Wednesday, 31 May 2017

நாலடியார் 218 Naladiyar 218

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு. 218

நாயின் காலில்  இருக்கும் சிறிய விரல்கள் போல் நன்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் ஈயின் கால் அளவு கூடச் சிறிதும் உதவாதவர்களின் நட்பால் என்ன பயன்? 

பயிரை விளைவிக்கும் வயலுக்கு மிகத் தொலைவிலிருந்து வந்து பாயும் வாய்க்கால் போன்றவர்களின் நட்பினைத் தேடிச் சென்று உண்டாக்கிக் கொள்ள வேண்டும். 

பொருட்பால் - நட்பாராய்தல்

ஈக்கால் \ ஈயின் கால்

நாய்க்கால் \ நாயின் கால்

நாலடியார் 217 Naladiyar 217

எட்டிப் பழம்

கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய். 217

அமிழ்தம் - உண்டவரைச் சாகாமல் இளமையுடன் இருக்கச் செய்யும் மருந்து 
காஞ்சிரங்காய் - எட்டிக்காய், தின்றவரைக் கொன்றே தீர்க்கும் மருந்து 

அரிசி களைந்த கழுநீரில் வேகவைத்த பச்சைக் கீரையே ஆனாலும் விருப்பமுடன் தந்து விருப்பமுடன் பெற்று உண்டால் அது அமிழ்தம் போன்றதாகும். 

செவ்விய முறையில் தாளித்துச் சமைத்தளித்த சோறே ஆனாலும் விரும்பமின்று இட்ட உணவை உண்டல் எட்டிக்காய் போன்றதாகும். 

பொருட்பால் - நட்பாராய்தல்

நாலடியார் 216 Naladiyar 216

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு. 216

 • அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சினால் பயன் தரும் பாக்குமரம் போல் உதவும்போது மட்டும் உதவுபவர் கடைப்பட்ட நண்பர். 
 • எப்போதாவது தண்ணீர் பாய்ச்சினாலும் பலன் தரும் தென்னை மரம் போன்றவர் இடைப்பட்ட நண்பர். 
 • ஊன்றியபோது ஊற்றிய நீரோடு பின்னர் தண்ணீர் பாய்ச்சாமலேயே வளர்ந்து பலன் தரும் பனை மரம்  போன்றவர் தலையாய நண்பர்

பாக்கு மரம் \ கமுகு \ கமுக மரம்

தென்னை மரம் \ பெண்ணை மரம்

பனை மரம்
பொருட்பால் - நட்பாராய்தல்

நாலடியார் 215 Naladiyar 215

தாமரை
குளத்தில் பூக்கும் பூ
காலையில் மலரும், மாலையில் குவியும், மறுநாள் மீண்டும் மலர்ந்து குவியும் 

பூவரசம்பூ
மரத்தில் பூக்கும் பூ
பூத்தது கூம்பாது, வாடி உதிரும்

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாகும் நட்பாரும் இல். 215

மரத்தில் பூக்கும் பூக்கள் மலர்ந்தவை உதிரும் வரையில் கூம்புவதில்லை. அதுபோல 
விரும்பிய விருப்பம் மாறாமல் இருப்பதுதான் நட்பின் ஆளுமைத்திறன். 

தோட்டத்துக் குளத்தில் பூக்கும் தாமரை, அல்லி போன்ற பூக்கள் மலர்ந்தும் குவிந்தும் பின்னும் மலர்ந்தும் பல நாள் இருக்கும். 
அதுபோல
கண்முன் முகம் மலர்ந்து காட்டி, கண் மறைந்ததும் முகம் சுளிப்பவரை நட்பாக்கிக் கொள்ளும் நண்பர் இல்லை. 

பொருட்பால் - நட்பாராய்தல்

நாலடியார் 214 Naladiyar 214


பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்
நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு. 214

பக்கத்தில் பல  நாள் இருந்தாலும் உள்ளம் ஒன்றாதவர் சில நாள் கூட ஒட்டிபோக மாட்டார். 
நெஞ்சோடு நெஞ்சு கலந்து கட்டுண்ட ஒருவர் விலகி இருக்கிறார் என்பதற்காக விலகியுள்ளார் எனக் கைவிடுதல் உண்டோ?
கைவிட மாட்டார். 

'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்' என்பது குறள்.

பொருட்பால் - நட்பாராய்தல்

நாலடியார் 213 Naladiyar 213

நன்றியுடன் வாலாட்டும் நாய்
நாய் போன்றவர் நட்பு வேண்டும் 

யானை யானையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய். 213

யானை பெரியது. 
என்றாலும்,
யானை போன்றவரின் நட்பினை விலக்க வேண்டும். 
ஏனெனில்,
யானை நன்றாக அறிந்திருந்தும் அதனைப் பேணும் பாகனையே கொல்லும் இயல்பினை உடையது. 
நாயைப் போன்றவர் நட்பினைத் தழுவிக்கொள்ள வேண்டும். 
ஏனெனில், 
(விலங்கினை வேட்டையாடும்போது வேட்டை விலங்கின் மீது வீசிய) வேல் தவறுதலாகத் தன்மீது பாய்ந்தபோதும் தன்னை வளர்ப்பனைப் பார்த்துத் தன் வாலைக் குலைத்துக்கொண்டு சுற்றித் திரியும் குணம் கொண்டது.

பொருட்பால் - நட்பாராய்தல்

நாலடியார் 212 Naladiyar 212

புனல் ஒழுகல்

இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று. 212

பொன் நிறத்தில் புது வெள்ளம் ஒழுகும்போது பறவைகள் பறந்தோடும் நாட்டின் வேந்தனே!
"இவர் நல்ல குடியில் பிறந்தவர், இடையில் மனம் திரியமாட்டார்"  என்று எண்ணி நட்பு கொள்வது வழக்கம். 
ஒருவரின் மனத்தை அறிந்துகொண்டு நட்பு கொள்வதென்பது கடினம்.

பொருட்பால் - நட்பாராய்தல்

நாலடியார் 211 Naladiyar 211

கரும்பு தின்னல் 

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ் ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு. 211

கரும்பை நுனிப்பகுதியிலிருந்து அடிப்பகுதி நோக்கிக் கடித்துத் தின்றுகொண்டே சென்றால் போகப் போக இனிப்பு மிகுதியாகும். 
அதுபோல
மற்றவரின் கருத்தினை உணர்ந்துகொண்டு கல்வி கற்று உணர்ந்துகொண்டவர் நட்பானது போகப் போக மேலும் மேலும் இனிக்கும். 

மாறாக அதன் எதிர் திசையில்
கரும்பை அடியிலிருந்து நுனி நோக்கித் தின்றால் சுவை குறைந்துகொண்டே செல்லும். 
அதுபோல
இனிமை இன்பம் காணாதவர் நட்பானது சுவை குறைந்துகொண்டே செல்லும். 

பொருட்பால் - நட்பாராய்தல்

Tuesday, 30 May 2017

நாலடியார் 210 Naladiyar 210

வெருக்கு = நெய்
வெருக்குக் கண் வெங்கருணைச் சோறு
விருப்பில்லார் இல்லத்து வேறிருந்து உண்ணும்
வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போடு இயைந்த அமிழ்து. 210

விருப்பம் இல்லாதவர் இல்லத்தில் அவர் ஓரிடத்திலும் தான் மற்றோர் இடத்திலும் அமர்ந்து உண்ணும் நெய் ஊற்றிய கருணைச் சாப்பாடு வேம்பு போல் கசப்பு உடையதாக அமையும். 

விருப்பம் உடையவராகத் தம்மைப் போலவே விளங்கும் உறவினர் இல்லத்தில் ஓரிடத்தில் சேர்ந்திருந்து உண்ணும் உணவு "அவருக்குப் போதுமோ போதாதோ" என்று தயங்கித் தயங்கி உண்ணும் நீராகாரப் புல்லரிசிச் சோறு எலும்பில் ஊறிக் கலக்கும் அமிழ்தம் போன்றதாகும். 

பொருட்பால் - சுற்றம் தழால்

நாலடியார் 209 Naladiyar 209


நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன் றுண்டோ ! - இறுமளவும்
இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால். 209

நல்ல குளுமையான மலர்மாலை அணிந்தவளே!
நண்பருக்கு நண்பராக விளங்குபவர் இறந்த பின்னர் மறுமையில் ஏதாவது ஒருவருக்கொருவர் செய்துகொள்ள முடியுமா? 
முடியாதே
அப்படி இருக்கும்போது 
சாகும் வரையில் 
ஒருவர் இன்புறுவனவற்றில் மற்றொருவரும் சேர்ந்து இன்புற்று, 
ஒருவர் துன்புறுவனவற்றறில் மற்றொருவரும் சேர்ந்து துன்புற்று
வாழாவிட்டால் என்ன பயன்?

பொருட்பால் - சுற்றம் தழால்

நாலடியார் 208 Naladiyar 208

முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார். 208

முட்டிகை = சம்மட்டி
குறடு = காய்ச்சிய இரும்பைப் பிடிக்கும் குறடு
சூட்டுக்கோல் = வேல் முதலான கருவிகளை வடிக்கத் தீயில் காய்ச்சப்படும் இரும்பு 

சம்பட்டி இரும்பை அடிப்பது போல அடித்து, ஆனால் சினம் கொள்ளாமல் அடித்துப் பிழைப்பு நடத்துபவர்களும் உள்ளனர். 
குறடு இரும்பைப் பிடித்துத் தருவது போல் பிடித்துச் சம்பட்டி அடிக்க உதவுவது போல உதவிப் பின் கைவிட்டுப் பிழைப்பு நடத்துபவர்களும் உள்ளனர். 
சூட்டுக்கோல் போல எரியும் நெருப்பில் உடன் வெந்து உதவுபவர்களும் உள்ளனர். 

சுற்றத்தாரை அடிப்பவர் 
சுற்றத்தாரைக் கைவிடுபவர் 
சுற்றத்தாருடன் துன்புறுபவர்
என்றெல்லாம் மக்கள் உள்ளனர். 

முட்டிகை \ அடிக்கும் சம்பட்டி

குறடு

இடக்கையில் பிடித்திருப்பது சூட்டுக்கோல் 

பொருட்பால் - சுற்றம் தழால்

நாலடியார் 207 Naladiyar 207

அடகு
கீரை

நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது. 207

நாள்தோறும் வேளை தவறாமல் விரும்பத் தகுந்த உணவினைக் கருணை உள்ளத்தோடு வழங்கிடுவரேனும், பிறர் முயற்சியால் கிடைத்த உணவினை உட்கொள்ளுதல் வேம்பு போல் கசப்புக்கு உரிய ஒன்று ஆகும்.

நெஞ்சமே, கேள். 

பெரும் பசியுடன் இருக்கும்போது சமைத்த கீரை உணவை மட்டும் இட்டாலும் 
தம்முடையவர் தரும் உணவே இனிமை பயப்பதாகும்.

பொருட்பால் - சுற்றம் தழால்

நாலடியார் 206 Naladiyar 206

வான் புழுங்கல்

பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோடு அமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்
டெக்காலத் தானும் இனிது. 206

பொன் வட்டிலில்
புலியின் நகம் போன்ற அரிசியில் சமைத்த வெண்பொங்கல்
வெல்லம் பால் சேர்த்துப் பொங்கிய சருக்கரைப் பொங்கல் 
ஆகியவற்றை, 
தன்னை விரும்பாதவர் தர 
உண்பதை விட 
உப்பில்லாப் புல்லரிசிச் சோற்றை 
உயிர் போன்ற உறவு கொண்டவர் தர உஉண்பது 
எந்தக் காலத்திலும் இனியது. 

பொருட்பால் - சுற்றம் தழால்

நாலடியார் 205 Naladiyar 205


இன்னர் இனையர் எமர்பிறர் என்னும்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார். 205

இவர் இன்னார் 
இவர் இன்ன தன்மை உள்ளவர் 
இவர் எனக்கு வேண்டியவர் 
இவர் பிறர் 
என்று சொல்லி வேற்றுமை  பாராட்டாத இயல்பினை உடையவராகத் 
தொலைதூர மக்களே ஆனாலும் 
அவர்களது துன்பத்தைத் தீர்க்கும் இயல்பினை உடையவரே 
தலைமக்கள் என்று கொள்ளத்தக்கவர் ஆவார். 

பொருட்பால் - சுற்றம் தழால்

நாலடியார் 204 Naladiyar 204

நிலை திரியா நெறியுடைய பெரியார் 

உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; - நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு. 204

உலகமே அறியும்படி முழுமனத்துடன் நட்பு கொண்டாலும் 
சிற்றினத்தவரோடு கொண்ட நட்பு சில நாட்களே நீடிக்கும். 
தளராத நெஞ்சுறுதி கொண்டவரோடு கொள்ளும் நட்பானது
நிலை திரியாமல் தவநெறியில் ஒருமித்து நிற்கும் முனிவர் மனம் போல ஒருமைப்பாட்டுடன் நிலைத்து நிற்கும். 

பொருட்பால் - சுற்றம் தழால்

நாலடியார் 203 Naladiyar 203

காய்க்கும் காய்களையெல்லாம்
தாங்கும் மரக்கொம்பு

அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை
எடுக்கலம் என்னார் பெரியோர்; - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு. 203

அடுக்கடுக்கான மலைகள் இருக்கும் நாட்டை உடைய அரசனே
ஒரு மரத்தில் மேலும் மேலும் பலப்பல பெரிய காய்கள் காய்த்தாலும் அவற்றைத் தாங்க இயலாது, இனி காய்க்காதே என்று சொல்லும் மரக்கொம்பு உண்டா?
இல்லை 
அதுபோல,
தன்னை வந்தடைந்தவர் எத்தனை பேர் ஆனாலும் அவர்களைக் காப்பாற்ற இயலாது எனக் கைவிடும் பெரியோரும் இல்லை. 


பொருட்பால் - சுற்றம் தழால்

நாலடியார் 202 Naladiyar 202

நிழல் தரும் மரம்
அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழு மரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன். 202

மிகுந்த வெயில் அடிக்கும் காலத்தில் தன்னிடம் வந்தவர்க்கெல்லாம் நிழல் தரும் மரம் போல வாழ்வதும் 
பழுத்திருக்கும் மரம் போலப் பலரும் தான் ஈட்டிய பொருளைத் துய்க்கும்படி வாழ்வதும் 
வருந்தி உழைத்து வாழ்வதே நல்ல ஆண்மகனின் கடமை ஆகும். 


பொருட்பால் - சுற்றம் தழால்

நாலடியார் 201 Naladiyar 201

கவான் மீது குழந்தை 

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும். 201

கவான் = கவட்டை போன்ற இரு தொடைகள் 
வயா = கருவுற்றிருக்கும் காலத்தில் மண்ணைத்  தின்னும் மசக்கை நோய் 
அசா = அசதி 

கருவுற்றிருக்கும் காலத்தில் தோன்றும் வயா 
குழந்தையைச் சுமக்கும் வருத்தம் 
குழந்தை பெறும்போது உண்டாகும் வலி 
இவற்றைத் தாய் தன் குழந்தையைத் தன் மடியில் காணும்போது மறப்பது போன்று  
நோயால் அசதியுற்றிருக்கும்போது தன் சுற்றத்தார் வந்து பார்த்து ஆறுதல் கூறும்போது தெம்பு பிறக்கும். 

பொருட்பால் - சுற்றம் தழால்

Monday, 29 May 2017

கலித்தொகை 62 Kalitogai 62

ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்
'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் 5
புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?'

அவள் சொல்கிறாள் 
இவன் ஒருவன் 
கொஞ்சமும் வெடகம் இல்லாதவன் 
அவனை விரும்பவில்லை என்று சொல்பவரையும் விரும்பியவனாகக் கையைப் பற்றி இழுக்கிறான் 

அவன் சொல்கிறான்
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும். 
அது எனக்குத் தெரியாது. 
பூத்திருக்கும் கொடி போன்றவள் நீ. 
உன்னைத் தழுவினால் எனக்கு இன்பமாக இருக்ககிறது. 
அதனால் அணைத்துக்கொண்டேன். 

அவள் சொல்கிறாள் 
எல்லா தனக்கு இன்பமாக இருக்கிறது என்று பிறருக்குத் துன்பம் செய்வது நல்லது ஆகுமா?

சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10
உண்பவோ, நீர் உண்பவர்?

அவன் சொல்கிறான் 
சுடர் வீசும் வளையல் அணிந்தவளே 
உன் சொற்கள் களையப்பட வேண்டியவை 
பூப்பு எய்திய உன் பருவத்ததுக்கு ஏற்றபடி பேசுக. 
நான் சொல்வதைக் கேள் 
தண்ணீர் பருகுபவர் தணக்கு இனிதாக இருக்கிறது என்று பருகுவார்களே அல்லாமல் தண்ணீருக்குத் தான் பருகுவதாஆல் இனிமையாக இருக்கிறது என்று உண்பார்களோ?

செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று; 15

தலைவி சொல்கிறாள் 
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை 
ஐந்து தலை நாகத்தின் வாயில் பட்ட இரையை நொந்துக்கொள்வார்களோ?
நொந்துகொள்ள மாட்டார்கள் 
களங்கமற்ற நிலாப் போன்ற முகமுடையவரை வலுக்கட்டயமாக துய்ப்பதையும் அவன் அறம் என்று கண்டிருக்கிறான்.

'அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.

தலைவி கூற்று தொடர்கிறது
அறம் இப்படி இருக்குமாயின், என்ன செய்வது?
நான் உரைக்கும் நெறிமுறைகளை அவன் கேட்கவில்லை 
என்னைக் கசக்கினான். 
முன் பிறவியில் நீயும் நானும் எஏறு அல்லோம் என்னும் உண்மை ஒன்று உண்டு போலும். 
அவனோடு மாறுபாடு ஏன்? 
நெஞ்சமே 
அவனை ஏற்றுக்கொள்.

வெண்கலிப்பா

கலித்தொகை 62 – குறிஞ்சிக் கலி 26 - தலைவன் கூற்று
பாடியவர் – கபிலர்
திணை - குறிஞ்சி
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 61 Kalitogai 61

எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்:
செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர்
அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று,
சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், 5
மெல்ல இறைஞ்சும் தலை;

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.
எல்லா 
இவன் ஒருவனைப் பார் 
இவனுக்கு என்ன கிடைக்கவில்லை 
இதனைக் கேள்
செலவத்தை இழந்த ஒருவர் வாட்டமுடன் தன் துன்பத்தைப் போக்கத்தக்க சான்றாண்மை மிக்க உறவினரிடம் சென்று தன் நிலைமையை உரைக்கச் சென்றவர் அதனைச் சொல்ல முடியாமல் வருத்தத்துடன் பலமுறை மீண்டும் மீண்டும் செல்வது போல
இவன் என்னிடம் திரும்பத் திரும்ப வந்து என்னையே பார்க்கிறான் 
நான் அவனைப் பாருத்தால் அவன் என்னை வணங்குகிறான்.

எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை;
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்!
என், நீ பெறாதது? ஈது என்?

தோழி தலைவனை வினவுகிறாள் 
எல்லா
நீ உன் நினைவில் வைத்திருப்பவன் போலக் காட்டிக்கொள்கிறாய் 
உன்னை உன் நிழல் பின்தொடர்ந்து வருவது போல 
நீ இவளைப் பின்தொடர்ந்து வருகிறாய்
உனக்குக் கிடைக்காத்து என்ன?
இது என்ன வேண்டும்? 

சொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்? 10
செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின்,
சாதலும் கூடுமாம் மற்று

தலைவன் சொல்கிறான்
சொன்னால் மறுக்காமல் தருவாளா?

தோழி சொல்கிறாள்
பிச்சை கேட்டு வருபவருக்கு 
அவர்மீது சினம் கொள்ளாமல் ஒன்றைத் தரவேண்டும். 
அப்படித் தராமல் வாழ்வதை விடச் சாவது மேல் 

இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்;
யாது, நீ வேண்டியது?

தோழி மேலும் சொல்கிறாள்
இவளது தந்தை விருப்பத்தோடு யாராயிருந்தாலும் விழுமிய செல்வத்தை வழங்குவார். 
உனக்கு என்ன வேண்டும்?

பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ 15
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல், யான்

தலைவன் கேட்கிறான்
அறியாப் பெண்ணே 
பொருள் வேண்டும் எளிமை எனக்கு இப்போது இல்லை 
யாழ் போல் பேசும் இனியவளே 
என்னை மருண்டு பார்க்கும் உன் தோழி
எனக்கு அருள் தரவேண்டும்
இதுவே என் வேண்டுதல்

"அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?'
ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன் 20

தலைவி சொல்கிறாள் 
அம்மாடியோ
போரில் வெற்றி கண்ட ஆண்யானை போன்றவன் இவன் 
அப்படிப்பட்ட இவன் ஒரு பெண்ணிடம் எதிர்ப்பார்க்கும் அருள் என்ன இருக்கிறது? 
இவனுக்குக் கொஞ்சங்கூட வெட்கம் இல்லை போலும்

ஆயின், ஏஎ!
'பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,
மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல்
நல்காள் கண்மாறிவிடின்' எனச் செல்வானாம்
எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக் 25
கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது
கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்
உள்ளம் குறைபடாவாறு.

தோழி தலைவியிடம் சொல்கிறாள் 
ஆயின், தலைவியே கேட்டுக்கொள் 
நல்ல முகவெட்டுக் கொண்ட  நீ உன்னை இவனுக்குத் தராமல் திருப்பி அனுப்பிவிட்டால், பலரும் பார்த்துச் சிரிக்கும் பனைமட்டைக் குதிரை மேல் ஏறி நம் ஊருக்கு வருவானாம். நீயோ ஊரோ இவனை எள்ளி நகையாடினாலும் வருவானாம். இப்படிச் சொல்லிக்கொண்டு கள்வன் போல் உன்னைப் பார்க்கிறான். தன் மனத்தில் எண்ணியதைப் பெறாமல் திரும்பாத குணம் கொண்டவன் போல் தென்படுகிறான். தந்தை உள்ளம் குறைவு படாமல் திருமணம் செய்துகொள்வான் போலத் தென்படுகிறது. 

உறழ் கலி

கலித்தொகை 61 – குறிஞ்சிக் கலி 25 - தலைவன் கூற்று
பாடியவர் – கபிலர்
திணை - குறிஞ்சி
கி.மு. காலத்துப் பாடல்

Saturday, 27 May 2017

கலித்தொகை 60 Kalitogai 60

சுணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல்,
மணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல், 
நுணங்கு எழில், ஒண் தித்தி, நுழை நொசி மட மருங்குல், 
வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!

தோழி தலைவியிடம் சொல்லத் தொடங்குகிறாள்
சுணங்கழகு கொண்ட வனப்பான முலையும், 
சுடரும் நெற்றியும், 
மணம் கமழும் நல்ல  பூங்கோதை அணிந்து பொழியும் மழை போலத் தொங்கும் கூந்ததலும், 
நுண்மை எழிலும் ஒளிறும் புள்ளிகளும் மடங்கி அசைந்தாடும் இடையும் 
வளையும் தோளும் 
வரிந்த முன் கையும் 
கோடு மடிப்புள்ள அல்குலும் கொண்டவளே! 

'கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு 5
உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று, புனையிழாய்!' எனக் கூறித் தொழூஉம்; தொழுதே,
கண்ணும் நீராக நடுங்கினன், இன் நகாய்!

கண் நிறைந்த அழகி நீ
உன்னைத் திடீரென அவர் கண்டாராம்.
அவர் நெஞ்சுக்குள்ளே காதல் மிகுகிறதாம் 
அவர் உயிர்தான் மிஞ்சியிருக்கிறதாம் 
அத்தகைய துயரத்தை நீ செய்திருக்கிறாயாம்
இப்படி ஒருவரைத் துன்பத்துக்கு உள்ளாக்குதல் பெண்மை அன்று 
அணிகலன் பூண்டவளே
என்று கூறிக்கொண்டு உன்னைத் தொழுகின்றான் 
தொழுதவண்ணம் கண்ணீர் வடிக்கிறான் 
நடுங்குகிறான்
நீயோ இனிதாகப் புன்னகை பூக்கிறாய்

என் செய்தான் கொல்லோ இஃது ஒத்தன் தன்கண்
பொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள் 10
உருகுவான் போலும், உடைந்து;

என்ன செய்தான்
இவன் ஒருவன் 
தான் போரிடும் களிறு போன்ற பெருந்தன்மையைத் தன்கண் கொண்டுள்ளான் 
அந்தத் தகைமை மழுங்கி 
உள்ளுக்குள் உருவான் போலக் காணப்படுகிறான். 
இவ்வாறு தோழி சொல்லி முடிக்கிறாள் 

தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ,
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில
நீ நின்மேல் கொள்வது; எவன்?

தெருவில் காரணம் இல்லாமல் கலங்குபவரை எல்லாம் கண்டு நீ
வாரணாசிக்குச் சென்றவரெல்லலாம் வீடுபேறு பெறுவது போல
அவனை நீ உன் தலைமேல் தூக்கிக்கொண்டு
ஏதேதோ சொல்கிறாயே, ஏன்?
இவ்வாறு தலைவி கூறுகிறாள்

'அலர்முலை ஆய்இழை நல்லாய்! கதுமென, 15
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்;
மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்தொடீ!
நின் முகம் காணும் மருந்தினேன்' என்னுமால்;

தோழி சொல்கிறாள் 
பூக்கும் முலையில் ஆராய்தெடுத்த அணுகலன் பூண்டவளே
என்று உன்னை விளித்து அவன் இவ்வாறு சொல்கிறான் 
"போராடும் மை இட்ட கண்ணை உடைய உன் தோழி 
உண்டாக்கிய நிறைந்த நினைவுத் துன்பம் 
என் உயிரை வாங்குகிறது 
இந்த துன்பத்தைப் போக்கும் மருந்து எனக்கு நீ அருள வேண்டும்
உன் முகத்தைக் கண்டதும் 
ஒளிரும் வளையல் அணிந்தவளே
உன் தலைவியாகிய மருந்து எனக்குக் கிடைத்துவிட்டது 
என நம்பியிருக்கிறேன்" - என்கிறான்

நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே 20
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்!
என் செய்வாம்கொல், இனி நாம்?

உன் திருமுக ஒப்புதல் பெற்றால் அல்லது
அவனுக்கு வேறு மருந்து இல்லை
திருந்திய அணிகலன் பூண்டவளே
இனி நாம் என்ன செய்யலாம்?

பொன் செய்வாம்,
ஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம், 25
'தேறல், எளிது' என்பாம் நாம்

என் அணிகலன்களை விரும்புகிறான் போல இருக்கிறது 
இந்தப் பொன்னைக் கொடுத்துவிடலாமே 
வழிமுறைகளை விலக்கித் 
தெருவில் நின்றுகொண்டு
ஒருவன் கூறும் ணொற்களை 
உண்மை என நம்பிக்கொண்டு 
அதன் பண்பை உணராமல் 
அவனைப் பற்றித் தெளிவடைதல் எளிது 
என்று நாம் சொல்லிவிடலாமா?
இவ்வாறு தலைவி  கூறுகிறாள்

'ஒருவன் சாம் ஆறு எளிது' என்பாம், மற்று;

இப்படிச் சொல்வதை விட
ஒருவனைச் ‘செத்துப்போ’ என்று கூறுவது எளிது
தோழி கூறுகிறாள்

சிறிது, ஆங்கே 'மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க' என,
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி
பூண் ஆகம் நோக்கி இமையான், நயந்து, நம் 30
கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று,
நாண் அடப் பெயர்த்தல் நயவரவு இன்றே.

சிறிது எண்ணிப்பார் 
மாட்சிமை இல்லாத ஊர் அலர் தூற்றினாலும் தூற்றட்டும் 
என நினைத்துக்கொண்டு 
நாணமோ நிறையுடைமையோ விரும்பாத பிறவி கொண்ட அவன்
உன் பூண் அணிந்த நெஞ்சினை உருத்துப் பார்க்ககிறான் 
நம் நட்பினை விரும்புகின்ற அவனுக்கு எதிரே
உன் நாணம் உன்னை வருத்துவதால் விலகிச் செல்வது 
நயமான செயல் ஆகாது
இவ்வாறு கூறும் தோழி அவன் ஆசையை முடித்துவைக்கலாம் என்கிறாள்

உறழ் கலி

கலித்தொகை 60 – குறிஞ்சிக் கலி 24 - தலைவன் கூற்று
பாடியவர் – கபிலர்
திணை - குறிஞ்சி
கி.மு. காலத்துப் பாடல்

சிறுபஞ்சமூலம் 96 SiruPanchaMulam 96

வழிப்படர் வாய்ப்ப வருந்தாமை வாயல்
குழிப்படல் தீச்சொற்க ளோடு மொழிப்பட்ட
காய்ந்து விடுதல் களைந்துய்யக் கற்றவர்
ஆய்ந்து விடுதல் அறம். 96

 1. தீய வழியில் சென்றவரை,  துன்பத்தில் வருந்தாமல் காக்க வேண்டும் 
 2. உண்மை அல்லாத குழியில் அவரைத் தள்ளக்கூடாது 
 3. தீய சொற்களை அவர்மீது வீசக் கூடாது. 
 4. சினந்து பேசக்கூடாது 
 5. அவரது துன்பத்தைக் களைந்து உய்விக்க வேண்டும்.

கற்றவர் இவற்றை ஆராய்ந்து அவரை விடுதலை செய்வது கடமை.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 95 SiruPanchaMulam 95

பத்தினி சேவகன் பாத்தில் கடுந்தவசி
பொத்தில் பொருள்-திறத்துச் செவ்வியான் பொத்தின்றி
வைத்தால் வழக்குரைக்கும் சான்றான் இவர்செம்மை
செத்தால் அறிக சிறந்து! 95

 1. கற்புள்ள பத்தினிப் பெண் 
 2. அடிமைத் தொழிலாளி 
 3. பகிர்ந்து உண்ட இல்லத்தான்
 4. கடுந்தவம் மேற்கொண்ட தவசி 
 5. பொதுமை இல்லாமல் வைத்திருக்கும் பொருள்மீது அதன் பொதுமையை நிலைநாட்ட வழக்குரைத்த சான்றோன் 

ஆகியோரைச் செத்த பின்னராவது தெரிந்துகொள்ள வேண்டும்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 94 SiruPanchaMulam 94

உண்ணிடத்தும் ஒன்னார் மெலிவிடத்தும் மந்திரம்கொண்
டெண்ணிடத்தும் செல்லாமை தான்தலையே - எண்ணி
உரைப்பூசல் போற்றல் உறுதவமேல் கங்கைக்
கரைப்பூசை போறல் கடை. 94

 1. பிறர் உண்ணும் இடத்துக்குச் செல்லக்கூடாது. 
 2. பிறர் மெலிவுற்று வறுமையில் வாடும் இடத்துக்குச் செல்லக்கூடாது. 
 3. மந்திரம் சொல்லி எண்ணும் இடத்திற்குச் செல்லக்கூடாது. 

இவை தலைமையான செயல்கள்.

 1. எண்ணித் திட்டமிட்டு உரைக்கும் சண்டைப் பூசல்களைத் தாங்கிக்கொண்டு தவ நெறியைப் பெரிதாகப் பின்பற்ற வேண்டும். 
 2. புனித நீராடும் கங்கைக் கரையில் சண்டையிட்டுக் கொள்வது போல் சண்டையிட்டுக்கொள்வது கடையாய செயல். 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 93 SiruPanchaMulam 93

ஈவது நன்றுதீ தீயாமை நல்லவர்
மேவது நன்றுமே வாதாரோ டோவாது
கேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே
ஓட்டுத் தலைநிற்கும் ஊர்ந்து. 93

 1. ஈவது நன்று 
 2. ஈயாமை தீது 
 3. நல்லவரால் விரும்பப்படுவது நன்று 
 4. விரும்பாதவரோடு கெடு வரும் காலத்தில் கூடிநிற்பது இயல்பு 
 5. கேடு வந்துற்ற போதுதான் தலைமண்டை ஓட்டுக்குள் உள்ள எண்ணம் தலைநிமிர்ந்து நிற்கும். 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 92 SiruPanchaMulam 92

புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தேல்
நல்லறத் தாரோடும் நட்கலாம் நல்லறத்தார்க்
கட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே இம்மையில்
அட்டிட்டுண் டாற்றவாழ் வார். 92

 1. வணிக நோக்குடன் புல்லிய அறநெறி வாழ்க்கையைப் பின்பற்றுவதைக் காட்டிலும் மனைவாழ்க்கை நன்று. 
 2. இது போற்றப்படுமாயின் நல்லறமாம். 
 3. இவர்கள் துறவறம் மேற்கொள்வாரோடு நட்பு கொள்ளலாம். 
 4. உணவு சமைத்து நல்லறத் உறவிகளுக்கு இட்டு உண்டு தொண்டடாற்றி வாழவேண்டும். 
 5. இப்படி வாழ்ந்தவர்களே இம்மை உலகத்தில் சமைத்துப் பிறருக்குக் கொடுத்து உண்டு நிறைவு கொள்ளும்படி வாழ்பவர் ஆவார். 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 91 SiruPanchaMulam 91

பொய்யாற் சுவர்க்கம்வா யானிர யம்பொருள்
மையார் மடந்தையால் வாழ்வினிது-மெய்யென்றான்
மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய் தீதன்றா
லெத்தவ மானும் படல்.    91

 1. பொய்யால் சுவர்க்கம் 
 2. மெய் பேசுவதால் நரகம் 
 3. பொருளை விரும்பும் மை தீட்டிய கண்ணை உடையவளால் வாழ்க்கை இனிக்கும். 
 4. இவற்றை மெய் என்று ஒருவன் சொன்னால் அது தீது என உணர்க. 
 5. எந்தத் தவம் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தீது. 

மை போன்று கருமை கொண்டதாய் நீண்டு மலர் போல விளங்கும் கண்ணை உடையவளே!
இவற்றை உணர்ந்துகொள்க.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 90 SiruPanchaMulam 90

தக்க திளையான் றவஞ்செல்வ னூண்மறுத்த
றக்கது கற்புடை யாள்வனப்புத்-தக்க
தழற்றண்ணென் றோளா ளறிவில ளாயி
னிழற்கண் முயிறாய் விடும்.   90
முயிறு

முயிறு 


முயிறு

 1. இளமையில் தவம் இயற்றுதல் தக்கது 
 2. செல்வம் மிக்கவன் உணவு உண்ணாமல் நோன்பு இருப்பது தக்கது 
 3. கற்புடைய பெண் அழகு பெற்றிருப்பது தக்க. 
 4. அப்போது அவள் நெருப்பே ‘தண்’ என்று இருக்கும்படியான தோளை உடையவளாக இருப்பாள்.  
 5. அவள் அறிவில்லாதவளாக இருந்தால், தங்கப் போன நிழலில் முயிறு என்னும் எறும்பு மேய்ந்தால் போன்ற நிலைமை ஆகிவிடும். 


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 89 SiruPanchaMulam 89

இன்சொலா னாகுங் கிளைமை யியல்பில்லா
வன்சொல்லி னாகும் பகைமைமன்-மென்சொல்லி
னாய்வில்லா வார்ருளா மவ்வரு ணன்மனத்தான்
வீவில்லா வீடாய் விடும்.   89

 1. இன்சொல் பேசினால் உறவு பெருகும். 
 2. இயல்பு இல்லாத வன்சொல்லை வரவழைத்துக்கொண்டு பேசினால் பகைமைதான் நிலைபெறும். 
 3. மென்சொல் பேசினால் ஆராய்ந்து பார்க்க முடியாத நிறைந்த அருள் பெருகும். 
 4. அருளால் அருள்-மனம் கிட்டிட்டும். 
 5. அந்த அருள் மனத்தால் என்றும் அழியாத வீடுபேறு பெறலாம். 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 88 SiruPanchaMulam 88

நாணெளிது பெண்மை நகையெளிது நட்டானே
லேணெளிது சேவக னேற்பெரியார்-பேணெளிது
கொம்பு மறைக்கு மிடையா யளியன்மீ
தம்பு பறத்த லரிது.    88

 1. பெண்ணுக்கு நாணம் எளிது 
 2. நண்பனோடு சிரித்து மகிழ்தல் எளிது 
 3. அடிமைத்தொழில் செய்பவன் இருந்தால் பெருமிதம் (ஏண்) எளிது 
 4. பெரியாரைப் பேணல் எளிது 
கொம்பு போன்ற (மறைக்கும்) இடையை உடையவளே!
 1. என் மேல் பகைவரின் அம்பு பறத்தல் அரியது. (நான் வீரன்) 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 87 SiruPanchaMulam 87

நாணில னாய்நன்கு நள்ளாதா னாய்ப்பெரியார்ப்
பேணில் னாய்பிறர் சேவகனா-யேணில்
பொருந்திய பூண்முலையார் சேரிகைத் தில்லான்
பருத்தி பகர்வுழி நாய்.   87

 1. பழிக்கு நாணாதவன் நாய் 
 2. நட்பில் தோய்வில்லாதவன் நாய் 
 3. பெரியாரைப் பேணாதவன் நாய் 
 4. பிறருக்கு அடிமைத்தொழில் செய்பவன் நாய் 
 5. ஏண் என்னும் பெருமை இல்லாத, முலையில் பூண் அணிந்து எடுப்பாக்கிக் காட்டும் விலைமகளிர் வாழும் தெருவில் வலிமை (மதுகை, கைத்து) இல்லாதவனாகத் திரிபவன் பருத்தியால் செய்த ஆடை விற்பவனைப் பார்த்துக் குரைக்கும் நாய்.  

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 86 SiruPanchaMulam 86

கண்ணுங்காற் கண்ணுங் கணிதமே யாழினோ
டெண்ணுங்காற் சாந்தே யிலைநறுக்கிட்-டெண்ணுத
லிட்டவிவ் வைந்து மறிவா னிடையாய
சிட்டனென் றெண்ணப் படும்.    86

நினைத்துப் பார்க்குமிடத்து

 1. கண்ணாகக் கருதப்படும் கணிதம் 
 2. யாழ் இசைத்தல் 
 3. காலம் எண்ணிச் சொல்லுதல்
 4. சந்தனம் அரைத்தல் 
 5. வெற்றிலை எண்ணுதல் 

இவை ஐந்தும் அறிபவன் இடையாய சிட்டன் என்று அறியத் தக்கவன்.


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 85 SiruPanchaMulam 85

சத்தமெய்ஞ் ஞானந் தருக்கஞ் சமயமே
வித்தகர் கண்டவீ டுள்ளிடாங் கத்தகத
தந்தவிவ் வைந்து மறிவான் றலையாய
சிந்திப்பின் சிட்டன் சிறந்து.   85

 1. ஒலி விளக்கம் (இசை)
 2. மெய்ஞ்ஞானம் 
 3. தருக்கம் என்னும் அளவை நூல் (logic) 
 4. சமய விளக்கம் 
 5. வல்லோர் கண்ட வீடுபேறு 

உள்ளிட்ட
ஆங்கு அத் தகவுடைய முடிவுகள் ஐந்தும் அறிபவன்
சிந்திக்கப்போனால்
தலையாய சிட்டன் என்று போற்றப்படுவான்


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 84 SiruPanchaMulam 84

நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொடு பாட்டுரையென் றைந்துந்-தொகையொடு
மூத்தோ ரிருந்துழி வேண்டார் முதுநூலுள்
யாத்தா ரறிந்தவ ராய்ந்து.   84

முதுமையான நூல்களில் கருத்தூன்றிய கட்டுப்பாடு உடையவர்கள்
மூத்தோர் இருக்கும் இடத்தில்

 1. நகைப்புக்கு உரியன சொல்லிச் சிரிக்க மாட்டார் 
 2. மந்திரம் சொல்ல மாட்டார் 
 3. தன் நண்பருக்காக ஒரு பக்கமாகப் பேசமாட்டார். 
 4. பகை மொழி கூறமாட்டார் 
 5. பாட்டுக்கு உரை சொல்ல மாட்டார். 


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 83 SiruPanchaMulam 83

தோற்கன்று காட்டிக் கறவார் கறந்தபால்
பாற்பட்டா ருண்ணார் பழிபாவம்-பாற்பட்டா
ரேற்றயரா தின்புற்று வாழ்வன வீடழியக்
கூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து.    83

 1. வைக்கோல் திணித்துத் தோலால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியைப் பசுவின் முன் நிறுத்திப் பால் சுரக்கும்படிச் செய்து ஏமாற்றிப் பசுவின் பாலைக் கறக்க மாட்டார். 
 2. அப்படிக் கறந்த பாலை நல்வழியில் நிற்பவர் உண்ணமாட்டார். 
 3. பழி, பாவம் பார்த்து நல்வழியில் நிற்பவர் வாழ்க்கை நடத்துவார்.  
 4. இப்படிப்பட்ட வாழ்க்கையை ஏற்று இன்பமுடன் வாழ்வார். 
 5. வாழும் உயிரினங்களை ஈடுபாடு அழியும்படியும் கூற்றுவன் மகிழும்படியும் கொண்டுவந்து கொலை செய்ய மாட்டார். 

இவர்கள் நல்லவர்கள்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 82 SiruPanchaMulam 82

உடைந்த பானை ஓடு
பிறர் பொருளை
உடைந்த ஓடு போல்
கருதவேண்டும் 
காடுபோற் கட்கினிய வில்லம் பிறர்பொரு
ளோடுபோற் றாம் பிறந்ததா-யூடுபோய்க்
கோத்தின்னா சொல்லானாய்க் கொல்லானேற் பல்லவ
ரோத்தினா லென்ன குறை.   82

 1. கண்ணுக்கு இனிய பிறன் இல்லத்தைக் காடு போல் கருதுவான். 
 2. பிறர் பொருளை உடைந்த பானை ஓடு போல் கருதுவான்.
 3. பிறன் மனைவியைத் தன்னைப் பெற்றெடுத்த தாய் போல் கருதுவான். 
 4. பிறர் வாழ்க்கையில் குறுக்கிட்டுக் கேடு விளைவிக்கும் சொற்களைச் சொல்ல மாட்டான். 
 5. உயிர்க்கொலை செய்ய மாட்டான். 

இப்படிப்பட்டவனுக்குப் பலர் சொல்லிவைத்த வேத மொழியால் நிறைவேற்றிக் கொள்ளத் தக்க குறை என்ன இருக்கிறது?


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 81 SiruPanchaMulam 81

கழிந்தவை தானிரங்கான் கைவாரா நச்சா
னிழிந்தவை யின்புறா னில்லார்-மொழிந்தவை
மென்மொழியா லுண்ணெகிழ் தீவானேல் விண்ணோரா
லின்மொழியா லேத்தப் படும்.   81

 1. வாழ்க்கையில் நடந்து முடிந்த செயல்களைப் பற்றிக் வருந்த மாட்டான். 
 2. கைக்குக் கிடைக்காததை விரும்ப மாட்டான். 
 3. கீழ்த்தனமான செயல்களில் இன்பம் காணமாட்டான். 
 4. பொருள் இல்லாதவர் சொல்லும் சொற்களை மென்மொழி எனக் கொள்வான். 
 5. உள்ளம் நெகிழ்ந்து அவர்களுக்கு ஈவான்.

இப்படிப்பட்டவன் வானுலகத் தேவர்களால் போற்றிப் புகழப்படுவான்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 80 SiruPanchaMulam 80

தக்கார் வழிகெடா தாகுந் தகாதவ
ருக்க வழியரா யொல்குவர்-தக்க
வினத்தினா னாகும் பழியும் புகழு
மனத்தினா னாகு மதி.   80

வாழ்க்கையில் பின்பற்றத் தக்கவர் "தக்கார்" எனப்படுவார்.

 1. தக்கவர் செல்லும் வழியைப் பின்பற்றினால் என்றும் கேடு விளைவதில்லை. 
 2. தகாதவர் வழியைப் பின்பற்றினால் வாழ்க்கையில் தளர்வு அடைவர். 
 3. சார்ந்திருக்கும் இனத்தினால் பழி வரும். 
 4. சார்ந்திருக்கும் இனத்தினால்  புகழ் வரும். 
 5. மன நிலையால் மதிக்கும் அறிவு பிறக்கும்.  

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

Friday, 26 May 2017

சிறுபஞ்சமூலம் 79 SiruPanchaMulam 79

வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற் றேறார்
புரையில்லார் நள்ளார்போர் வேந்தன்-வரைபோற்
படுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்
கொடும்புலி கொட்கும் வழி.   79

நல்லவர்

 1. இன்னாருக்கு என்று வரையறை இல்லாமல் எல்லாருக்கும் பயன்படும் பெண்ணை விரும்பமாட்டார். 
 2. நெடுங்காலமாக நிலைபெற்றிருக்கும் புற்று மண்ணின்மீது ஏறமாட்டார் 
 3. மேன்மை இல்லாதவரோடு நட்புப் கொள்ளமாட்டார். 
 4. வேந்தன் மலை போல் உயர்ந்த தன் யானையை நீராட விட்டிருக்கும்போது குறுக்கே செல்லமாட்டார். 
 5. புலிகள் மேயும் காட்டு வழியில் செல்லமாட்டார்.  


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 78 SiruPanchaMulam 78

பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்
அஞ்சா துடைபடையுட் போந்தெறிவான்-எஞ்சாதே
உண்பதுமு னீவான் குழவி பலிகொடுப்பான்
எண்பதின் மேலும்வாழ் வான்.    78
 1. நாட்டில் பஞ்சம் வந்த காலத்தில் தம்மிடம் இருக்கும் உணவுப் பொருள்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்பவன் 
 2. தன்னிடமுள்ள உணவுப் பொருள்களைப் பதுக்கி வைக்க மாட்டான் 
 3. போரின்போது எதிரியின் தாக்குதலைத் தாங்கமாட்டாமல் உடையும்போது எதிராளியின் படைக்குள் புகுந்து அதனை உடைத்து எறிபவன் 
 4. கொஞ்சமும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்  தான் உண்பதையும் பிறருக்குத் தருபவன் 
 5. குழந்தைகளுக்கு உணவளிப்பவன் 
இத்தகையவன் எண்பது ஆண்டுகளுக்கு மேல் சீரும் சிறப்புமாக வாழ்வான்.


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 77 SiruPanchaMulam 77

புண்பட்டார் போற்றுவா கில்லாதார் போகுயிரார்
கண்கெட்டார் காலிரண்டு மில்லாதார்-கண்கண்பட்
டாழ்ந்து நெகிழ்ந்தவர்க் கீந்தார் கடைபோக
வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து.    77

 1. புண் பட்டு வருந்துபவர் 
 2. போற்றிப் பேண யாரும் இல்லாத அனாதை 
 3. உயிர் போகும் நிலையில் இருப்பவர் 
 4. கண் பார்வை இல்லாத குருடர் 
 5. கால் குறையுள்ள முடவர். 

இவர்களின் மீது கண்ணோட்ட இரக்க உணர்வு கொண்டு உள்ளம் நெகிழ்ந்து உணவு வழங்கியவர், வாழ்நாள் முழுவதுமாகிய கடைபோக வாழ்வார்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 76 SiruPanchaMulam 76

பக்கம் படாமை யொருவர்க்குப் பாடேற்றல்
தக்கம் படாமை தவமல்லாத்-தக்கா
ரிழியினர்க்கே யானும் பசித்தார்க ணீதல்
கழிசினங் காத்தல் கடம்.    76

 1. ஒருவர் பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமையைக் கொள்ளுதல் 
 2. ஒருவருக்கும் பெருமை சேரும்படி தான் வாழ்தல் 
 3. ஒரு குறிப்பிட்ட பொருளின்மீது பற்று (தக்கம்) வைக்காமல் இருத்தல் 
 4. தவம் அல்லாத இழிந்த தொழில் செய்யும் இழிந்தவர் என்றாலும் பசித்தவர்க்கு ஈதல் 
 5. அளவுக்கு மிஞ்சிய சினம் கொள்ளாமல் இருத்தல் 

இவை அறம்

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 75 SiruPanchaMulam 75

சிக்கர் சிதடர் சிதலைப்போல் வாயுடையார்
துக்கர் துருநாமர் தூக்குங்காற்-றொக்க
வருநோய்கள் முன்னாளிற் றீர்த்தாரே யிந்நா
ளொருநோயு மின்றிவாழ் வார்.   75

 1. சிக்கர் (தலைவலி உள்ளவர்)
 2. சிதடர் (பித்துப் பிடித்தவர்) 
 3. சிதலை போல் வாய் உடைய திக்குவாயர் 
 4. துக்கர் (தீராத இருமல் நோய் உள்ளவர்) 
 5. துருநாமர் (மலவாயில் மூலநோய் உள்ளவர்) 

இவர்களை யெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது
இப்போது ஒரு நோயும் இல்லாமல் வாழ்பவர்
முன் நாளில் இந்த நோயாளிகளின் துயரைப் போக்கியவர் போலும்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 74 SiruPanchaMulam 74

சூலாமை சூலிற் பதுந்துன்ப மீன்றபி
னேலாமை யேற்றால் வளர்ப்பருமை-சால்பவை
வல்லாமை வாய்ப்ப வறிபவ ருண்ணாமை
கொல்லாமை நன்றாற் கொழித்து.   74

 1. பிள்ளைப்பேறு இல்லாத் துன்பம் 
 2. கருவுற்ற பின்னர் குழந்தையைத் தாங்கும் துன்பம் 
 3. ஈன்ற பின்னர் அதனை வளர்க்கப் படும் துன்பம் 
 4. குழந்தை ஊனமாகப் பிறந்துவிட்டால் அதனால் படும் துன்பம் 
 5. இவற்றை எண்ணிப் பார்த்துக் குழந்தையை வயிற்றிலேயே கொல்லாமல் இருப்பது நன்று. 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 73 SiruPanchaMulam 73

கலங்காமை காத்தல் கருப்பஞ் சிதைந்தா
லிலங்காமை பேரறத்தா லீற்றம்-விலங்காமைக்
கோடல் குழவி மருந்து வெருட்டாமை
நாடி னறம்பெருமை நாட்டு.   73

 1. கரு சிதையாமல் பார்த்துக்கொள்ளல் 
 2. கருப்பம் சிதைந்தால் தாய்க்கு யாதொன்றும் நிகழாவண்ணம் காத்தல் 
 3. பேரறத்தால் அவள் கருவுற்றது தெரியாமல் வைத்துக்கொள்ளுதல் 
 4. பிள்ளை பெற்ற தாய்க்கு மருந்து கொடுத்தல் 
 5. குழந்தையை அஞ்சும்படி வெருட்டாமல் (விரட்டாமல்) வளர்த்தல் 

எண்ணிப் பார்த்து இவற்றை அறம் என நிலைநாட்டுக.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 72 SiruPanchaMulam 72

வலியழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்
நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார்-மெலிவொழிய
வின்னவரா மென்னாரா யீந்த வொருதுற்று
மன்னவராச் செய்யு மதித்து.    72

 1. உணவு தேடிக்கொள்ளும் வலிமை இழந்தவர் 
 2. அகவையில் (வயதில்) மூத்தவர் 
 3. வடக்கிருக்கும் தவம் செய்பவர்கள் (கோப்பெருஞ்சோழன் போல் சாகும்வரை உண்ணாநோன்பு இருப்பவர் வேறு வகை)
 4. நோயால் உடல் நலிந்து போனவர் 
 5. பகையாளிக்கு நாட்டைக் காட்டிக்கொடுத்து தண்டனையால் நொந்துபோயிருப்பவர் 

இவர்களின் துன்பம் நீங்கும்படி இன்னவர் என்று எண்ணிப் பார்க்காமல் கைப்பிடி அளவாவது உணவு அளித்த அறமானது அவரை மன்னவராக விளங்கும்படிச் செய்யும்.


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 71 SiruPanchaMulam 71

தாய்
ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை
யேன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை-யான்ற
வழிந்தாளை யில்வைத்தல் பேரறமா வற்ற
மொழிந்தார் முதுநூலார் முன்பு.   71
 1. பிள்ளையைப் பெறல் 
 2. கருவிற்றிருக்கும்போது கருவினைக் காப்பாற்றுதல் 
 3. குழந்தையைத் தக்க முறையில் கையில் ஏந்தி வளர்த்தல் 
 4. சூலுற்ற பெண்ணிடமிருந்து குழந்தையை வழித்தெடுத்துப் பிள்ளைப்பேறு பார்த்தவளை வீட்டில் வைத்துப் பேணல் 

ஆகியவற்றைப் பெரிய அறம் என்று முதுநூல் புலவர்கள் கூறிய்யுள்ளனர்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

Thursday, 25 May 2017

சிறுபஞ்சமூலம் 70 SiruPanchaMulam 70

சிறைகிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பலநாள்
உறைக்கிடந்தா ரொன்றிடையிட் டுண்பார்-பிறைக்கிடந்து
முற்றனைத்து முண்ணா தவர்க்கீந்தார் மன்னவராய்க்
கற்றனைத்தும் வாழ்வார் கலந்து.   70
 1. சிறையில் இருப்பவர் 
 2. செத்தவருக்காகப் பட்டினி கிடப்பவர் 
 3. பலநாள் மருந்து தின்றுகொண்டு பத்தியத்தில் இருந்தவர் 
 4. வறுமையால் இடைவெளி விட்டு உண்பவர். 
 5. மூன்றாம் பிறை  நாளிலிருந்து முழுநிலா நாள் வரையில் உண்ணா நோன்பு இருந்தவர். 
ஆகிய இவர்களுக்கு உணவு வழங்கியவர் கற்ப காலம் வரை கலகலப்போடு மன்னராக வாழ்வர்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 69 SiruPanchaMulam 69

கொன்றான்
கொன்றதனைக் கொண்டான்
கொன்றான் கொலையை யுடன்பட்டான் கோடாது
கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்காற்-கொன்றதனை
அட்ட னிடவுண்டா னைவரினு மாகுமவனக்
கட்டெறிந்த பாவங் கருது.    69
 1. உணவுக்காக உயிருள்ள உடம்பைக் கொன்றவன் 
 2. பிறர் கொன்று தர உடம்பட்டவன் 
 3. கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கொன்று தந்த புலாலை வாங்கிக்கொண்டவன் 
 4. மகிழ்வுடன் கொழிக்கும் உயிரைக் கொன்று அதனைச் சமைத்துத் தந்தவன் 
 5. சமைத்ததை வாங்கி உண்டவன்
இவர்கள் அனைவரையும் பாவம் கட்டுப்படுத்தும்

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 68 SiruPanchaMulam 68

நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல்
வடுத்தீர் பகல்வா யுறையே-வடுத்தீரா
வாகுமந் நான்கொழித் தைந்தடக்கு வானாகின்
வேகும்பம் வேண்டான் விடும்.      68


 1. நின்றுகொண்டு தவம் செய்தல் 
 2. அமர்ந்துகொண்டு தவம் செய்தல் 
 3. துறை துறையாகச் சென்று நீராடுதல் 
 4. பகல் பொழுது இருக்கும்போது மட்டும் உண்ணும் குற்றமற்ற நிலையைப் பின்பற்றுதல்  

இந்த நான்கையும் ஒழித்து

 1. ஐந்து புலன்களையும் அடக்குவானாயின் 

அவன் தன் உடம்பையே கைவிட்டுவிடுவான்.

 • வேகும்பம் - வே கும்பம் - வேகும் உடம்பு 
 • கும்பம் - கும்பி என்னும் வயிற்றால் வாழ்வது காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 67 SiruPanchaMulam 67

தான்பிறந்த வின்னினைந்து தன்னைக்கடைப்பிடித்துத்
தான்பிற ராற்கருதற் பாடுணர்ந்து-தான்பிறராற்
சாவ வெனவாழான் சான்றோராற் பல்யாண்டும்
வாழ்க வெனவாழ்த னன்று.   67

 1. தான் பிறந்த இல்லத்தை நினைத்து அதற்குப் பெருமை தேடித் தரவேண்டும். 
 2. அதற்காக நன்னெறியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வாழவேண்டும். 
 3. தான் பிறரால் கருதப்படுவதை உணர்ந்து வா.வேண்டும். 
 4. "இவன் செத்தொழியக் கூடாதா" என்று பிறர் சொல்லும்படி வாழக்கூடாது. 
 5. சான்றோர் "வாழ்க" என வாழ்த்தும்படி வாழவேண்டும். 


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 66 SiruPanchaMulam 66

கும்பமேளா

கும்பமேளா
போர்த்து முரிந்திட்டும் பூசியு, நீட்டியு
மோர்த்தொரு பான்மறைத் துண்பான்மே-யோர்த்த
வறமாமேற் சொற்பொறுக்க வன்றேற் கலிக்கட்
டுறவறம்பொய் யில்லறமே வாய்.   66

துறவியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள,

 1. ஒருவன் தன்னை மறைக்கும் ஆடையால் போர்த்திக்கொள்கிறான். 
 2. ஒருவன் ஆடை முழுவதையும் உரித்து எரிந்துவிட்டு அம்மணமாகத் திரிகிறான். 
 3. ஒருவன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு திரிகிறான். 
 4. ஒருவன் தலைமுடியையும் தாடியையும் வளர்த்துக்கொண்டு திரிகிறான். 
 5. இவர்கள் எல்லாருமே ஒருபுறம் மன்னை மறைத்துக்கொண்டு உண்பவர்கள். 

இதுதான் ஆராயும் துறவறமா?
தன்மீது விழும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்பவனே உண்மைத் துறவி.
இல்லாவிட்டால் கலிகாலத்தில் துறவறம் என்பது பொய்.
இல்லறமே உண்மை.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 65 SiruPanchaMulam 65

குளந்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்
துளந்தொட் டுழுவய லாக்கி-வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ தென்றிவ்வைம் பாற்படுத்தா
னேகுஞ் சுவர்க்கத் தினிது.   65

 1. குடிநீர் தேங்கும் குளம் தோண்டி அமைத்தல் 
 2. மரக்கிளைகளை நட்டு வளர்த்தல் 
 3. காடுகளில் செல்வதற்கு வழி ஒதுக்கித் தருதல் 
 4. உள்ள விருப்பத்தோடு உழுதுண்ண வயல் உண்டாக்கித் தருதல் 
 5. வளமுள்ள பாகு போன்ற நீர் ஊறும் கிணறு வெட்டித் தருதல் 

இப்படிப்பட்ட ஐந்து அறச்செயல்களைச் செய்தவன் சுவர்க்க உலகத்துக்குச் செல்வான்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 64 SiruPanchaMulam 64

வெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்ணுப்
பந்தன் மகற்சார்ந்த தந்தையென்-றைந்தினு
ளொன்றுபோ லுண்ணெகிழ்ந் தீயிற் சிறிதெனினுங்
குன்றுபோற் கூடும் பயன்.   64

பதமான சூட்டினைக் காணும்

 1. வெண்ணேய் 
 2. மெழுகு 
 3. (தங்கம் உருக்கும் மண் கிண்ணம்) நீர் சேர்ந்த மண் 
 4. பந்தத்தில் எரியும் எண்ணெய் 
 5. மகன்பால் அன்பு கொண்ட தந்தை 

அகியவை ஐந்தும் உள்ளே நெகிழ்ந்து தனக்குள் உருகுவது போல
ஈகை குணத்தோடு உருகினால் அதன் பயன் குன்றுபோல் நிற்கும்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 63 SiruPanchaMulam 63

பிச்சை எடுப்பவன் 
பிடிப்பிச்சைப் பின்னிறை யையங்கூழ் கூற்றோ
டெடுத்திரந்த வுப்பித் துணையோ-டடுத்துச்
சிறுபய மென்னார் சிதவலிப் பீவார்
பெறுபயன்பின் சாலப் பெரிது.   63

 1. கைப்பிடி அளவாவது பிச்சைச் சோறு கொடுத்தல் 
 2. பின் அதற்கு வெஞ்சனமாகத் தொட்டுக்கொண்டு சாப்பிட விரல் அளவாவது குழம்பு வகை 
 3. மெது மெதுவாகக் கூழ் ஊற்றல் 
 4. அன்பு மொழி 
 5. பிச்சை எடுத்து உண்பவருக்கு இத்துணை அளவு உப்பு 

இவற்றை அவருக்குச் சிறு பயன்தானே என்று எண்ணாமல்
உடம்பு வலி தீரக் கொடுத்தவர்
பின் பெறப்போகும் பயன் மிகவும் பெரியது.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 62 SiruPanchaMulam 62

நீரற நன்று நிழனன்று தன்னில்லுட்
பாரற நன்றுபாத் துண்பானேற்-பேரற
நன்று தளிசாலை நாட்டற் பெரும்போக
மொன்றுமாஞ் சால வுடன்.   62

 1. தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர் அறம் செய்தல் நன்று 
 2. நடந்து செல்லும் வழியில் நிழல் தரும் மரங்கள் வைத்துச் செய்யும் அறம் நன்று 
 3. தன் இல்லத்தில் வழிப்போக்கர் தங்க இடம் கொடுக்கும் அறம் நன்று. 
 4. தன் உணவைப் பகிர்தளித்து வாழ்தல் நன்று 
 5. தளிச்சாலை (அன்ன சத்திரம், உணவளிக்கும் மடம்) நிலைநாட்டி நடத்துதல் நன்று 

இவற்றைச் செய்தால் செய்தவனுக்குப் பெரும் போகம் கிட்டும்.


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 61 SiruPanchaMulam 61

அரம்போற் கிளையடங்காப் பெண்வியக்கத் தொண்டு
மரம்போன் மகன்மாறாய் நின்று-கரம்போலக்
கள்ளநோய் காணு மயலைந்து மாகுமே
லுள்ள நோய் வேண்டா வுயிர்க்கு.   61

 1. மரத்தை அறுக்கும் வாள் போல் தன்னை அறுத்துக்கொண்டிருக்கும் உற்றார் உறவினர்கள் 
 2. தன் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத மனைவி 
 3. தன் விருப்பம் போல் நடந்துகொள்ளும் தொண்டன் 
 4. மரம் போல் நிற்கும் மகன் 
 5. ஏறு மாறாய் நின்று ஏதோ கை உதவுவது போலத் திருட்டுத்தனமாகத் துன்பம் தரும் அக்கம்பக்கத்தார் 

இவை ஐந்தும் இருந்தால் ஒருவன் உயிர்க்கு உள்ளத் துன்பம் வேறு வேண்டுவதில்லை.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 60 SiruPanchaMulam 60

ஏலாமை நன்றீத றீதுபண் பில்லார்க்குச்
சாலாமை நன்றுநூல் சாயினுஞ்-சாலாமை
நன்று தவநனி செய்தறீ தென்பாரை
யின்றுகா றியாங்கண் டிலம். 60

 1. சோம்பேறியாக இருத்தல் நன்று 
 2. ஈதல் தீது 
 3. பண்பில்லார்க்குத் தன் சான்றாண்மைக் குணத்தைக் காட்டடாமல் இருப்பது நன்று. 
 4. நூல்நெறி சாயும்படி  சான்றாண்மை மேற்கொள்வது 
 5. தவம் மிகவும் தீது 

என்பவரை இன்றுகாறும் (இதுவரையில்) யாம் கண்டதில்லை.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 59 SiruPanchaMulam 59

நன்புலத்து வையடக்கி நாளுமா டோபோற்றிப்
புன்புலத்தைச் செய்தெருப் போற்றியபி-னின்புலத்தின்
பண்கலப்பை யென்றிவை பாற்படுப் பானுழவோன்
நுண்கலப்பை நூலோது வார்.   59

 1. நல்ல நன்செய் நிலத்தில் வைக்கோலைப் பாதுகாத்து வைத்து
 2. நாள்தோறும் எருதுகளைப் போற்றி
 3. நிலத்தைப் மென்மை உடைய புன் புலமாக மாற்றி
 4. எரு இட்டு
 5. பின் கலப்பையை நடத்தி உழுது

பயிர் செய்யும் தொ ழிலை மேற்கொள்பவனே உழவன் என்று
நல்ல நூல்களை உழுவோர் கூறுவர்.


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

Wednesday, 24 May 2017

சிறுபஞ்சமூலம் 56 SiruPanchaMulam 56

நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்
தொல்லை யுயிர்க்கூற்றங் கோலாகி-ஒல்லுமெனின்
மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தா
னாயி னழித லறிவு.   56

 1. நல்லனவற்றை வெளிப்படுத்த வேண்டும். 
 2. தீயனவற்றை மறந்து ஒழிக்க வேண்டும் 
 3. தொன்றுதொட்டு வாழும் உயிரினங்களுக்கு ஊன்றுகோல் போல உதவ வேண்டும். 
 4. முடிமேல் பிறர் பொருள்களின் மீது கொள்ளும் மாய ஆசையை மாற்றிக்கோள்ள வேண்டும். 
 5. மானக்கேடு வரும்போது அழிதல் அறிவுடைமை ஆகும்.  

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 58 SiruPanchaMulam 58

பொருள்போக மஞ்சாமை பொன்றுங்காற் போந்த
அருள்போகா வாரறமென் றைந்து-மிருடீரக்
கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனாற்
தேறப் படுங்குணத்தி னான்.   58

 1. பொருள் நலம் 
 2. இன்பப் போகம் துய்த்தல் 
 3. அஞ்சாமை 
 4. ஓர் உயிர் சாக நேரும்போது அருள் புரிதல் 
 5. நிறைந்த அறநெறி

ஆகிய ஐந்தும் இருள் இல்லாத் தெளிவுடன், கூரிய வேலாற்றலில் வல்ல வேந்தனுக்கு இருக்கவேண்டியவைகளாகத் தெளிந்து கூறப்படும்  குணங்கள். இவற்றை உடையவன் வேந்தன்.


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 57 SiruPanchaMulam 57

தன்னிலையுந் தாழாத் தொழினிலையுந் துப்பெதிர்ந்தா
ரின்னிரையு மீடி லியனிலையுந்-துன்னி
யளந்தறிந்து செய்வா னரசமைச்சன் யாதும்
பிளந்தறியும் பேராற்ற லான்.   57

அரசன்

 1. தன் நிலைமையையும் 
 2. தாழ்வில்லாத ஆட்சித் தொழிலின் நிலைமையையும் 
 3. தன் வலிமையை எதிர்த்தாரின் நிலைமையையும் 
 4. ஈடில்லாத உலகியல் நிலைமையையும் 

நெருங்கி ஆராய்ந்து பார்த்துச் செயல்படுபவன் ஆவான்.
அமைச்சன்

 1. அரசனின் செயலை எண்ணிப் பார்க்கும் பேராற்றல் படைத்தவன் ஆவான். 


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 55 SiruPanchaMulam 55

பொன்பெறுங் கற்றான் பொருள்பெறு நற்கவி
யென்பெறும் வாதி யிசைபெறு-முன்பெறக்
கல்லார்கற் றாரினத்த ரல்லார் பெறுபவே
நல்லா ரினத்து நகை.   55

கல்வியில் வல்லவன்

 1. பொன்னைப் பெறுவான் 
 2. பொருளைப் பெறுவான் 
 3. அவனுடைய நல்ல கவிதை வாதிடுபவனின் புகழைப் பெறும் 
 4. கல்லாதவர் கற்றவர் இனத்தவர் அல்லர் 
 5. கல்லாதவர் நல்லவர் கூட்டத்தில் எள்ளி நகையாடப் பெறுவர்.  


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 54 SiruPanchaMulam 54

ஆம்பல்வாய் கண்மனம் வார்புரிவ மென்னறந்து
தாம்பல்வா யோடி நிறைகாத்த-லோம்பார்
நெடுங்கழைநீண் மூங்கி லெனவிகழ்ந்தா ராட்டுங்
கொடுங்குழை போலக் கொளின்.    54
 1. ஆம்பல் மலர் போன்ற வாய் 
 2. கண் 
 3. மனம் 
 4. வார்ந்து வளையும் கொடி போன்ற உடல் 
 5. நீண்ட புருவம் 

இவை ஐந்தும் தாமே பலவாறாக ஓடி,
நிறையுடைமையைக் காத்துக்கொள்ள வேண்டும்.
அப்படிக் காத்துக்கொள்ளாதவர்
நீண்ட மூங்கிலில் பற்றி ஏறியிருக்கும் கொடி காற்றில் ஆடுவது போல அல்லாடுவர்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 53 SiruPanchaMulam 53

கொண்டான் கொழுந னுடன்பிறந்தான் றன்மாமன்
வண்டார்பூந்தொங்கன் மகன்றந்தை-வண்தாராய்!
யாப்பார்பூங் கோதை யணியிழையை நன்கியையக்
காப்பார் கருது மிடத்து.   53

 1. தன்னை மணந்துகொண்ட கணவன் 
 2. தன்னுடன் பிறந்த அண்ணன், தம்பி 
 3. தாய்வழியில் வந்த மாமன் 
 4. வண்டு மொய்க்கும் மணமாலை சூட்டப்போகும் மணமகன் 
 5. அவன் தந்தையாகிய மாமனார்

ஆகியோர், எண்ணிப் பார்க்கும்போது, பூ மாலை சூடவிருக்கும் பெண்ணை நன்றாக இணக்கத்துடன் பாதுகாப்பர்.காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 52 SiruPanchaMulam 52

மக்கட் பெறுதன் மடனுடைமை மாதுடைமை
யொக்க வுடனுறைத லூணமைவு-தொக்க
வலவலை யல்லாமை பெண்மகளிர்க் கைந்து
தலைமகனைத் தாழ்க்கு மருந்து.    52

 1. மக்களைப் பெறுதல் 
 2. மடமைக் குணம் உள்ளவளாக விளங்குதல் 
 3. கணவனை விரும்பும் பெண்ணாக விளங்குதல் 
 4. உறவினர்களுடன் கூடி வாழ்தல் 
 5. நல்ல உணவு சமைத்தல் 

இவை ஐந்திலும் கலங்குதல் இல்லாமல் உறுதியுடன் வாழ்தல் வாழவேண்டியவள் பெண்.
இல்லாவிட்டால் குடும்பத் தலைவனுக்குத் தாழ்வு உண்டாகும்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 51 SiruPanchaMulam 51

உண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா
றெண்ணாமை நன்றிகழ றீதெளியா-ரெண்ணி
னரியரா வார்பிறரிற் செல்லாரே யுண்ணார்
பெரியரா வார்பிறர் கைத்து.   51

 1. ஊன் உண்ணாமை நன்று 
 2. ஆசையை நீக்குதல் நன்று 
 3. விருந்தினரைப் போகும்படி அனுப்பிவிட்டு உண்ணாமை நன்று. 
 4. இகழும்படியான செயல்களை எண்ணியும் பாரார்க்காமல் இருப்பது நன்று. 
 5. தீதொன்றும் தெரியாதவர் என்று எண்ணிப் பிறர் இல்லத்துக்குத் தவறான எண்ணத்துடன் செல்லாமல் இருப்பது நன்று. 
 6. பிறர் உழைப்பால் வந்த உணவைப் பெரியார் உண்ணமாட்டார். 


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

Tuesday, 23 May 2017

சிறுபஞ்சமூலம் 50 SiruPanchaMulam 50


கொல்லாமை நன்று கொலை தீதெழுத்தினைக்
கல்லாமை தீது கதந்தீது-நல்லார்
மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி.   50

 1. கொல்லாமை நன்று; கொலை தீது 
 2. எழுத்தினைக் கல்லாமை தீது 
 3. சினம் நீது 
 4. நல்லவர்கள் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டு எதையும் சொல்லுதல் தீது. 
 5. ஊரிலுள்ள உறவினர்களைப் பழிக்காமல் இருப்பது நன்று 


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 49 SiruPanchaMulam 49


பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு
முற்றாமை கேடு முரண்கேடு-தெற்றத்
தொழின்மகன் றன்னோடு மாறாயி னென்று
முழுமகற்குக் கேடி னுரை.   49

நிலத்தை உழுது பயிரிடும் வேளாளனுக்கு

 1. உழைப்பில் சோர்வு கேடு பயக்கும்.
 2. தன் செல்வதால் செருக்குக் கொண்டிருத்தல் கேடு பயக்கும்.
 3. விளைச்சல் முதிரா நிலைமை நேருமானால் கேடு பயக்கும்.
 4. முரண்பட்டுத் தொழில் செய்தல் கேடு பயக்கும்.
 5. தச்சன், கொல்லன் முதலான தொழிலாளிகளோடு மாறுபடல் கேடு பயக்கும்.

இவற்றைப் பறை சாற்றிச் சொல்லுக.


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 48 SiruPanchaMulam 48


நீண்டநீர் காடு களர்நிவந்து விண்டோயு
மாண்ட மலைமக்க ளுள்ளிட்டு-மாண்டவ
ராய்ந்தன வைந்து மரணா வுடையானை
வேந்தனா நாட்டல் விதி.    48

 1. நீண்ட நீர்நிலை 
 2. காடு 
 3. களர் நிலம் 
 4. வானளாவிய மலைக் குன்று 
 5. மக்கள் வளம் 

இந்த ஐந்து அரண்களால் சிறப்புற்றிருக்கும் நாட்டை ஆள்பவன் வேந்தன் என நிலைநாட்டுதல் முறைமை.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 47 SiruPanchaMulam 47


நசைகொல்லார் நச்சியார்க் கென்றுங் கிளைஞர்
மிசைகொல்லார் வேளாண்மை கொல்லா-ரிசைகொல்லார்
பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய்! நன் குணர்ந்தார்
என்பெறினுங் கொல்லா ரியைந்து.   47

 1. தன்னை நாடி வந்தவர்களின் நம்பிக்கையைக் கொல்லமாட்டார் 
 2. உறவினர்களின் மேன்மைகளைக் கொல்லமாட்டார் 
 3. விளையும் பயிரைக் கொல்லமாட்டார். 
 4. பிறர் புகழைக் கொல்லமாட்டார் 

முலைவிலை தந்து திருமணம் செய்துகொள்ளும் மென்மையான முலை உடையவளே!

 1. என்னதான் பெற்றாலும் பிறரைக் கொல்லமாட்டார்.  காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி