வரகு கதிர் விட்டு விளைந்திருக்கும் 

இவனிடம் சென்றால் இவற்றையெல்லாம் உணவாகப் பெறலாம்.


சுளகு

Monday, 30 July 2018

வாகை History in Purananuru 320

வல்லாண் முல்லை.
வீரை வெளியனார் பாடியது.

முற்றத்தில் முஞ்ஞைக் கீரையும் முசுண்டைக் கீரையும் பம்பிக் கிடந்தன
பந்தல் வேண்டாத அளவுக்குப் பம்பிக் கிடந்தன
பலாப்பழம் தொங்கிக்கொண்டிருந்தது

கணவன் வேடன் பார்வைமானாகி தன் பெண்மானைக் கட்டி வைத்துவிட்டு உறங்கிவிட்டான்
அங்கு வந்த ஆண்மான் அந்தப் பெண்மானுடன் புணர்ந்து விளையாடிக்கொண்டிருந்தது.

அதனைக் கண்டாள் அந்த வீட்டுக்காரி
அவள் இரக்க மனம் படைத்தவள்

கணவன் உறக்கத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது
புணரும் மான் இன்பத்துக்கும் இடையூறு செய்யக் கூடாது
என்று எண்ணி இல்லத்தில் நடமாட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தாள்

அவள் மான் தோலில் காயவைத்திருந்த தினை அரிசியை காட்டுக்கோழி, இதல் முதலான பறவைகள் கவர்ந்து உண்டுவிட்டன 

அவள் கூறுகிறாள் 

பாண 

கனல் போட்டு ஆரல் மீனைச் சுட்டுத் தருகிறேன் 
உன் சுற்றத்தாருடன் உண்டு இங்கேயே தங்குக 

என் கணவன் வேட்டுவன் எழுந்து அரசனிடம் சென்றுள்ளான் 
அவன் வந்ததும் அவனுக்கு வேந்தன் தந்த விழுமிய பொருள்களை மறைக்காமல் உங்களுக்குத் தருவான் 

இது உரைசால் நெடுந்தகை மன்னன் பாதுகாக்கும் ஊர் 
அச்சம் ஏதும் இல்லை 


பெண், ஆண் மான்கள்

வாகை History in Purananuru 319

வல்லாண் முல்லை.
ஆலங்குடி வங்கனார் பாடியது.

செம்மண் பள்ளம்
அதில் தோண்டப்பட்ட கூவல் கிணறு
அதில் எடுத்துவந்த செந்நிறத் தண்ணீர்
முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தது
அத்துடன் பழைய வாயை உடைய சாடியில் கஃடு (கள்) வைக்கப்பட்டிருந்தது.
கள்ளை யான் உண்டு மயங்கிவிட்டேன் 

பந்தல் போட்ட முற்றத்தில் தினை காய்ந்துகொண்டிருந்தது
அதனை புறா, இதல், அறவு முதலான பறவைகள் உண்டுவிட்டன
புதிதாக எடுத்துக் காயவைத்துச் சமைக்கலாம் என்றால் பொழுதும் போய்விட்டது

அதனால்

வீட்டில் வளர்க்கும் முயலையேனும் சுட்டுத் தருகிறேன்
முதுவாய்ப் பாண (பாடிக்கொண்டே யாழ் மீட்டும் பாணனே) 
நீ தேடி வந்த சீறூர் மன்னன் வேந்தன் இட்ட பணியைச் செய்ய நேற்றே போய்விட்டான்

அவன் சிறுவர்கள் ஆமான் கன்றுகளைப் பூட்டி விளையாட்டாக உழுதுகொண்டிருக்கின்றனர் 

அவன் வந்ததும் பாடினி மாலை அணியவும், நீ வாடாத பொன் தாமரை அணியவும் வேண்டிய பொருள்களைத் தருவான்.
அதுவரை இங்குத் தங்கியிரு.

இவ்வாறு சிற்றூர் மன்னன் மனைவி கூறுகிறாள்

புறநானூறு 319


வாகை History in Purananuru 318

வல்லாண் முல்லை.
பெருங்குன்றூர் கிழார் பாடியது.

பறித்துவந்த கீரை சமைக்கப்படாமல் வாடுகிறது
விறகு காய்ந்து கிடக்கிறது
மயில் போன்ற அழகி அவன் மனைவி பசியோடு இருக்கிறாள்

வீட்டுக் கூறையில் வாழும் குருவி பறக்கிறது
பாணரின் யாழ் நரம்பு இசைக்கிறது
குதிரை கனக்கும் ஓசை கேட்கிறது
வயலில் விளந்த நெல்லை உண்ட ஆண்மயில் பெண்மயிலோடு ஓடுகிறது

வேந்தன் விழுப்புண் பட்டுத் துன்புறுகிறான்வாகை - சிதைந்த பாடல் History in Purananuru 317

வல்லாண் முல்லை.
வேம்பற்றூர்க் குமரனார் பாடியது.

எங்களுக்கும், பிறருக்கும், எல்லாருக்கும் வெற்றி தந்து போரிலிருந்து மீண்டிருக்கிறான்.
முற்றத்தில் கட்டாந்தரையில் படுத்துக் கிடக்கிறான்
அவன் அயர்வு தீரப் படுத்துறங்கத் தோலோ, பாயோ கொடுங்கள்
உடனே கொடுங்கள்வாகை History in Purananuru 316

வல்லாண் முல்லை.
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

பாணன் ஒருவன் சொல்கிறான்

கள்ளை வாழ்த்திக்கொண்டு பருகினான்
காட்டில் இருக்கும் முற்றத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறான்
மறுநாள் போருக்காக உறங்கிக்கொண்டிருக்கிறான்
அவன் எங்களுக்கு இறைவன்
நாங்கள் அவன் பாணர்

நேற்று போர் நடந்தது
அவன் தன் பழைய வாளை என்னிடம் பணையமாக (பந்தையமாக) வைத்துவிட்டுப் போருக்குச் சென்றான்.
வெற்றியுடன் திரும்பினான்

இன்றும் போர்
நான் வாளைப் பணையமாக வைக்கிறேன்
நீ
ஈவதில் இல்லை என்று சொல்லமாட்டாய்
நான் என் இடையில் அணிகலன் பெறவேண்டும்
கள் உண்டு மகிழ வேண்டும்
சினம் கொண்டு சென்று வெற்றியுடன் திரும்புக
பகைவேந்தன் யானை துன்புறுமாறு வென்று வருக - என்றேன்

அவன் வெற்றியுடன் திரும்புவான்அதியமான் அஞ்சி History in Purananuru 315

வாகை - வல்லாண் முல்லை.
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

அவன் பெயர் அஞ்சி
இருக்கும்போது நன்றாக உண்பான்
இரப்போர்க்கு வழங்குவான்
தன் மகளிர்க்குத் தோள் துணை ஆகி இருப்பான்

தீக்கடைக் கோலைக் கூரை வீட்டு இறைவானத்தில் செருகியிருப்பர் 
அப்போது அது கூரையைச் சுடாது 
அது போல் இவன் இருப்பான் 

தீக்கடைக் கோலால் கடைந்து தீ மூட்டினால் அது ஊரையே எரித்துவிடும் 
அதுபோல இவனுக்குச் சினமூட்டினால் பகைவரை அழித்துவிடுவான் வாகை History in Purananuru 314

வல்லாண் முல்லை.
விழும் - விழுமம் - விழுப்புண்  
ஐயூர் முடவனார் பாடியது.

அவன் வீரன் 
வீட்டுக்கு விளக்காக விளங்கும் அவன் மனைவிக்குக் கணவன்
போர்முனைக்கு எல்லை கட்டிய வேல் வீரன்
விழுப்புண் பட்டு மாண்டான்
இப்போது நடுகல்லாக நிற்கிறான்
நெல்லி மரங்கள் நிறைந்திருக்கும் இடத்தில் கல்லாகி நிற்கும் அவனுக்குக் குடிமக்களும் அவன்தான். மன்னனும் அவன்தான்
அவனைத் தாக்க வரும் படையும் அவன்தான்
அவர்களைத் தடுத்து நிறுத்தும் படையும் அவன்தான்


நெல்லி

வாகை History in Purananuru 313

வல்லாண் முல்லை
மாங்குடி கிழார் பாடியது.

நாட்டை ஆளும் பெருவிறல் அவன் 
வழியில் சென்றுகொண்டிருந்தான் 
இரவலர் அவனைக் காணச் சென்றனர் 
களிறு, தேர் கேட்டாலும் வழங்க வேண்டிய கடமை உள்ளவன் அவன் 
எள் அளவும் அவனால் கொடுக்க முடியவில்லை 
எனவே 
உமணர் உப்பு ஏற்றிச் சென்ற வண்டி குன்றத்தில் அச்சு முறிந்து கிடப்பது போல் அங்கேயே கிடந்து மாண்டான் வாகை History in Purananuru 312

மூதில்முல்லை.

பொன்முடியார் பாடியது.

மகனைப் பெற்ற தாய் சொல்கிறாள் 

 • பெற்றுப் பேணுதல் என் கடமை 
 • சான்றோன் (போர்-வீரனுமாம்) ஆக்குதல் இவன் தந்தை கடமை 
 • வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லன் கடமை 
 • நல்ல நடத்தை உள்ளவனாக ஆக்குதல் வேந்தன் கடமை
 • வாளேந்திப் போரில் யானையைக் கொன்று மீளுதல் என் மகன் காளையின் கடமை 
புறநானூறு 312

போர்
களிறு எரிந்து பெயர்தல் 

தும்பை History in Purananuru 311

பாண்பாட்டு.
ஒளவையார் பாடியது.

அவன் மலர்மாலை அணிந்திருந்த அண்ணல் (தலைவன்)

நீர் தேங்கி நிற்கும் கூவல் பள்ளத்தில் மண் தோண்டி அதில் துணியை ஊற வைத்துத் தூய வெண்ணிறம் கொள்ளும்படிப் புலைத்தி  துவைத்துத் தந்த ஆடையை அவன் உடுத்தியிருந்தான்

அந்த ஆடை மாசு படும் மன்றத்தில் - மாட்டுச் சாணம் போட்டிருக்கும் மன்றத்தில் - இருந்துகொண்டு அவன் பலரது குறைகளையும் போக்கி வந்தான் 

இப்போது இவன் போர்க்களத்தில் கிடக்கிறான்

இப்போது இவனுக்கு வெள்ளைத் துணி போர்த்த ஒருவரும் இல்லை
விழுப்புண் பட்ட இவன் மார்பு இவன் அணிந்திருந்த தோல் கேடயத்தால் போர்த்தப்பட்டுக் கிடக்கிறது

புறநானூறு 311

புலைத்தி

தும்பை History in Purananuru 310

நூழிலாட்டு.

பொன்முடியார் பாடியது.

இவன் உரவோன் மகன் 

இவன் சிறுவனாக இருந்தபோது பால் உண்ணவில்லை என்று இவன் தாய் சிறிய கோலை எடுத்துக்கொண்டு அடிக்க ஓங்கிய போதெல்லாம் வருத்தத்துடன் நடுநடுங்கினான் 

இப்போது நெற்றியில் புகர் வரிகள் கொண்ட போர்யானையை வென்று பெருமிதத்துடன் தோன்றுகிறான் 
உளை-மான் தலை போன்ற குடுமியுடன் தோன்றுகிறான் 

இவன் தன் மார்பில் அணிந்திருக்கும் போர்க் கவசத்தில் அம்பு ஒன்று பாய்ந்து விழுப்புண் கொண்ட மார்புடன் விழுந்து கிடக்கப் போவதை இவன் எண்ணிக்கூடப் பார்த்திருக்க மாட்டான்  தும்பை History in Purananuru 309

நூழிலாட்டு.

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடியது.

இரும்பாலான போர்க்கருவிகள் சிதையும்படிப் போரிட்டு வெற்றி பெறுதல் எல்லாராலும் முடியும் 
இடி முழக்கம் கேட்டுப் புற்றிலிருக்கும் நாகம் நடுங்குவது போல பாசறையில் இருக்கும் அனைவரையும் நடுங்கும்படிச் செய்ய வல்ல வேல் என் தலைவன் கையில்தான் உள்ளது வாகை History in Purananuru 308

மூதில் முல்லை.

கோவூர் கிழார் பாடியது.

பொன் உருகி ஓடுவது போல முறுக்கு இல்லாத நரம்புகளைக் கொண்டது யாழ்
அதன் நரம்புகளைக் கட்டியிருக்கும் ‘பச்சை’ என்னும் உறுப்பு மின்னல் போல் யாழில் தோன்றும்
குழந்தை மழலை மொழி போல் அதில் இசை வரும்
இப்படிப்பட்ட யாழை இசைக்கும் பாண 

எம் பெருவிறல் சிற்றூர் மன்னன்

இவன் வீசிய வேல் வேந்தன் யானையின் முகத்தில் பாய்ந்தது
வேந்தன் சினம் கொண்டு வீசிய வேல் இவன் மார்பில் பாய்ந்தது

வேந்தன் யானையின் முகத்ததில் தாக்கியிருக்கும் வேலைப் பார்த்த பிற யானைகள் எல்லாம் போரில் முன்னேறாமல் பின்வாங்கின தும்பை History in Purananuru 307

களிற்றுடனிலை.
பாடியவர் பெயர் அழிந்துபோயிற்று 

அவன் என் தந்தை போன்ற அரசன்
அவன் இப்போது எங்கே இருக்கிறானோ
குன்றம் தன் போர்யானையோடு மாண்டுபோனான்

பகைவர்கள் புதியவர்கள் போலத் தோன்றுகின்றனர்
அங்கே பாருங்கள்
அவர்கள் தோன்றுகின்றனர்

அணில் முதுகில் கோடுகள் தெரிவது போல ஊகம்புல் பூக்கும்
அது காய்ந்து நிலத்தில் விழும்
அது போல் தலையில் உள்ள முடியை அவன் சுரியலாக முடிந்திருக்கிறான்
அவன் தலை நிலத்தில் கிடக்கிறது

உமணர் உப்பு  மூட்டைகளை வண்டியில் ஏற்றிச் செல்வர்
மேடு பள்ளத்தில் ஏறும்போது வண்டி இழுக்கும் எருதின் கால் முறிவது உண்டு
கால் முறிந்த  எருதினை அவர்கள் அந்த இடத்திலேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுவர்
யாரும் இல்லாத ஒரு பக்கத்தில் அந்த எருது உணவும் நீரும் தருவார் இல்லாமல் முடத்துடன் இறந்து போகும்

இப்படிப் போர்க்களத்தில் இவனைப் பகைவர்கள் விட்டுவிட்டனர்
உயிரை எடுத்துக்கொண்டு விட்டுவிட்டனர்
சினம் எம் வேந்தனும் இதைத்தவிர வேறு வழியில்லை என்று எண்ணி நெஞ்சொடிந்து மாண்டுபோனான்
இவன் மேலானவன்Sunday, 29 July 2018

சிதைந்த பாடல் - வாகை History in Purananuru 306

மூதில் முல்லை
மூதில் = பழங்குடி
முல்லை = இருப்பு, மணம், பண்பு-மணம் 

அள்ளூர் நன்முல்லையார் பாடியது.

அவன் சிற்றூர்க் குடிமகன் 
 • அது காலில் முள் தைக்கும் வேலி கொண்டது 
 • காட்டு யானைகள் போரிடக் கலங்கிய நீரினை உடையது 
அவ்வூர் முதுகுடியில் பிறந்த ஒருவன் விரும்புகிறான் 
 • என் மனைவி என் நடுகல்லைத் தொழவேண்டும் 
 • அதற்கு எனக்குப் போர் விருந்து வரவேண்டும் 
 • அதற்கு என் வேந்தன் தன் விரிவாக்கும் செயலாகப் பகைவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும் 


வாகை History in Purananuru 305

பார்ப்பன வாகை.
பார்ப்பான் சமாதானத் தூது

மதுரை வேளாசான் பாடியது.

பார்ப்பான் ஒருவன் தூதாக வந்து இரவில் அரசனிடம் ஏதோ கூறினான் 

 • வயலைக் கொடி போல் அவன் வயிறு வாடியிருந்தது 
 • உந்தி உந்தி நடந்து வந்தான் 
 • பச்சைக் குழந்தை போல் தோன்றிய பயலைப் பார்ப்பான் அவன் 

அவன் இரவில் கூறிய சொற்கள் சிலவே 
இன்று காலை கோட்டை முற்றுகை கைவிடப்பட்டது 
மதில்மீது ஏற வைக்கப்பட்ட ஏணியும், சீப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டன 
யானை மீது பூட்டப்பட்டிருந்த போர் அணிகலன்கள் களையப்பட்டன 


மதிலில் ஏறப் பயன்படுத்தப்பட்ட சீப்பு

தும்பை History in Purananuru 304

குதிரை மறம்.

அரிசில் கிழார் பாடியது.

வேந்தன் படைவீரன் ஒருவன் போருக்குப் புறப்பட்டான் 
மகளிர் அவனுக்கு மாலை சூட்டிவிட்டனர் 
பசியாற நன்கு உணவு உண்டான் 
நாரில் வடித்த கள்ளைப் பருகினான் 
குதிரை ஏறப் புறப்பட்டான் 
காற்றை விட விரைவாகச் செல்லும் வல்லமையும் வளமும் படைத்தது அந்தக் குதிரை 

நேற்று நடந்தது 
என்முன் ஒருவன் வெட்டுப்பட்டான்
"நாளைக்கு என் தம்பியோடு போருக்கு வருகிறேன்" - என்று சொல்லிவிட்டுச் சென்றான். 

இன்று அவன் வயிற்றுக்கு உணவு கூட அருந்தவில்லை 
குதிரை ஏறிப் புறப்பட்டுவிட்டான் 
அவன் வரவு கண்டு வேந்தன் பாசறையில் உள்ளவர்கள் அனைவரும் நடுங்குகின்றனர்  
அவன் "தம்பியுடன் வருகிறேன்" என்று சொன்னது பொய் ஆகாது 
வருவான் 
உன்னைக் கொல்வான் 
கவனமாக நடந்துகொள் 

தன் படைவீரனுக்கு எச்சரிக்கை 

தப்பியோன் - தப்பல் - அடித்தல்
அவனை இரண்டு தப்பு தப்பு - இக்கால வழக்கு 
ஆள் அன்று என்று வாளால் தப்பார் - வாளால் அடிப்பர் - வெட்டுவர் தும்பை History in Purananuru 303

குதிரை மறம்.

எருமை வெளியனார் பாடியது.

காளை போன்ற என் தலைவனைக் காணுங்கள் 
இவன் குதிரை விரைந்து செல்லும் குளம்புகளை உற்றுப் பார்த்தால் நிலம் பின்னோக்கிச் செல்வது போலக் கண்ணுக்குத் தெரிகிறது 
அப்படி இவன் குதிரை சுழன்று திரிகிறது 
அதன் மேல் இருக்கும் எம் தலைவன் தன் வேலை வீசி வேந்தர் நெஞ்சைப் பிளப்பதைக் காண வாருங்கள் 

திமில் கடல் நீரைப் பிளந்துகொண்டு செல்வது போல நேற்று இவன் குதிரை பாய்ந்து சென்றது. 
அப்போது இவன் அரசனின் யானையைக் கொன்றான் 
அரசனின் பிடியானை நாணும்படி அரசனின் ஆண்யானையைக் கொன்றான் 

இன்று அரசன் நெஞ்சைப் பிளப்பான் 
அதனைக் காண வாருங்கள் 


தாவும் குதிரைக் குளம்பைப் பார்த்தால்
நிலம் பின்னோக்கிச் செல்வது போல் தோன்றும்
அளவுக்குக் குதிரை விரைந்து சென்றதாம் 

தும்பை History in Purananuru 302

குதிரை மறம்.

வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.

மூங்கில் வெடிப்பது போல, "டப் டப்" என்னும் ஒலியுடன் தப்படி இட்டு இவன் குதிரை துள்ளிப் பாய்கிறது 
மணக்கும் நரந்தம் புல் மாலையை மகளிர் கூந்தலில் சுற்றியிருப்பது போல, ஒப்பனை செய்யப்பட்டிருக்கும் யாழைப் பாணர் மீட்டுவர் 
அவர்களுக்கு ஊரைப் பரிசாக அளிக்க வேண்டும் என்று எம் தலைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் 
அவன் வேல் வீசிக் கொன்ற போர் யானைகள் வானத்து விண்மீன்களைக் காட்டிலும் அதிகம் 
பெய்யும் மழைத்துளிகளைக் காட்டிலும் அதிகம் 
உங்கள் ஊரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் தும்பை History in Purananuru 301

தானை மறம்.

ஆவூர் மூலங்கிழார் பாடியது.

சான்றார் = போர் வீரர்
பலராக இருக்கும் சான்றீரே

இளங்குமரி கூந்தல் போலப் பலவாக வேல் நட்டு வேலி அமைத்திருக்கும் பாசறையில் அமைதியாக இருக்கும் சான்றீரே 

முரசு முழங்கும் படையுடன் பாசறையில் இருக்கும் உம் அரசனைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
உங்களது யானைகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

எத்தனை நாளைக்கு உங்கள் போர் தாங்கும்
அமைதியாக இருக்கும் எம் படை அத்தனை நாளைக்கும் தாக்காமல் இருக்கும் என்பது என்ன நிச்சயம்
அதனால் எம் வீரன் நினைத்திருப்பது யாருக்குத் தெரியும்

எம் வீரன் குதிரையில் சென்றிருக்கிறான்
அந்தக் குதிரை நிலத்தை அளப்பது போல் இரவில் சென்றிருக்கிறது
உம் வேந்தன் ஏறிவரும் யானைக்கு அல்லது இவன் தன் வேலை வீசமாட்டான் போல் தெரிகிறது

அதனால் உம் அரசனைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்


குமரி மகளிர் கூந்தல் புரைய, 
அமரின் இட்ட அரு முள் வேலிக் 
கல்லென் பாசறை
இவள் கூந்தல் போல வேல் நட்டுப் பாசறை அமைத்திருந்தனராம்

தும்பை History in Purananuru 300

தானை மறம்.

அரிசில் கிழார் பாடியது.

தோல் என்பது மார்புக் கவசம் 
வீர
தோல் தா, தோல் தா என்று கேட்கிறாய்
தோல் அணிந்துகொண்டு பெரிய பாறைக்குப் பின்னால் ஒளிந்து நின்றாலும் இன்று நீ பிழைக்கப் போவதில்லை
நேற்று நீ ஒருவனை வெட்டி  வீழ்த்தினாயே அவன் தம்பி இன்று போருக்கு வருகிறான்
அவன் கண்கள் அகலில் கிடக்கும் குன்றிமணி சுழல்வது போலச் சுழன்று உன்னைத் தேடிக்கொண்டிருக்கின்றன
ஊரார் அவனுக்கு ஊட்டிய கள்ளுக்கு விலையாக ஒரு கோட்டையைத் தரவேண்டும் என்று அவன் துடிக்கிறான்நொச்சி History in Purananuru 299

குதிரை மறம்.

பொன்முடியார் பாடியது.

வேலிப்பருத்திக் கொடி படர்ந்திருக்கும் வேலி கொண்டது இந்தச் சிற்றூர் 
இவன் இந்தச் சிற்றூர் மன்னன்
இவன் குதிரை உழுந்துக் கோதினை உண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தது
இது போர்க்களத்தில் நுழைந்தது
கடலைப் பிளந்துகொண்டு செல்லும் தோணி போல, படையைப் பிளந்துகொண்டு செல்கிறது

பகைமன்னன் வளவயலை ஆள்பவன்
அவன் குதிரை நெய் கலந்த சோறு தின்றிருக்கிறது
சீறூர் மன்னன் குதிரையைப் பார்த்ததும் இது ஒதுங்கி நிற்கிறது

வள்ளி, தெய்வானை அணங்குகளுடன் இருக்கும் முருகன் கோயில் அருகில் வந்ததும் வீட்டுவிலக்காக இருக்கும் கலம்-தொடா மகளிர் விலகி நின்று வழிபடுவது போல் ஒதுங்கி இடம் கொடுக்கிறதுகரந்தை History in Purananuru 298

நெடுமொழி.

ஆலியார் பாடியது.

வேந்தே
இவனைப் பார்த்தால் எனக்கே கலக்கமாக இருக்கிறது
தானே கள்ளை எடுத்துப் பருகுகிறான்
இன்னான் = இனியவன், இன்னாதவன்
இனியவன் போலவும் காணப்படுகிறான்
இன்னாதவன் போலவும் காடப்படுகிறான்
வாயை மடித்துக்கொண்டு முழங்குகிறான்
"கோட்டையை முற்றுகை இட நீ முந்திச் செல்" - என்று இவன் வாயிலிருந்து சொற்கள் வரவல்லை
தானே முந்திக்கொண்டு கோட்டையைத் தாக்கச் செல்கிறான்.வெட்சி History in Purananuru 297

உண்டாட்டு.

ஆசிரியர் பெயர் அழிந்துபோயிற்று 

இலை மலிந்த நீரில் கிடப்பதை எருமை விரும்பும்
அந்த எருமையின் கொம்பு போலப் பயறு பிரிந்த கோது முறுக்கிக்கொண்டிருக்கும்
அந்தப் பயிற்றங் கோதுகளைகளைத் தின்றுவிட்டு கன்றுடன் பசுக்கள் படுத்திருக்கும்
இப்படிப் பசுக்கள் படுத்திருக்கும் ஊர் இப்போது இவனுக்கு வேண்டாம்
வெட்சிப் போர் வேண்டாம் 

இவன் மார்பில் கூர்மையான வேல் பாய்ந்திருக்கிறது
மடலுடன் பனைமரம் நிற்பது போல நிற்கிறான்
விழுப்புண்ணுடன் காணப்படுகிறான்
பனை மர நாரில் வடிகட்டி அரிக்கப்பட்ட நறவுக் கள் கொடுத்து இவனை வாழ்த்துங்கள்

கம்புள் கோழி முட்டை இட்டிருக்கும் இலைகள் மலிந்த காட்டைக் கொடுத்து மகிழுங்கள்
முட்டையையும் கோழியையும் தின்று இவன் விழுப்புண் ஆறட்டும்Saturday, 28 July 2018

வாகை History in Purananuru 296

ஏறாண் முல்லை

வெள்ளைமாளர் பாடியது.

விழுப்புண்ணை ஆற்றிக்கொண்டிருப்பவர் வீடுகளில் வேப்பிலை செருகப்பட்டிருந்தது. கடுகெண்ணெய் ஊற்றிப் புகை எழுப்பிக்கொண்டிருந்தனர். எங்கும் ‘கல்’ என்னும் அமைதி.

அங்கே ஒரு தேர் வந்தது
அது நெடுந்தகை ஒருவனின் தேர்
வேந்தன் அவன்மீது சினந்து பாய்வானோ
பாயமாட்டான்
அந்த  நெடுந்தகை வெற்றி வீரன் - ஏறாண் - ஏறு போன்ற ஆண்மகன் தும்பை History in Purananuru 295

வாடு முலை ஊறிச் சுரந்தன 
உவகைக் கலுழ்ச்சி

ஒளவையார் பாடியது.

அவள் அந்த விடலையின் தாய்

கட்டூர் என்பது போருக்கெனக் கட்டப்பட்ட ஊர்
கட்டூரில் போர்
வாயை மடித்துக்கொண்டு தாக்கிப் போரிட்டுக்கொண்டனர்
வேலை மாறி மாறி வீசிக்கொண்டனர்
அதனைக் கவசம் அணிந்த மார்பில் வாங்கிக்கொண்டனர்

அங்கே ஒருவன்
திரும்பி ஓடாத பூட்கை கொண்ட விடலை அவன்
அவன் தன் முன்னே வருகின்ற படையைப் பிளந்துகொண்டு முன்னேறினான்
ஆனால், இடையில் இருக்கும் போர்க்காட்டில் மாட்டிக்கொண்டான்
வெட்டுப் பட்டுச் சிதைந்துபோனான்
துண்டு துண்டாக ஆக்கப்பட்டுக் கிடந்தான்

அவன் தாய் போர்க்களம் சென்று பார்த்தாள்
சிதைந்து வேறாகிய மாண்புடையாளனைப் பார்த்தாள்
வாடிக் கிடந்த அவளது முலைகள் அவனுக்குப் பால் ஊட்டியதை நினைத்தாள்
அப்போது அவள் முலையில் பால் சுரப்பெடுத்தது
அது வீரப்பால்தும்பை History in Purananuru 294

தானைமறம்

பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

அரசே

நீ மதியம் போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் இருக்கிறாய் 
கூடாரம் அடித்த பாசறையில் இருக்கிறாய் 
கடல் போன்ற படையுடன் இருக்கிறாய் 

நின் கேள்வன் - நண்பன்
போர்க்களத்தில் நின்றான்
அவனது இறைவனாகிய உன் பெயரையும், தன் பெயரையும் சொல்லிக்கொண்டு நின்றான்
"நாள் முறையைத் தடுத்து முந்திக்கொண்டு வந்திருப்பவர்களே
என் முன் வாருங்கள்" - என்று கூறினான் 

பாம்பு உமிழ்ந்த மணியின் முன் யாராவது செல்வார்களா
அது போல் அவன் முன் யாரும் செல்லவில்லைகாஞ்சி History in Purananuru 293

பூக்கோட் காஞ்சி

நொச்சி நியமங் கிழார் பாடியது.

அவள் பூக்காரி - பூவை விலைக்கு விற்கும் பெண் - பூவை வாங்குபவர்க்கு தன்னைத் தரும் பெண் (நினைவுகூர்க - மாதவி)

என்னைக் காட்டிலும் பேரழகி
தன் அழகனை இழந்து பிறர் மனைக்குச் செல்வாளா
தன் மனைக்கு அன்றோ பூ வாங்குபவன் வரவேண்டும்

திரண்டு வரும் படைக்கு அஞ்சாதவன் இந்த யானை-வீரன்
பகைமன்னர் சிற்றூர் குறும்புகளைக் கைப்பற்றத் தண்ணுமை முழக்கினான்
இந்த முழக்கத்தைக் கேட்டு நாணம் கொள்பவர்களுக்காக இரக்கம் கொள்வானா


இவள் பூ விற்பவள் தான்
பூக்காரி தான்
பூ விலைப் பெண்டு அல்லள் 

வஞ்சி History in Purananuru 292

பெருஞ்சோற்று நிலை

விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.

நான் வேந்தருக்குக் கள் ஊற்றித் தருபவன்
வேந்தர்க்குத் தரவேண்டிய நறவக் கள்ளை இவனுக்கு முதலில் தந்தேன்
இவன் "வேண்டாம்" என்று தடுத்துவிட்டு வாளைக் கையில் பற்றிக்கொண்டு நிற்கிறான்
அரசே
இவன்மீது சினம் கொள்ள வேண்டாம்
போர்களத்தில் "என் முறை வரட்டும்" என்று காத்திருக்க மாட்டான்
வாய் பேசாமல் முன்னே எழுந்து சென்று எதிரிப் படையை முறியடிப்பான்
இத்தகைய ஆண்-தகை இவன்கரந்தை History in Purananuru 291

கரந்தை - வேத்தியல்

நெடுங்கழுத்துப் பரணர் பாடியது.

சிறுவர்களே
துடி முழக்குபவர்களே
பாடும் மகளிரே

இந்த மாயோன் ஆனிரைகளை மீட்டுத் தந்துவிட்டுச் சாக விரும்பியவன்
அவ்வாறே மீட்டுத் தந்த பின்னர் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டுக் கிடக்கிறான்

இவனைச் சூழ்ந்து நின்று இவன் புகழைப் பாடுங்கள்
நானும் விளரிப் பண் பாடி நரி இவனைத் தீண்டாதவாறு பார்த்துக்கொள்கிறேன்
என்னைப் போல மற்றவர்களும் செயல்படுங்கள்

வேந்தன் இவனுக்குத் தன் மணிமாலையை அணிவித்திருக்கிறான்
இவன் கழுத்திலிருந்த ஒற்றைக்கல் மாலையைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டு இவனைப் பெருமைப்படுத்தி இருக்கிறான்கரந்தை History in Purananuru 290

கரந்தை - குடிநிலை உரைத்தல்.
ஒளவையார் பாடியது.

இயல் தேர்க் குருசல்
தேரில் வரும் மன்ன
பெருமானே
கள்ளை இவனுக்குக் கொடுத்த பின்னர் நீ உண்ணுவாயாக

இரும்புத் தச்சன் குறட்டை - சம்பட்டியை - எடுத்து அடிக்கும்போது தாங்கும் பணைக்கல் போல இவன் தந்தையும் அவனுடைய தந்தையும்  உன் தந்தைக்கு இடர் வரும்போது எதிர்த்து நின்று தாங்கிக்கொண்டு போரிட்டனர்

மழை பொழியும்போது நனையாமல் தடுக்கும் பனையோலை போல இவன் உன்னைத் தாக்க வரும் பகைவர்களிடமிருந்து பாதுகாப்பான்


பனை மட்டை வீடு 

பூக்கோள் History in Purananuru 289

திணை ...............; துறை ................முல்லை.
கழாத்தலையார் பாடியது.

இன்று பூக்கோள் நாள் என்று சொல்லி முரசினை இழிசினன் முழக்கினான்
பூக்கோள் என்பது பகை மன்னனின் பூமியைக் கைப்பற்றுவது

வயலில் ஈரம்
உழவனிடம் பல எருதுகள் இருந்தன
அவற்றுள் ஏர் பூட்ட உதவும் நல்ல எருது எது என்று உழவன் ஆராய்ந்தான்

அதுபோல அரசன் தன்னிடம் இருக்கும்  வீரர்களில் யாரிடம் போரை ஒப்படைப்பது என்று ஆராய்ந்தான்
மூதிலாளன் ஒருவனைத் தெரிவு செய்தான்
அவனுக்குப் பொன்மணிகள் கொண்ட மண்டையை (பாத்திரத்தை) பரிசாகக் கொடுத்தான்

இந்தச் செய்தியையையும் சொல்லி இழிசினன் முரசினை முழக்கினான் சிதைந்த பாடல் - தும்பை History in Purananuru 288

தும்பை - மூதில் முல்லை

கழாத்தலையார் பாடியது.

போரில் இரண்டு யானைகள் மோதும்போது வென்று மடிந்த யானையின் தோலை உரித்துப் பதப்படுத்தாமல் பச்சையாகவே போர்த்தி அரசனுக்கு முரசினைச் செய்வது வழக்கம் 

அப்படிச் செய்யப்பட்ட முரசம் முழங்கிற்று
போரில், மார்பில் வேல் பாய்ந்த நிலையில், குருதி வெள்ளத்தில்  அந்த வீரன் கிடந்தான்
அவனைப் பருந்துகள் தழுவிக்கொண்டிருந்தனகரந்தை History in Purananuru 287

கரந்தை - நீண்மொழி

சாத்தந்தையார் பாடியது.

ஊழிக் காலத்தில் பெய்யும் மழைபோல் உடலில் அம்பு பாய்ந்தாலும்
வயலில் கெண்டை மீன்கள் பிறழ்வது போல் வேல்கள் புறண்டாலும்
அரசன் யானை தந்தத்தால் குத்தினாலும்
ஆனிரை மீட்கும் போர்க்களத்திலிருந்து திரும்பி ஓடாத பீடுடையாளன் அவன்

போர் வெற்றிக்குப் பின்னர் அவனுக்கு அரசன் ஊர் வழங்குவான்.
பொய்கையில் வாளைமீன் துள்ளும்போது நெல் சேமித்து வைத்திருக்கும் குதிர்க்கூட்டில் மோதித் திரும்பி விழும் நீர்வளம் மிக்க ஊர்களை வழங்குவான்

இப்படி அரசன் வழங்கும் ஊர்களை இனி அவனால் எப்படிப் பெறமுடியும்
அவன்தான் வானுலகில் உள்ள மகளிர் இன்பத்தைத் துய்க்கச் சென்றுவிட்டானே

புது வேந்தன் படை வருவதைப் பார்த்தாலே அவன் இல்லை என்று தெரியவில்லையாகரந்தை History in Purananuru 286

கரந்தை - வேத்தியல்

ஒளவையார் பாடியது.

இளைஞர்கள் பலர் இருக்கின்றனர்
வெள்ளாட்டுக் கழுத்தில் செச்சை (தாடி) இருப்பதுபோல் தாடியைத் தொங்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர்
என் சிறுவன் ஆனிரை மீட்கும் கரந்தைப் போரில் தன் மண்டையை (தலையை) முதலில் நீட்டினான்

விளைவு

இறந்த பிறரைக் கால் இல்லாத கட்டிலில் கிடத்துவர்,
வெள்ளைத் துணி போர்த்துவர்

இப்படி என் சிறுவன் உடம்பைச் செய்ய முடியவில்லையே
போரிட்ட அவன் உடம்பைக்கூடப் பார்க்க முடியவில்லையே 


செச்சை இருக்கும் வெள்யாடு - வெள்ளாடு

வாகை History in Purananuru 285

வாகை - ...............முல்லை - வல்லாண் முல்லை ஆகலாம்

அரிசில் கிழார் பாடியது.

போர்ப் பாசறையில்  இருப்பவர்களே கேளுங்கள்

துடி முழக்குபவன் கையில் வேல் வைத்திருந்தான்
யாழ் இசைக்கும் பாணன் கையில் தோல்-கவசம் வைத்திருந்தான்.
இவர்கள் வேந்தனுக்குத் தொழில் செய்பவர்கள்
போரில் மாண்ட செம்மல் பெருந்தகையின் சுற்றத்தார்
இவர்கள் வைத்திருந்த வேலும் தோலும் யாருடையவை
போரில் மாண்ட செம்மல் அணிந்திருந்தவை

செம்மல் குருதி வெள்ளத்தில் கிடந்தான்
பகைவன் வேல் அவன் மார்பில் பாய்ந்து கிடந்தது
அவன் காலில் அணிந்திருந்த வீரக்கழலில் அவன் உடம்பிலிருந்த கறித் துண்டுகள் கிடந்தன
செம்மல் நிலத்தில் கிடந்தான்

கிடந்ததைக் குருசில் அரசனுக்குத் தெரிவித்தனர் 
குருசில் நேரில் சென்று பார்த்தான்
குருசில் செம்மலை வணங்கினான்

செம்மல் வறுமையில் வாடும் சுற்றத்தின் தலைவன்
குருசில் அவன் சுற்றத்தார்க்கு ஓர் ஊரை வழங்கினான் 
அது கரம்பைப் புல்வெளி நிறைந்த ஊர்
அதனால் அவனது சுற்றம் தன் வறுமையை போக்கிக்கொண்டு வாழலாயிற்று Friday, 27 July 2018

தும்பை History in Purananuru 284

தும்பை - பாண் பாட்டு

ஓரம்போகியார் பாடியது.

அவன் மூதில் மகன் - மூதிலாளன் 
அவன் வேந்தனுக்காகத் தூது சென்றான்
அப்போது நூலில் கோத்த முத்துமாலை அணிந்திருந்தான்
தனியே சென்றான்
அப்போது அவன் போரிடவேண்டியதாயிற்று
எதிர்த்தவனைப் பிணமாக்கினான்
தன் வாளால் அவன் பல்லைப் பிடுங்கிக்கொண்டு ஏளனச் சிரிப்பு சிரித்தான்சிதைந்த பாடல் - தும்பை - அழும்பிலன் History in Purananuru 283

தும்பை - பாண் பாட்டு
அடைநெடுங் கல்வியார் பாடியது.

குரலி மலர் பூத்திருக்கும் குளத்தைக் கலக்கி வாளைமீன் இரை தேடும் நீர்
முதலைகள் அங்கு சுழலும்
அழும்பிலன் அதன் அரசன்
வலம்புரி கோசர் இருக்கும் அரசவை அவனுடையது
அழும்பிலன் மார்பில் வேல் பாய்ந்தது
மகளிர் அவ்வூர் மணலில் தெற்றி விளையாடுவர்
அவன் தும்பைப் பூ சூடிப் போருக்குப் புறப்பட்டான்.
அவன் உயிர் இல்லை. மாண்டான்சிதைந்த பாடல் History in Purananuru 282

பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.

அவன் பெருஞ்செயல் புரிந்தவன்
எஃகு போல் உள்ளம் படைத்தவன்
உலகுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தவன்
அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்று வினவினால்,

எதிர்த்து வந்த படையைத் தடுத்து நிறுத்தியவன்
அப்போது அவன் உடம்பும் உயிரும் காணவில்லை
என்றாலும் எதிர்த்தவர் திரும்பி ஓடிவிட்டனர்

அவன் கேடயம் மட்டும் போர்க்களத்தில் கிடக்கிறது
புலவர்கள் போற்றிப் பாடும் வாயில் அவன் இருக்கிறான்காஞ்சி History in Purananuru 281

காஞ்சி - பேய்க்காஞ்சி - காஞ்சிப் பாடல் - இக்கால ஒப்பாரி

அரிசில் கிழார் பாடியது.

இனிய பழம் தரும் இரவம் என்னும் இருள் மர இலைகளையும் வேம்பந்தழையையும் சேர்த்து வீட்டில் செருகுவார்கள் 
யாழும் முழக்கும் கருவிகளும் இசைப்பர்
கைகளால் மென்மையாக வெண்சிறு கடுகு எண்ணெய் உடம்பில் தெளிப்பர்
மணி அடித்துக்கொண்டு காஞ்சிப் பண் பாடுவர்
வீட்டில் நறுமணப் புகை எழுப்புவர்

விழுப்புண் பட்ட ஒருவனை இப்படிப் பாதுகாக்கலாம் வருங்கள் என்று ஒருத்தி தன் தோழிமாரை அழக்கிறளாள்

போர்க்களத்தில் வேந்தனுக்கு நேரவிருந்த விழுப்புண்ணை நேராவண்ணம் தடுத்து தான் தாங்கிக்கொண்டவன் இந்த நெடுந்தகை


இருள் மரம்
இரவம்
தீங்கனி இரவம்

வேம்பு

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி