Thursday, 13 April 2017

கலித்தொகை 40 Kalittogai 40

தலைவியும் தோழியும் உரலில் தினைக் கதிர்களைப் போட்டுக் குற்றிக்கொண்டு “வள்ளைப்பாட்டு” பாடுகின்றனர்.
அதனைக் கேட்டுக்கொண்டிருந்த தலைவன் திருமணம் செய்துகொள்ளத் தலைவி இல்லத்துக்கு வருகிறான். 
1             
குற்றிக்கொண்டு வள்ளைப்பாட்டு பாடலாம் – என்று தோழி கூறுகிறாள்.
தலைவி அதனை ஏற்றுக்கொடு கூறுகிறாள்.

மயில் போல அகவும் பண்ணோடு பாடிவோம்.
காதல் விருப்பம் கொண்ட பெண் புன்னகை பூத்த முகத்தோடு நாணி நிற்பது போல் வளைந்திருக்கும் தினைக் கதிரைச் சந்தன உரலில் போட்டு, முத்தாக விளைந்திருக்கும் யானைத் தந்த உலக்கையால் குற்றிக்கொண்டே பாடுவோம்.
“பகை இல்லாத பாச நோய்” உண்டாக்கியவன் பயன் மிக்க மலையை அகவும் ஓசையுடன் பாடுவோம்.
2
தோழி கூறுகிறாள்.
ஆராயும் நெற்றி, அழகு செய்யப்பட்ட கூந்தல், அழகிய, மூங்கில் போன்ற தோள், தேன் மணக்கும் கன்னம் அகியவற்றைக் கொண்டவளே!
நானும் ஒன்றைப் பாடுகிறேன்.
நீயும், மூங்கில் உரசுக்கொண்டு ஒலிக்கும் அவன் மலைப்பிளவு பற்றிப் பாடுக.
3
தலைவி அவன் மலையைப் போற்றிப் பாடவில்லை.
எனவே தோழி அவன் மலையைப் போற்றிப் பாடுகிறாள்.
மலை வாழ் மகளிராகிய கொடிச்சியர் அவன் மலையைக் கை கூப்பி வணங்குவது போல, காந்தள் மலர் கை குவித்துத் தேன் ஒழுகப் பூத்திருக்கும் மலை அவன் மலை.
தன்னை வந்தடைந்தவர்களின் துன்பங்களைப் போக்குபவனாகிய அவனது மலை

ஆண் குரங்குக் கூட்டமாகிய உறவினர்களிடையே பெண் குரங்கு தன் குறையைச் சொல்லிப் போக்கிக்கொள்ளும் செம்மாப்பு உடையது அவன் மலை.
பழைய அழகு நலம் கெட்டால், நலம் கெட்டவர்களைக் காட்டிலும், நலம் கெடக் காரணமாக இருந்தேனே - என்று பெரிதும் வருந்தும் பண்பினனாகிய அவன் மலை
4
தலைவி தலைவன் இயல்பைப் பழித்துப் பாடுகிறாள்.
தாழ்ந்த கிளையிலிருந்து கொட்டும் சுழன்று விரிந்த பூக்களில் புதைந்து கிடக்கும் விளையாட்டுப் பண்டங்கள் போல என் மேனி வாடும்படி எனக்கு நோயை உண்டாக்கினான்.
அவன் புகழை அழித்து நாம் ஒரு பாடல் பாடுவோம்.

இவ்வாறு சொல்லிவிட்டுப் பாடுகிறாள்.
வானளாவி ஓங்கி உயர்ந்த மலை.
அங்கே பந்து விளையாடிய களைப்பு தீர, அரமகளிர் கொட்டும் அருவியில் நீராடுவர்.
அங்கே நீராடும் பெண்களின் பெண்மை நலத்தை உண்ட பின்னர் வண்டு போல் விட்டுவிட்டுச் சென்றுவிடுவான்.
அத்தகையவன் மலைதான் அது.
5
தோழி அதனை மாற்றி அவன் மலையைப் புகழ்ந்தது பாடுகிறாள்.
அடங்காத அழகிய ஆண்யானை தான் விரும்பும் \ தன்னை விரும்பும் பெண் யானைக்குக் கரும்பினை வளைத்து ஊட்டும் மலை அவன் மலை.
உறவினர் போல எப்போதும் உடன் இருப்பேன் – என்பவன் மலை அது.
6
தலைவன் திருமணம் செய்துகொள்ள வருகிறான் என்னும் செய்தியைத் தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.
என்றெல்லாம்
நாம் வள்ளைப் பாட்டில் பாடியதைக் கேட்டவன் நம்மீது அருள் கொண்டு பூரித்த மகிழ்வோடு வந்திருக்கிறான்.
அவனைப் புணர்ந்து நிறைவு அடையாத உன் முலை அழகுடன் பொலிவு பெற வந்திருக்கிறான்.
அவன் செம்மல்;
மலை கிழவோன்.

பாடல் 40 – சொல் பிரிப்புப் பதிவு
தோழி கூற்று

1             
“பாடுவோம்” என்ற தோழியை நோக்கித் தலைவி உடம்பட்டுக் கூறுதல்

அகவினம் பாடுவாம், தோழி! அமர் கண்
நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ,
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சி,                   5
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,
அகவினம் பாடுவாம், நாம்
தரவு
2
தோழியின் மறுமொழி

ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்,
தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு
வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை   10
தரவு
3
தலைவி இயற்படப் பாடாமையின் தோழி பாடுதல்

கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங் காந்தள்
தொடுத்த தேன் சோர, தயங்கும் தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை
தாழிசை 1
கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து,            15
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லற் படுவான் மலை
தாழிசை 2
4
தலைவி இயற்பழித்துப் பாடுதல்

புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத்
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான்      20
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்
தரவு
விண் தோய் வரை, பந்து எறிந்த அயா வீட,
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே
பெண்டிர் நலம் வௌவி, தண் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை         25
தாழிசை 1
5
தோழி இயற்பட மொழிதல்

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை
தாழிசை 2
6
தலைவன் வரைவொடு புகுந்தமையைத் தோழி தலைவிக்கு அறிவித்தல்

என நாம்,        30
தனிச்சொல்
தன் மலை பாட, நயவந்து கேட்டு, அருளி,
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெற,
செம்மலை ஆகிய மலைகிழவோனே
சுரிதகம்
தோழியும் தலைமகளும் தலைமகனது மலையை வாழ்த்திப் பாடுகின்ற வள்ளைப்பாட்டில், தோழி இயற்பட மொழிய, தலைமகள் இயற்பழித்தமை தலைமகன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைய வருகின்றமை தோழி, தலைமகட்கு உரைத்தது

குற்றுதல்


கலித்தொகை 40 – குறிஞ்சிக் கலி 4
பாடியவர் – கபிலர்
திணை - குறிஞ்சி
கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி