Friday, 1 September 2017

திருமுருகாற்றுப்படை பாடல் TiruMurukatruppadai

திருமுருகு ஆற்றுப்படை
(குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது)

கருத்துப் பகுப்பு செய்யப்பட்டது

1
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு   
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,
2
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை,         5
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
3
கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,   
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,   
தலைப் பெயல் தலைஇய தண் நறுங் கானத்து,   
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து    10
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்
4
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்  
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி,
கணைக் கால்வாங்கிய நுசுப்பின்பணைத் தோள்,
கோபத்து அன்ன தோயாப் பூந் துகில்,   15
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்
5
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர்இழை
6
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி  
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச்  20
செங் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு,   
பைந் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி,
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து,   
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
7
மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து, 25
துவர முடித்த துகள் அறும் முச்சிப்   
பெருந் தண் சண்பகம் செரீஇகருந் தகட்டு 
உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி,
8
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு  
இணைப்புறு பிணையல் வளைஇதுணைத் தக 30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
9
நுண் பூண் ஆகம் திளைப்பதிண் காழ்
நறுங் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை,
தேம் கமழ் மருது இணர் கடுப்பகோங்கின் 
குவி முகிழ் இள முலைக் கொட்டிவிரி மலர் 35
வேங்கை நுண் தாது அப்பிகாண்வர
10
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா,
'கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி 
வாழிய பெரிது!என்று ஏத்திபலர் உடன்   
சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி   40
சூரர மகளிர் ஆடும் சோலை,
11
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து,  
சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள்  
பெருந் தண் கண்ணி மிலைந்த சென்னியன்
12
பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு,    45
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்
13
உலறிய கதுப்பின்பிறழ் பல் பேழ் வாய்,   
சுழல் விழிப் பசுங் கண்சூர்த்த நோக்கின்,  
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப்
பெரு முலை அலைக்கும் காதின்பிணர் மோட்டு, 50
உரு கெழு செலவின்அஞ்சுவரு பேய்மகள்
14
குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழி முடைக் கருந் தலை   
ஒண் தொடித் தடக் கையின் ஏந்திவெருவர
வென்று அடு விறற் களம் பாடிதோள் பெயரா,   55
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க 
15
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை,
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி,
அவுணர் நல் வலம் அடங்ககவிழ் இணர்  
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து, 60
எய்யா நல் இசைசெவ் வேல் சேஎய் 
16
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்,   
செலவு நீ நயந்தனை ஆயின்பல உடன்,   
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப,  65
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே:

17
செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி 
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க,  
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்,
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து, 70
மாடம் மலி மறுகின் கூடல் குடவயின்
18
இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த   
முள் தாள் தாமரைத் துஞ்சிவைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதிஎல் படக்   
கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர், 75
அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று,

19
வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர,
படு மணி இரட்டும் மருங்கின்கடு நடை,         80
கூற்றத் தன்ன மாற்று அரு மொய்ம்பின்,
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு
20
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப,         85
21
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங் குழை
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப,
22
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் 
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே:     90
23
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,
பல் கதிர் விரிந்தன்றுஒரு முகம்ஒரு முகம்,   
ஆர்வலர் ஏத்தஅமர்ந்து இனிது ஒழுகி,
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றேஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ   95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மேஒரு முகம் 
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,
திங்கள் போலத் திசை விளக்கும்மேஒரு முகம் 
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,   
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றேஒரு முகம் 100
குறவர் மட மகள்கொடி போல் நுசுப்பின்  
மடவரல்வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;
ஆங்குஅம் மூஇரு முகனும்முறை நவின்று ஒழுகலின் 
24
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்   
செம் பொறி வாங்கியமொய்ம்பின்சுடர் விடுபு, 105
வண் புகழ் நிறைந்துவசிந்து வாங்குநிமிர் தோள்:
25
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கைஉக்கம் சேர்த்தியது ஒரு கை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை,
அங்குசம் கடாவ ஒரு கைஇரு கை    110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்பஒரு கை
மார்பொடு விளங்கஒரு கை   
தாரொடு பொலியஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்பஒரு கை
பாடு இன் படு மணி இரட்டஒரு கை  115
நீல் நிற விசும்பின் மலி துளி பொழியஒரு கை 
வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி
26
அந்தரப் பல்லியம் கறங்கதிண் காழ் 
வயிர் எழுந்து இசைப்பவால் வளை ஞரல,  120
உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,   
விசும்பு ஆறு ஆக விரைசெலல் முன்னி,   
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே. அதாஅன்று,   125

27
சீரை தைஇய உடுக்கையர்சீரொடு
வலம் புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர்மானின்  
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் 
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்நன் பகல் 130
பல உடன் கழிந்த உண்டியர்இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர்யாவதும் 
கற்றோர் அறியா அறிவினர்கற்றோர்க்குத்  
தாம் வரம்பு ஆகிய தலைமையர்காமமொடு
கடுஞ் சினம் கடிந்த காட்சியர்இடும்பை 135
யாவதும் அறியா இயல்பினர்மேவரத்
துனி இல் காட்சி முனிவர்முன் புக   
28
புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை,
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து,  
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் 140
நல் யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென் மொழி மேவலர்இன் நரம்பு உளர   
நோய் இன்று இயன்ற யாக்கையர்மாவின் 
அவிர் தளிர் புரையும் மேனியர்அவிர்தொறும்   
பொன்னுரை கடுக்கும் திதலையர்இன் நகைப்  145
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்,   
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க:
29
கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று,   
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந் திறல்,
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ் சிறைப்  150
புள் அணி நீள் கொடிச் செல்வனும் வெள் ஏறு
30
வலம்வயின் உயரியபலர் புகழ் திணி தோள்,
உமை அமர்ந்து விளங்கும்இமையா முக் கண்,  
மூஎயில் முருக்கியமுரண் மிகு செல்வனும்
31
நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்துநூறு பல்  155
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து,
ஈர் இரண்டு ஏந்திய மருப்பின்எழில் நடை
தாழ் பெருந் தடக் கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக் கிளர் செல்வனும்
32
நாற் பெருந் தெய்வத்து நல் நகர் நிலைஇய   160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக,
33
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி,
தாமரை பயந்த தா இல் ஊழி   
நான்முக ஒருவற் சுட்டிகாண்வர, 165
34
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி 
நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு,
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெரீஇயர்  
மீன் பூத்தன்ன தோன்றலர்மீன் சேர்பு
வளி கிளர்ந்தன்ன செலவினர்வளியிடைத்   170
தீ எழுந்தன்ன திறலினர்தீப் பட
உரும் இடித்தன்ன குரலினர்விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார்,
அந்தரக் கொட்பினர்வந்து உடன் காண,
தா இல் கொள்கை மடந்தையொடுசில் நாள், 175
ஆவினன்குடி அசைதலும் உரியன். அதாஅன்று,

35
இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது,
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி,
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு   
ஆறினில் கழிப்பியஅறன் நவில் கொள்கை,  180
மூன்று வகைக் குறித்த முத் தீச் செல்வத்து,
இருபிறப்பாளர்பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்,  
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர்தற்புகழ்ந்து,  185
ஆறு எழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி
நா இயல் மருங்கில் நவிலப் பாடி,
விரை உறு நறு மலர் ஏந்திப் பெரிது உவந்து,
ஏரகத்து உறைதலும் உரியன். அதாஅன்று,

36
பைங்கொடிநறைக் காய் இடை இடுபுவேலன், 190
அம் பொதிப் புட்டில் விரைஇகுளவியொடு 
வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்;
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்: 
கொடுந் தொழில் வல் வில் கொலைஇய கானவர் 
நீடு அமை விளைந்த தேக் கள் தேறல்  195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து,  
தொண்டகச் சிறு பறைக் குரவை அயர
37
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங் கான்,  
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி,   
இணைத்த கோதைஅணைத்த கூந்தல்; 200
முடித்த குல்லைஇலையுடை நறும் பூ,
செங் கால் மராஅத்த வால் இணர்இடை இடுபு,  
சுரும்பு உணத் தொடுத்த பெருந் தண் மாத் தழை 
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ,
மயில் கண்டன்ன மட நடை மகளிரொடு     205
38
செய்யன்சிவந்த ஆடையன்செவ்வரைச்   
செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன்,   
கச்சினன்கழலினன்செச்சைக் கண்ணியன்,
குழலன்கோட்டன்குறும் பல்லியத்தன்,   
தகரன்மஞ்ஞையன்புகர் இல் சேவல்அம்   210
கொடியன்நெடியன்தொடி அணி தோளன் 
நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,
குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல் 
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்
முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,     215
மென் தோள் பல் பிணை தழீஇதலைத்தந்து,
குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று,

39
சிறு தினை மலரொடு விரைஇமறி அறுத்து,
வாரணக் கொடியொடு வயிற் பட நிறீஇ,
ஊர்ஊர் கொண்ட சீர் கெழு விழவினும், 220
ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும்,
வேலன் தைஇய வெறி அயர் களனும்,
காடும் காவும்கவின் பெறு துருத்தியும்,
யாறும் குளனும்வேறு பல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும்புதுப் பூங் கடம்பும்,     225
மன்றமும் பொதியிலும்கந்துடை நிலையினும்
40
மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர,   
நெய்யோடு ஐயவி அப்பிஐது உரை த்து,   
குடந்தம்பட்டுகொழு மலர் சிதறி,
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ, 230
செந் நூல் யாத்துவெண் பொரி சிதறி,
மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக்   
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலிச் செய்துபல் பிரப்பு இரீஇ,  
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து,    235
பெருந் தண் கணவீர நறுந் தண் மாலை
துணை அற அறுத்துத் தூங்க நாற்றி,  
நளி மலைச் சிலம்பில் நல் நகர் வாழ்த்தி,  
நறும் புகை எடுத்துகுறிஞ்சி பாடி,
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க, 240
உருவப் பல் பூத் தூஉய்வெருவரக்   
குருதிச் செந் தினை பரப்பிகுறமகள் 
முருகு இயம் நிறுத்துமுரணினர் உட்க,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
41
ஆடு களம் சிலம்பப் பாடிபலவுடன்    245
கோடு வாய்வைத்துகொடு மணி இயக்கி,  
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட,
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே.

42
ஆண்டு ஆண்டு ஆயினும் ஆககாண் தக        250
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி,   
கை தொழூஉப் பரவிகால் உற வணங்கி   
'நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ் சுனை,   
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ!     255
ஆல் கெழு கடவுள் புதல்வ! மால் வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ!  
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி!  
வானோர்வணங்கு வில்தானைத் தலைவ!  260
மாலை மார்ப! நூல் அறி புலவ! 
செருவில் ஒருவ! பொரு விறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!   
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல் கெழு தடக் கைச் சால் பெருஞ் செல்வ! 265
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து,
விண் பொரு நெடு வரைக் குறிஞ்சிக் கிழவ! 
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!  
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேர் ஆள! 270
அலந்தோர்க்கு அளிக்கும்பொலம் பூண்சேஎய்!  
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து,
பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்!   
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி!   275
போர் மிகு பொருந! குரிசில்!எனப் பல,
யான் அறி அளவையின்ஏத்திஆனாது
43
'நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்,
நின் அடி உள்ளி வந்தனென்நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய்!எனக்
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் 
44
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்,   
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி,   
'அளியன் தானே முது வாய் இரவலன்;
வந்தோன்பெரும! நின் வண் புகழ் நயந்துஎன  285
'இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி:
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்,  
வான் தோய் நிவப்பின்தான் வந்து எய்தி,  
அணங்கு சால் உயர்நிலை தழீஇபண்டைத் தன்  
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி,   290
'அஞ்சல் ஓம்புமதிஅறிவல் நின் வரவுஎன,
அன்புடை நல் மொழி அளைஇவிளிவு இன்று,   
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகித் தோன்றவிழுமிய
பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன்     295

45
வேறு பல் துகிலின் நுடங்கிஅகில் சுமந்து
ஆர முழு முதல் உருட்டிவேரல்
பூவுடை அலங்கு சினை புலம்பவேர் கீண்டு,
விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த   
தண் கமழ் அலர் இறால் சிதையநன் பல    300
ஆசினி முது சுளை கலாவமீமிசை  
நாக நறு மலர் உதிரயூகமொடு 
மா முக முசுக்கலை பனிப்பபூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசிபெருங் களிற்று  
முத்துடை வான் கோடு தழீஇதத்துற்று 305
நன் பொன் மணி நிறம் கிளரபொன் கொழியா,   
வாழை முழு முதல் துமியதாழை   
இளநீர் விழுக் குலை உதிரதாக்கி,   
கறிக் கொடிக் கருந் துணர் சாயபொறிப் புற
மட நடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ,  310
கோழி வயப் பெடை இரியகேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன 
குரூஉ மயிர் யாக்கைக் குடா வடி உளியம் 
பெருங் கல் விடர்அளைச் செறியகருங் கோட்டு 
ஆமா நல் ஏறு சிலைப்பசேண் நின்று  315
இழுமென இழிதரும் அருவி,
பழம் முதிர் சோலைமலை கிழவோனே.!  

குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

திருமுருகு ஆற்றுப்படை முற்றும்.

தனிப் பாடல்கள்

(பிற்காலத்தவர் ஒருவர் பாடிச் சேர்த்தவை)

குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!
புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை. 1

குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், - இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,
மெய் விடா வீரன் கை வேல்! 2

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை. 3

இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும். 4

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே! 5

அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்
'முருகா!' என்று ஓதுவார் முன். 6

முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன், நான். 7

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும்
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல
இடம்காண்; இரங்காய், இனி! 8

பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, - சுருங்காமல்,
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9

நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி,
தான் நினைத்த எல்லாம் தரும். 10
விளக்கம் 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி