Wednesday, 31 January 2018

கம்பராமாயணம் 102 KambaRamayanam 102

குறளன் | வாமணன்
மூன்று காலடி மண்

காசிபன் என்னும் வாலறிவன் (முனிவன்) அதிதி என்பவளைக் கூடிப் பெற்ற மகன் வாமணன். இவன் நீல நிறம் கொண்டவன். (திருமால்) ஆலம் விதை போல் சிறிய குறளனாக இருந்தான். 11
பூணூல், உச்சிக்குடுமி கொண்ட தோற்றத்துடன் அனைத்து வித்தைகளையும் கற்ற கையனாக விளங்கிய இவன் அற்புதமானவன். அற்புதமானவர்கள் மட்டுமே அறியும் ஓர் உடம்புடன் மாவலியிடம் சென்றான். 12
வாமணன் வந்தது கண்டு மாவலி எதிர் சென்று வரவேற்றான். “உன்னைக் காட்டிலும் சிறந்த அந்தணர் இல்லை; என்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை!” என்று வாமணனிடம் கூறினான். 13
அதனைக் கேட்ட வாமணன் “நீண்ட கையை உடையவனே! உன்னிடம் ஏதாவது ஒன்றை விரும்பி வந்தவர் பெறாமல் திரும்பியது இல்லை” என்றான். 14
மகிழ்ச்சி கொண்ட மாவலி “என்ன செய்யவேண்டும்” என வினவினான். “மூன்று அடி மண் இருக்குமானால் தருக” என்றான் வாமணன். உடனே வாமணன் “தந்தேன்” என்றான். 15

'காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான்.   11

'முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன்,-அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான்.           12

'அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம்
வென்றவன், முந்தி வியந்து எதிர் கொண்டான்;
"நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
எந்தனின் உய்ந்தவர் யார் உளர்?" என்றான்.  13

'ஆண்தகை அவ் உரை கூற, அறிந்தோன்,
"வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி,
நீண்ட கையாய்! இனி, நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்" என்றான்.        14

'சிந்தை உவந்து எதிர், "என் செய்?" என்றான்;
அந்தணன், "மூஅடி மண் அருள், உண்டேல்;
வெந் திறலாய்! இது வேண்டும்" எனா முன்,
"தந்தனென்" என்றனன்; வெள்ளி, தடுத்தான்:             15

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்


கம்பராமாயணம் 101 KambaRamayanam 101

மாவலி

கணவன் போல் தெய்வம் வேறு இல்லை என்று கருதும் பெண் போல இந்த ஆறு தூய்மையானது. இங்குள்ள சோலை திருமால் அமர்ந்து தவம் செய்த இடம் – என்று விசுவாமித்திரன் இரானுக்குக் கூறினான். 6
இங்கு இருந்துகொண்டு திருமால் நூறு ஊழி ஆண்டுகள் யோகம் செய்தார். 7
அக்காலத்தில் மாவலி என்னும் மன்னன் வானகத்தையும் மண்ணகத்தையும் தனதாக்கிக்கொண்டான். 8
வானவர் வேள்வி செய்ய முடியாமல் மாவலி தடுத்தான். 9
வானவர் திருமாலை வணங்கி மாவலியின் கொடுமைக்குத் தீர்வு காணுமாறு வேண்டினர். திருமால் அதனைச் செய்ய ஒப்புக்கொண்டான். 10

'தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை' என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச்
செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே           6

'"பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான்
பேர்" என்ப; "அவன் செய் மாயப் பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார்
ஆர்?" என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்;
ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால்.                7

'ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்;               8

'செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்;         9

'ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
"தீயவன் வெந் தொழில் தீர்" என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான்.        10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்


கம்பராமாயணம் 100 KambaRamayanam 100

படைக்கலன் அருளியது

மக்களின் வறுமை நோயைப் போக்கும் சடையப்ப வள்ளலின் சொல் போல் பயன் தரும் படைக்கருவிகளை விசுவாமித்திரன் இராமனுக்கு வழங்கினான். 1
ஆறிய அறிவினை உடைய முனிவன் அளித்தவுடன் தேவர்களின் படைக்கருவிகள் எல்லாம் இராமனுக்கு வந்து சேர்ந்தன. செய்த நல்வினைப் பயன் மறுபிறவியில் வந்து சேர்வது போல வந்து சேர்ந்தன. 2
இராமன் ஏவியதைச் செய்து நிற்கும் இலக்குவன் போல தேவர் படை இராமனுக்குப் பணியாற்றியது. 3
இரண்டு காவத தூரம் அவர்கள் சென்றனர். அங்கு ஓர் இரைச்சல் கேட்டது. இந்த இரைச்சல் யாது என இராமன் முனிவனை வினவினான். 4
என் முன்னாள் மனைவி இங்கு ஆறாக மாறி ஒலிக்கிறாள் என்றார் முனிவர். பின்னர் அங்கு இருந்த சோலையை “இது யாது” என்று இராமன் வினவினான். 5

விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன்,
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே.   1

ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே.             2

'மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும், இளையவன் போல' என்று
தேவர்தம் படைகள் செப்ப, 'செவ்விது' என்று அவனும் நேர,
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே.         3

இனையன நிகழ்ந்த பின்னர், காவதம் இரண்டு சென்றார்;
அனையவர் கேட்க, ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகித் தோன்ற,
'முனைவ! ஈது யாவது?' என்று, முன்னவன் வினவ, பின்னர்,
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான்:               4

'எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள்' என்று,
அம் முனி புகல, கேளா, அதிசயம் மிகவும் தோன்ற,
செம்மலும் இளைய கோவும், சிறிது இடம் தீர்ந்த பின்னர்,
'மைம் மலி பொழில் யாது?' என்ன, மா தவன் கூறலுற்றான்:       5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி