Sunday, 30 April 2017

ஐங்குறுநூறு 38 AinguruNuru 371-380

மகட் போக்கியவழித் தாய் இரங்கு பத்து

பாலை


தன் மகள் காதலனுடன் சென்றுவிட்டதை எண்ணிக் கலங்கும் செவிலியும், பெற்ற தாயும்

371        
மள்ளர்கள் முழவு முழக்கும் இசைக்கு ஏற்றாற்போல மயில் ஆடும் ஓங்கி உயர்ந்த குன்றத்தில்
என் மகள் செல்லும் குன்றத்தில்
மழை பொழிந்து வழி இனிமையாக அமையட்டும்.
பிறை போன்ற நெற்றியை உடையவள் என் மகள்.
“அறநெறி இதுதான்” என்னும் தெளிவு பெற்று அவள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள்.
அவள் செல்லும் வழி இனியாக அமையட்டும்.

செவிலி சொல்கிறாள்.

372        
என்னை நினைத்தாளோ இல்லையோ
என்மகளை நெஞ்சம் கொள்ளுமாறு அவன் உறுதிமொழி கூறித் தேற்றியிருக்குறான்ழ
அந்தக் காளையோடு அவள் சென்றுவிட்டாள்.
ஆரவாரம் மிக்க இந்த ஊர் அலர் தூற்றுகிறது.
என் மகளோ செழுமையான பல குன்றங்களைக் கடந்து சென்றுவிட்டாள்.

செவிலி கலங்குகிறாள்.

373        
இரட்டைக் கொம்பு கொண்ட ஆண்மான்.
புலி தாக்குதலிலிருந்து பிழைத்துக்கொண்டது. பெண்மானை அணைக்க விரும்பி தன் ஆண் குரலை எழுப்பியது.
அத்தகைய கொடுமையான காட்டில் என் மகளை அழைத்துக்கொண்டு சென்றான் அந்தக் காளை. 
அவன் தாய் தன் மகனை நினைக்கும்போதெல்லாம் நான் என் மகளை நினைத்து அழுவது போல அழட்டும்.

செவிலி புலம்புகிறாள்.

374        
பல முறை நினைத்தாலும் நல்ல ஊழ் அமையட்டும் என்று நினைப்பேனாக.
என் மகளை அழைத்துச் சென்ற வீரம் மிக்க வல்லாளனாகிய அந்ததக் காளை என் மகளைக் காப்பாற்றட்டும்.
உள்ளுக்குள் சிக்கு முடிச்சு இல்லாத கூந்தலை உடையவள் என் மகள்.
ஆண் குரங்களும் அறியாத காட்டு வழிய்யில் சென்றுவிட்டாளே.

செவிலி வாழ்த்துகிறாள்.

375        
அவள் என் கண்ணணில் மலர்ந்துகொண்டிருக்கிறாள்.
என் கையிலிருக்கும் இந்தப் பொம்மை என் மகளாகிய பாவைக்கு விருப்பமான பொம்மை.
இந்தப் பச்சைக்கிளி என் பச்சைக்கிளியாகிய மகள் எடுத்து விளையாடிய பச்சைக்கிளி.
இந்த மைனாக் குருவி என் மகளுக்கு இனிய சொல் கூறும் மைனாக் குருவி.
என்று சொல்லிக்கொண்டு என் மனம் சுழல்கின்றது.
என் மகள் நலம் மிக்க சுடர் முகம் கொண்டவள்.
இவற்றைக் காணும்போதெல்லாம் கலங்ககுகிறேன்.
இப்படிக் கலங்கும்படி விட்டுவிட்டு என் மகள் நீங்கிவிட்டாளா?

376        
இப்படி நாள்தோறும் நான் புலம்புகிறேன்.
இப்படிக் கலங்கும்படி என் மகளை என்னிடமிருந்து பிரித்த விதி புலம்பித் தொலைக்கட்டும்.
நாற்புறமும் காடு பற்றி எரியும்போது இடையில் அகப்பட்டுக்கொண்டவர் கலங்குவது போல விதி கலங்கட்டும்.
நல்வினை மட்டுமே செய்தது இந்த மாளிகை.
இந்த மாளிகையில் உள்ளவர்கள் கலங்குகின்றனர்.
நல்வினை செய்தவர் கலங்கும்படி மகளைப் போக்கிய விதி கலங்கட்டும்.

செவிலியின் வருத்தம்.

377        
தண்ணீர்த் தாகத்தால் வாடும் யானை இசைக்கருவி கொம்பு ஊதுவது போலப் பெருமூச்சு விடும்.
அப்படிப்பட்ட வழியில் என் மகள் சென்னுவிட்டாள்.
அவள் விளையாடும் பந்து, பாவை, கழங்கு ஆகியவற்றை என்னிடம் அவள் நினைவாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.

செவிலியின் புலம்பல்.

378        
மேகம் போல விரியும் சிறகினை உடைய வௌவால் மாலை நேரத்தில் பறந்து செல்ல விரும்பும்.
இந்த மாலை வேளையில் நான் புலம்புகிறேன்.
நான் புலம்பும்படி போய்விட்ட அவளுக்காக நான் நோவேனா?
அல்லது
அவள் இல்லாமல் அழுகிறாளே அவள் தோழி இவளுக்காக நான் நோவேனா?

செவிலியின் கலக்கம்.

379        
என் மகள் முன்பே சொல்லியிருந்தால் தான் விரும்பும் சுற்றத்தாருடன் நாமே திருமணம் செய்து தந்திருக்கலாம்.
இது இனியது அல்லவா?
அவ்வாறன்றி அவள் தான் விரும்பும் காதலனுடன் சென்றுவிட்டாள்.
பனி மலையில் யானைக் கூட்டம் நடமாடும் சோலையில் வெற்றிவேல் முருகனைப் போன்றவனுடன் சேர்ந்து சென்றுவிட்டாளே.

பெற்ற தாய் புலம்புகிறாள்.

380        
என் மகள் காட்டு வழியில் அவனோடு போய்விட்டாள்.
முத்துப் போன்று அரும்பும் புன்முறுவலைக் காட்டிக்கொண்டு அவனோடு சென்றுவிட்டாள்.
நான் அவளுக்குத் தாய் என்னும் பெயரைத் தாங்கிக் கொண்டுள்ளேன்.
இது ஒன்றுதான் எனக்குக் கிடைத்த வலிமை.
அவளை மணந்துகொண்டவரின் உற்றார் உறவினர்கள் கொடுத்துவைத்தவர்கள்.


பாடல் சொல் பிரிப்புப் பதிவு

371        

                மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
                உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச்
                சுரம் நனி இனிய ஆகுக தில்ல
                'அறநெறி இது' எனத் தெளிந்த என்       
                பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே! 1        

372        

                என்னும் உள்ளினள்கொல்லோ தன்னை
                நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு,
                அழுங்கல் மூதூர் அலர் எழ,        
                செழும் பல் குன்றம் இறந்த என் மகளே? 2     

373        

                நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக
                புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை
                மான்பிணை அணைதர, ஆண் குரல் விளிக்கும்
                வெஞ் சுரம் என் மகள் உய்த்த
                அம்பு அமை வல் வில் விடலை தாயே!          

               தலைமகளைத் தலைமகன் கொண்டு கழிந்த கொடுமை நினைந்து, நற்றாய் சொல்லியது. 3             

374        

                பல் ஊழ் நினைப்பினும், நல்லென்று ஊழ
                மீளி முன்பின் காளை காப்ப,
                முடி அகம் புகாஅக் கூந்தலள்
                கடுவனும் அறியாக் காடு இறந்தோளே.         

                தலைமகள் உடன்போயவழி, அவள் இளமை நினைந்து இரங்கித் தாய் கூறியது. 4               

375        

                'இது என் பாவைக்கு இனிய நன் பாவை;
                இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி;
                இது என் பூவைக்கு இனிய சொல் பூவை' என்று,
                அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்
                காண்தொறும் காண்தொறும் கலங்க,
                நீங்கினளோ என் பூங் கணோளே?         

                சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள் தாய் சொல்லியது. 5   

376        

                நாள்தொறும் கலிழும் என்னினும் இடை நின்று
                காடு படு தீயின் கனலியர் மாதோ
                நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்க,
                பூப் புரை உண்கண் மடவரல்
                போக்கிய புணர்த்த அறன் இல் பாலே!              

                தலைமகள் போயவழி, நற்றாய் விதியை வெகுண்டு சொல்லியது. 6 

377        

                நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
                இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
                சென்றனள் மன்ற, என் மகளே
                பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.         

                தலைமகள் உடன்போயவழி, அவள் பந்து முதலாகிய கண்ட நற்றாய் கலங்கிச் சொல்லியது. 7         

378        

                செல்லிய முயலிப் பாஅய சிறகர்
                வாவல் உகக்கும் மாலை, யாம் புலம்பப்
                போகிய அவட்கோ நோவேன்; தே மொழித்
                துணை இலள் கலிழும் நெஞ்சின்
                இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே.   

                தலைமகள் உடன்போயவழி, அவள் தோழி ஆற்றாமை கண்ட நற்றாய் சொல்லியது. 8  

379        

                தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்
                இனிது ஆம்கொல்லோ தனக்கே பனி வரை
                இனக் களிறு வழங்கும் சோலை
                வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே?        

                புணர்ந்து உடன்போகியவழி, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், 'அதனை முன்னே அறிவித்து, நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்' என நொந்து சொல்லியது. 9            

380        

                அத்த நீள் இடை அவனொடு போகிய
                முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல்
                தாயர் என்னும் பெயரே வல்லாறு
                எடுத்தேன் மன்ற, யானே;
                கொடுத்தோர் மன்ற, அவள் ஆயத்தோரே.    

                தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச்
செவிலித்தாய் சொல்லியது. 10         

புலவர் – ஓதலாந்தையார்
கி.மு. காலம்
ஐங்குறுநூறு 38 ஆம் பத்து
திணை – பாலை - 8 ஆம் பத்து
பாடல் – 371-380
மகட் போக்கியவழித் தாய் இரங்கு பத்து


ஐங்குறுநூறு 37 AinguruNuru 361-370

முன்னிலைப் பத்து

பாலை


தலைவன், தலைவி, தோழி முதலானோர் மற்றவர்களோடு உரையாடுதல்

361        
மடமைத் தன்மை கொண்ட மகளே
உயர்ந்த கரை கொண்ட காட்டாற்று மணலில் வேனில் காலத்தில் பூத்து உதிர்ந்து கிடக்கும் பாதிரி மலரைக் குவித்து தொடலை மாலை கட்டி விள்ளையாடும் மகளே,
உன் கண்ணைக் காட்டடிலும் உன் முலை கதகதப்பாகச் சிவந்திருக்கிறது.
உன் முலையைக் காட்டிலும் உன் தோள் கதகதப்பாகச் சிவந்திருக்கிறது.

362        
ஒதுங்கிப் பதுங்குமிடம் இல்லாத பாதைகள்.
சிறிய கண்ணை உடைய யானை பகை கொண்டு தாக்க வரும் வழி.
இத்தகைய பகையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படி வந்தாய்?
பூமாலை அணிந்த மார்பனே!
இவளுக்கு அருள் புரியவேண்டும் என்ற எண்ணம் உன்னை உந்திக்கொண்டு வந்திருக்கிறது.
இருள் நிறைந்த இந்த இரவில் வந்திருக்கிறாய்.

தோழி தலைவனிடம் சொல்கிறாள்,

363        
சிவந்த காவி ஆடை உடுத்திக்கொண்டு வளைந்த வில்லுடன் திரிபவர் கொலைத்தொழிலில் வல்ல எயினர்.
அந்த எயினரின் தங்கை நீ.
உன் முலையில் உள்ள அழகைச் சுணங்கு என நீ நினைக்கிறாய்.
அது சுணங்கு அன்று.
என்னைக் கொல்லும் அணங்கு.

தன்னுடன் வரும் காதலியைக் காதலன் பாராட்டுகிறான்.

364        
முள்ளம்பன்றியை உணவாக்கிக் கொள்ளும் எயினரின் தங்கை இவள்.
இளமையும் மாமை நிறமும் கொண்டவள்.
அவளுக்குத் தெரியும்படி உன்னிடம் ஒன்று சொல்கிறேன்.
கெஞ்சிக் கேட்டுச் சொல்கிறேன்.
வெற்றி வேலைக் கையில் கொண்டுள்ள காளையே!
விரைந்து நடந்து செல்லாதே.
மெதுவாக அழைத்துச் செல்.

உடன்போக்கின்போது தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.

365        
மான் கூட்டத்தைக் கொன்று தன் ஐயன்மார் கொண்டுவந்து தந்த இறைச்சியைக் காயவைத்துக்கொண்டு அதனைக் கவர வரும் பறவைகளை ஓட்டிகுகொண்டிருக்கும் எயிற்றி என் காதலி.
மாந்தளிரே!
நீ அவளைப் போல நிறம் கொண்டிருக்கிறாய்.
இதற்கு நீ எத்தனைத் தவம் செய்தாய்?

பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் வழியில் உள்ள மாந்தளிரைப் பார்த்துச் சொல்கிறான்.

366        
அன்னையே கேள்,
உன்னை வேண்டிக்கொள்கொள்கிறேன்.
என் தோழி ஏன் பசப்புற்றாள் என்று வீணாக வினவுகிறாய்.யாருக்குத் தெரியும்?
கோங்கம் பூவுடன் இருக்கும் இலை ஏன் பச்சையாய் இருக்கிறது என்றால் எனக்கு எப்படித் தெரியும்?

தோழி செவிலிக்குச் சொல்கிறாள்.

367        
பொரிந்த அடிமரம் கொண்டது கோங்க மரம்.
அதன் பூவையும், பொன்னிறம் கொண்ட வேங்கைப் பூவையும் தனித்தனியே தெரியுமாறு சூடிக்கொண்டு ஒருவன் வந்தான்.
வேனில் காலத்தில் காட்டாற்றுப் பக்கம் வந்தான்.
தேரில் வந்தான்.
இவள், உன் மகள், அவன் பெயரைச் சொல்லிக்கொண்டு உயிர் வாழ்கிறாள்.

தோழி செவிலியிடம் கூறுகிறாள்.

368        
நீ பிரிந்து சென்றால் இவள் இறந்துவிடுவாள்.
நீ பிரிந்து சென்று திரும்பி வந்தால்,
பெருமானே
தீ பற்றி எரிவது போல் தோன்றும் இலவம் பூக்கள் புன்கம் மர நிழலில் கொட்டிக் கிடக்கும்.
அந்த நிழலில் உன் இன்ப நுகர்ச்சி என்னோடுதான் நிகழவேண்டியிருக்கும்.

369        
வளம் மிக்க மலர்கள் பூத்து வண்டுகள் மொய்க்கும் பூங்காவில் காதல் விளையாட்டு நடத்த நீ ஒருத்திக்குக் குறி காட்டினாய்.
அவளும் புன்னகை பூத்துச் சென்றாள், என்கின்றனர்.
இந்தச் செய்தி ஊர் முழுவதும் அலராகத் தூற்றப்படுகிறது.
குரவ மரக் கிளையில் இருந்துண்டு கருங்குயில் கூவுவதைக் காட்டிலும் பெரிதாக அலர் தூற்றப்படுகிறது.

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

370        
வளமான கிளையில் பூத்திருக்கும் கோங்கம்பூ மாலை மணக்கும்படி அணிந்துகொண்டு
வண்டுக் கூட்டம் அந்த மாலையை மொய்க்க
நீ ஆசையுடன் சென்று ஒருத்தியுடன் வாழ்ந்தாயே
அவள் யார்?
மறைக்காமல் என்னிடம் சொல்.

மனைவி கணவனை வினவுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு

361        

உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை
வேனில் பாதிரி விரி மலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரல் மகளே!
கண்ணினும் கதவ, நின் முலையே!
முலையினும் கதவ, நின் தட மென் தோளே!

புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1


362        

பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை,
சிறு கண் யானை உறு பகை நினையாது,
யாங்கு வந்தனையோ பூந் தார் மார்ப!
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
இருள் பொர நின்ற இரவினானே?

சேணிடைப் பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது இரவின்கண் வந்துழித் தோழி சொல்லியது. 2

363        

சிலை வில் பகழிச் செந் துவர் ஆடைக்
கொலை வில் எயினர் தங்கை! நின் முலைய
சுணங்கு என நினைதி நீயே;
அணங்கு என நினையும், என் அணங்குறு நெஞ்சே.

புணர்ந்து உடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நலம் பாராட்டியது. 3

364        

முளவு மா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கு, நின் நிலை அறியச்
சொல்லினென் இரக்கும்அளவை
வென் வேல் விடலை! விரையாதீமே!

உடன்போக்கு நயந்த தலைமகன் அதனைத் தோழிக்கு உணர்த்த, அவள் முடிப்பாளாய்ச் சொல்லியது. 4

365        

கண மா தொலைச்சித் தன்னையர் தந்த
நிண ஊன் வல்சிப் படு புள் ஓப்பும்
நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு
நன்னல நயவரவு உடையை
என் நோற்றனையோ? மாவின் தளிரே!

வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான்
இடைச்சுரத்துக் குழைத்த மாவின் தளிர் கண்டு சொல்லியது. 5

366        

அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! 'என் தோழி
பசந்தனள் பெரிது' எனச் சிவந்த கண்ணை,
கொன்னே கடவுதி ஆயின், என்னதூஉம்,
அறிய ஆகுமோ மற்றே
முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே?

தலைமகளை நோக்கி, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று?'
என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 6


367        

பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ,
விரிஇணர் வேங்கையொடு, வேறு பட மிலைச்சி,
விரவு மலர் அணிந்த வேனில் கான் யாற்றுத்
தேரொடு குறுக வந்தோன்
பேரொடு புணர்ந்தன்று அன்னை! இவள் உயிரே.

நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 7


368        

எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல் மலர்
பொரிப் பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ, பெரும! நின்
அம் மெல்லோதி அழிவிலள் எனினே!

'வேனிற்காலத்து நும்மொடு விளையாட்டு நுகர வருவல்' என்று, பருவம் குறித்துப் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி கூறியது. 8

369        

வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில்
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல்
குறி நீ செய்தனை என்ப; அலரே,
குரவ நீள் சினை உறையும்
பருவ மாக் குயில் கௌவையின், பெரிதே!

பரத்தை ஒருத்தியுடன் பொழிலகத்துத் தங்கி வந்த தலைமகன் தலைமகள் வினாயவழி, 'யாரையும் அறியேன்' என்றானாக, அவள் கூறியது. 9

370        

வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை
இருஞ் சிறை வண்டின் பெருங் கிளை மொய்ப்ப,
நீ நயந்து உறையப்பட்டோள்
யாவளோ? எம் மறையாதீமே.

பரத்தைஒருத்திக்குப் பூ அணிந்தான் என்பது கேட்ட தலைமகள், 'அஃது இல்லை' என்று மறைக்கும் தலைமகற்குக் கூறியது. 10

புலவர் – ஓதலாந்தையார்
கி.மு. காலம்
ஐங்குறுநூறு 37 ஆம் பத்து
திணை – பாலை - 7 ஆம் பத்து
பாடல் – 361-370
முன்னிலைப் பத்து


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி