Saturday, 15 April 2017

கலித்தொகை 45 Kalittogai 45

திருமணம் நிகழவிருக்கிறது என்று தோழி கூறுகிறாள். 

விடியற் காலத்திலையே வெயில் கடுமையாகக் காயும் மூங்கில் காட்டுப் பாறை.
மணம் பரப்பிக்கொண்டு சுனை ஓரத்தில் காந்தள் மலர்ந்திருக்கும்.
பூத்திருக்கும் அந்தக் காந்தள் கொடி பாம்பு தலையை நீட்டித் தண்ணீர் குடிப்பது போலக் காணப்படும்.
அந்த மலையே ஒளி வீசுவது போன்ற மின்னலுடன் இடி முழங்க காற்று-மழை பொழியும்.
அவ்வாறு மழை பொழியும் ஓசை அந்த மலைச்சாரல் முழுவதும் எதிரொலிக்கும்.
அந்த ஒலியைக் கேட்டு அந்த மலையிலுள்ள சிறுகுடியில் வாழும் மக்கள் துயில் எழுவார்கள்.
இப்படிப்பட்ட உயர்ந்த மலையின் தலைவனே,
கேள்.

காற்று அடிக்கும்போது அருவி வளைந்து ஒலிக்கும்.
அருவியின் சுனையில் நீல மலர் பூத்திருக்கும்.
அந்த நீலமலர் என்று என் தலைவியின் கண்கள் என்று சொல்வது எப்படி?
புல்லிய ஆசை முற்றிலுமாக நிறைவேறாத உன் புணர்ச்சியால் என் தோழி புலம்பிக்கொண்டிருக்கிறாள்.
அவள் கண்கள் பசக்குமாறு நீ செய்துவிட்டாயே.

வரிக் கோடுகளை உடைய முகம் கொண்ட யானையோடு புலி போராடித் துன்புறும் மலைக் காட்டில் வளர்ந்திருக்கும் மூங்கில் போல் இருக்கிறது என்று என் தலைவியின் தோள்களைச் சொல்வது எப்படி?
கடைநிலைக்கு வந்துவிட்டோமே என்று அழுதழுது மிகுந்த நோயால் வருந்தி, திரண்ட தோளின் தகைமையை நீ வாடச் செய்துவிட்டாயே.

வேங்கை மரம் பொன்னிற ஒளி வீசும்படி மலையடுக்கப் பிளவுச் சாரலில் பூத்திருக்கும்.
என் தலைவியின் மேனி ஒளியை இந்த வேங்கையின் பொன்னிறம் என்று சொல்வது எப்படி?
இரவெல்லாம் தூக்கமில்லாமல் வருந்துவதால் என் தோழியின் மேனி அழகு வாடும்படிச் செய்துவிட்டாயே.

என்றெல்லாம்,

தனக்குற்ற துன்பத்தைப் பலவாறு எடுத்துரைத்து, என் தோழி தான் மறைவாகக் கொண்ட நட்பானது அருகி வருவதால், வருந்துவதைப் பார்த்து என் தலைவியின் பெற்றோர், நிலைமையை அறிந்துகொண்டு, அவள் உவக்கும்படி அவளது திருமணத்துக்கு நல்ல நாள் பார்க்கின்றனர்.

இவ்வாறு தோழி சொல்கிறாள்.
  
பாடல் 45 – சொல் பிரிப்புப் பதிவு
தோழி கூற்று

விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை,
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை,
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து,
பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல்
உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி,                    5
நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென,
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!

கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ
புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி         10
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை?

புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ
கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை?                         15

சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ?
யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை?

என ஆங்கு,                  20

தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்,
பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்
உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே

வரைவிடை ஆற்றாத தலைவிக்கு
தோழி தான் தலைவனை நெருங்கி வரைவு கடாவ
அது கேட்ட தலைவன் வரைவு முயற்சியான் வருதல் 
இடையிட்டதூஉம்
தமர் வரைவு எதிர்ந்ததூஉம்
கூறிஅவளை ஆற்றுவித்தது


தரவு 1, தாழிசை 3, தனிச்சொல், & சுரிதகம் என அமைந்துள்ள கலிப்பா

கலித்தொகை 45 – குறிஞ்சிக் கலி 9 - தோழி கூற்று
பாடியவர் – கபிலர்
திணை - குறிஞ்சி
கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி