Friday, 31 March 2017

திணைமாலை நூற்றைம்பது 36 TinaiMalai 36

முருகுவாய் முள்தாழை நீள்முகைப்பார்ப் பென்றே
குருகுவாய்ப் பெய்திரை கொள்ளா துருகிமிக
இன்னா வெயில்சிற கால்மறைக்கும் சேர்ப்பநீ
மன்னா வரவு மற  36
தோழி வரைவு கடாயது
மணமுள்ள வாயைக் கொண்ட முள் இருக்கும் நீண்ட தாழம்பூவை,
தன் குஞ்சு என்று எண்ணிக்கொண்டு,
குருகுப் பறவை அதன் வாயில் தான் அதற்குக் கொண்டுவந்த இரையைப் பெய்து ஊட்ட,
அது கொள்ளாதது கண்டு மனம் உருகி,
வெயிலின் கொடுமையால் அது உண்ணவில்லை என்று கருதி,
தன் சிறகால் நிழல் தந்து மறைக்கும் சேர்ப்பு நிலத் தலைவன் நீ.
நிலையில்லாமல் அவ்வப்போது வந்து போதலை மறந்துவிடு.
திருமணம் செய்துகொள்.   
தற்குறிப்பேற்ற அணி
நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 35 TinaiMalai 35

புலாலகற்றும் பூம்புன்னைப் பொங்குநீர்ச் சேர்ப்ப
நிலாவகற்றும் வெண்மணல் தண்கானல் - சுலாவகற்றி
கங்குனீ வாரல் பகல்வரின்மாக் கவ்வையாம்
மங்குனீர் வெண்திரையின் மாட்டு.                    35
'இரவும் பகலும் வாரல்' என்று தலைமகனைத் தோழி வரைவு கடாயது
புலால் நாற்றம் போகும்படி பூத்துக் புன்னைப் பூக்கள் கொட்டிப் பொங்கும் நீர் சேர்ந்த நிலத்தின் தலைவனே,
நிலா வெளிச்சத்தைத் தோல்வியுறச் செய்யும் வெண்மணல் பரவிக் கிடக்கும் தண்ணிய கானல் நிலத்துக்கு
நீர்ச் சுழற்சியை அகற்றிக்கொண்டு இரவில் நீ வரவேண்டாம்.
பகலில் வந்தால் ஊரார் தூற்றும் கௌவை உண்டாக்கும்.
மேகம் போன்ற நீரும், வெண்மையான அலைகளும் கொண்ட இடம் இது.  

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 34 TinaiMalai 34

தாமரைதான் முகமா தண்ணடையீர் மாநீலம்
காமர்கண் ணாகக் கழிதுயிற்றும் - காமருசீர்த்
தண்பரப்ப பாயிருள் நீவரின்தாழ் கோதையாள்
கண்பரப்பக் காணீர் கசிந்து.                            34
புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது
தாமரை முகமாக,
தண்ணிய இலைகளை உடைய ஈரமான கருநிற நீலமலர் காதல் உண்டாக்கும் கண்ணாக,
கழியைத் தூங்கவைத்துக்கொண்டிருக்கும்
அழகு வளைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் சிறப்பு மிக்க தண்ணிய நீர்நிலப் பரப்பினை உடையவனே,
பாயும் இருளில் நீ வருவதால்,
தாழ்ந்த கூந்தலை உடைய இவள் கண்ணில் நீர் கசிந்து பரந்தோடுவதை நீயே காண்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 33 TinaiMalai 33

பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணாது
இருங்கடல் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே உளம்.                   33
பாங்கற்குச் சொல்லியது
பெருங்கடலில் வெண்ணிறச் சங்கை எடுத்துவருவதற்காக தன் உயிரையும் பேணாமல் இருண்ட கடலுக்குள் மூழ்குவாரின் தங்கையின்
இருண்ட கடலுக்குள் கிடக்கும் முத்துப் போன்ற வெண்ணிறப் பற்களைக் கண்டு உருகி மனம் நோபவருக்கே
நான் மனம் ஒத்து உள்ளேன்
தலைவி சொல்கிறாள்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 32 TinaiMalai 32

பானலம் தண்கழிப் பாடஅறிந்து தன்னைமார்
நூனல நுண்வலையால் நொண்டெடுத்த - கானல்
படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம்
கடிபொல்லா என்னையே காப்பு.              32
பாங்கற்குச் சொல்லியது
நெய்தல் மலர்கள் பூத்துக் கிடக்கும் கழியில்
அலை அடங்கியிருக்கும் காலம் பார்த்துத்
தன் தந்தையும் அண்ணனுமாகிய ஐயர்
முகந்துகொண்டு வந்த புலால் நாற்றம் அடிக்கும் மீனைக்
கானல் நிலத்தில் காத்துக்கொண்டிருப்பவளின் நெடிய கண்களின் நோக்கம்
நீக்கமுடியாமல் என்னையே காத்துக்கொண்டிருக்கின்றன.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 31 TinaiMalai 31

தன்குறையி தென்னான் தழைகொணரும் தண்சிலம்பன்
நின்குறை என்னும் நினைப்பினனாய் - பொன்குறையும்
நாள்வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ
கோள்வேங்கை அன்னான் குறிப்பு        31
தோழி தலைமகளை மெலிதாகச் சொல்லி, குறை நயப்பக் கூறியது
தனக்கு இன்ன குறை என்று அவன் சொல்லவில்லை.
தழையாடை கொண்டுவந்து தருகிறான்.
குளிர்ந்த மலைக்காட்டின் தலைவன் அவன்.
உன்னை அடையவேண்டும் என்னும் நினைப்பு அவனுக்கு.
அந்த நினைப்போடு பொன்மலரைக் கொட்டும் வேங்கைமர நிழலில்-கூட அவன் நிற்கவில்லை.
அவன் பற்றிக்கொள்ளும் வேங்ககைப்புலி போன்றவன்.
அவன் குறிப்பு என்னவாக இருக்கும்?

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 30 TinaiMalai 30

திங்களுள் வில்லெழுதி தேராது வேல்விலக்கி
தங்கள் உளாளென்னும் தாழ்வினால் - இங்கண்
புனங்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனங்காக்க வைத்தார் மருண்டு.           30
பாங்கற்குத் தலைமகன் கூறியது
அவள் முக நிலாவில் புருவ வில் எழுதப்பட்டுள்ளது.
அது அவள் கண்ணாகிய வேலை விலக்குகிறது.
தங்களிடம் இருக்கிறாள் என்னும் தாழ்ந்த எண்ணத்தால் இங்கே அவளைத் தினைப்புனம் காக்க வைத்துள்ளனர் போல் தோன்றுகிறது.
உண்மையில் அவர்கள் அவளை என் மனத்தை மருண்டு காக்கும்படி வைத்துள்ளனர்.
தலைவன் தலைவியைப் பற்றித் தன் தோழனிடம் சொல்கிறான்.  

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 29 TinaiMalai 29

பலாவெழுந்தபால்வருக்கைப் பாத்தி அதனேர்
நிலாவெழுந்த வார்மணல் நீடிச் -  சுலாவெழுந்து
கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர்
தானாறத் தாழ்ந்த இடம்.                29
பகற்குறிக்கண் இடம் காட்டியது
பலாமரம் வளர்ந்திருக்கும் பகுதி
வருக்கைப் பலா பிளந்து கிடக்கும்
அதன் எதிரே நிலவொளி எழும் மணல் பரவிக் கிடக்கும்
அதனைச் சுற்றி வளைத்துக்கொண்டு காட்டாற்றுக் கால்கள் ஓடும்.
அங்கே காந்தள் பூ மலர்ந்திருக்கும் சோலை
அந்தப் பூ அங்கு மணக்கும்.
அங்கு வந்தால் இவளை நீ அடையலாம் என்று தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 28 TinaiMalai 28

மேகம்தோய் சாந்தம் விசைதிமிசு காழகில்
நாகந்தோய் நாகம் எனவிவற்றைப் போக
எறிந்துழுவார் தங்கை இருந்தடங்கண் கண்டும்
மறிந்துழல்வா னோவிம் மலை            28
தலைமகன் சொன்ன குறிவழியே சென்று, தலைமகளைக் கண்டு, பாங்கன் சொல்லியது
வானத்து மேகங்கள் தொடும்
  • சந்தனம்
  • விசை
  • திமிசு
  • காழ்
  • அகில்
  • புன்னாகம்
  • நாகம்

என்னும் இந்த மரங்களை விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டி வீழ்த்துவார் தங்கை இவள்.
இவளுடைய இருண்டகன்ற கண் பார்வையைக் கண்ட பின்னர்
இம் மலைக்குத் திரும்பி வந்து வருந்துகிறானோ?
தலைவனின் தோழன் நினைக்கிறான்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 27 TinaiMalai 27

பனிவரை நீள்வேங்கைப் பயமலை நன்னாட
இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் - முனிவரையுள்
நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்
ஒன்றாள்காப் பீயும் உடன்று.   27
தோழி படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது
பனி பொழியும் மலையில் வளர்ந்திருக்கும் வேங்கை மரம் பயனைத் தரும் மலையின் நாடனே,
இனித் திருமணம் செய்துகொள் என்று எண்ணிக்கொண்டு சொல்கிறேன்.
முனித் தெய்வம் மலையில் நிற்கின்றான்.
அவன் பெயரால் வலிமையாகச் சொல்கிறேன்.
நீ வருவதைத் தாய் பார்த்துவிட்டாள்.
நீ வருவதற்கு அவள் மனம் ஒன்றவில்லை.
சினம் கொண்டு உன் காதலியைக் காவலில் வைத்துவிட்டாள்.
தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 26 TinaiMalai 26

கருங்கால் இளவேங்கை கான்றபூக் கல்மேல்
இருங்கால் வயவேங்கை ஏய்க்கும் மருங்கால்
மழைவளரும் சாரல் இரவரின் வாழாள்
இழைவளரும் சாயல் இனி.         26
தோழி தலைமகனை நெறி விலக்கி, வரைவு கடாயது
கருமையான அடிமரம் கொண்டது வேங்கை.
பாறை மேல் கிடக்கும் அதன் உதிர்ந்த பூக்கள்,
வலிமையான காலை உடைய வேங்கைப் புலி போலத் தோன்றும்.
இப்படித் தோன்றும் வழியில்,
மழை பொழியும் மலைச்சாரல் வழியில்,
இரவு வேளையில் நீ வந்தால்,
வரும்வரையில் காத்துக்கொண்டு,
அணிகலன் வளரும் அழகினை உடைய இவள்
உயிரோடு இருக்கமாட்டாள்.
தோழி தலைவனிடம் சொல்கிறாள்.  


குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 25 TinaiMalai 25

கொல்லியல் வேழம் குயவரி கோட்பிழைத்து
நல்லியல் தம்மினம் நாடுவபோல் -  நல்லியல்
நாமவேற் கண்ணாள் நடுநடுப்ப வாரலோ
ஏமவேல் ஏந்தி இரா             25

தோழி தலைமகனை நெறி விலக்கி, வரைவு கடாயது

கொல்லும் இயல்பு கொண்ட ஆண்யானை வளைந்த வரிக்கோடுகள் கொண்ட புலியின் தாக்குதலில் தப்பிப் பிழைத்து, நல்லனவாகிய தம் பெண்யானைக் கூட்டத்தை நாடிச் செல்வது போல நீ வர வேண்டாம். இவள் நல்ல இயல்பினை உடையவள். அச்சம் தரும் வேல் போன்ற கண்ணினை உடையவள். இவள் நடுநடுங்க இரவில் வரவேண்டாம். உனக்குப் பாதுகாப்பாக உள்ள வேல் ஒன்றை மட்டும் ஏந்திக்கொண்டு இரவில் வரவேண்டாம். தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 24 TinaiMalai 24

நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி -  எறிந்துழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லேளா நோக்கு        24

தோழி குறை மறாமல் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது

தகரம், வகுளம் ஆகியவை குளுமையான மண-எண்ணெய் தரும் செடியினம். எரித்தாலும் மணம் வீசும். நீராடிய பின்னர் மகளிர் இவற்றை எரித்துக் கூந்தலுக்கு மணம் ஊட்டுவர். இவற்றை வெறும் புதர்ச் செடி போல் விரும்பியும் விரும்பாமலும் வெட்டி எறிந்துவிட்டுச் செந்நிறத் தினையைக் குறிஞ்சிநில மக்கள் விதைப்பர். அவர்களின் தங்கை என் காதலி. அவளைப் பார்த்ததும் எனக்குக் காதல்-நோய். இந்த நோயைக் கண்டு அவள் நொந்து வருந்தக் கூடியவளோ? தலைவன் தன் தோழனிடம் சொல்கிறான்.  

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 23 TinaiMalai 23

பெருமலை தாநாடித் தேன்துய்த்துப் பேணாது
அருமலை மாய்க்குமவர் தங்கை - திருமுலைக்கு
நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி
ஏணழிதற் கியாமே யினம்.                       23

'நின்னால் குறிக்கப்பட்டாளை யான் அறியேன்' என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது; பாங்கற்குக் கூறியதூஉம் ஆம்

பெரிய மலையை அவர்கள் நாடிச் சென்று தேனை உண்டு, அந்த மலையைப் பேணாமல் புனக்காடு உண்டாக்குவதற்காக வெட்டிக் கொல்வர். அவர்களின் தங்கை இவள். இவளது அழகிய முலையைப் பார்த்ததும் நாணம் அழிந்தேன். நல்ல நலத்தை இழந்தேன். நைந்து உருகினேன். பெருமை அழிந்துபோயினேன். – தலைவன் சொல்கிறான்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 22 TinaiMalai 22

கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலிஅதளும்
நல்யானை நின்ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம்
ஓரம்பி னானெய்து போக்குவர்யான் போகாமல்
ஈரம்பினால் எய்தாய் இன்று.      22

பகற்குறிக்கண் தலைமகள் குறிப்பு இன்றிச் சார்கிலாத தலைமகன் தனது ஆற்றாமை சொல்லியது

கொல்லும் யானையின் வெள்ளைத் தந்தமும், கொல்ல வல்ல புலியின் தோலும் நல்ல யானை போன்ற நின் ஐயர் கூட்டாகச் சேர்ந்துகொண்டு எடுத்துச் செல்வர். அவர்கள் இவற்றை ஒரே ஒரு அம்பினால் எய்து காலம் போக்குவர், நீயோ நான் உன்னை விட்டுப் போகாமல் இருக்க இன்று உன் இரண்டு கண் அம்புகளால் எய்தாய். – தலைவன் தலைவியிடம் சொல்கிறான்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 21 TinaiMalai 21

பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கு மென்முலைகள்
என்மெலிய வீங்கினவே பாவமென் - றென் மெலிவிற்
கண்கண்ணி வாடாமை யானல்ல என்றால்தான்
உண்கண்ணி வாடாள் உடன்று.               21

ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏன்றுகொண்டு கையுறை எதிர்ந்தது

இவள் மேனியின் பொன் நிறத்தைக் கண்டு தங்கம் ஏங்கி மெலியும். முலைகளிலோ அழகிய சுணங்கு நிறம். இவற்றைக் கண்டு நான் மெலிந்தேன். என் மெலிவை வாங்கிக்கொண்டு அவளது முலைகள் வீங்கின. என் வாட்டம் கண்டு “பாவம்” என்று அவள் என்னை நினைத்தாள். அவளுக்காக நான் கொண்டுவந்த அழகிய கண்ணிமாலை வாடாமையால் “நல்லவை” என்று நீ சொன்னால்தான் மை உண்ட கண்ணினை உடைய அவள், என் காதலி, மாறுபட்டு வாடாமல் இருப்பாள். நான் அவளுக்குக் கொண்டுவந்த மலர்மாலையை ஏற்றுக்கொள், என்று தலைவன் தோழியை வேண்டுகிறான்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 20 TinaiMalai 20

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போல்கொடியார் என்னையன்மார் -  கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்
கென்னையோ நாளை எளிது.     20

கையுறை மறை

நாள்தோறும் பூக்கும் வேங்கை மரம் பொன்மலர்களாகப் பூக்கிறது. ந அந்த மலையின் நாடன். நாடனே கேள். என் ஐயராகிய தந்தையும், அண்ணனும் யானையைக் கொள்ளும் வேங்கைப்புலி போன்றவர்கள். நீயும் அந்த வேங்கைப்புலி போன்றவன். நீ தரும் தழையாடைய நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன? நாளை எளிதாகும். தலைவி தலைவனிடம் சொல்கிறாள்.  

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 19 TinaiMalai 19

பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய்
தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்தென்
நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பானோ காண்கொடா
அஞ்சாயற் கேநோவல் யான்.  19

பின்னின்ற தலைமகன் தோழி குறை மறாமல் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது

பால் போன்ற அருவியில் பாய்ந்து ஆடிய பின்னர், பல பூக்களைப் பெய்து வைத்திருப்பது போல விளைந்திருக்கும் ஐவன வெண்ணெல்லைக் காக்கும் அவளுடைய கண்ணானது, வேல் போல் என் நெஞ்ச வாயில் புகுந்து ஒழிந்தது. அதனைக் காண்பான், ஓ!, நோகிறேன். அவள் என் கண்ணில் அவளது அழகிய சாயலைக் காட்டவில்லை. அதற்காக நான் நோகிறேன். தலைவியைத் தனக்கு உதவும்படித் தலைவன் தோழியை வேண்டுகிறான்.   

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


திணைமாலை நூற்றைம்பது 18 TinaiMalai 18

என்னாங்கொல் ஈடில் இளவேங்கை நாளுரைப்ப
பொன்னாம்போர் வேலவர்தாம் புரிந்தது -  என்னே
மருவியாம் மாலை மலைநாடன் கேண்மை
இருவியாம் ஏனல் இனி. 18

பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

இனி, என்ன ஆகும்? ஈடில்லாத இளமையான வேங்கை மரம் நாள்தோறும் பூக்கிறது. பொன்னாகப் பூக்கிறது. போர் புரியும் வேலைக் கையில் ஏந்திக்கொண்டு அவர் விருப்பத்தோடு வருகிறார். அவரை மருவி நான் ஆசை கொண்டுள்ளேன். அவன் மலைநாடன். அவர் நட்பு இனி என்ன  ஆகும்? தினை கதிர் கொய்யப்பட்டு வெறும் தட்டையாய் நிற்கிறதே. இனித் தினைப்புனம் காக்க வரம்மாட்டோமே. – தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி