Wednesday, 28 February 2018

கம்பராமாயணம் பாலகாண்டம் கைக்கிளைப் படலம் KambaRamayanam 1-11

கம்பராமாயணம் பாலகாண்டம் கைக்கிளைப் படலம் KambaRamayanam 1-11
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 11. கைக்கிளைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் 164 KambaRamayanam 164


மிகைப் பாடல்கள்

அரசனுக்குப் பிள்ளைகளைக் கொடுத்த தாயை நோக்கி வணங்கிய ரசிகன் “இன்று என்னை அரசன் வேள்விப் பலிக்குக் கொடுக்கிறயா” என வினவினான். தாய் மகனைத் தழுவினாள். 39-1
சிவன், மால், அயன் மூவரும் போற்றியதோடு, வதிட்டனும் (வசிட்டன்) வந்து “என்னையே விஞ்சி நின்ற அந்தணன்” என்று விசுவாமித்திரனை வாழ்த்தினான். 53-1
காதலால் இராமன் ஒருத்தியை நினைத்தான். பெண் அவனை மறுத்துக் கண் உறங்குகிறாள். இவனோ தனிமையில் இருக்கிறானே என்று அவனை விட்டு நீங்காமல் இரவு என்னும் பெண் அவனுடனேயே இருந்துகொண்டிருந்தாள். 61-1

நின்றனன் அரசன் என்றான்; நீ எனைக் கொண்டு போகை
நன்று என மொழிந்து நின்றான், நல்கிய தாயை நோக்கி,
'இன்று எனைக் கொடுத்தியோ?' என்று இறைஞ்சினன் கசிந்து நின்றான்;
தன் துணை மார்பில் சேர்த்துத் தழுவலும், அவனை நோக்கி.     39-1

'என்று கூறி, இமையவர் தங்கள் முன்
வன் தபோத வதிட்டன் வந்து, என்னையே,
"நின்ற அந்தணனே" என நேர்ந்தவன்,
வென்றி வெந் திறல் தேவர் வியப்புற.               53-1

காதலால் ஒருத்தியை நினைப்ப, கண் துயில்
மாதராள் அவன் திறம் மறுப்ப, கங்குல் மான்,
'ஏதிலான் தமியன்' என்று, 'ஏகலேன்' என,
ஆதலால் இருந்தனன்; அளியன் என் செய்வான்?   61-1

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 11. கைக்கிளைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்


கம்பராமாயணம் 163 KambaRamayanam 163


சனகன் வேள்விச் சாலைக்கு மூவரும் செல்லல்

மறை, கின்னரர் எனும் யாழோர் ஆகியோர்ரின் இசையொலி கேட்டது. விண்ணவர், முனிவர், வேதியர் கைகூப்பி எழுகதிரைத் தொழுதனர். கடல் மண்ணில் மோதும் முழவு முழங்க, கதிரவன் ஒளி நடனமாடியது. சிவன் தன் செஞ்சடையை விரித்தது போல அது காணப்பட்டது. 71
கடலை விட்டு எழுந்த கதிரவன் வயிர-வில் போலத் தோன்றும்படி மேகங்களில் பாய்ந்து ஒளி என்னும் சக்கரத்தை உருட்டி ஆயிரம் மணிவிளக்க வாய்வளை உடைய பாம்பின்மீது உறங்கும் இராமன் காலடியை வணங்கினான். அப்போதும் இராமன் படுக்கைமீது உறங்காமல் உறங்கிக்கொண்டிருந்தான். 72
பின்னர் ஊழிக்காலமே போய்விட்டது போன்ற உணர்வுடன் இராமன் உறக்கத்திலிருந்து எழும் யானை போல் எழுந்தான். காலைக்கடமைகளை முடித்துக்கொண்டு விசுவாமித்திர முனிவனைப் பணிந்தான். தம்பியையும் அழைத்துக்கொண்டு முனிவருடன் சனகன் வேள்விச் சாலைக்குச் சென்றான். 73

எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும், கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தாலென விரிந்த - கதிர்கள் எல்லாம்.    71

கொல் ஆழி நீத்து, அங்கு ஓர் குனி வயிரச் சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழி-நெடுங் கடலுள் துயில்கின்றானே          72

ஊழி பெயர்ந்தெனக் கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர, உறக்கம் நீத்த
குழி யானையின் எழுந்து, தொல் நியமத் துறை முடித்து, சுருதி அன்ன
வாழி மாதவற் பணிந்து, மனக்கு இனிய தம்பியொடும், வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலித் தார்ச் சனகன் பெரு வேள்விச் சாலை சார்ந்தான்.              73

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 11. கைக்கிளைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்


கம்பராமாயணம் 162 KambaRamayanam 162


கதிரவன் வரவு

இரவு என்னும் அரசன் விரித்துக்கொண்டிருந்த நிலா என்னும் குடை மேலைத் திசையில் மறைந்தது. 66
பூசிய சந்தனக் கலவையை மகளிர் நீக்கியது போல நிலவொளி மறைந்தது. 67
இராமன் இவ்வாறு வருந்திக்கொண்டிருக்கையில் சிவன் யானையின் தோலை உரித்தது போலக் கதிரவன் தோன்றினான். 68
மறை ஓதுவார் நீரை அள்ளி ஊற்றினர். திசை யானைகளுக்குச் சிந்தூரம் அப்பியது போல, செவ்வானம் விரிந்தது. 69
கொழுநர் வரவு கண்டு மகிழும் கற்புடைய பெண் போல, கதிரவன் வரத் தாமரை மலரக் குளமே பூத்தது. 70

கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும், மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதற் கோது அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும், ஆழ்ந்தது-திங்களே.      66

வீசுகின்ற நிலாச் சுடர் வீந்ததால்-
ஈசன் ஆம் மதி ஏகலும், சோகத்தால்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே.     67

ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து, தளரும் ஏல்வை,
சிதையும் மனத்து இடருடைய செங்கமல முகம் மலர, செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவைப் போர்வை போர்த்த
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியேபோல், உதயம் செய்தான்.             68

விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி
பசை ஆக, மறையவர் கைந் நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய,
அசையாத நெடு வரையின் முகடுதொறும் இளங் கதிர் சென்று அளைந்து, வெய்யோன்,
திசை ஆளும் மத கரியைச் சிந்தூரம் அப்பியபோல் சிவந்த மாதோ!     69

பண்டு வரும் குறி பகர்ந்து, பாசறையின், பொருள் வயினின், பிரிந்து போன
வண்டு தொடர் நறுந் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணித் தேரோடும்,
கண்டு மனம் களி சிறப்ப, ஒளி சிறந்து, மெலிவு அகலும் கற்பினார்போல்,
புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்து பொலிந்தன-பூம் பொய்கை எல்லாம்.          70

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 11. கைக்கிளைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி