Monday, 10 April 2017

வெற்றிவேற்கை VetriVerkkai 41-48

யாருக்கு என்ன இல்லை

யானைக் கில்லை தானமுந் தருமமும். 41

யானைக்கும் யானை போன்றவருக்கும் உயர்தோருக்குக் கொடுக்கும் தானமும், இல்லாதவருக்குக் கொடுக்கும் தருமமும் இல்லை

பூனைக் கில்லை தவமுந் தயையும். 42

பூனைக்கும் பூனை போன்றவருக்கும் தவ ஒழுக்கமும், அருள் குணமும் இல்லை

ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமும். 43

ஞானம் பெற்றவருக்குப் பிறரால் விளையும் இன்பமோ துன்பமோ இல்லை.

சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும். 44

கறையானுக்கும், கறையான் போன்றவர்களுக்கும் செல்வமோ, செருக்கோ இல்லை. (எதனையும் அழிப்பர்)

முதலைக் கில்லை நீத்தும் நிலையும். 45

முதலைக்கு நீந்தும் அளவு நீரோ, நிலையாக நிற்கும் நீரோ வேண்டுவதில்லை. (எதிலும் நீந்தி உயிரினத்தைக் கொன்று தின்னும்)

அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை. 46

அச்சமோ, அடாது செய்யக் கொள்ளவேண்டிய நாணமோ அறிவு இல்லாத மடையர்களுக்கு இல்லை.

நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை. 47

நல்ல நாள் கொண்டாட்டமோ, குறிப்பிட்ட கிழமைகளில் விரத-நோன்பு இருத்தலோ வறுமையில் வாடுபவர்களுக்கு இல்லை.

கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை. 48

உற்றார் உறவினரோ, நண்பர்களோ நிலைமை கெட்டு வாழ்பவர்களுக்கு இல்லை.  

கொற்கையாளி குலசேகரன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய
வெற்றிவேற்கை (நறுந்தொகை) - 15 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி