Thursday, 20 April 2017

ஐங்குறுநூறு பத்து 31 AinguruNuru 301-310

செயல் அழுங்குவித்த பத்து

பாலை


பொருள் தேடும் நோக்கோடு தலைவியைப் பிரியும் தலைவனைத் 
தோழி தடுத்து நிறுத்தும் பாடல்கள் இதில் உள்ளன 

301  

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
வெள்ளோத்திரம் மாசில்லா வெண்மையான மலர்.
ஆசை கொள்ளச் செய்யும் மலர்.
பாலைக் காட்டு வழியில் செல்வோர் அதனைத் தலையில் சூடிகொகொள்வர்.
அத்தகைய மலையில் செல்வாயாயின்,
மை நிற மலைநாட்டின் தலைவனே,
இவள் – என் தலைவி – உன் காதலி - பெரிதும் வருந்துவாள்.  

302  

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
தேடும் பொருள் கிடைக்காமலும் போகலாம்.
அகன்ற தோளை உடைய இவள் பிரிவதற்கும் உரியவள்-தான்.
நீ செல்லாமல் இருந்தால் நல்லது.
மென்மையான நிலத்தின் தலைவனே,
இவள் அழும்படி விட்டுவிட்டுப் பிரியலாமா?

303  

தலைவி தலைவனை வேண்டுகிறாள்.
சுடப்படாத மண்பாண்டம் போன்றது ஆலம் பழம்.
பறந்து செல்லும் பறவைகள் போகில்.
பாலை நில வழியில், வேனில் காலத்தில் ஆலம்பழம் போகில் பறவைகளைத் தடுத்து உண்ணச் செய்யும்.
காளை போன்றவலாகிய விடலை அல்லவா நீ.
செல்வதாயின் என்னையும் உடன் அழைத்துச் செல்.

304  

தோழி தலைவனிடம் சொல்கிறாள்
கோவலர் கற்காதவர்கள்
என்றாலும் தன் பசுவினம் நீர் உண்ணுவதற்காகக் தன் கையிலுள்ள கோலால் பத்தல் தோண்டுவர்.
அந்தப் பத்தலில் உள்ள நீரை யானை குடித்துவிடும்.
அப்படிப்பட்ட வழியில்,
வலிமை மிக்க சிங்கம் போன்றவனே
செல்ல வேண்டாம்.
மென்மையான இயல்பினையும், மழைமேகம் போன்ற கூந்தலையும் உடைய இவள் உன்னை நினைத்துக்கொண்டு புலம்புவாள்.

305  

தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்
பசுமை இல்லாமல் போன காட்டில் ஆண்யானை தன் பெண்யானையை அழைத்துக்கொண்டு வேறு காட்டுக்குச் செல்லாது.
பசியுடன் அந்தக் காட்டிலையே வருந்தும்.
சுடரும் வளையல் அணிந்த உன் குறுமகள் வருந்தும்படி விட்டுவிட்டு
அப்படிப்பட்ட காட்டில்
வீரக் காளையே
நீ செல்வதால் என்ன பயன் விளையுமோ?

306  

தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்
ஐய, நீ வெல்லும் போர்த்திறம் மிக்க குருசில்
அகன்ற காட்டு வழியில் நீ சென்றால்,
பல வயிரங்கள் பதித்த அணிகலன் பூண்டிருக்கும் இவளது அல்குலில் இருக்கும் அழகிய வரிக் கோடுகள் வாடும்.
மெலும்
புல்லாங்குழல் போன்று மென்மையான இசையுடன் இவள் அழுவாள்.
விழாக் காலம் போன்று ஒப்பனை செய்யப்பட்டிருக்கும் கூந்தலை உடைய மாமை நிறம் கொண்டவள் அழுவாள்.

307  

தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்
மூங்கிலில் தீ பற்றி எரியும்போது வலிமை மிக்க சிங்கம்-கூட அஞ்சும்.
அப்படிப்பட்ட காட்டு வழியில் நீ செல்ல நினைக்கிறாய்.
நல்லது அன்று.
இவளைக் கொண்ட தலைவனே
நீ கருதிய பொருள் நல்லது அன்று.
பொம்மை போன்ற நல்லழகு பெற்ற உன் துணைவி பிரிவால் வருந்துவாள்.

308  

தோழி தலைவனிடம் கூறுகிறாள்
பல்கி இருண்ட கூந்தலும், மெல்லிய இயல்பும் கொண்டவள் இவள்.
நீ இவளைப் பிரியாமல் இருந்தால் நல்லது.
நீ பிரிந்தால் இந்த மலையே உன்னை விட்டுப் பிரிந்துவிட்டது என நினைத்துக்கொள்.
இவள் உயிருடன் இருக்கமாட்டாள்.
விரிந்த கொத்துகளுடன் கால் கொண்டிருக்கும் எறுழம் பூ கொட்டிக்கிடக்கும் மலை இது.
முருகப் பெருமானே விரும்பும் மலை இது.

309  

தலைவனுக்குத் தோழி சொல்கிறாள்
வெயில் கொளுத்தும் மாதத்தில் கொடுமையான காட்டு வழியில் நீ சென்றால்,
உன்னை நினைத்து வாழ்ந்துகொண்டிருப்பவள்
கருவுற்று நிறைமாதப் பெண்ணாய் இருப்பவள்
மகன் பிறந்து சிரிக்கும்போது
இன்பம் கொள்ள முடியுமா?
மலையைக் கடந்து சென்று நீ ஈட்டிவரும் பொருள் உன் மகன் சிறிப்பை விட இனிக்குமா?

310  

தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்
பொன்னாலான பசுமை நிறப் பாண்டிலும், பல காசுகளும் இருக்கும் அணிகலன்களை அல்குலில் அணிந்தவள் இவள்.
தோளில் ஒளி வீசும் அணிகலன் பூண்டவள்.
இந்த அணிகலன்கள் நழுவும்படி இவளை ஏங்க வைத்துவிட்டு நீ பொருள் தேடப் பிரிந்து செல்வாய் ஆயின்
வீரக் காளையே
இவள் முகத்தின் அழகை நீ பார்க்க முடியாது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு

301  

மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்,
அருஞ் சுரம் செல்வோர், சென்னிக் கூட்டும்
அவ் வரை இறக்குவை ஆயின்,
மை வரை நாட! வருந்துவள் பெரிதே.

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது 1

302  

அரும்பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே;
பெருந் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்;
செல்லாய் ஆயினோ நன்றே
மெல்லம் புலம்ப! இவள் அழப் பிரிந்தே.

பொருள்வயிற் பிரியும் தலைமகன், 'பிரிவு உடன்படுத்த வேண்டும்' என்றானாக, அவற்குத் தோழி சொல்லியது. 2

303  

புதுக் கலத்தன்ன கனிய ஆலம்
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ் சுரம்
தண்ணிய இனிய ஆக;
எம்மொடும் சென்மோ, விடலை! நீயே.

சுரத்து அருமை கூறி உடன் செலவு மறுக்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 3

304  

கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர்ப் பத்தல் யானை வௌவும்
கல் அதர்க் கவலை செல்லின், மெல் இயல்
புயல் நெடுங்கூந்தல் புலம்பும்;
வய மான் தோன்றல்! வல்லாதீமே.     5

பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 4

305  

களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது,
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து,
சுடர்த் தொடிக் குறுமகள் இனைய,
எனைப்பயம் செய்யுமோ விடலை! நின் செலவே?

'உடன்போக்கு ஒழித்துத் தனித்துச் செல்வல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 5

306  

வெல்போர்க் குருசில்! நீ வியன் சுரன் இறப்பின்,
பல் காழ் அல்குல் அவ் வரி வாட,
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே.

பிரியும் தலைமகற்குத் தோழி தலைமகள் பிரிவாற்றாமை கூறியது. 6

307  

ஞெலி கழை முழங்குஅழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ் சுரம் செலவு அயர்ந்தனையே;
நன்று இல, கொண்க! நின் பொருளே
பாவை அன்ன நின் துணைப் பிரிந்து வருமே.

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக் கூறியவழி, தோழி அதனை இழித்துக் கூறியது. 7

308  

பல் இருங் கூந்தல் மெல்லியலோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே; விரிஇணர்க்
கால் எறுழ் ஒள் வீ தாஅய
முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே.

'பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி, 'பிரியாதொழியப் பெறின் நன்று; பிரிவையாயின் இப் பருவத்து இம் மாமலை எங்களை விட்டுப் பிரிந்தால் பிரி', எனச் சொல்லியது. 8

309  

வேனில் திங்கள் வெஞ் சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே; நன்றும்
நின் நயந்து உறைவி கடுஞ் சூல் சிறுவன்
முறுவல் காண்டலின், இனிதோ
இறு வரை நாட! நீ இறந்து செய் பொருளே?   5

'பொருள் வயிற் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 9

310  

பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்,
இலங்கு வளை மென் தோள், இழை நிலை நெகிழப்
பிரிதல் வல்லுவைஆயின்,
அரிதே விடலை! இவள் ஆய்நுதல் கவினே!

பிரிகின்ற தலைமகற்குத் தோழி, 'நீ நினைக்கின்ற கருமம் முடித்தாய் ஆயினும், இவள் நலம் மீட்டற்கு அரிது' எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தது. 10

புலவர் – ஓதலாந்தையார்
கி.மு. காலம்
ஐங்குறுநூறு 31 ஆம் பத்து
திணை – பாலை - 1 ஆம் பத்து
பாடல் – 301-310
செயல் அழுங்குவித்த பத்து

அல்குலை மறைக்கும் இந்த இடையாடை
மணிக் காசுகள் கோக்கப்பட்ட பொன்னணிகலன் கோப்புத் தொங்கலாக
அக்கால மகளிர் அணிந்திருந்தனர்
"பல்காழ் அல்குல்" - 306
"பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்" - 310


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி