Friday, 30 June 2017

கலித்தொகை 135 Kalitogai 135

வலம்புரிச் சங்கு
கடிகார முள் சுழல்வது போல் வலப்பக்கமாகச் சுழன்று சுருங்கும் சங்கு
தோழி கூற்று

துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
இணை திரள் மருப்பாக, எறி வளி பாகனா
அயில் திணி நெடுங் கதவு அமைத்து, அடைத்து, அணி கொண்ட
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடுங் கோட்டைப்
பயில்திரை, நடு நன்னாள், பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்:   5

கடல் அலை என்னும் களிற்றின் மேல் காற்று என்னும் பாகன் ஏறிக்கொண்டு வந்தான். தன் துணையைத் தழுவிக்கொண்டு வலம்புரிச் சங்குகள் யானையின் கொம்புகளாக விளங்கின. கடற்கரை மணல் கோட்டைக் கதவாக விளங்கியது. கடலலை சங்குக் கொம்புகளால் மணலைக் குத்தியது. நண்பகலில் குத்தியது. இப்படிக் குத்தும் கழித்துறையின்  தலைவனே! கேள். 

கடி மலர்ப் புன்னைக் கீழ்க் காரிகை தோற்றாளைத்
தொடி நெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால்; மற்று நின்
குடிமைக்கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ?

மணக்கும் மலர் கொண்ட புன்னை மரத்தின் கீழ் தன் பெண்மை நலத்தை அவள் உன்னிடம் தோள்ளாள். நீயோ அவளது வளையல் தோளிலிருந்து நழுவும்படி விட்டுவிட்டாய். இது உன் குடிப்பெருமைக்கு ஒரு குற்றமாகாதோ?

ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை
நோய் மலி நிலையளாத் துறப்பாயால்; மற்று நின்   10
வாய்மைக்கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ?

அவள் புன்னை மர நிழலில் தன் அழகை உன்னிடம் இழந்தாள். அவளைக் காதல் நோயில் வருந்தும்படி விட்டுவிட்டாய். இது உன் வாய்மைக்கு ஒரு வஞ்சகச் செயலாக இருக்காதா?

திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால்; மற்று நின்
புகழ்மைக்கண் பெரியது ஓர் புகராகிக் கிடவாதோ?

அவள் புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் பெண்மை நலத்தைத் தோற்றாள். அதனால், பலரும் இகழும் கண்ணினை உடையவளாக அவன் வருந்துகிறாள். அவளை இவ்வாறு வருந்தும்படி விடுவது உன் புகழுக்கு ஒரு கரும்புள்ளியாக இருக்காதா?

என ஆங்கு,   15

சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே,
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து,
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு
இயங்கு ஒலி நெடுந் திண் தேர் கடவுமதி, விரைந்தே   20

இப்படியெல்லாம் நான் சொல்வதை நீ நன்றாகக் கேட்டாய் ஆயின், மணி ஒலிக்கும் உன் தேரை ஓட்டிக்கொண்டு என் தோழியிடம் உடனே செல். மலை போல் விளங்கும் உன் தோளில் மணியாரமும் மாலையும் அணிந்துகொண்டு செல். வாட்டத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் என் தோழியிடம் செல். 

வரையாது வந்து ஒழுகும் தலைவனைத் தோழி நெருங்கி வரைவு கடாயது.

யாப்பு - நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு - தாழிசை 3 - தனிச்சொல் - சுரிதகம்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 134 Kalitogai 134

புணை
வாயில்கள் கூற்று

மல்லரை மறம் சாய்த்த மலர்த் தண் தார் அகலத்தோன்,
ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின்,
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்,
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்,
 இருங் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போல,   5
பெருங் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர,
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்,
பாயல் கொள்பவை போல, கய மலர் வாய் கூம்ப,
ஒருநிலையே நடுக்குற்று, இவ் உலகெலாம் அச்சுற,
இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருள் மாலை   10

மல்லர்களின் வீரத்தைச் சாய்த்த கண்ணன் மலரும் மாலை அணிந்த தோளினை உடையவன். அவன் உருத்து நோக்கியபோது அவனை எதிர்த்து நிற்க மாட்டாதவர் ஓடினர். அப்போது கண்ணனின் ஆழிச்சக்கரம் பகைவர் யானையின் நெற்றியில் பதிந்தது போல சூரியன் மலையில் இறங்கியது. கடல் ஒலி  பெருகிற்று. இரவு வந்தது. கடலலை பெருகிக் கரையேறியது. கழித்துறையில் வண்டினம் நீங்கியது. அதனால் துறை வெறிச்சோடிக் காணப்பட்டது. கழியில் இருந்த மலர்கள் உறங்குபவை போலக் கூம்பின. ஒரு வகையாக உலகம் நடுங்கி அஞ்சிய நேரம். நிலமே மாறுவது போன்று துன்பம் சூழும் மருட்சியான மாலை வேளை. 

தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின்,
இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே,
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர, கடல் நோக்கி,
அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன்கொலோ?

குறையாத மன உளைச்சல் நோயைத் தந்தவரைக் கண்ணில் காணமுடியாததால் அவரையே நினைத்துக்கொண்டு போராடும் பனி தின்னும்போது துன்பத்தில்  ஆழ்ந்து கவலை கொண்ட நெஞ்சத்தோடு இருக்கிறேன். அழுகிறேன். கடலையே பார்த்துக்கொண்டு அவலம் கொண்டிருக்கிறேன். அது ஏன்?

நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின்,   15
கடும் பனி கைம்மிக, கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே,
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி,
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்கொலோ?

அவர் தன்னைத் தராமையால் ஏக்க நோயுடன் வருந்திக்கொண்டிருக்கிறேன். துயருடன் துன்ப நோயால் வருந்துவது ஏன்?

வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்,
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே,   20
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி,
எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்பல் எவன் கொலோ?

இருப்பு கொண்டு என் நலனை உண்டவர் திரும்ப வரவில்லை. அதனை நினைக்கும்போது என் செய்வதறியாத கலக்கத்தில் ஆழ்கிறது. ஆசை கொண்ட நெஞ்சம் மயங்குகிறது. என் துன்பத்தைக் கண்டு மரத்தில் உள்ள இலைகள் கூம்புகின்றன, ஏன்?

என ஆங்கு,

கரை காணாப் பௌவத்து, கலம் சிதைந்து ஆழ்பவன்
திரை தரப் புணை பெற்று, தீது இன்றி உய்ந்தாங்கு,  25
விரைவனர் காதலர் புகுதர,
நிரை தொடி துயரம் நீங்கின்றால், விரைந்தே

என்றல்லாம் சொல்லி அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். அப்போது அவளது காதலன் அங்கே வந்தான். அவனைக் கண்டதும் அவள் துன்பம் நீங்கிற்று. கடலில் செல்லும் மரக்கலம் சிதைந்து வருந்துபவர் ஏறிச் செல்ல ஒரு மிதவைப் புணை பெற்றது போன்று அவள் துன்பம் நீங்கியது. 

பிரிவிடை மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி, 'இவ் வகைப்பட்டனவும் நமது இடுக்கண் கண்டு எவ்வம் கொண்டன போன்ற; அவரும் நமக்கு அருளுவார் கொல்லோ?' எனச் சொல்லிய நேரத்துக்கண், தலைவன் புக, அவ்வளவில் அவள் அவலம் நீங்கினமை கண்டு, வாயில்கள் தம்முள்ளே கூறியது (17)

யாப்பு - நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு \ தாழிசை 3 \ தனிச்சொல் \ சுரிதகம் - உறுப்புகள்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 133 Kalitogai 133

பண்பாடு
தோழி கூற்று

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்,
சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்:   5

முண்டகப் பூ, தில்லைப் பூக்களோடு சேர்ந்து மலர்ந்திருக்கும் கானல் நிலத்தில் உயர்ந்த மணல் மேட்டில், கையில் கரகம் தொங்கவிட்டுக்கொண்டிருக்கும் முனிவன் போல, தாழம்பூ மலர்ந்து தொங்கும் தொங்கும் துறையை உடையவனே, நான் சொல்வதைக் கேள்.  

'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;
'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;  10
'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை;
'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;

ஆற்றுதல் என்பது அலைக்கழிவோருக்குத் தொண்டாற்றி உதவுதல். 
போற்றுதல் என்பது தம்மைப் புணர்ந்தவரைப் பிரியாமல் இருத்தல். 
பண்பு என்று சொல்லப்படுவது பெருமை தரத்தக்கது எது என அறிந்து அதன்படி நடத்தல். 
அன்பு எனப்படுவது தன் உறவுக்காரர்களை விட்டு விலகாமை. 
அறிவு என்று சொல்லப்படுவது அறியாவர் சொல்லும் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல். 
செறிவு எனப்படுவது சொன்ன சொல்லை மறுத்துப் பேசாமை. 
நிறை எனப்படுவது தான் மறைக்கவேண்டடிய நிகழ்வுகளை பிறர் அறியாவண்ணம் நடந்துகொள்ளுதல். 
முறை எனப்படுவது குற்றம் செய்தவனுக்கு இரக்கம் காட்டாமல் அரசன் அவன் உயிரை வாங்குதல். 
பொறை எனப்படுவது. தன்னைப் போற்றாதவர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளுதல். 

ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி   15
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க!
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே!

இவற்றை இப்படி நீர் அறிந்தவர் ஆயின், என் தோழியின் நலத்தை உண்டபின் அவளைக் கைவிடுதல் என்பது, பால் குடிப்பவர் குடித்த பின்னர் பால் இருந்த பாத்திரத்தைத் தூக்கி எறிதல் போன்றது. உனக்காக அவள் வருந்திக்கொண்டிருக்கிறாள். அவளது துன்பத்தை நீ போக்க வேண்டும். அதற்காக நீ செல்ல உன் தேரைப் பூட்டுக.  

'வரைவு உடம்பட்டோர்க் கடாவல் வேண்டினும்' என்பதனால், தலைவன் தெருளாதவனைத் தெருட்டி, வரைவு கடாயது

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 132 Kalitogai 132

தோழி கூற்று

உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர்மேல்,
விரவுப் பல் உருவின வீழ் பெடை துணையாக,
இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள்ளினம் இறை கொள
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப,
நிரை களிறு இடை பட, நெறி யாத்த இருக்கை போல்   5
சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்து,
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!

வலிமை மிக்க அலைகள் வந்து மீளும் மணல்மேடு. பல்வேறு உருவம் கொண்ட பறவைக் கூட்டம் தன்னை விரும்பும் பெண்பறவையுடன் இரை தேடி உண்ட பின்னர் அயர்வு போக்க இருப்பு கொள்ளும் இடம். மும்முரசு முழக்கி ஆள்பவர் பகையரசனை வென்ற பின்னர் யானைப்படையைச் சிதைவு , இல்லாமல் நடத்திச் செல்வது போல, துறைமுகத்தில் மரக்கலக் கப்பல்கள் அணிவகுத்துச் செல்லும் துறையை உடைய சேர்ப்பு நிலத் தலைவனே!

புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்,
'நன்னுதால்! அஞ்சல் ஓம்பு' என்றதன் பயன் அன்றோ
பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள்   10
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?

புன்னை மரமடர்ந்த பூங்காவில் நீ அவளைப் பூணரும்  காலத்தில் "நல்ல முக அழகு கொண்டவளே, அஞ்சாதே, கைவிடமாட்டேன்" என்றதன் பயன் இப்போது பசலை பாய்ந்த நிலையினளாய் இருக்கிறாள். பகலில் எரியும் சுடர் விளக்கு போல் ஒளி மங்கிக் காணப்படுகிறாள். தளிர் போன்ற மேனி நலம் இழந்து காணப்படுகிறாள்.

பல் மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால்,
'சின்மொழி! தெளி' எனத் தேற்றிய சிறப்பு அன்றோ
வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள்
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை?   15

பல்வகை மலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்காவில் பழி நேராவண்ணம் நீ இவளைப் புணர்ந்தபொழுது "சிலவாகிய மொழிகளைப் பேசும் சிறப்பு மிக்கவளே, என்னை நம்பு, பிரியமாட்டேன்" என்று சொன்ன சொல்லை நம்பியதன் பயன் அன்றோ இன்று வாடிய வனப்புடன்,  கழுவாத மணிபோல் காணப்படுகிறாள். தோள்வளையல் தோளில் நிற்காமல் நழுவும் வாட்டத்துடன் இருக்கிறாள். 

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ. 'மணந்தக்கால்,
கொடுங் குழாய்! தெளி' எனக் கொண்டதன் கொளை அன்றோ
பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள்
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை?

அடுப்பங்கொடி படர்ந்திருக்கும் மணல் மேட்டில் நீ இவளுடன் விளையாடிப் புணர்ந்த காலத்தில் "காதில் வளையம் அணிந்திருக்கும் அழகியே, என்னை நம்பு, உன்னை விட்டுப் பிரியமாட்டேன்" என்று நீ கூறிய சொல்லை நம்பிய கோட்பாட்டின் பயன் அன்றோ, உடலைத் தாங்கமாட்டாத மெல்லிய இடையினை உடைய இவள் பூக்கள் உதிர்ந்த கொடி போல் அழகிழந்து காணப்படுகிறாள். உன் உறவைப் பிறர் அறியாவண்ணம் மைத்துக்கொண்டு காம நோயில் வருந்துகிறாள்.

என ஆங்கு   20

வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண்
கழியும் நோய் கைம்மிக அணங்குஆகியது போல,
பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி
அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே

என்றெல்லாம் சொல்லும்படி ஆயிற்று. வழிபடும் தெய்வந்தான் வலிமை என்று அந்தத் தெய்வத்திடம் அடைக்கலம் புகுந்தவர்க்கு அந்தத் தெய்வமே துன்புறும் தெய்வமாக மாறியது போல ஆயிற்று என் தோழியின் நிலைமை. பலரும் அவளைப் பழி தூற்றுகின்றனர். என் தலைவி துன்பத்தில் அலைகழிக்கப்படுகிறாள். இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டு  நீ அவளை விட்டு விலகி இருப்பது மிகவும் கொடியது.

வரைவு நீட்டித்துழிப் பகற்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டு, தோழிஅவனை நாணு நெஞ்சு அலைப்ப, வரைவு கடாயது

தரவு \ தாழிசை \ தனிச்சொல் \ சுரிதகம்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 131 Kalitogai 131

ஊசல் \ ஊஞ்சல்
தோழி கூற்று
தோழி
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என்
திருந்திழை மென் தோள் மணந்தவன் செய்த
அருந் துயர் நீக்குவேன் போல்மன் பொருந்துபு

தலைவி சொல்கிறாள் - பெருங்கடலில் இருக்கும் தண்ணீர்த் தெய்வத்தை நோக்கி "உன்னைப் பிரியமாட்டேன்" என்று சூள் உரைத்து என்னைத் தெளிவுபடுத்தி என் தோளைத் தழுவியவன் இப்போது என்னை விட்டு விலகியிருப்பதால் நேர்ந்திருக்கும் என் துன்பத்தைப் போக்கிக்கொள்ள விரும்புகிறேன்.

பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண்,
நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி    5

தோழி சொல்கிறாள் - பூவைப் போன்று புகழத்தக்க கண்ணை உடையவளே! அவன் உன்னைப் பார்க்கும்போது நீ அவனைப் பார்த்தால் அவனை அது வருத்தும் என்று நீ அவனைப் பார்க்கவில்லை.

இன மீன் இகல் மாற வென்ற சின மீன்
எறி சுறா வான் மருப்புக் கோத்து, நெறி செய்த
நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து, கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப,
தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை   10
வீழ் ஊசல் தூங்கப் பெறின்

தலைவி சொல்கிறாள் - இன மீன் கூட்டம் தாக்கும்போது எதிர்த்து வென்ற சுறா மீன் கொம்பை ஊஞ்சலில் உட்காரப் பயன்படுத்திக்கொள்வோம். ஊஞ்சல் கயிறு நெய்தல் நாரால் திரிக்கப்பட்டதாக இருக்கட்டும். கையால் மீட்டும் யாழ் போல் இசைக்கும் வண்டுகள் பறக்கும் தாழை மரத்தில் ஊஞ்சல் கட்டுவோம். அதில் ஆடினால் என் பிரிவுத் துன்பம் குறையும்.

மாழை மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப, நீடு ஊங்காய், தட மென் தோள்
நீத்தான் திறங்கள் பகர்ந்து

தோழி சொல்கிறாள் - மாழை இனப் பெண்மான் போன்ற இயல்பினை உடையவளே! உன் ஊஞ்சலைப் பிடித்து நான் ஆட்டுகிறேன். நீ ஆடிக்கொண்டே பாடு. உன் தோளை விட்டுவிட்டுப் பிரிந்து சென்றவன் திறம் பற்றிப் பாடு.

நாணினகொல், தோழி? நாணினகொல், தோழி?   15
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்,
ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம்
கானல், கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப, தோழி! என்
மேனி சிதைத்தான் துறை    20

தலைவி ஊஞ்சல் பாட்டு பாடுகிறாள் - அன்று அவன் கடல்-கானல் பூங்ககாவில் மணக்கும் ஞாழல் பூக்கள் கொட்டிக் கிடக்கும் பரப்பில் என்னைப் புணர்ந்தபோது கண்ட நண்டு  இன்று நான் சிதைந்த மேனியுடன் அழகு குலைத்திருப்பதைப் பார்ப்பதற்கு நாணின போல் தோன்றுகிறது. வெள்ளை நிலவொஒளி போல் தோன்றும் கடல்மணல் பரப்பில் மேயும் நண்டு தன் வளைக்குள் ஓடி ஒளிந்துகொள்கின்றன. 

மாரி வீழ் இருங் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண்,
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்!
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை

வேறு வகையில் பாடுமாறு தோழி கேட்கிறாள் - மழை பொழிவது போன்ற கூந்தலை உடையவளே! மதமதக்கும் பார்வை கொண்டவளே! நீரில் கிடக்கும் முத்துப் போன்ற பற்களை உடையவளே! போக்க முடியாத துன்பம் தந்திருக்கும் அவன் தன்மையைச் சொல்லி நாம் வழக்கமாகப் பாடும் ஊஞ்சல்-பாட்டு ஒன்று இப்போது பாடு. 

பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி!   25
இரவு எலாம், நல் தோழி! பார்த்து உற்றன என்பவை
'தன் துணை இல்லாள் வருந்தினாள்கொல்?' என,
இன் துணை அன்றில் இரவின் அகவாவே
அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என்
மென் தோள் ஞெகிழ்த்தான் துறை   30

தலைவி பாடுகிறாள் - அன்று என் தோளில் எழுதிய கரும்புத் தொய்யில் அழியும்படி என் மேனியை அவன் சிதைத்த துறையில் இருக்கும் அன்றில் பறவைகள், அன்று பார்த்த அன்றில்கள், இன்று துணை இல்லாமல் இருப்பது கண்டு, வருத்தத்துடன் தன் துணை அன்றிலை அழைத்துக் கூவாமல் இருக்கின்றன, பார்.

தலைவி
கரை கவர் கொடுங் கழி, கண் கவர் புள்ளினம்
திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை,
இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும்
அசை வரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை

தலைவி தோழியைப் பாடச் சொல்கிறாள் - கரை வளைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கழியில் பறவைகள் பிடித்துத் தின்றுவிட்டு எறிந்த மீன்களை மட்டுமே உண்பவன் அல்லாமல், ஒன்றன் உயிரைக் கொன்று உண்ணாத அருள் உள்ளம் படைத்தவன் அவன். அவன் பண்பை அழித்து நீ ஒரு ஊஞ்சல் பாட்டு பாடு. 

அருளினகொல், தோழி? அருளினகொல், தோழி?   35
இரவு எலாம், தோழி! அருளின என்பவை
கணம் கொள் இடு மணல் காவி வருந்த,
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும்
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
வணங்கி உணர்ப்பான் துறை    40

தோழி பாடுகிறாள் - ஐம்பால் ஒப்பனை செய்து மணக்கும் கூந்தலை உடைய பெண்ணின் ஊடலை வணங்கித் தீர்த்து உணர்த்துபவன் துறை இது. இங்கு மணலில் பூத்திருக்கும் காவி மலர் வருந்தும்படி அலை வந்து அலைக்கழிக்கும். இப்படி அலை இரவெல்லாம் அலைக்கழிப்பதுதான் அருளா?

தோழி
என, நாம்

பாட, மறை நின்று கேட்டனன், நீடிய
வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை
யான் என உணர்ந்து, நீ நனி மருள,
தேன் இமிர் புன்னை பொருந்தி,   45
தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே

தோழி சொல்கிறாள் - இப்படியெல்லாம் நாம் பாடியதை அவன் புன்னை மரத்து  மறைவில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நீர் வெண்ணிறமாகத் தோன்றும் சேர்ப்பு நிலத்தின் தலைவன். அவன் அங்கே வந்து நான் உன்னை ஆட்டிவிட்டுக்கொண்டிருந்த ஊஞ்சலை அவன் ஆட்டிவிட்டான்.

வரைவு நீட ஆற்றாளாய தலைவியைத் தோழி அவன் முன் அருமை செய்து அயர்த்த காலத்து,அவன் வரவினை யான் அறிந்து, ஊசல் ஆட நின்னைக் கொண்டு போய் ஆடுகின்ற காலத்து, யான் இயற்பழிக்க,நீ இயற்பட மொழிவது கேட்டு, வந்து, ஊசலை ஊக்கியவன் இக் காலத்து வருந்த விடாது, வருத்தம் அறிந்து, வரைந்து கொள்வன் என ஆற்றுவித்தது (14)

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

Thursday, 29 June 2017

கலித்தொகை 130 Kalitogai 130

பகலில் மலரும் தாமரை
இரவில் குவியும் 
வாயில்கள் கூற்று

'நயனும், வாய்மையும், நன்னர் நடுவும்,
இவனின் தோன்றிய, இவை' என இரங்க,
புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,
நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல,   5
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்,
பல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை

நயம், வாய்மை, நடுவுநிலைமை ஆகியவை இவை என நாடி நன்கு ஆராய்ந்து பொய்யை விலக்கி நாட்டை இனிது ஆண்ட அரசனோடு நல்லூழிச் செல்வம் மாண்டுபோனது போல, ஒளிச் செல்வன் கதிரவன் மறையப் பகலும் மறைந்தது. கல்லாது முதிர்ந்தவனின் இரக்கமற்ற நெஞ்சம் போல இருள் பரவிக்கொண்டிருக்கும் மாலைக்காலம். 

இம் மாலை,
ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என்
கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்!   10

இந்த மாலை வந்ததும் ஐயர் தீ வளர்த்தனர். அந்தத் தீ எரிவது போல அவர் இல்லாமல் வருந்தும் என் நெஞ்சமும் கனன்று எரிந்துகொண்டிருக்கிறது. 

இம் மாலை,
இருங் கழி மா மலர் கூம்ப, அரோ, என்
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்!

இந்த மாலை வந்ததும் கழியில் உள்ள மலர் கூம்பும். அது போல என் நெஞ்சமும் கூம்பும். 

இம் மாலை,
கோவலர் தீம் குழல் இனைய, அரோ, என்   15
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்!

இந்த மாலை வந்ததும் கோவலர் குழல் ஊதுவர். என் நெஞ்சமும் புலம்பும். 

என ஆங்கு,

படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை,
குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை
விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்   20
தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.

என்றெல்லாம் சொல்லும்படி மாலை வந்ததும் அவள் புலம்பலானாள். குடிமக்களைப் பேணிக் காப்பாற்றும் செங்கால் அரசனின் படை செல்லச் செல்ல மக்கள் துன்பம் நீங்குவது போல அவளது காதலன் திரும்பி வந்து அவளைத் தொடத் தொட அவள்  மேனியிலிருந்த பசலை நோய் நீங்கியது. 

பிரிவிடை ஆற்றாத தலைவியது ஆற்றாமை தலைவன் வந்து சார்தலின் நீங்கினமை கண்டு, வாயில்கள் தம்முள்ளே கூறியது

தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 129 Kalitogai 129

சித்தர் மருத்துவம்
தெரிந்தவன் மறைக்கக் கூடாது 
தோழி கூற்று

தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால்,
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்,
எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய;
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா  5
மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர;
எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை

தொன்மையான ஊழிக்காலம் தடுமாற்றம் அடைந்து புதிய ஊழிக்காலம் பிறக்கும்போது புதியனவற்றைப் படைப்பவன் முன்னர் தோன்றி அவற்றை அழிப்பவன் போல கதிரவன் தோன்றி, அவனும் மறையும் காலமே மாலைக்காலம். நல்ல அறநெறியில் உலகை ஆண்டு அவன் மறைவுக்குப் பின்னர் அறநெறியை நிலைநாட்டும் திறமை இல்லாத மன்னன் ஒருவன் தோன்றி நாட்டு மக்கள் தடுமாறும் காலம் போல இருள் மயங்கி வரும் மாலைக் காலம். துன்ப எல்லைக்கு வரம்பாக வரும் மாலைக்காலம். 

பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்!
'தூ அறத் துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம்
நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக்   10
காதல் செய்து அகன்றாரை உடையையோ? நீ

கடல் அலையே, நீ ஒலித்துக்கொண்டே இருக்கிறாயே, எனக்குப் பற்றுக்கோடு இல்லாமல் என் துறைவன் என்னைத் துறந்தான். அதனை எண்ணி நான் அழுதுகொண்டிருக்கிறேன். என்னைப் போல நீயும் அழுகிறாயா? என்னைப் போல உன்னைக் காதல் செய்த துறைவன் உன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டானா?

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்!
'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல
இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ   15

மன்றத்தில் இருக்கும் பனைமரத்தில் அடைந்திருக்கும் அன்றில் பறவையே! நான் செய்த உதவியை மறந்துவிட்டவர் என்னைக் கலக்கும் துன்பத்தை அறிந்துகொண்டு இரவில் கூவுகிறாயா? அல்லது என்னைப் போல உன்னைப் பிரிந்தவரும் இருக்கிறாரா? 

பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்!
'இனி வரின், உயரும்மன் பழி' எனக் கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ? நீ

பனிக்காலத்து இருள் சூழ்ந்து வரும்போது, அழகிய சிறிய புல்லாங்குழலே! இனி இசைத்தால் பழி வரும் என்று எண்ணி, தனியே இருக்கும் என் துன்பம் கண்டு இரங்கல் பண் இசைக்கிறாயா? அல்லது என்னைப் போல உனக்கும் இனியவற்றைச் செய்துவிட்டு உன்னை அகன்று சென்றவர் இருக்கிறாரா?  

என ஆங்கு,   20

அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட,
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே   25

என்றெல்லாம் சொல்லும்படி நான் கலங்குகிறேன். பெருமானே! அயலவர் அறிந்துகொண்ட என் துன்பம் மிகுதலால் கலங்கும் என்னை பித்துப்பிடிக்காமல் என்னைக் காப்பாற்றுவாயாக. வருந்தும் துன்பத்தைப் போக்கும் திறம் அறியத தருத்துவன் ஒருவன் தன்னிடமிருக்கும்ஃ மருந்தினை மறைத்துவைப்பதைக் காட்டிலும் கொடியது உன்னை ஏற்றுக்கொண்டு உன்னைப் பருகிய ஒருவரின் நெஞ்சம் அழிந்துபோகுமாறு விடுதல் - என்பது உனக்குத் தெரியாதா? 

தன்னுள் கையாறு எய்திடு கிளவி'யால் தலைவி ஆற்றாளாயினவாறு, தோழி தலைவற்குக் கூறியது

தரவு - தாழிசை 3 - தனிச்சொல் - சுரிதகம்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 128 Kalitogai 128

கனவு
தலைவி கூற்று

'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று,
வாடை தூக்க, வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,
நளி இருங் கங்குல், நம் துயர் அறியாது,
அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும்   5
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல,
புதுவது கவினினை' என்றியாயின்,
நனவின் வாரா நயனிலாளனைக்
கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:

அணைத்த தோளை விலக்கிவிட்டு அருளாமல் நிற்பவர் போன்று வாடைக்காற்றில் மணம் பரப்பிக்கொண்டு தலையைச் சாய்த்துக்கொண்டு நிற்கும் தாழை மரத்தின் ஆடும் மடலில் இருந்துகொண்டு இருண்ட நள்ளிரவில் அசைநடை போடும் நாரை இடை விடாமல் குரல் எழுப்பிக்கொண்டே இருக்கும் சேர்ப்பு நிலத்தின் தலைவனைக் கண்டது போலப் புத்தழகு பெற்றிருக்கிறேனே ஏன் தெரியுமா, நனவில் வராத நயமில்லாதவனைக் கனவில் கண்டு நான் செய்ததைக் கேள். - தோழியிடம் தலைவி சொல்கிறாள்.

'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என்   10
நலம் தாராயோ?' என, தொடுப்பேன் போலவும்,
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி,
'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும்

"துன்பம் செய்தவண்ணம் எப்போதும் இருக்கமாட்டேன்" என்று சொன்னவனை "என் அழகைத் திரும்பத் தரமாட்டாயா" என்று கேட்ப்பது போலவும், அவன் "புலம்புவதை விடு" என்று சொல்லிக்கொண்டு என்னைத் தழுவி, என் அழகைத் திரும்பப் பெறும் வகையில் அவன் என்னைப் புணர்ந்தது போலவும் கனவு கண்டேன். 

'முலையிடைத் துயிலும் மறந்தீத்தோய்' என,
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்,   15
'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' என,
தலையுற முன் அடிப் பணிவான் போலவும்

"என் முலைமேல் துயில்வதை மறந்துவிட்டாயே" என்று சொல்லிக்கொண்டு நிலை அழிந்த என் நெஞ்சத்தைக் காட்டி அழுவேன் போலவும், "வலையில் விழுந்த மயில் போல வருந்த வேண்டாம்" என்று சொல்லி அவன் என் அடி முதல் முடி வரையில் விழுந்து பணிவது போலவும் கனவில் கண்டேன். 

கோதை கோலா, இறைஞ்சி நின்ற
ஊதைஅம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,
'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே,   20
'பேதையைப் பெரிது' எனத் தெளிப்பான் போலவும்

வணங்கி நிற்கும் சேர்ப்பனை, ஊதைக் காற்று வீசும் சேர்ப்பனை, என் மாலையைக் கோலாகப் பற்றிக்கொண்டு நான் அடிப்பது போலவும், அவன் "நான் என்ன பிழை செய்தேன்" என்று சொல்லிக்கொண்டு நடுங்கி, "நீ அறியாப் பேதை" என்று சொல்லி என்னைத் தெளிவிப்பான் போலவும் கனவு கண்டேன். 

ஆங்கு

கனவினால் கண்டேன் தோழி! 'காண் தகக்
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு' என   25
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே

தோழி, இப்படியெல்லாம் கனவில் கண்டேன். கனவில் வந்த என் கானல் அழகன் நனவில் வருவான் என்று எண்ணி, அது வரையில் என் உயிர் நிற்கின்றது.

வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியது கவின் கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது

யாப்பு
நேரிசையொத்தாழிசைக் கலிப்பா
தரவு, தாழிசை 3, தனிச்சொல், சுரிதகம் - உறுப்புகள்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 127 Kalitogai 127

செருந்தி மலர்
தோழி கூற்று

தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும்,
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத
செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல்
வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப!   5

தெரிக்கும் ஒளியுடன் ஞாழல் கொத்தாகப் பூத்திருக்கும். தேன் மணம் கமழப் புன்னை பூத்திருக்கும். தாழை தன் மடலில் விரியும். செருந்தி பூத்திருக்கும். இவற்றை ஞிமிறு, தும்பி வண்டுகள் ஒலி ஒழுப்பிக்கொண்டு மொய்க்கும். இந்தப் பூக்கள் கையில் சக்கரம் கொண்டிருக்கும் திருமால் அணிந்திருக்கும் மாலை போல் தோன்றும். இப்படித் தோன்றும் கடற்கரைச் சேர்ப்புநிலத் தலைவனே!

கொடுங் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை?

வளைந்த கழிமுகத்தைச் சுற்றி மணல் குன்று வளைத்துக்கொண்டிருக்கும் குறியிடத்துக்கு என் தலைவி வந்தாள் என்பதற்காகவோ கயல் போன்ற அவள் கண்கள் பனி பொழிய, துன்பத்துடன் வருந்தும்படி விட்டுவிட்டு நீ விலகி இருக்கிறாய்?

குறி இன்றிப் பல் நாள், நின் கடுந் திண் தேர் வரு பதம் கண்டு,   10
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிதாக,
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை?

குறியிடம் சொல்லாமல் உன் தேர் வரும் இடத்துக்கெல்லாம் தேடி வந்து உன்னை எதிர்கொண்டாள் என்பதற்காகவா, என் தலைவி அறிவு பிறிதாகி, அழகு நலமெல்லாம் இழந்து, செறிந்திருந்த வளையல் தோளிலிருந்து நழுவ நீ அவளை விட்டு நீங்கி இருக்கிறாய்?

காண் வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ   15
வேய் நலம் இழந்த தோள் விளங்குஇழை பொறை ஆற்றாள்,
வாள் நுதல் பசப்பு ஊர, இவளை நீ துறந்ததை?

காண்பதற்கு இனிமையான இந்தப் பனிநீர்த் துறைக்கு யாமத்தில் நீ சொன்ன குறியிடத்துக்கு வந்தாள் என்பதற்காகவா, மூங்கில் போன்ற தோள் தன் நலத்தை இழந்து, அணிகலன்கள் கழன்று விழ, நெற்றியில் பசப்பு ஊர அவளை விட்டுவிட்டு நீங்கி இருக்கிறாய்?

அதனால்,

இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,
'உரவுக் கதிர் தெறும்' என ஓங்கு திரை விரைபு, தன்   20
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு
உரவு நீர்ச் சேர்ப்ப! அருளினை அளிமே

அப்படியெல்லாம் இல்லை என்றால், இவளது தோள் வளையலைக் கழலச் செய்த துன்பம் தீரும்படி, வெயில் தாக்கும் என்று கடற்கரை மணலை அடும்பு வளர்ந்து காப்பது போல் நீ இவளுக்கு அருள் புரிவாயாக. 

தோழி தலைவியது ஆற்றாமை கூறி, தலைவனை வரைவு கடாயது

தரவி தாழிசை தனிச்சொல் சுரிதகம் என அமைந்த 
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 126 Kalitogai 126

முக்கோலில் கை ஊன்றி முனிவன் தவம் செய்வது போல் குருகு நிற்குமாம்
தோழி கூற்று

பொன் மலை சுடர் சேர, புலம்பிய இடன் நோக்கி,
தன் மலைந்து உலகு ஏத்த, தகை மதி ஏர்தர,
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்,
எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப!  5

மாலை வெயிலால் பொன்னிறம் பட்டுப் பொன்போல் தோன்றும் மலையில் பொழுது இறங்கிற்று. அதனால் உலகம் புலம்பியது. அதனைப் போக்க நிலா ஊர்ந்து வந்தது. வானம் செந்நிறம் கொண்டது. ஒலி செய்யாமல் நாரை அந்தணர் முக்கோலில் கையை ஊன்றிக்கொண்டு வேத மொழிகளை நினைப்பது போல மணலின் மேல் இருப்புக் கொண்டிருந்தது. இப்படி விளங்கும் நீர்த்துறையால் குளுமை பெற்றிருக்கும் சேர்ப்பு நிலத்தின் தலைவனே!

அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர்
மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானற்
புள் என உணர்ந்து, பின் புலம்பு கொண்டு, இனையுமே

குருகு ஒலி கேட்கும்போது உன் தேரின் மணி ஒலி என்று என் தலைவி நினைப்பாள். பின் அதன் ஒலியை உள் வாங்கி எண்ணி அது கானல் பறவையின் ஒலி என உணர்ந்துகொண்டு புலம்புவாள்.  

நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில்  10
தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க, கழி பூத்த
மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு, இனையுமே

நீரில் தோன்றும் பூ மணம் வீசும்போது உன் மார்பில் அணிந்திருக்கும் மாலையின் மணம் என்று எண்ணுவாள். பின்னர் மென்காற்று அசையும்போது அது கழியில் பூத்த பூ மணம் என உணர்ந்துகொண்டு மயங்கி வருந்துவாள். 

நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக்கால்,
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன்; மதித்தாங்கே,   15
நனவு எனப் புல்லுங்கால், காணாளாய், கண்டது
கனவு என உணர்ந்து, பின் கையற்று, கலங்குமே

இவள் தன் வளமனையில் உறங்கும்போது உன் தோள்மேல் உறங்குவது போல் நினைப்பாள். அப்போது உன்னைத் தழுவும்போது தான் கண்டது கனவு என உணர்ந்து செய்வதறியாமல் கலங்குவாள். 

என ஆங்கு,

பல நினைந்து, இனையும் பைதல் நெஞ்சின்,
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி   20
மதி மருள் வாள் முகம் விளங்க,
புது நலம் ஏர்தர, பூண்க, நின் தேரே!

என்றெல்லாம் பலவாறு நினைத்து வருந்தும் என் தோழி நெஞ்சு படும் பாட்டிலிருந்து, மயக்கத்திலிருந்து, மனச் சுழற்சியால் வருந்தும் நோயிலிருந்து விலகி, அவளது மதி போன்ற முகத்தில் மீண்டும் ஒளி பிறக்க, புது நலம் பூக்க, உன் தேரை அவளிடம் செல்லப் பூட்டுக.

தோழி தலைவியது ஆற்றாமை கூறி, தலைவனை வரைவு கடாயது

தரவி தாழிசை தனிச்சொல் சுரிதகம் என அமைந்த 
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

Wednesday, 28 June 2017

கலித்தொகை 125 Kalitogai 125

வாட்டம்
இக்காலப் பெண்
தோழி கூற்று

'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,'
வண் பரி நவின்ற வய மான் செல்வ!   5
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்:

"கண்டவர் யாரும் இல்லை" என்று நினைத்துக்கொண்டு உலகியல் உணராத சிலர் தகாத செயல்களைப் புரிகின்றனர். தாம் செய்யும் கொடுமைகளை மறைக்கின்றனர். அவை கொடுமைகள் என்று அவர்களின் நெஞ்சுக்குத் தெரியும். அவர்களின் குறுகிய நெஞ்சந்தான் அவர்கள் செய்யும் கொடுமைகளுக்குச் சாட்சி. ஆகவே, வளமான குதிரையில் வந்து என் தலைவியைத் துய்த்த நீ அவளை விட்டுவிட்ட உன் செயலை நினைத்துப் பார். "நீ அன்பு இல்லாதவன்" என்று கூறுவேன். ஐயனே, இதனைக் கேள். 

மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்!   10
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ

உன்னை மகிழ்வித்தவள் என் தலைவி தேமொழி. தொய்யில் எழுதிய அவளது மொட்டுப் போன்ற முலையில் மூழ்கிக் கிடந்தாய். அந்தத் தொடர்பினை அவளது கண்பனி நீர் காட்டுகிறது. நீயோ அவளுக்கு மீண்டும் உன்னைக் கொடுத்துத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாய். நீ மிகவும் கொடியவன். 

இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ,
நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப்
புலந்து அழ, புல்லாது விடுவாய்!
இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியைகாண் நீ   15

ஒளி வீசும் வளையல் அணிந்தவள் என் தலைவி. அவளுக்கு நீ  தழையாடை தைத்துத் தந்தாய். அவள் நலம் கெடும்படி அவளிடம் தொடர்பு கொண்டாய். பின் அவள் உன்னை நினைத்து அழும்படி அவளைத் தழுவாமல் விட்டுவிடுகிறாய். அதனால், சேர்ப்பனே, நீ கொடியவன். 

இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால்
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
நுண் வரி வாட, வாராது விடுவாய்!
தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ

என் தலைவி இனிய மணிச்சிலம்பு அணிந்தவள். சில சொற்களையே பேசுபவள். தலையில் ஐம்பால் பின்னல் கொண்டவள். பாம்பு படம் விரிப்பது போன்ற அல்குலை உடையவள். அவளது மேனிக் கட்டு வாடும்படி விட்டுவிட்டு நீ அவளிடம் வராமல் இருக்கிறாய். தண்ணந்துறைவ, நீ தகைமை இல்லாதவன். 

என ஆங்கு   20

அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று
இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப்
பிறை ஏர் சுடர் நுதற் பசலை
மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே

என்றெல்லாம் நான் சொல்வதைக் கேட்டு அவள் நிலைமையை எண்ணிப்பார். அவளுக்கு அடைக்கலம் தருக. நீ  இல்லாமல் அவள் தோள்களில் வளையல் நிற்கவில்லை. நெற்றியில் பசலை ஊர்கிறது. இவை மறைய நீ அவளை மணந்துகொள்ள வேண்டும்.  

வரைவு நீட, ஆற்றாத தலைவி நிலைமை தலைவற்குத் தோழி கூறி, அவனை நெருங்கி,வரைவு கடாயது

யாப்பு
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு, தாழிசை 3, தனிச்சொல், சுரிதகம் உறுப்புக்களைக் கொண்டது 

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 124 Kalitogai 124

பால் வண்ண மேனியான் \ பலராமன்
தோழி கூற்று

ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய
நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை
வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப!

மூன்று உலகங்களையும் மூன்று அடிகளால் அளந்தவன் திருமால். அவனுக்கு முதியவன் பால் போன்ற மேனி கொண்ட பலராமன். பலராமன் திருமாலாகிய கண்ணனுக்கு நீல நிற ஆடை தந்தது போல வெள்ளை மணல் இருக்கும் கடற்கரையை அடுத்து நீல நிற் கடல் இருப்பது சேர்ப்பு நிலம். இந்தச் சேர்ப்பு நிலத்தின் தலைவனே!

ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின்,   5
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
காரிகை பெற்ற தன் கவின் வாடக் கலுழ்பு, ஆங்கே,
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்

ஊரார் அலர் தூற்றும்படி விட்டுவிட்டு நீ இவளை நினைக்காமல் துறந்து இருப்பதால் இவளது காரிகை அழகு பெற்ற அவள் மேனி அழகு வாடி நெற்றி பீர்க்கம்பூ நிறம் கொண்டு மாறிவிட்டது. மாறாவிட்டால் தன் துன்பத்தை எனக்குக்கூடத் தெரியாமல் மறைத்திருப்பாள். 

இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்  10
துணையாருள் தகை பெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்

ஊரே வருந்தி அலர் தூற்றியும் நீ எதுவும் கண்டுகொள்ளாமல் துறந்தது இருக்கிறாய். இவள் தன் தோழிமார் கூட்டத்தில் தன் தோளில் தொன்மை வனப்பு கெட்டு அது காட்டிக்கொடுக்காவிட்டால் தனக்கு உதவும் புணையாகிய நீ இல்லாத குறையை எனக்கும் மறைத்திருப்பாள். 

இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி,   15
நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெருங் கண் அல்லாக்கால்

இந்த ஊர் இவளை அலர் தூற்றிக்கொண்டே இருக்கிறது. நீ கண்டுகொள்ளாமல் இருக்கிறாய். அதனால் இவளுக்கு நேர்ந்த துன்பத்தை எனக்கும் தெரியாமல் மறைத்துவிட்டாள். ஆனால் வேலின் கூர்மை போன்ற இவள் கண்களிலிருந்து கண்ணீர் உகுகிறது. அதுதான் எனக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. 

அதனால்,

பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக்கால்,
அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர,
புரி உளைக் கலிமான் தேர் கடவுபு   20
விரி தண் தார் வியல் மார்ப! விரைக நின் செலவே

அதனால், நீ உன் குதிரையை விரைந்து செலுத்திக்கொண்டு உன் தேரில் விரைந்து அவளிடம் செல்லவேண்டும். பிரியமாட்டேன் என்று தெய்வத்தின் முன்னர் முன்பு சூள் உரைத்தாயே அந்தச் சொல்லை அவள் நம்பினாளே அந்தச் சொல் தவறாமல் அவளிடம் செல்லவேண்டும். அவள் தன் நலத்தைத் திரும்பப் பெற நீ செல்லவேண்டும். 

'வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று, ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே' என்பதனால்,களவு வெளிப்பட்ட பின், வரையாது, பொருள்வயின் பிரிந்து வந்தானைத் தோழி எதிர்ப்பட்டு நின்று,தலைவியது ஆற்றாமை கூறி, வரைவு கடாயது

யாப்பு
நேரிசையொத்தாழிசைக் கலிப்பா
தரவு ஒன்று, தாழிசை மூன்று, தனிச்சொல் ஒன்று, சுரிதகம் ஒன்று

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 123 Kalitogai 123

நெஞ்சம் கலங்குதல்
தலைவி கூற்று

கருங் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசைதொறும்
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இருந் தும்பி இயைபு ஊத,
ஒருங்குடன் இம்மென இமிர்தலின், பாடலோடு
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளாக் கிடந்தான் போல்,
பெருங் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங் கானல்  5

புன்னை மலர்கள் கருநிறக் கிளைகளைகளில் பூத்துக்கிடக்கின்றன. சுரும்பு வண்டுகள் ஓசை கொடுத்துக்கொண்டு அவற்றில் தேனை உண்கின்றன. கருநிறத் தும்பிகள் ஒத்த ஓசையுடன் அவற்றில் தேன் உண்கின்றன. அதனால் ‘இம்’ என்னும் ஒலி கேட்கிறது. இந்தப் பாடலையும், யாழிசையையும் கேட்டுக்கொண்டு ஒருவன் தூங்குவது போல, கடலோரத்தில் கானல் நிலம் அமைதியாக உறங்குகிறது.

காணாமை இருள் பரப்பி, கையற்ற கங்குலான்,
மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ? காணாயோ? மட நெஞ்சே!

ஒருவரை ஒருவர் காணமுடியாத இருளைப் பரப்பும் இரவு வேளையில் மாண்பு இல்லாத காம நோயை எனக்குத் தந்துவிட்டு, என்னை விட்டுவிட்டு அவனிடம் சென்றாயே, என் மட நெஞ்சமே, நீ அவனைக் கண்டாயா, காணவில்லையா?

கொல் ஏற்றுச் சுறவினம் கடி கொண்ட மருள் மாலை,
அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ   10
புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ? மட நெஞ்சே!

கொல்லும் சுறா மீன்கள் மணந்து கூடித் திளைக்கும் இருளும் மாலை வேளையில், என்னைத் துன்பப்படுத்திக்கொண்டிருப்பவனிடம் சென்றாயே என் மடமை கொண்ட நெஞ்சமே, நீ அவனைத் நழுவினாயா,  தழுவவில்லையா?

வெறி கொண்ட புள்ளினம் வதி சேரும் பொழுதினான்,
செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ? அறியாயோ? மட நெஞ்சே!

உறவு மணம் புரிந்துகொண்ட பறவைகள் தாம் வாழும் இடத்துக்குச் செல்லும் காலத்தில் செறிந்திருந்த என் வளையல்களைக் கழலும்படிச் செய்தவனிடம் சென்றாயே, என் மட நெஞ்சமே, நீ அவனைத் தெரிந்துகொண்டாயா, தெரிந்துகொள்ளவில்லையா?

என ஆங்கு  15

எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ்
அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ,
இருங் கழி ஓதம் போல் தடுமாறி,
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே!

என்றெல்லாம் நான் எண்ணி இரவும் பகலும் தூங்காமல் கலங்கும்படி எனக்குத் துன்ப நோய் செய்தவனிடம் ஏதோ பெற்றுவிடலாம் என்று எண்ணிக்கொண்டு கடலலை மீண்டும் மீண்டும் கரையேறித் திரும்புவது போல வருந்துகிறாயே, என் மடமை கொண்ட நெஞ்சமே, நீ வருந்துவதுதான் மிச்சம்.

காப்பு மிகுதிக்கண் ஆற்றாத தலைவி தலைவன்பால் சென்ற நெஞ்சினை நோக்கி அழிந்து கூறியது

யாப்பு - நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு - தாழிசை 3 - தனிச்சொல் - சுரிதகம்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 122 Kalitogai 122

அவன் என்ன செய்கிறான்?
தலைவி கூற்று

'கோதை ஆயமும் அன்னையும் அறிவுற,
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப,
காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி,
சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை;
பலவும் நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை;   5
அலவலை உடையை' என்றி தோழீ!
கேள், இனி:

"பூச் சூடிய விளையாட்டுத் தோழியரும், தாயும் அறியும் அளவுக்கு மலர் போன்ற உன் கண் அழகு நலம் இழக்கும்படி அழுகிறாய். உன்னைக் காதலித்துக் கைவிட்டவனை எண்ணிச் சினம் கொள்கிறாய். எங்களுடன் சேராமல் தனித்து இருக்கிறாய். பல நூறு செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்கிறாய்.  அழுது அழுது ஏங்குகிறாய். பெரிதும் துன்பம் உடையவளாகக் காணப்படுகிறாய்" ஏன் என்று என்னை வினவுகிறாய். தோழி! சொல்கிறேன் கேள். 

மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
பேணி அவன் சிறிது அளித்தக்கால், என்  10
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்

அவன் சிறந்த அழகிய மகளிரோடு நிம்மதியாக இருக்கிறான். பிறர் காணக்கூடிய பண்பு இல்லாதவன். இதனை நான் அறிவேன். என்றாலும் அவன் என்னைப் சிறிது அணைத்து அருள் செய்ய வந்தால் என் நாணத்தையும் மறந்து என் நெஞ்சம் நெகிழ்வதையும் நான் உணர்கிறேன். 

இருள் உறழ் இருங் கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
அருளி அவன் சிறிது அளித்தக்கால், என்
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்   15

இருள் போன்ற கருங்கூந்தலை உடைய மகளிரோடு அவன் நிம்மதியாக இருக்கிறான். அவனிடம் தெளிவான பண்பு யாதும் இல்லை. இது எனக்குத் தெரியும். ஆயினும் அருள் கொண்டு அவன் என்னை அணைக்கும்போது மருண்டு போய் என் நெஞ்சம் மகிழ்வதையும் காண்கிறேன். 

ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என்
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்

ஒளிரும் அணிகலன்கள் பூண்ட  மகளிரோடு அவன் நிம்மதியாக இருக்கிறான். நினைத்துப் பார்க்கக் கூடிய பண்பு இல்லாதவனாக இருக்கிறான். இது எனக்குத் தெரியும். என்றாலும் அவன் என்னைத் தழுவி அணைக்கும்போது என் நெஞ்சம் அவனிடம் மடங்கிவிடுவதையும் காண்கின்றேன். 

அதனால்,   20

யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த
காம நோயின் கழீஇய நெஞ்சம்
தான் அவர்பால் பட்டதாயின்,
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே.

அதனால், நள்ளிரவில் தூங்கவிடாமல் என் தூக்கத்தை எடுத்துக்கொண்டு என் நெஞ்சம் காம நோயைக் கழுவிக்கொண்டு அவனிடம் சென்றுவிட்டது. அதனால் என் உடம்பில் உயிர் இருப்பது நகைப்புக்கு உரியதாக இருக்கிறது.

'காமம் சாலா இளமையோள்வயின்' பின் களவொழுக்கம் ஒழுகிய தலைவன் இடையிட்டுப் பிரிந்து,தொன் முறை மனைவியரொடு புணர்ச்சி எய்தி இருந்தானாக, அதனை அறிந்து ஆற்றாளாய தலைவி ஆற்றாமையைக் கண்டு வினாய தோழிக்கு, அத் தலைவி அவன் ஒழுகுகின்றவாறும், தன் நெஞ்சு அவன் வயத்தது ஆயவாறும்,கூறியது. 'மறையின் வந்த மனையோள் செய்வினை, பொறை இன்று பெருகிய பருவரற்கண்னும்'என்பதனாலும், 'பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை' என்னும் சூத்திரத்தானும் உணர்க. (5)

யாப்பு - நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு - தாழிசை 3 - தனிச்சொல் - சுரிதகம்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 121 Kalitogai 121

எறி திரை தந்திட  இழிந்த மீன்
அலை அடித்துவந்த மீன்
படத்தில் கடற்பறவை
தோழி கூற்று

ஒண் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது,
தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்,
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர,
புள்ளினம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று,
வள் இதழ் கூம்பிய மணி மருள் இருங் கழி  5
பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!

ஒளி மிக்க கதிரவன் மலையில் மறையும் போழுது. உலகிலுள்ள மக்கள் ஊர்ந்து இருப்பிடம் செல்லும் காலம். கடல் அலை நீங்காமல் ஒலிக்கும் நேரம். மதியம் குளுமையான நிலா வெளிச்சத்தை வீசும் காலம். இரை தேடி ஆர உண்ட பறவைகள் இருப்பிடம் சேர்ந்து ஒலி எழுப்பும் காலம். கழித்துறையில் வளமைமையான தாமரை பள்ளிகொள்வது போலக் கூம்பியிருக்கும் காலம். இப்படிப்பட்ட கழிமுகம் கொண்ட சேர்ப்பு நிலத்தின் தலைவனே!

தாங்கருங் காமத்தைத் தணந்து நீ புறம் மாற,
தூங்கு நீர் இமிழ் திரை துணையாகி ஒலிக்குமே
உறையொடு வைகிய போது போல், ஒய்யென
நிறை ஆனாது இழிதரூஉம், நீர் நீந்து கண்ணாட்கு   10

தாங்க முடியாத காம உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு நீ ஒருபுறம் மாறி இருக்கிறாய். உன்னால் ஏற்பட்ட துன்பத்துக்குத் துணையாக மேலும் துன்பம் தரும் வகையில் கடலலை ஒலிக்கிறது. பனியில் நனையும் பூ மொட்டு போல நான் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறேன் 

வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு
ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே
கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ
இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு

நீ என்னிடம் வராமல் பிறிதோர் இடத்தில் மாறி இருப்புக் கொண்டுள்ளாய். அதனால் வருந்தும் மேனி உடையவளாக நான் இருக்கிறேன். இருளில் அசையும் காற்று என்னை வருத்துகிறது. கோடல் மலர் இதழ் சோர்ந்து குலையிலிருந்து இதழ்கள் உதிர்வது போல என் வளையல்கள் கழன்று விழுகின்றன.

இன் துணை நீ நீப்ப, இரவினுள் துணையாகி,   15
தன் துணைப் பிரிந்து அயாஅம் தனிக் குருகு உசாவுமே
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான், ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு

நீ எனக்கு இனிய துணையாக இருப்பதை விட்டுவிட்டாய். அதனால் நான் இரவில் தன் துணையைப் பிரிந்து ஏங்கும் குருகுப் பறவை போல  நான் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன். ஞாயிற்றுக்கு எதிர் திசையில் (நண்பகல் - நல்ல பாதி) தோன்றும் மதியம் ஒளி மங்கிக் கிடப்பது போல நான் நலம் கெட்டு அழகிழந்து வாடுகிறேன்.

என ஆங்கு

எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை
மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து,
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய் பரிக் கடுந் திண் தேர் களையினோ இடனே

என்றெல்லாம் சொல்லும்படி வருந்திக்கொண்டிருக்கிறேன். கடலலை ஒன்று மீனைக் கரையில் எறிந்துவிட்டுச் செல்லும். மற்றொரு அலை அந்த மீனைக் கடலுக்குள் எடுத்துச் சென்று காப்பாற்றும். அதுபோல நீ உன் குத்திரை பூட்டிய தேரில் வந்து என் துன்பத்தைப் போக்கும் காலம் இது. வருக. 

தலைவன் ஒருவழித் தணந்த இடத்துத் தலைவி ஆற்றாமை கூறி, வரையக் கருதினாய் ஆயின், 'இஃது இடம்' எனச் சொல்லியது

யாப்பு - நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு - அளவொத்த தாழிசை 3 - தனிச்சொல் - சுரிதகம்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

Tuesday, 27 June 2017

கலித்தொகை 120 Kalitogai 120

செக்கர் | செவ்வானம்
கண்டார் கூற்று

'அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான்,
வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய
இருள் தூர்பு, புலம்பு ஊர, கனை சுடர் கல் சேர
உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல், புல்லென்று, புறம் மாறிக்   5
கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம், இலை கூம்ப
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறாக,
நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலை,
கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை!

அருளையே கண்ணால் காட்டாதவனும், அறத்தை எண்ணியும் பார்க்காதவனும், நன்மை எதுவும் செய்யாதவனும் ஆகிய அரசன் ஒருவன் மக்களுக்கு அச்சத்தை உண்டாக்கி நாட்டை ஆண்டவன் நெஞ்சம் போல இருள் சூழ்ந்து வரும் மாலைக்காலம். மக்கள் புலம்பல் ஊர்ந்துவருமாறு சுட்டெரித்த கதிரவன் மலையில் மறையும் மாலைக்காலம். தன் வலிமையெல்லாம் குன்றிய நிலையில் துன்புற்று ஒருவனை இரப்பவன் நெஞ்சம் வாடுவது போல மரத்தின் இலைகள் கூம்பும் மாலைக்காலம். தோற்றப்பொலிவு கொண்ட சிவந்த வானத்தில் பிறை நிலாவைப் பல்லாகக் கொண்டு நாலாத் திசையும் அழியும்படி கூற்றுவன் சிரிப்பது போல வந்திருக்கும் மாலைக்காலம். அச்சம் தரும் மாலைக்காலம்.

மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின்கண்,   10
வெள்ள மான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும் கொடியான் போல்,
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ?

ஏ மாலைக்காலமே! என் உள்ளத்தை வாங்கிக்கொண்டு சென்றவர் எனக்குத் துணை தராத காலத்தில் வெள்ளம் மான் கூட்டத்தில் ஒரு மானின் நெஞ்சத்தை நோக்கி அம்பு தொடுக்கும் கொடியவன் போல துன்பப்பட்டுக்கொண்டிருப்பவரை மேலும் துன்பப்படுத்த வந்தாயோ?

மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி,
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்,
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ?    15

ஏ மாலைக்காலமே! நெஞ்சில் ஈரம் இல்லாத என் காதலர் அருள் இல்லாமல் என்னை விட்டுவிட்டடுச் சென்றிருக்கும் காலத்தில் போரிடும் வலிமையற்று இருக்கும் ஒருவரை எள்ளி நகையாடிப் பெருமை கொள்பவர் போல, பெருந்துன்பத்தில் உழலும் என்னை வருத்துவதற்காக வந்தாயோ?

மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண்,
வெந்தது ஓர் புண்ணின்கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்,
காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ?

ஏ மாலைக்காலமே! சான்றவராகிய என் காதலர் எனக்குத் துணையாக இருந்து என் துன்பத்தைக் களையாத காலத்தில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுபவர் போல காய்ச்சல் நோயால் துன்புறுபவரை மேலும் காய்ச்சுவதற்காக வந்தாயோ?

என ஆங்கு,

இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை,   20
துனி கொள் துயர் தீரக் காதலர் துனைதர
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஆற்றும்
நல் இறை தோன்ற, கெட்டாங்கு
இல்லாகின்றால், இருளகத்து ஒளித்தே   25

என்றல்லாம் கலங்கும்படி என்னைத் துன்புறுத்திய மாலைப் பொழுது என் பிணக்குத் தீரும்படி என் காதலர் விரைந்து வர மெல்லியலாகிய என்மேல் மாலைக்கு இருந்த  பகை விரைந்து நீங்கிற்று. கைவிடாமல் காக்கும் நல்லரசன் தோன்ற மக்கள் துன்பம் நீங்குவது போல மாலை காலத்து இருள் மறைந்து என் வாழ்வில் மாலை வேளையில் ஒளி பிறந்தது. 

பிரிவிடை ஆற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு, கழிய ஆற்றாளாயின இடத்து, தலைவன் வரவும் அவளது அக மலர்ச்சியும் கண்டார் கூறியது

யாப்பு
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு - தாழிசை 3 - தனிச்சொல் - சுரிதகம்

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 119 Kalitogai 119

குஞ்சுகளுடன் பறவை
தலைவி கூற்று

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப,   5
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த,
சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,
பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,   10
மா வதி சேர, மாலை வாள் கொள,
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்,   15
மாலை என்மனார், மயங்கியோரே

பகலுக்கு வாய் பன்னிறக் கதிர்களை உடைய பகல். அந்தப் பகலே பகலவனை விழுங்கிவிட்டது போல் மாலைக்காலம் வருகிறது. 
சக்கரப் படை கொண்ட திருமால் நிறம் போல இருண்டு வருகிறது. 
நிலா வெளிச்சத்தைக் கொட்டிக்கொண்டு மதியம் விரிகிறது. 
தன் புகழைக் கேட்டவனைப் போல மரம் தூங்குகிறது. 
இவற்றைப் பார்த்துச் சிரிப்பது போல மொட்டுகள் விரிகின்றன. 
மூங்கிலில் செய்த புல்லாங்குழல் ஓசை போல மலரில் வண்டுகள் ஊதுகின்றன. 
பறவைகள் தம் குஞ்சுகளை நினைத்துக்கொண்டு கூடுகளுக்குச் செல்கின்றன. 
கறவை மாடுகள் தம் கன்றுகளை நினைத்துக்கொண்டு தொழுவ மன்றத்துக்குச் செல்கின்றன. 
விலங்குகள் தம் இருப்பிடத்துக்குச் செல்கின்றன.  
மாலை தன் ஒளியை எதிர்கொள்கிறது. 
அந்தணர் செந்தீ வளர்த்து மாலைக் காலத்தைப் போற்றுகின்றனர். 
இப்படிப்பட்ட வேளையில் நான் மட்டும் அவர் இல்லாமல் தனியே வாடுகிறேன். 
இது மகளிரின் உயிராகிய சோற்று மூட்டையை அவிழ்க்கும் காலை (காலம்) என்பது தெரியாமல் ‘மாலை’ என்று மயக்கத்தில் இருப்பவர் சொல்கின்றனர். 

பிரிவிடை மாலைப் பொழுது கண்டு ஆற்றாத தலைவி தோழிக்கு உரைத்தது.

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 118 Kalitogai 118

மாலை மயக்கம்
தலைவி கூற்று

வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அற, தான் செய்த
தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல்
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர,
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன்   5
ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்ப,
குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை!

வெற்றிப் புகழ் கொண்ட மன்னவன் நெறிமுறை பிறழாமல் நாடாண்டு உயிரினங்களைக் காப்பாற்றிய தன் பயனைத் துய்ப்பதற்காக மேலுலகத் துறக்க வாழ்க்ககையை விரும்பி எழுவது போலக் கதிரவன் தோன்றி, பகல் பொழுதெல்லாம் உயிரினங்களுக்கு உதவிய பின்னர் மலையில் இறங்குவதற்கும், நல்லரசன் மாண்டுவிட்டானே என்று அழும் குடிமக்களுக்கு அவன் வழிவந்த அரசன் நிலாவைப் போல ஒளி தந்து காக்க வருவதற்கும் இடைப்பட்ட காலத்தில், குடை நிழலில் காப்பாற்றி நாடாண்டவனுக்கும் நாடாள வருபவனுக்கும் இடைப்பட்ட காலம் போல வந்திருக்கும் மயக்கம் தரும் மாலைக் காலமே!

மாலை நீ தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்;   10
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூப் போல் தளை விட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்

ஏ மாலைக் காலமே! எனக்குப் பற்றுக்கோடு இல்லாமல் துறந்தவரை நினைப்பதால் குளத்தில் பூக்கும் பூவைப் போல குவிந்து வாடும் என் மேனி நலத்தை எள்ளி நகைக்கிறாய். மரத்தில் பூத்த மலர் கட்டவிழ்வது போல காதலரைப் புணர்து களிப்பவரின் அழகினை உன்னால் ஒன்றும் செய்ய முடியாதே!

மாலை நீ தையெனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்;
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்,   15
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்

ஏ மாலைக்காலமே! ‘தை’ என்னும் ஓசையுடன் கோவலர் ஊதும் குழல் இசை கேட்டு ’பை’ என்று நெஞ்சத்தைப் பறிகொடுத்துவிட்டு வருந்துகின்ற என்னிடம் வந்து உன் கைவரிசையைக் காட்டுகிறாய். யாழில் தோன்றும் ‘செவ்வழி’ப்பண் போன்ற மொழி பேசி உறவாடிக்கொண்டு குற்றமற்ற தழுவுதலைக் கொண்டிருப்பவரிடம் உன் கைவரிசை செல்லாதல்லவா?

மாலை நீ தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்ப,
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்;
தகை மிக்க புணர்ச்சியார், தாழ் கொடி நறு முல்லை
முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய்   20

ஏ மாலைக்காலமே! அழகுடன் திகழும் தாழ்ந்த கிளைகளில் அமர்ந்துகொண்டு பறவைக் கூட்டம் ஆரவாரம் செய்வதைப் பார்த்து என் நெஞ்சம் என்னையே பகைப்பதைப் பார்த்து என் புன்மையைப் பாராட்டுகிறாய். காதலருடன் களித்திருப்பவர் கொடியில் முல்லை மலர் முகம் திறப்பது போல் சிரிப்பதை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. 

என ஆங்கு

மாலையும் அலரும் நோனாது, எம்வயின்
நெஞ்சமும் எஞ்சும்மன் தில்ல எஞ்சி,
உள்ளாது அமைந்தோர், உள்ளும்,
உள் இல் உள்ளம், உள்உள் உவந்தே   25

என்றல்லாம் சொல்லும்படி மாலைக்காலம் இடைவிடாமல் என்னை அலர் தூற்றுகிறது. என் நெஞ்சமும் என்னிடம் நிற்கவில்லை. அவரோ என்னை நினைக்காமலேயே விட்டுவிட்டார். அவரை நினைக்கும் என் உள்ளம் எனக்குள் இல்லாமல் அவரிடமே சென்று மகிழ்ச்சி கொள்கிறது. 

பிரிவிடை ஆற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு, அதனொடு புலம்பி, தோழி கேட்ப, அதனொடு புலந்தது

தரவு, தாழிசை 3, தனிச்சொல்,சுரிதகம் என அமந்துள்ள
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா 

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 117 Kalitogai 117

கூடை பின்னும் பெண்ணைப் ‘புலைத்தி’ என்றனர்
தலைவன் கூற்றும் தலைவி கூற்றும்

கையில் உள்ளது யாது?' எனத் 
தலைவியைத் தலைவன் வினாவுதல்
மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ,
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்
கையது எவன்? மற்று உரை   5

நன்றாக உருக்கித் தூயதாக்கிய நல்ல தங்கத்தில் மணி பதித்துச் செய்யப்பட்ட அணிகலனை நன்றாகத் துடைத்து வைத்திருப்பது போன்ற மேனி கொண்டவளே! தொய்யில் எழுதிய கோங்கம் பூ போன்ற முலையை உடையவளே! உன் கையில் என்ன வைத்திருக்கிறாய்? சொல். 

தலைவியின் விடையும் 
தலைவன் வினாவும்
'கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர்
மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில்.' 'புட்டிலுள் என் உள?
காண் தக்காய்! எற் காட்டிக் காண்.'

சேரியில் வாழும் ஒரு கிழவனின் மகள் நான். புலைத்தி ஒருத்தி பனை ஓலையைக் கிழித்த போழில் பின்னித் தந்த கூடை வைத்திருக்கிறேன். - அவள் சொன்னாள். 
கண்ணுக்கு இனியவளே! அதனை எனக்குக் காட்டு - அவன் கேட்டான்.

தலைவி
காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு  10
காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை

இதோ பார். கூந்தலில் பூ சூடிக்கொண்டு என் தோழி அவளது தன் கணவனுடன் காட்டுக்குச் சென்று கொய்துகொண்டு வந்த முல்லை மொட்டுக்கள் இவை. 

தலைவன்
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்!
எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்;
'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு
மெல்லியது, ஓராது அறிவு  15

இவை முல்லை மொட்டுதான். முதிர்ந்த கூந்தலில் கூழைமுடி போட்டிருக்கும் அழகியே! பொழுது போய்விட்டது. இருட்டு வரும் பொழுதாகிவிட்டது. இந்த நேரத்தில் நான் உன்னைப் பார்த்தேன். தனியே செல் என்று நான் எப்படி விடுவேன். என் மனம் மெல்லியது. எண்ணிப் பார்க்காமல் "தனியே செல்" என்று அனுப்ப என் அறிவு விட மறுக்கிறது. 

ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது


கலித்தொகை – முல்லைக் கலி
பாடியவர் – நல்லுருத்திரன்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 116 Kalitogai 116

ஆட்டுக்குட்டியுடன் செல்பவள்
செய்தி - கன்றுக் குட்டி மேய்க்கச் செல்பவள் 
வினை வல பாங்கின் தலைவனும் தலைவியும்
தலைவி
பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ
என்னை ஏமுற்றாய்? விடு

பக்கம் தோன்றும் இடமெல்லாம் புல்வெளியாகக் காணப்படும் புல்வெளியில் கன்றுக்குட்டிகளை மேய்ப்பதற்காகச் செல்லும் என் முன்னே நின்று தடுக்கும் எல்லா! என்னைக் கண்டு ஏங்குகிறாய். என்னை விட்டுவிடு. 

தலைவன்
விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும்  5
கடு வய நாகு போல் நோக்கி, தொழுவாயில்
நீங்கி, சினவுவாய் மற்று

விடமாட்டேன். தொட வருபவர் கையில் பிடிபடாமல் துள்ளி ஓடி எதிர்த்து நின்று முறைத்துப் பார்க்கும் பசுப் போல, தொழுவத்தை விட்டு வந்த பின்னர் என்னைப் பார்த்துச் சினம் கொள்கிறாய். விடமாட்டேன்.

தலைவி
நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு,
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு

நான் இங்குக் கன்றுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் நீ வருவதை விட்டுவிடு. பசுவிடம் சினம் கொண்ட காளை செல்வது போல வருவதை விட்டுவிடு. 

தலைவன்
யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின்   10
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,
நீ அருளி நல்கப் பெறின்

உன் தாய் வரட்டும். அல்லது பிறர் யார் வந்தாலும் வரட்டும். அல்லது நாட்டை ஆளும் அரசன் வந்தாலும் வரட்டும். நான் மனம் தளரமாட்டேன். நீ அருள் புரியவேண்டும். 

தலைவி
நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ'
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்
மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்!   15
கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும்
வருவையால் நாண்இலி! நீ

நான் என்ன சொன்னாலும் நினைத்துப் பார்த்து நீ ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய். பெருமழை பொழியும் மேகம் போல் தலையைச் சாய்த்துக்கொண்டு வருகிறாய். எனக்கு எதிராகவே பேசி மயங்கி நிற்கிறாய். நாளை நான் கறந்த பால் ஏனத்துடன் செல்லும்போது, நாணம் இல்லாத நீ காட்டுப் பக்கம் வருக. (அளி செய்கிறேன்) 

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு விலக்கிய தலைவனோடு அவள் சில மொழி, கூறி, குறியிடம் கூறியது


கலித்தொகை – முல்லைக் கலி
பாடியவர் – நல்லுருத்திரன்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

Monday, 26 June 2017

கலித்தொகை 115 Kalitogai 115

தலையில் பூ
தலைவி கூற்றும் தோழி கூற்றும்

'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்

தலைவி சொல்கிறாள் - தோழி! யாருக்கும் தெரியாமல் கள்ளைக் குடித்த நான் நாணம் இல்லாமல் பிறரிடம் எடுத்துச் சொல்வது போல மறைத்தது தெரியும்படிக் கையும் களவுமாக மாட்டிக்கொண்டேன். 

புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!   5
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்

என்மையான இயல்பை உடையவளே! அவன் ஆடு மேய்க்கும் இடையர் மகன். அவன் முல்லைப் பூக் கண்ணிமாலை அணிந்துகொண்டு வந்தான். அதில் ஒரு கெட்டியான கண்ணியை நான் கூந்தலில் வைத்து முடித்துக்கொண்டேன். 

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ

தோழி, கேள். தாய் வெண்ணெய் பூசி வளர்த்த கூந்தல் அது. என் தயந்தையும் தாயும் இல்லத்தில் இருந்தனர். என் தாய் நாணும்படியாக என் தலையில் இருந்த அவன் பூ என் தாய் முன்னர் விழுந்துவிட்டது. 

அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள்,   10
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்

அந்தப் பூவைப் பார்த்த தாய் என்னை எதுவும் கேட்கவில்லை. நெருப்பைக் கையில் தொட்டவள் போல கையால் நெட்டி முரித்துவிட்டுப் புழக்கடைப் பக்கம் போய்விட்டாள். 

சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா!   15
ஈங்கு எவன் அஞ்சுவது?

நானும் என் மண எண்ணெய் பூசிய கூந்தலை வாரி முடித்துக்கொண்டு, நிலத்தைத் தொடும்படி உடுத்தியிருந்த பூக்கரை போட்ட நீல நிற ஈடையைக் கையில் தாங்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டேன். அதற்கு, தோழியே, நாம் ஏன் அஞ்சவேண்டும்?

அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம்,   20
அல்கலும் சூழ்ந்த வினை.'

அஞ்ச வேண்டாம். நீ அவன் சூடிய கண்ணியை உன் தலையில் அணிந்தாய் ஆயின், நம்மவரும் உன்னை அவனுக்கே திருமணம் செய்து தர எண்ணிக்கொண்டிருக்கின்றனர். வீட்டுப் பரப்பில் புதுமணலைக் கொண்டுவந்து பரப்பிக்கொண்டிருக்கின்றனர். திரை பின்னணியில் திருமணசெ சடங்கும் நிகழ்த்துவர். இதுவே நாள்தோறும் நம் இல்லத்தில் நடந்துகொண்டிருக்கிறது. - தோழி தலைவியிடம் கூறுகிறாள். 

தலைவி, 'களவு வெளிப்பட்டது' என்று அஞ்சி, தோழிக்குச் சொல்ல, 'நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்' எனச் சொல்லி, அச்சம் நீக்கியது


கலித்தொகை – முல்லைக் கலி
பாடியவர் – நல்லுருத்திரன்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 114 Kalitogai 114

ஓரி முடி
தலைவி கூற்று
தலைவி
வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரைக் கண்டு? 'மதி அறியா
ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ  5
தோழி! அவனுழைச் சென்று

படியாத ஓரி முடி தலையில் கொண்டு வாரி இருபுறமும் தொங்கும்படி முடிந்திருக்கும் புதல்வன் அழுகிறான் வந்து அருள் புரிக என்று அவனிடம் சொல். (தலைவி அழுவது தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்தப்படுகிறது) புதிதாக மாலை கட்டி எனக்குத் திருமணம் செய்துவைக்க முயலும் பெற்றோரைக் கண்டு, இவள் மதித்திருப்பதை எண்ணிப்  பார்க்காத ஏழைகளே, என்று பெற்றோரிடம் சொல். - தலைவி தோழியிடம் சொல்கிறாள். 

தோழி
சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி

சென்று நான் சொல்கிறேன். மேலும்  கூறுக. - தோழி சொல்கிறாள். 

தலைவி
'சொல் அறியாப் பேதை' மடவை! 'மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
நினக்கு வருவதாக் காண்பாய்'. அனைத்தாகச்   10
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த   15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
அரு நெறி ஆயர் மகளிர்க்கு   20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?

தலைவி விளக்கமாகச் சொல்கிறாள். - சொல்லத் தெரியாத பேதையை! மடமைக் குணம் கொண்டவளே! எல்லா! உனக்கு இத்தகைய நிலை நேரவில்லை. என் நிலைமை உனக்கு வந்ததாக எண்ணிக்கொண்டு அவரிடம் சென்று எடுத்துச் சொல். விரைந்து செயல்படுமாறு எடுத்துரை. என் பெற்றோர் என் திருமணத்துக்கு ஆவன செய்கின்றனர். வீட்டு முற்றத்தில் புது மணல் பரப்புகின்றனர். வீட்டுச் சுவர்களுக்குச் செம்மண் (பூவல்) பூசுக்கின்றனர்.  என்னுடன் கொடையாகத் தர கறவை எருமையைக் கொண்டுவந்துள்ளனர். நான் இங்குத் தனிமையில் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன். அன்று ஆற்றுத்துறை மணலில் சிற்றில் இழைத்து விளையாடியபோது, அழகிய ஆயப் பெண்கள் பலர் இருக்கும்போது, அவன் என்னை மட்டும் தனியே அழைத்துச் சென்று, உறவு-மணம் செய்துகொண்டது அவனுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது என்ன மனக் குழப்பத்தோடு இருக்கிறாய்? இந்த உலகத்தையே கொடையாகப் பெற்றாலும் அரிய  கற்பு நெறியைக் கடைப்பிடிக்கு ஆயர் மகளிர்க்கு இரண்டு திருமணங்கள் நடைபெறுதல் இயல்பு அன்று என்று எடுத்துச் சொல். 

'ஆங்கு அதன் புறத்துப் புரைபட வந்த, மறுத்தலொடு தொகைஇ' என்பது, அவன் வரைவு வேண்டின இடத்து, அவ் வரைவு புறத்ததாகிய வழி, தலைவி தன் உயர்வு உண்டாகத் தோன்றிய மறுத்தலோடே முன் கூறியவற்றைத் தொகுத்து' என்று பொருள் கூறி, 'அதன் புறம் எனவே, அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவு ஆயிற்று' என்றாம். உயர்வு குடிப் பிறப்பும் கற்பும்; அதற்கு ஏற்ப, 'பிறர் வரைவு மறுத்து, தலைவன் வரையுமாறு நீ கூறு' எனத் தோழிக்குக் கூறியது (14)


கலித்தொகை – முல்லைக் கலி
பாடியவர் – நல்லுருத்திரன்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 113 Kalitogai 113

காதல் கொள் காமம்
வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று
தலைவன்
நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்,
அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ,
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்

நலம் மிகும்படிப் பொங்கும் நயமான அகன்ற தோளையும், சுழன்று ஆசை மூட்டும் கண்களும் உடைய நல்லவளே! நீ தாக்கிய ஏக்க நோயிலிருந்து நான் தப்பிப்  பிழைக்கும் வழியைச் சொல்லிவிட்டுச் செல். 

தலைவி
பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்
யார் எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி?   5

உன்னை நான் அறிந்ததும் இல்லாத நிலையில் என்னைக் கண்டு பெரிதும் ஏக்கம் கொண்டவன் போல தடுக்கின்றாயே, எல்லா, நீ யார் 

தலைவன்
தளிரியால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப்
புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான்

தளிர் போன்ற இயல்பினை உடையவளே! என்னை நீ தெரிந்துகொள்ள வேண்டுமா? நான் ஒரு ஆயர் மகன். புல்லும் காளை இனத்தவன். 

தலைவி
ஒக்கும்மன்
புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு
நல் இனத்து ஆயர், எமர்  10

நீ சொல்வது பொருந்தும். நீ புல்லும் இனத்து ஆயன் என்றால், குடம் நிறையப் பால் கறக்கும் மெல்லிய இனத்துப் பசு எம்மவர்.

தலைவன் கூற்றும் தலைவி மாற்றமும்
'எல்லா!
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லைமன்'
'ஏதம் அன்று; எல்லை வருவான் விடு'

உன்னிடம் சொன்னால் குற்றம் ஒன்றும் இல்லை - அவன் சொல்கிறான். 
குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் எல்லை தாண்டி என்னிடம் வருவதை விட்டுவிடு. - அவள் சொல்கிறாள்.

தலைவன்
விடேன்.
உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம் பட்டு,   15
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்?

விடமாட்டேன். நீ உடன்பாடு கொண்ட சொற்களைப் பேசுகிறாய். அவற்றில் மென்மை இருக்கிறது. இதனைத் தெரிந்துகொண்டேன். மென்மையான இயல்பினை உடையவளே! நீ சொல்வதைக் கேட்டுக்கொண்டு நானோ விட்டுவிடுவேன்? நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படித்தான் செய்வேன்.

தலைவி
'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார்   20
பொய்ம் மொழி தேறுவது என்?

உன் நெஞ்சு உன்னை ஏவல் செய்யாது என்று காத்துக்கொண்டிருப்பவனே! ஒரு பக்கம் நீ காதல் செய்யும் காமம் கலக்கும்போது, உன் நெஞ்சமாகிய மற்றொருவருக்காகக் காத்திருப்பது ஏன்?

தலைவன்
தெளிந்தேன், தெரியிழாய்! யான்
பல்கால், யாம் கான்யாற்று அவிர் மணற் தண் பொழில்,
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை   25
இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று,
உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண்
நல் ஏறு நாகுடன் நின்றன,
பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே

தெரிந்தெடுத்த அணிகலன் பூண்டவளே! தெளிவு பெற்றுவிட்டேன். நான் பலமுறை தெரிந்துகொண்டேன். காட்டாற்று மணலில் அ.கிய சோலை. அதில் நாம் இருக்கும் அகன்ற பாறை. ஆயத்தாரோடு விளையாடலாம். முல்லை, குறிஞ்சி ஆகிய பூக்களைப் பறித்து தலை உச்சியில் சூடிக்கொள்ளலாம். இரவு வரும் எல்லை வந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் இங்குக் க.இக்கலாம். ஆனால் படமெடுத்தாடும் பாம்பைத் தாக்கும் இடி போல் காளையும் பசுவும் வேறு பல ஆனிரைகளும் நமக்காகக் காத்துக்கொண்டு நிற்பதைப் பார். அவை நம்முடன் வரவேண்டுமே. செல்லலாம்.

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு, அவளை வினை வல பாங்கின் தலைவன் விலக்கி, அவளோடு சிறிது கூறியவழி, அவள் கூடலுறுகின்றாள் கூறியது, இது கைக்கிளை


கலித்தொகை – முல்லைக் கலி
பாடியவர் – நல்லுருத்திரன்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 112 Kalitogai 112

முயங்கு. நின் முள் எயிறு உண்கும்
வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று
தலைவி
யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர்
பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க்
கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு
சொல்லல் ஓம்பு என்றார், எமர்

யார் இவன் என்னைத் தடுத்து நிறுத்துகிறான்? தண்ணீர் இல்லாமல் வாடும் தாமரைப் பூ மாலை அணிந்துகொண்டிருக்கும் கல்லாத பொதுவனே! நீ விலகிச் செல். உன் போன்றவர்களிடம் வாய்ப்பேச்சும் பேசக்கூடாது என்று என்னைச் சேர்ந்தவர்கள் எனக்குச் சொல்லிவைத்திருக்கிறார்கள். 

தலைவன்
எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும்   5
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்,
விடாஅல்; ஓம்பு' என்றார், எமர்

ஒளி மிக்கவளே! நீ பார்க்கும் பார்வை என்னைக் காம நோயில் விழச் செய்கிறது. நட்டு வளர்க்காத கரும்பு போன்ற தோளை உடையவரைக் கண்டால் விட்டுவிடாதே, உன்னவளாகப் பாதுகாத்துகொகொள், என்று என்னைச் சேர்ந்தவர்கள் எனக்குச் சொல்லிவைத்துள்ளனர்.

தலைவி
கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்கி, நயந்து, அவர்
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட,
நல்லது கற்பித்தார் மன்ற; நுமர் பெரிதும்   10
வல்லர், எமர்கண் செயல்

பெண்களைக் கண்டால் பண்புகளையெல்லாம் விலக்கிவிட்டு, அவளை விரும்பி, அவளது பல், இதழ், கண், தோள் ஆகியவற்றைப் புகழ்ந்து பாடு என்று நல்லது கற்பித்திருக்கிறார் போலும், உன்னை வினவிக் கேட்டறிந்தவர், உன்னுடையவர்கள் மிகவும் நல்லவர்கள்! என்னிடம் செயல்படச் செய்திருக்கிறார்கள். 

தலைவன்
ஓஒ! வழங்காப் பொழுது, நீ கன்று மேய்ப்பாய் போல்,
வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை
இகழ்ந்தாரே அன்றோ, எமர்?

ஓ, யாரும் நடமாட்டம் இல்லாத காலத்தில் நீ கன்றுக்குட்டிகளை பேய்ப்பவள் போல வருவதை அறிந்தவர் இப்படிச் சொல்லாவிட்டால் என்னை இகழ்ந்தவர் ஆவார். 

தலைவி
ஒக்கும்; அறிவல் யான் எல்லா! விடு   15

அதெல்லாம் சரி. இப்போது என்னை விட்டுவிடு.

'என்னை முயங்கு' 
என்ற தலைவனை நோக்கித் 
தலைவி உரைத்தல்
'விடேன், யான்; என், நீ குறித்தது? இருங் கூந்தால்!
நின்னை, "என் முன் நின்று,
சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ
புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல
முயங்கு; நின் முள் எயிறு உண்கும். ' எவன்கொலோ?   20
மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவதுஆயின், தலைப்பட்டாம்; பொய்ஆயின்,
சாயல் இன் மார்பில் கமழ்தார் குழைத்த நின்
ஆய் இதழ் உண்கண் பசப்ப, தட மென் தோள்
சாயினும், ஏஎர் உடைத்து.'   25

விடமாட்டேன். நீ என்ன நினைப்பது? இருண்ட கூந்தல் அழகியே! என் முன் நின்று பேசாதே என்று சொன்னார்களே அல்லாமல், என்னைத் தழுவாதே என்று சொன்னார்களா? இல்லையே. ஆகவே என்னை மெல்லத் தழுவிக்கொள். முள் போன்று உன் பற்களைச் சுவைத்து உண்ண வேண்டும். - என்றெல்லாம் மாயப் பொதுவன் உரைத்தான். தோழி சொல்கிறாள். இது உண்மையாக நடந்துவிட்டால் நல்லது. இல்லாவிட்டால் உன் மார்பில் அணிந்திருக்கும் மாலை அவனை எண்ணி ஏங்கி வாடி, உன் கண் பசந்து, உன் தோள்களும் வாடி, உன் அழகெல்லாம் கெட்டுப்போனாலும் உனக்கு அழகுதான்.

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு, வினை வல பாங்கின் தலைவன் விலக்கி,நகையாடி, இருவரும் சில மொழி கூறியவழி, அவள் கூட்டத்திற்கு உடம்பட்டது. இது கைக்கிளை

கலித்தொகை – முல்லைக் கலி
பாடியவர் – நல்லுருத்திரன்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி