Thursday, 13 April 2017

கலித்தொகை 41 Kalittogai 41

தோழியும் தலைவியும் தினை குற்றிக்கொண்டு வள்ளைப்பாட்டு பாடுகின்றனர்.
தலைவன் இயல்பைப் பழித்தும் வாழ்த்தியும் பாடுகின்றனர்.
அதனைக் கேட்ட தலைவன் திருமணம் பேசத் தன் பெற்றோரை அனுப்புகிறான்.
தலைவியின் பெற்றோரும் மணம் முடித்துத் தர ஒப்புகின்றனர்.
இந்தச் செய்தியைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
1
வள்ளைப் பாட்டுப் பாட, தலைவியைத் தோழி அழைத்தல்
தோழி வா உன் காதலன் வெற்பனைப் பாடுவோம்.

யானைத் தந்தம் நம் உலக்கை ஆகட்டும்.
சேம்பு இலை முறம் ஆகட்டும்.
மூங்கில் நெல்லைக் குற்றுவோம்.
பாறை உரலில் போட்டுக் குற்றுவோம்.
குற்றிக்கொண்டே பாடுவோம்.

தோழி நல்லவளே,

நள்ளிரவில் இடி முழக்கத்துடன் மழை பொழிந்தது.
மின்னல் கொடி போல் தோன்றியது.
கானவன் அந்த மின்னல் விளக்கு வெளிச்சத்தில் ஆண் யானை தன் பெண் யானையுடன் தன் புன்செய் நிலத்தில் மேய்வதைப் பார்த்தான்.
பின் அந்த யானைக் கூட்டம் நடந்து செல்வதை இருளில் காதால் கேட்டான்.
மலையில் ஆசினிப் பலா மரத்தின் மேல் பணவைப் பந்தல் அமைத்திருந்தான்.
அதன் மேல் ஏறி நின்றுகொண்டு தன் கவணில் கல்லை வைத்து வீசினான்.
அந்தக் கல் வேங்கைப் பூக்கள் சிதறும்படிச் செய்தது.
அடுத்திருந்த ஆசினிப் பழங்களை உதிர்த்தது.
தேன் கூட்டைத் துளைத்துக்கொண்டு சென்றது.
இனிப்பு மா மரத்தின் தளிர்களைத் தாக்கியது.
தார் போட்டிருக்கும் வாழை மரத்திலுள்ள இலையைக் கிழித்தது.
இறுதியில் பலாப் பழத்துக்கொள்ளே தங்கியது.
இப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்.
அவனைப் பாடுவோம் வா.
பாடுவது நமக்குப் பெருமை.
2
தலைவி இயற்பழித்தல்
அவன் “பிரியமாட்டேன்” என்று சூள் உரைத்தான்.
ஆனால், அந்தச் சூளுரையைப் பொய்யாக்கிவிட்டான்.
அவன் மலையில் அருவி பளிச்சிடுகிறது பார்.
3
தோழி இயற்படப் பாடுகிறாள்
பொய் சொல்லுவானா? சொல்லமாட்டான்.
“அஞ்சாதே” என்று சொன்னதைப் பொய்யாக்குவானா?
அப்படி அவன் பொய்யாக்கினால் அது நிலா வெளிச்சம் நெருப்பைக் கக்குவது போல் ஆகும்.
4
தலைவி இயற்பழித்தல்
என் முன்னங்கையில் உள்ள வளையல் கழன்றோடுகிறது.
அவனோ வரவில்லை.
அப்படிப்பட்டவன் மலையில் மழை மேகங்கள் உலாவுகின்றன பார்.
5
தோழி இயற்படப் பாடுகிறாள்.
வராமல் இருப்பானா?
அவனது ஈர நெஞ்சத்தில் வாராமை தோன்றின், நிழலோடு இருக்கும் குளத்து நீரில் குவளைப் பூ வெந்துபோவது போன்றதாகும்.
6
தலைவி இயற்பழித்துப் பாடுகிறாள்.
அவன் என் மேனியைத் தழுவாமல் துறந்து வாழ்கிறான்.
அவன் மலை கழுவாத மணிக் கல் போல மாசி படர்ந்து தோன்றுவதைப் பார்.
7
தோழி இயற்படப் பாடுகிறாள்
துறந்து இருக்க மாட்டான்.
மலைகள் தொடர்ந்து நிற்கும் நாடன் அல்லவா அவன்.
அப்படி அவன் துறப்பான் ஆயின், அது சூரிய ஒளியில் இருள் இருப்பதாகிவிடும்.
8
தந்தை வரைவு உடம்பட்டமையைத் தலைவிக்குத் தோழி அறிவித்தல்
என்றெல்லாம் நாம் வள்ளைப் பாட்டில் பாடியது நன்மையில் முடிந்துள்ளது.
நாம் பாடியதை அவன் மறைவில் இருந்துகொண்டு கேட்டிருக்கிறான்.
அவன் உன் மென்மையான தோளைக் கேட்டு வந்திருக்கிறான்.
உன் தந்தையும் வேங்கை மரத்தின் கீழே இருந்துகொண்டு திருமணம் செய்து தருவதாக உன் காதலன் மலைகிழவனுக்கு வாக்களித்திருக்கிறார்.

பாடல் 41 – சொல் பிரிப்புப் பதிவு
தோழி கூற்று

1
பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்
கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்
பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள்,            5
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து,
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடு வரை ஆசினிப் பணவை ஏறி,
கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்,       10
இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி,
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா,
தேன் செய் இறாஅல் துளைபடப் போகி,
நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி,
குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா,               15
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப்
பாடுகம், வா வாழி, தோழி! நல் தோழி! பாடுற்று
2
இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே;
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை   20
3
பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?
அஞ்சல் ஓம்பு என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்,
திங்களுள் தீத் தோன்றியற்று
4
இள மழை ஆடும்; இள மழை ஆடும்;                  25
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று
5
வாராது அமைவானோ? வாராது அமைவானோ?
வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன்
ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து   30
நீருள் குவளை வெந்தற்று
6
மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;
மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத்
துன்னான் துறந்தான் மலை
7
துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்;              35
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று
8
என ஆங்கு
நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள்      40
ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி,
மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,
மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே

இருவரும் இவ் வகையால் பாடிய வள்ளைப் பாட்டு, தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைவு வேண்டிவிட, தந்தையும் வரைவு உடம்பட்டமை தோழி, தலைவிக்கு உரைத்தது

 
குற்றுதல் 
கலித்தொகை 41 – குறிஞ்சிக் கலி 5 - தோழி கூற்று
பாடியவர் – கபிலர்
திணை - குறிஞ்சி
கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி