Saturday, 31 March 2018

குடக்கோட்டூர் மொக்கணீசுரர் Kongu-mandala-sathagam 24


கொங்கு மண்டல சதகம் 24

குடக்கோட்டூர் என்னும் ஊரில் சிவபக்தி கொண்ட செட்டியார் ஒருவர் வாழ்ந்துவந்தார்.
அவரைச் சிவநேசச் செட்டியார் என மக்கள் போற்றினர்.
ஒவ்வொரு நாளும் காலையில் நீராடிய பின்னர் சிவனைக் கும்பிட்ட பின்பே உணவு அருந்தும் பழக்கம் உள்ளவர் இவர்.
ஒருநாள் அவர் தம் வழக்கப்படி தன் மைத்துணன் இருக்கும் ஊர் ஆற்றில் நீராடிவிட்டு எழுந்து கரைக்கு வந்தார்.
கரைக்கு வந்ததும் இவ்வூரில் சிவன் கோயில் எங்கே உள்ளது என்று வினவினார்.
மைத்துணன் சூழ்ச்சிக்காரன்.
மொக்கணி என்பது குதிரைக்குக் கொள்ளு வைக்கும் பை.
அந்தப் பை ஒன்றில் மணலை நிரப்பிக் கவிழ்த்து மணலில் இலிங்கம் போல் தெரியுமாறு வைத்திருந்தான்.
அந்த மொக்கணியைக் காட்டி இதோ சிவன் என்று காட்டினான்.
சிவனேசச் செட்டியாரும் அதனை உள்ளன்போடு வழிபட்டார்.
“சிவன் வழிபாடு முடிந்ததா” – மைத்துணன் கேட்டான்.
“ஆயிற்று” – செட்டியார் கூறினார்.
“அது சிவலிங்கம் இல்லையே” – மைத்துணன் கூறினான்.
“ஆம், சிவலிங்கம்-தான்” – செட்டியார் தெரிவித்தார்.
ஊராருடன் சென்று மைத்துணன் மொக்கணியைத் தோண்டினான்.
மொக்கணி சிவலிங்கமாகவே மாறியிருந்தது.
தோண்டத் தோண்டச் சிவலிங்கத்தின் அடியைக் காணமுடியவில்லை.
இப்படிப்பட்ட குடக்கோட்டூர் மொக்கணி ஈசுவரர் இருக்குமிடம் இந்தக் கொங்குமண்டலம்.

ஏத்து சிவபத்தியான் ஒரு செட்டி முன் ஈசுரனைத்
தோய்த்து முழுகித் தொழவெழ அங்கொரு சூழ்ச்சி கற்றோன்
பூத்த வனக் குடக்கோட்டூரில் மொக்கணியைப் புதைக்க
வாய்த்த சிவலிங்கமானதுவும் கொங்கு மண்டலமே. 24

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


இடும்பன் Kongu-mandala-sathagam 23


இடும்பன் தூக்கும் காவடி
கொங்கு மண்டல சதகம் 23

பிரமனும் திருமாலும் காணமுடியாத உருவம் கொண்டவன் சிவன்.
இந்தச் சிவனுக்குக் குருவாக விளங்கியன் முருகன்.
முருகன் இருக்கும் பழநி மலையில் சிவமலையை இறக்கி வைத்தவன் இடும்பன்.
இந்த நிகழ்வு நடந்தது கொங்கு மண்டலம்.

முருகனை எதிர்த்து அழிந்தவன் சூரபன்மன்.
சூரபன்மன் குடும்பத்தாருக்குக் குருவாக விளங்கியவன் இடும்பன்.
சூரபன்மன் இறந்த பின்னர் இடும்பன் அகத்தியரிடம் அடைக்கலம் புகுந்தான்.
சிவமலை, சத்திமலை என்பன இரண்டு மலைகள்.
இரண்டையும் கொண்டுவந்தால் போகம், முத்தி இரண்டும் பெறலாம் – என்று இடும்பனிடம் அகத்தியர் தெரிவித்தார்.
இடும்பன் அந்த இரண்டு மலைகளையும் தியானித்துக்கொண்டு அவற்றைக் காவடியாகக் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தான்.
அந்த மலைகளின் காவலன் போல முருகன் தோன்றி எதிர்த்தான்.
முருகனுக்கும் இடும்பனுக்கும் போர்.
இடும்பன் மாண்டான்.
அவன் மனைவி இடும்பி முருகனை வேண்டினாள்.
முருகன் இடும்பனை உயிர்ப்பித்துத் தந்தான்.
இது நிகழ்ந்த பழநி இருக்குமிடம் கொங்குமண்டலம்.

அலை கொண்ட பாற்கடல் சற்ப சயனத்து அரி அயனும் 
தலை கொண்டு இரைஞ்சும் பாதாம்புயத்தாருக்குச் சற்குருவாய்
நிலை கொண்டு இருக்கும் செவ்வேளுக்கு இடும்பன் முன்ஈண்ட சிவ
மலை கொண்டு வந்ததும் வைகாவூர் சூழ் கொங்கு மண்டலமே. 23

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


பழநி Kongu-mandala-sathagam 22

பழநி \ சங்ககாலத்தில் பொதினி

கொங்கு மண்டல சதகம் 22

நாரதர் சிவன் கையில் ஒரு மாம்பழம் கொடுத்தார்.
மூத்த மகன் ஆனைமுகன் அதனை ஒரு வகையாக வாங்கிக்கொண்டார்.
இளைய மகன் முருகன் வந்து நின்ற இடம் பழநி.
இளைவனை அமைதி கொள்ளுமாறு சிவன் அருளிய இடம் இந்தப் பழநி.
இது இருக்குமிடம் கொங்குமண்டலம். (வையாபுரி நாடு \ வையாவிக்கோ நாடு)

தீத்தமிழ் மேனி சிவன்கையில லோர்கனி தேவர்மெச்சி
ஏத்திய நாரதர் நல்கக் கண்டே இபமாமுகத்து
மூத்தவன் கொள்ள இளையோனை ஈசன் முகந்திருத்தி
வாய்த்த பழநி என்றோதினதும் கொங்கு மண்டலமே. 22

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


துடியலூர் Kongu-mandala-sathagam 21

துடியலூர் சிவன் கோயில் 

கொங்கு மண்டல சதகம் 21

காட்டு வழியில் வரும் சுந்தரர் வழி தெரியாமல் திகைத்தார்.
துடிசை (துடியலூர்) அப்பரும் அம்மையும் வேடனாகவும், வேட்டுவிச்சியாகவும் வந்து வழிகாட்டினர்.
சுந்தரர் துடிசை வந்தார்.
சிவனை வழிபட்டார்.
“உணவு உண்டு செல்க” என வாக்கு வந்தது.
சிவனடியார் காட்டில் இருந்த முருங்கை இலைகளைப் பறித்து நெய்யில் சமைத்து வழங்கினர்.
இப்படிப்பட்ட துடிசை இருக்கும் இடம் கொங்குமண்டலம்.

வேட்டுவ வேடம் எடுத்து வழித்துணை மேவியளங்
காட்டு முருங்கை இலைகாய் நெய் பெய்து கறி சமைத்துப்
பாட்டு முழக்கு வன்தொண்டருக்கு அன்னம் படைத்து நரை
மாட்டுதிப் போல் துடிசைப்பதியும் கொங்கு மண்டலமே. 21

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


அகத்திய முனி Kongu-mandala-sathagam 20

அகத்தியர்

கொங்கு மண்டல சதகம் 20

வாதாபி, வில்லவன் என்று இரண்டு அண்ணன் தம்பியர் இருந்தனர்.
அகத்தியர் தென்திசை நோக்கி வரும்போது இவர்கள் இருவரும் வரவேற்றனர்.
வழக்கம் போல, வாதாபி ஆட்டுக் கடாவாக மாறினான்.
வில்லவன் அந்த ஆட்டுக்கடாவை வெட்டிக் கறி சமைத்து அகத்தியருக்கு விருந்து படைத்தான்.
அகத்தியர் உண்டார்.

முன்பெல்லாம் பலமுறை பலருக்கு இவ்வாறு உணவு படைத்திருக்கிறான்.
அவர்கள் உண்டதும் “வாதாபி வா” என்று வில்லவன் அழைப்பான்.
வாதாபி மீண்டும் உயிர் பெற்று உண்டவர் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடுவான்.
வயிறு கிழிகட்டவரை வாதாபியும்,வில்லவனும் உண்டுவிடுவர்.

அகத்தியர் உண்ட ஆட்டுக்கடா ஆன வாதாபியை வில்லவன் அழைத்தான்.
அகத்தியர் வில்லவனின் வஞ்சகத்தைத் தெரிந்துகொண்டு தன் வயிற்றைத் தடவினார்.
வாதாபி அகத்தியர் வயிற்றில் செரிமானம் ஆகிவிட்டான்.

வாதாபி வராதது கண்ட வில்லவன் அகத்தியரை அடித்து உண்ண நெருங்கினான். அகத்தியர் அறுகம்புல் ஒன்றைக் கிள்ளி அவன்மேல் எறிந்தார்.
வில்லவன் மாண்டான்.

இவ்வாறு இருவரைக் கொன்ற பாவத்தைத் துடியலூர் வந்து சிவபெருமானைத் தொழுது அகத்தியர் போக்கிக்கொண்டார்.
இந்தத் துடியலூர் இருக்கும் இடம் கொங்குமண்டலம் ஆகும்.  

வாதாபி வில்லவனான துணைவர் மடிய விசை
தீதாறவே கும்பசம்பவன் அன்று சிவக்குறிகண்
டேதாளில் அர்ச்சனை செய்து தொடர்பவம் ஏகமகிழ்
மாதா மதர்நிறை சூழ்தானமும் கொங்கு மண்டலமே. 20

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


நந்திக்கு மறுமுகம் Kongu-mandala-sathagam 19


கொங்கு மண்டல சதகம் 19

சுந்தரர்க்குக் கொடுக்கப் பொன் இல்லையே என்று பட்டீசுரர் பள்ளமாக மாறி ஒளிந்துகொண்டார்.
சிவபெருமான் எங்கே என்று சுந்தரர் நந்தியை வினவினார்.
நந்தி பள்ளமாக இருப்பதைக் காட்டினார்.
சுந்தரர் பள்ளத்தை மண்வெட்டியால் வெட்டினார்.
அப்போது நந்தியின் தலை வெட்டுப்பட்டது.
நந்தி உண்மை சொன்னதால் அவர் முகம் மீண்டும் வளர்ந்தது.
இப்படி வளர்ந்த இடம் கொண்டது கொங்குமண்டலம்.

நறை வயல்வாய்ச் சுந்தரர்க் கொளித்தார் அதை நந்தி சொலப்
பிறைமுடி வேணியர் பட்டீச்சுரர் பெரு மண்வெட்டியால்
குறைபட வெட்டி விழுமுக நந்தி செல் கொள்கையினால்
மறுமுகம் மீண்டு வளர்ந்ததுவும் கொங்கு மண்டலமே. 19

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


பட்டிப்பெருமான் பள்ளம் Kongu-mandala-sathagam 18

போரூர்

கொங்கு மண்டல சதகம் 18

பேரூர் சிவன் பட்டிப்பெருமான்.
வாள் போன்ற விழியினை உடையவள் திருவாரூர் பரவையார்.
அவள் கலவி வலையில் பட்டுக்கிடப்பவர் சுந்தரர்.
அவருக்குப் கொடுக்கப் பொன் இல்லையே என்று தான் வாளைமீன் பேயும் பள்ளமாக மாறிக் கிடந்தார்.
இப்படிப்பட்ட பட்டிப்பெருமான் பள்ளம் இருப்பது கொங்குமண்டலம்.

கடுவாள் விழியினை ஆரூர்ப் பரவை கலவிவலைப்
படுவார் தமிழ்ச் சுந்தரர் பாடற்கு ஈயப் பரிசின்மையால்
நெடுவாளைப் பாயும் வயலூடு போகி நெடிய பள்ள
வடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன் கொங்கு மண்டலமே. 18

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


பேரூர் Kongu-mandala-sathagam 17


கொங்கு மண்டல சதகம் 17

தென்பேரூர் மேலைச்சிதம்பரம் என்றும் போற்றப்படும்.
இங்குக் குடிகொண்டுள்ள மரகத நிறப் பார்வதி.
நாகம் அணிந்த பட்டீசுவரர்.
இவர்களின் பாதத்தை நம்பித் தொழச்செல்லாத முனிவர்கள் இல்லை.
இந்தப் பேரூர் இருப்பது கொங்கு மண்டலம்.  

பாகான சொல்லி தென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா
நாகாபரணர் பட்டீசுரர் பாத்ததை நம்பி எங்கும்
போகாத கோமுனி பட்டிமுனிக்குப் பொது நடஞ்செய்
வாகான மேலைச் சிதம்பரமும் கொங்கு மண்டலமே. 17

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


அவிநாசி Kongu-mandala-sathagam 16

திருப்புக்கொளியூர் \ அவிநாசி

கொங்கு மண்டல சதகம் 16

மென்மையில் பூவை வென்ற பாதம் கொண்டவள் ஆரூர் பரவையார்.
அவளது போகம் கொண்டவன் சுந்தரன்.
இவன் பா வென்றவன்.
இவன் முதலை விழுங்கிய பிள்ளையைத் தமிழ்ப்பா சிவன்மீது பாடி அதன் வாயிலிருந்து மீட்டவன்.
இப்படி மீட்ட ஊர் அவிநாசி. (ஆறை நாடு)
இது இருப்பது கொங்கு மண்டலம்.  

பூ வென்ற சீர் அடியாரூர்ப் பரவை தன் போகம் கொள்ளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர் குளத்தில்
ஆவென்ற வாயின் முதலை கொள் பிள்ளையை அன்று கொண்டு
வாவென்று அழைத்த அவிநாசி சூழ் கொங்கு மண்டலமே.  16

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)Friday, 30 March 2018

கூந்தல் கொய்தல் Purananuru - 25


கணவனை இழந்த மகளிர் மொட்டை அடித்துக்கொள்வர்

குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. (பாடல்)


புறநானூறு - 25
அரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் 
புலவர் - கல்லாடனார்   Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி