Sunday, 16 April 2017

அதியமான் நாணயம் Coin of Athiyaman

அதியமான் நாணயம்
தமிழ்-பிராமி எழுத்தில்
அதிய்யமான் - என்று எழுதப்பட்டுள்ளது
நாணயத்தின் வலப்புறத்தைத் தலைப்பக்கமாக உயர்த்திப் பிடித்துப் படிக்கும்போது இந்த எழுத்துக்களைப் படிக்க முடிகிறது

குதிரையில் அமர்ந்திருக்கும் வீரருடன் அதியமான் பெயர் பொறித்த நாணயம் கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அதியமானின் ஊர் தகடூர். தற்போது அவ்வூரின் பெயர் தருமபுரி. அதியமான் குறித்து, ஒளவையார் உள்ளிட்ட பல சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர்.
அதியமான் மழவர் இனத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தானில் ஓடும் ஜீலம், சினாப், ரபி ஆகிய நதிகளின் இடைப்பட்ட மிக வளமான பகுதியை, மாலவாஸ் என்ற பழங்குடியினர், தொன்மைக் காலத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்கள், மிகப் போர் குணம் கொண்டவர்கள். கிரேக்க பேரரசர் அலெக்சாண்டர் படையெடுத்தபோது, இந்தப் பழங்குடியினர், போரில் தோல்வியுற்று தங்கள் நாட்டைவிட்டு, ராஜஸ்தான் வழியாக மத்திய இந்தியாவிற்கும், பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கும், அதியமானின் முன்னோருக்கும் தொடர்பு இருக்கலாம் என, சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், அதை நிரூபிக்க, தகுந்த ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை. 
சங்ககால, சேர, சோழ, பாண்டியர், மலையமான் நாணயங்கள் கடந்த 30 ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு அதியமான் நாணயங்களை வெளியிட்டு உள்ளேன்.
இப்போது ஆய்விற்குள்ளாகி உள்ள நாணயம், கடந்த பிப்ரவரி மாதம், ஹைதராபாதில் நடந்த, தென்னிந்திய நாணயவியல் மாநாட்டில் கலந்து கொண்ட, தருமபுரியைச் சேர்ந்த நாணயம் சேகரிப்பவர் ஒருவரிடம் இருந்து வாங்கியது.
நாணயத்தின் முன்புறத்தில் இடப்பக்கம், அழகிய குதிரை ஒன்று நிற்கிறது. குதிரை மீது ஒரு வீரர் அமர்ந்து, அதைக் கட்டுப்படுத்தும் கயிற்றை பிடித்தபடி இருக்கிறார். அவர் அணிந்திருக்கும் தொப்பி, கிரேக்க வீரர்கள் அணியும் தொப்பி போல் உள்ளது.
நாணயத்தின் வலப்பக்கத்தில் உள்ள விளிம்பில், மேலிருந்து கீழ் நோக்கி, தமிழ்-பிராமி எழுத்து முறையில் ஆறு எழுத்துகளும், எழுத்துகளின் நடுவில் ஒரு மங்கலச்சின்னமும் இருப்பதைக் காணலாம்.
அந்த எழுத்துக்களைச் சேர்த்து, அதியமான்ஸ என்று படிக்கலாம். எழுத்துக்களையும், சின்னத்தையும் இங்கே கொடுத்து உள்ளேன். தி என்ற எழுத்திற்கும், ய என்ற எழுத்திற்கும் இடையில், திருவஸ்தம் என்ற மங்கலச்சின்னம் உள்ளது.
இந்தச் சின்னம், மிகத் தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களிலும், சங்க கால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களிலும் காண முடியும்.
நாணயத்தின் பின்புறத்தில் நின்ற நிலையில் ஒரு புலிச்சின்னம், வலதுபக்கம் நோக்கி நிற்கிறது.
புலியின் முதுகிற்கு மேல், பிராமி முறையில், "ம' என்ற எழுத்து தெரிகிறது. நாணயத்தின் வலது விளிம்பில், மேலிருந்து கீழ்நோக்கி, அதியமான்ஸ என பொறிக்கப்பட்டுள்ளது.
காலம்: நாணயத்தின் காலத்தை கி.மு. 10 -ஆம் நுற்றாண்டாகக் கொள்வதில் தவறில்லை. தமிழனின் தொன்மை வரலாற்றுக்கு, இந்த நாணயமும் ஒரு சான்றாக விளங்கும் என தனது செய்திக்குறிப்பில் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கி.மு. 10 -ஆம் நுற்றாண்டாகக் கொள்வதில் தவறில்லை. என்ப து தான் உதைக்கிறது.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி