Wednesday, 26 July 2017

பழமொழி 336 PalaMoli 336

பொருளைப் பாதுகாக்கும் இடம் பிறரால் நெருங்க முடியாத சிறை போன்றதாக இருக்க வேண்டும்

 
336.

அமையா இடத்தோர் அரும்பொருள் வைத்தால்
இமையாது காப்பினும் ஆகா - இமையாரும்
அக்காலத் தோம்பி அமிழ்துகோட் பட்டமையின்
நற்காப்பின் தீச்சிறையே நன்று.
 
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால், இமையாது காப்பினும் ஆகா; இமையாரும் அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையின், நல் காப்பின் தீச் சிறையே நன்று.

பொருத்தம் இல்லாத ஓர் இடத்தில் தன் அரிய  பொருளை வைத்துக் காவல் காத்தால், கண்ணிமைக்காமல் காத்தாலும் அந்தப் பொருளைப் பாதுகாக்க முடியாது. கண் இமைக்காமல் காத்த தேவர்களாலேயே அமிழ்தக் கலசத்தைக் காப்பாற்ற முடியவில்லையே. எனவே நல்ல இடத்தில் ஒரு பொருளை வைத்துப் பாதுகாப்பதை விடக் கடுமையான பிறரால் நெருங்க முடியாத இடத்தில் வைத்துப் பொருளைப் பாதுகாப்பதே நன்று. 

கருடன் தன் தாயின் அடிமையை நீக்குதல் பொருட்டு வானுலக அமராவதி நதிக் கரையில் வைத்துத் தேவர்கள் கண் இமைக்காமல் காவல் காத்த அமிழ்தத்தைக் கவர்ந்து சென்றான் என்பது ஒரு கதை. 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி