Wednesday, 19 April 2017

ஐங்குறுநூறு பத்து 29 AinguruNuru 281 – 290

நெல் வயலில் கிளிகள்

கிள்ளைப் பத்து

குறிஞ்சி


கிளிகள் மிகுந்த மலையின் தலைவன் தலைவியின் காதலன்.
கிளியின் செயல்கள் தலைவனின் செயல்களோடு ஒப்புமை உடையனவாக, - உள்ளுறை உவமையாக – காட்டப்பட்டுள்ள பத்துப் பாடல்கள் இதில் உள்ளன.

281  
தலைவியை விரும்பும் தலைவன் சொல்கிறான்.
வெள்ளம் என்னும் எண்ணின் அளவு ஊழிக் காலமாகக் கிளிகள் வாழ்கின்றன.
இந்தக் கிளிகள் வாழ்க.
இவை விளைந்திருக்கும் தினையைக் கவர்வதால் தானே அந்தக் கிளிகளை ஓட்டும் பொருட்டு என் காதலி கொடிச்சி தினைப்புனம் காவலுக்கு வந்துள்ளாள்.
அவளது பருத்த தோள் எனக்குக் கிடைப்பதாயிற்று.

282  
தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
மலைச்சாரலில் பருத்த கதிர்களுடன் தினை விளைந்திருக்கிறது.
அவற்றை உண்ணும் கிளிகளை என் தலைவி கொடிச்சி ஓட்டுகிறாள்.
விரும்பும் கண்களோடு ஓட்டுகிறாள்.
அப்படிக் கொடிச்சி ஓட்டவேண்டும் என்று தலைவன் விருப்பத்தோடு நினைக்கிறான்.
இப்படி நினைக்கும் மலைநாடனே
நிறைந்த இருளில் என் தலைவியை அடையும் பொருட்டு வரவேண்டாம்.
கொம்புகளை உடைய காட்டு யானை நடமாடும்எ வழி அது.
துன்பம் நேரலாம் அல்லவா?

283  
மகளிரின் மனப்பாங்கைத் தோழி கூறுகிறாள்.
புன்செய் நிலத்தை உழுது விதைத்த தினையைக் கவர வரும் கிளியைக் கானவன் மகள் ஓட்டுவாள்.
கானவன் கொடூரமான கண்ணோட்டம் உள்ளவன்.
இத்தகைய நாட்டின் தலைவன் நீ.
எவ்வளவோ பெருமளவில் நான் என் தலைவிக்கு எடுத்துரைத்தேன்.
அவளோ உன் பொய் வலையில் விழுந்து உன்னைத் தழுவுகிறாள்.
பெண் புத்தி பின் புத்தி அல்லவா 

284  
தலைவி கிளியைப் பார்த்துப் பேசுகிறாள்
தலைவன் புரிந்துகொள்ளவேண்டும் என்பது கருத்து
சிவந்த வாயை உடைய பச்சைக்கிளி இரங்கத் தக்கது.
குன்றக் குரவர் தினையைக் கொய்துகொண்டு சென்றுவிட்டனர்.
எனினும் அவை கதிர் இல்லாத இருவித் தட்டையில் அமர்ந்திருக்குன்றன.
அவற்றைப் பிரிய முடியாத பேரன்பினவாக உள்ளன.

285  
தோழி தலைவனிடம் கூறுகிறாள்
குறவர் மகள்
பின்னிய இருண்ட கூந்தலை உடையவள்
நல்ல முக அழகு கொண்டவள். (நுதல் > முகம் – ஆகுபெயர்)
தினை மாவை உண்பாள்
கையில் தட்டையை வைத்துக்கொண்டு தட்டி ஓசை எழுப்பி ஐவன நெல்லில் உள்ள கிளிகளை ஓட்டுவாள்.
இப்படி ஓட்டும் நாட்டை உடையவன் நீ.
இவள் – என் தலைவி – வளையல் நழுவும்படி பிரிவதற்கு வல்லமையை எப்படிப் பெற்றாய்?
 
தட்டை
தட்டி இசை எழுப்பும்
இசைக்கருவி
286  
தலைவி தோழியிடம் சொல்கிறாள்
சிறிய தினையை அறுவடை செய்த பின்னர் நிற்கும் தட்டையில் படர்ந்து காய்த்திருக்கும் அவரையில் கிளிகள் இரை தேடும் வளமான நாட்டின் தலைவன் என் காதலன்.
அவன் என்மீது கொண்டுள்ள ஆசை குற்றமற்றது போலும்.
அந்த ஆசை என் மேனி அழகைக் கவர்ந்து சென்றுவிட்டதே!

287  
திருமணம் செய்துகொள்ளக் காலம் கடத்தும் தலைவனிடம் தோழி கூறியது.
உயர்ந்த மலையில் வாழும் வருடை ஆடு
கிளி
ஆகியவை
தினையைக் கவர அஞ்சும் நாட்டை உடையவன் நீ.
பொய் சொல்வதில் நீ வல்லவன்.
நெறி அல்லாத செயல்களைச் செய்வதிலும் வல்லவன்.

288  
தலைவன் மகிழ்ச்சி
நல்லது செய்தனர்.
எனக்கு உதவி செய்தனர்.
நெஞ்சே
அவர்களுக்கு நாம் என்ன செய்யக் கடவேம்
பல கதிர்களுடன் தினை விளைந்திருக்கிறது.
கிளி அதனைக் கிள்ளிக்கொண்டு செல்கிறது.
அதனால்தானே கொடிச்சியை – என் காதலியை – தினைப்புனம் காக்க அனுப்பி வைத்துள்ளனர்?

289  
தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
மலையடுக்கத்தில் கிளி தினை உண்ண வரும்.
அந்தக் கிளி போன்ற கொடிச்சி தினை காக்க வருவாள்.
இப்படிப்பட்ட மலை நாட்டை உடையவன் நீ.
இனி, இவள் தினைப்புனம் காக்க வரமாட்டாள்.
நீ கொடிச்சியை – என் தலைவியை – திருமணம் செய்து அழைத்துக்கொண்டு செல்.

290  
தலைவன் கிளியிடம் பேசுவது போல நெஞ்சக் கிடக்கையை வெளிப்படுத்துகிறான்.
அறம் செய்யும் செங்கோல் அரசனால் நன்மை விளையும்.
கிளியே, நீயும் அவன் போல நன்மை செய்கிறாய்.
என் காதலி கொடிச்சி போல அழகுடன் திகழ்கிறாய்.
அவள் தினைப்புனம் காக்க வரும்படித் தினையைக் கவர்கிறாய்.  

பாடல் சொல் பிரிப்புப் பதிவு

281  

வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய, பலவே ஒள் இழை
இரும் பல் கூந்தல் கொடிச்சி
பெருந் தோள் காவல் காட்டியவ்வே.

ஆயத்தோடு விளையாட்டு விருப்பினால் பொழிலகம் புகுந்த தலைவியை எதிர்ப்பட்டு ஒழுகுகின்ற தலைமகன், அவள் புனங்காவற்கு உரியளாய் நின்றது கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 1

282  

சாரல் புறத்த பெருங் குரல் சிறு தினைப்
பேர் அமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறு கிளி உன்னும் நாட!
ஆர் இருள் பெருகின; வாரல்
கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே.      5

இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து நீங்குழி, அவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது. 2

283  

வன்கட் கானவன் மென் சொல் மட மகள்
புன்புல மயக்கத்து உழுத ஏனல்
பைம் புறச் சிறு கிளி கடியும் நாட!
பெரிய கூறி நீப்பினும்,
பொய்வலைப் படூஉம் பெண்டு தவப் பலவே.  5

தோழி வாயில் மறுக்கவும், தலைமகன் ஆற்றாமை கண்டு, தலைமகள் வாயில் நேர, அவன் பள்ளியிடத்தானாய் இருந்துழிப் புக்க தோழி கூறியது. 3

284  

அளியதாமே, செவ் வாய்ப் பைங் கிளி
குன்றக் குறவர் கொய் தினைப் பைங் கால்
இருவி நீள்புனம் கண்டும்.
பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே.

தினை அரிந்துழி, கிளியை நோக்கிக் கூறுவாள் போல், சிறைப்புறமாக ஒம்படுத்தது. 4

285  

பின் இருங் கூந்தல் நல் நுதல் குறமகள்
மென் தினை நுவணை உண்டு, தட்டையின்
ஐவனச் சிறு கிளி கடியும் நாட!
வீங்குவளை நெகிழப் பிரிதல்
யாங்கு வல்லுநையோ, ஈங்கு இவள் துறந்தே?     5

ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 5

286  

சிறு தினை கொய்த இருவி வெண் கால்
காய்த்த அவரைப் படு கிளி கடியும்
யாணர் ஆகிய நல் மலை நாடன்
புகர் இன்று நயந்தனன் போலும்;
கவரும் தோழி! என் மாமைக் கவினே.       5

உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃது ஒழிந்து, தானே வரைவிடை வைத்துப் பிரிய நினைந்ததனைக் குறிப்பினான் உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
தலைமகன், 'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்றவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.

287  

நெடு வரை மிசையது குறுங் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!
வல்லை மன்ற பொய்த்தல்;
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே.

'இன்ன நாளில் வரைவல்' எனக் கூறி, அந்நாளில் வரையாது, பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது. 7

288  

நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம்? நெஞ்சே! காமர்
மெல் இயல் கொடிச்சி காப்பப்
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே.

'கிளிகள் புனத்தின்கண் படியாநின்றன' என்று, தலைவியைக் காக்க ஏவியவழி, அதனை அறிந்த தலைமகன் உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 8

289  

'கொடிச்சி இன் குரல் கிளி செத்து, அடுக்கத்துப்
பைங் குரல் ஏனல் படர்தரும் கிளி' எனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட! வரைந்தனை கொண்மோ!

இற்செறித்த பின்னர்த் தோழி வரைவு கடாவுழி, 'முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல்' என்றாற்கு அவள் சொல்லியது. 9

290  

அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும், கிள்ளை பிறங்கிய
பூக் கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும்; அவள் ஓப்பவும் படுமே.

காவல் மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய தலைமகன் வந்துழி, அவன் கேட்டு வெறுப்புத் தீர்த்தற் பொருட்டால், தினைப்புனம் காவல் தொடங்காநின்றாள் என்பது தோன்ற, தோழி கூறியது. 10

புலவர் – கபிலர்
கி.மு. காலம்
ஐங்குறுநூறு 29 ஆம் பத்து
திணை – குறிஞ்சி - 9 ஆம் பத்து
பாடல் – 281 - 290
கிள்ளைப் பத்துNo comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி