Tuesday, 28 February 2017

விவேகசிந்தாமணி சம்பு VivegaSindamani 35

சம்புவே யென்ன புத்தி சலத்தினில் மீனை நம்பி
வம்புறு வடத்தைப் போட்டு வானத்தைப் பார்ப்ப தேனோ
அம்புவி மாதே கேளா யரசனை யகல விட்டு
வம்பனைக் கைப் பிடித்த வாறுபோ லாயிற் றன்றே. (35)

அவள் தூண்டில் போடும் மூங்கிலைப் பார்த்துக் கேட்டாள்.
 • மூங்கிலே! இது என்ன புத்தி? நீரில் இருக்கும் மீனை நம்பி வம்புக் கயிற்றைப் போட்டுவிட்டு, வானத்தைப் பார்ப்பது ஏன்?

மூங்கில் குச்சி சொல்லிற்று.
 • நிலத்தில் வாழும் அழகிய பெண்ணே, கேளாய். திருமணம் செய்துகொள்ள வந்த அரசனை விட்டுவிட்டு வம்புக்காரன் ஒருவனைக் கைப்பிடித்த கதைபோல் என் கதை ஆகிவிட்டது.
தூண்டில் மூங்கில்


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி ஓரி VivegaSindamani 34

ஓரியே மீனுவந் தூணி ழந்தையோ
நாரியே கண்பிழை நாட்டி லில்லையோ
பாரியே கணவனைப் பழுது செய்து நீ
நீரிலே யிருப்பது நிலைமை யல்லவே. (34)

அவள் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தாள்.
அங்கு ஒரு நரி வந்தது.
அவள் நரியைப் பார்த்துக் கேட்டாள்.
 • ஓரியே, குளத்து மீனுக்கு ஆசைப்பட்டு வாயில் இருந்த உணவை இழந்து விட்டாயோ?

நரி சொல்லிற்று
 • நாரியே (அன்புள்ளவளே) கண்ணில் கண்டதைத் தவற விடுதல் நாட்டில் இல்லையோ?
 • பாரியை (பாரியாளே, மனைவியே) கணவனை இழந்த நீ குளத்து நீரிலே குளிப்பது முறைமை அல்லவே.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி வீணர் VivegaSindamani 33

வீணர்பூண் டாலுந் தங்கம் வெறும்பொய்யாம் மேற்பூச் சென்பார்
பூணுவார் தராப்பூண் டாலும் பொருந்திய தங்க மென்பார்
காணவே பனைக்கீ ழாய்ப்பாற் குடிப்பினும் கள்ளே யென்பார்
மாணுல கத்தோர் புல்லர் வழங்குரை மெய்யென் பாரே. (33)

 • வீணாகத் திரிபவர் தங்க அணி பூண்டிருந்தாலும் அதனை வெறும் முலாம் பூசிய அணி என்பர்.
 • பூணத் தக்கவர் முலாம் பூசிய நகை அணுந்திருந்தாலும் அதனைத் தங்க அணி என்பர்.
 • பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் கள் குடிக்கிறான் என்பர்.

ஆனால்
 • இத்தகைய சிறந்த மக்கள் வழக்குரைக்கும்போது மட்டும் அற்பர் சொன்னாலும் உண்மை என நம்புவர்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி கற்புடை மாதர் VivegaSindamani 32

கற்புடை மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை
வெற்புறு வேங்கை யின்றேல் வீரன்கை வெய்ய கூர்வாள்
அற்பர்தம் பொருள்க டாமு மவரவ ரிறந்த பின்னே
பற்பலர் கொள்வா ரிந்தப் பாரினி லுண்மை தானே. (32)

 • கவரி மான் தன் உடலிலிருந்து ஒரு மயிர் விழுந்தாலும் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும். அதுபோல கற்புள்ள பெண்ணின் மார்பகம் தன் கணவன் அல்லாதவன் தொட நேர்ந்தால் அந்தப் பெண் மாண்டுவிடுவாள். அவள் முலை கவரி மான் மயிரின் கற்றை.
 • காட்டில் திரியும் வேங்கை இல்லாவிட்டால் வீரன் கையில் உள்ளது கூரிய வாள்தான்.
 • அற்பர்கள் வைத்திருக்கும் பொருள் அவர் இறந்த பின்னர் பற்பலர் யார் யாரோ கொள்வர். இதுதான் உலக உண்மை.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி வண்டுகள் VivegaSindamani 31

வண்டுகள் இருந்திடின் மதுவை யுண்டிடும்
தண்டமி ழிருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி யிருந்திடின் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுக ளிருந்திடின் பெரிய சண்டையே. (31)

 • வண்டுகள் இருந்தால் மலரிலிருக்கும் தேனை உண்ணும்.
 • தண் தமிழ் இருந்தால் சங்கம் சேர்வார்கள்.
 • குண்டுணி இருந்தால் கோள் சொல்லுதல் மிகும்.
 • பெண்கள் இருந்தால் பெரிய சண்டைதான்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி படியின் VivegaSindamani 30

படியினப்பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
பழிநமக்கென வழிமறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடுமதக்குவ டெனவளர்ந்திடு குஞ்சரத்தையு நம்பலாம்
குலுங்கபேசி நகைத்திடுஞ்சிறு குமரர் தம்மையும் நம்பலாம்
கடையிலக்கமு மெழுதிவிட்ட கணக்கர் தம்மையும் நம்பலாம்
காக்கைப்போல்விழி பார்த்திடுங்குடி காணியாளரை நம்பலாம்
நடைகுலுக்கியும் முகமினுக்கியு நகைநகைத் திடும் மாதரை
நம்பொணாதுமெய் நம்பொணாதுமெய் நம்பொணாதுமெய் காணுமே. (30)

 • பட்டால் அப்பொழுதே சாகடிக்கும் பச்சைநாவி என்னும் நஞ்சினை நம்பலாம்.
 • பழி நமக்கு வரும் என்று பொய் சொல்லி ஏமாற்றிப்பலரைக் கொன்ற பழையனூர் நீலியை நம்பலாம்.
 • கொடிய மதம் கொண்ட மலை என்று சொல்லும்படி வளர்ந்திருக்கும் யானையை நம்பலாம்.
 • குலுங்கக் குலுங்கப் பேசித் தானும் சிரித்துக் கொல்லும் சிறுவரையும் நம்பலாம். (ஒரு கதை)
 • கடைசி எண்ணை எழுதிக் கணக்குப் போடும் கணக்கராகிய எமனையும் நம்பலாம்.
 • காக்கை போல் விழித்துப் பார்க்கும் குடிகாரனை நம்பலாம். 
 • குலுக்கி நடந்தும், முகம் மினுக்கியும், சிரித்துப் பேசிடும் பெண்ணை நம்பக்கூடாது, நம்பக்கூடாது, நம்பக்கூடாதுகாண்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி தன்னுடலினுக்கு VivegaSindamani 29

தன்னுட லினுக்கொன் றிருந்தால் தக்கதோர் பலமதாகும்
மின்னியல் வேசிக் கீந்தால் மெய்யிலே வியாதி யாகும்
மன்னிய வுறவுக் கீந்தால் வருவது மயக்க மாகும்
அன்னிய பரந்துக் கீந்தா லாருயிர் குதவி யாமே. (29)

 • தன் உடலுக்கு என்று உதவும் பொருள் ஒன்று இருந்தால் அந்த உடலுக்கு வலிமை உண்டாகும்.
 • உடலை வேசி இன்பத்துக் கொடுத்தால் பால்வினைநோய் வரும்.
 • மனைவி உடலுறவுக்குக் கொடுத்தால் மயக்கம் வரும்.
 • தன் உடலை விட்டு அன்னியனாக இருக்கும் பரமனுக்குப் கொடுத்தால் உயிருக்கு உதவியாக அமையும்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி திருப்பதி VivegaSindamani 28

திருப்பதி மிதியாப் பாதஞ் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக் கைக ளினியசொற் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகா தேகம்
இருப்பினும் பயனென் காட்டி லெரிப்பினும் மில்லை தானே. (28)

 • திருப்பதி மிதியாப் காலடி
 • சிவன் திருவடிகளை வணங்காத தலை
 • இரப்பவர்களுக்கு ஈயாத கைகள்
 • இனிய சொற்களைச் சென்று கேளாத காது
 • தன்னைக் காப்பாற்றும் அரசன் கண்ணீர் விடும்படி அவனுக்காகச் சாகாத உடம்பு

இவை இருப்பதால் என்ன பயன்? சுடுகாட்டில் எரித்தாலும் பயனில்லை.

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி அரிசி VivegaSindamani 27

அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை
புருஷனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே. (27)

 1. ஏனையோர் தானமாகக் கொடுக்கும் அரிசியை விற்றுப் பணமாக்கிக்கொள்ளும் அந்தணர்க்கு ஒரு மழை
 2. முறைமை தப்பி ஆளும் மன்னருக்கு ஒரு மழை
 3. தன் கணவனைக் கோன்ற பெண்ணுக்காக ஒரு மழை

என்று ஆண்டுக்கு மூன்று மழை பெய்யும்.

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி வேதம் VivegaSindamani 26

வேத மோதிய வேதியர்க் கோர்மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே. (26)

 1. வேதியராகிய பிராமணர் வேதம் ஓதியற்காக ஒரு மழை.
 2. மன்னர் நீதி நெறி தவறாமல் ஆட்சி புரிந்ததற்காக ஒருமழை.
 3. மங்கையர் அன்பு கொண்டு கற்புடையவர்களுக்காக விளங்கியதற்காக ஒரு மழை.

இப்படி மாதத்திற்கு மூன்று மழை முறையாகப் பெய்யும்.

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி பொன்னொடு VivegaSindamani 25

பொன்னொடு மணியுண் டானால் புலைஞனும் கிளைஞ னென்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியின் மணமுஞ் செய்வர்
மன்னரா யிருந்த பேர்கள் வகைகெட்டுப் போவா ராகில்
பின்னையு மாரோ வென்று பேசுவா ரேசு வாரே. (25)

 • பொன்னும் மணியும் இருக்குமானால் புலையனாக இருந்தாலும் ‘என் உறவுக்காரன்’ என்று சொல்லிக்கொண்டு, அவனையும் புகழ்ந்துகொண்டு, அவன் சாதியில் அவன் உறவினர்களைத் திருமணம் செய்துகொள்வார்கள்.
 • ஒருகாலத்தில் மன்னராக இருந்தவர் வகைகெட்டுப் போவாரானால், பின்பு அவரை ‘ஆரோ’ என்று பேசுவார்; ஏசுவார்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி பொம்மென VivegaSindamani 24

பொம்மெனப் பணைத்து விம்மி போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையி னாளே கூறுவே னோன்று கேண்மோ
செம்மையி லறஞ்செய் யாதார் திரவியஞ் சிதற வேண்டி
உம்மையுங் கள்ளுஞ் சூதும் நான்முகன் படைத்த வாறே. (24)

உன் முலை ‘பொம்’ எனப் பருத்து, விம்மிதத்தோடு உன்னோடு போரிடும் காமத் தேவன் மன்மதன் மயங்கி விழும்படிச் செய்து கூர்மை சேர்ந்திருக்கும் முளையினாளே!
ஒன்று கூறுகிறேன் கேட்டுக்கொள்.
செவ்விய முறையில் அறம் செய்யாதவர் செல்வத்தைச் சிதறச் செய்வதற்காக
 • உன்னையும்
 • கள்ளையும்
 • சூதாட்டத்தையும்

பிரமன் படைத்திருக்கிறான்.

கொம்மை சேர் முலை

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி அன்னையே VivegaSindamani 23

அன்னையே யனைய தோழி யறந்தனை வளர்க்கும் மாதே
உன்னையோ ருண்மை கேட்பே னுரைதெளிந் துரைத்தல் வேண்டும்
என்னையே வுணரு வோர்க ளெனக்குமோ ரின்பம் நல்கி
பொன்னையுங் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வ தேனோ. (23)

விலைமாது ஒருத்தி தன் தோழியை வினவுகிறாள்.
என் அன்னை போன்ற தோழியே
கூட்டிக் கொடுத்து என் அறத்தை வளர்க்கும் பெண்ணே
உன்னை ஓர் உண்மை கேட்கின்றேன்.
 • உரைக்க வேண்டியதைத் தெளிவாக உணர்ந்து உரைக்க வேண்டும்,
 • பிறரை ஏமாற்றும் என்னை நன்றாக உணர்ந்தவர்கள் எனக்கும் ஓர் இன்பம் கொடுத்துவிட்டு, தன்னிடம் இருக்கும் பொன்னையும் கொடுத்துவிட்டு என் பாத மலரில் விழுவது ஏன்?


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி அரும்பு கோணிடில் VivegaSindamani 22

அரும்பு கோணிடில் அதுமணங் குன்றுமோ
கரும்பு கோணிடிற் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்வோம். (22)

 • மல்லிகை அரும்பு கோணலாக இருந்தால் மணம் குறையுமா
 • கரும்பு வைந்து கிடந்தாலும் வெல்லக் கட்டியும் வெல்லப்பாகும் ஆகும்
 • இரும்பு கோணலானால் தோட்டியாகப் பயன்படுத்தி யானையை வெல்லலாம்
 • உடலிலுள்ள நரம்பு கோணலானால் அது விதி. அதற்கு நாம் என்ன செய்வோம்? 
நரம்பு கோணல் 

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி தாங்கொணா வறுமை VivegaSindamani 21

தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கைபோல் வீரங் குன்றும் விருந்தினர்க் காண நாணும்
பூங்கொடி மனையாட் கஞ்சும் புல்லருக் கிணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றி முலகமெல்லாம் பழிக்குந் தானே. (21)

தாங்க முடியாத வறுமை வந்தால்,
 • பலர் கூடியிருக்கும் அவைக்குச் செல்ல நாணும்
 • வேங்கைப் புலி போன்ற வீரம் குன்றும்
 • வரும் விருந்தினரைக் காண நாணும்
 • பூங்கொடி போன்ற மனைவிக்கே பயப்படும்
 • அற்பருக்கும் அடங்கி நடக்கும்
 • செம்மாப்புடைய தன் அறவே குன்றித் தன் முகம் தன்னையே பழிக்கும்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


Monday, 27 February 2017

விவேகசிந்தாமணி கருதியநூல் VivegaSindamani 20

கருதியநூல் கல்லாதான் மூட னாகும் கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்
ஒருதொழிலு மில்லாதான் முகடி யாகும் ஒன்றுக்கு முதவாதான் சோம்ப னாகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும் பேசாம லிருப்பவனே பேய னாகும்
பரிவுசொலித் தழுவினவன் பசப்ப னாகும் பசித்தவருக் கிட்டுண்ணான் பாவி யாமே. (20)

 • கற்க விரும்பிய நூலைக் கற்காதவன் மூடன் ஆகும்.
 • மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களை அறிந்து பேசாதவன் கசடன் ஆகும்.
 • ஒரு தொழிலும் செய்யாதவன் முகடி என்னும் மூதேவி ஆகும்.
 • ஒன்றுக்கும் பயன்படாதவன் சோம்பன் ஆகும்.
 • பெரியோர்கள் முன்னே நின்று மரத்தைப் போலப் பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்.
 • இரங்குவது வோல் வாயால் சொல்லிக்கொண்டு தழுவுபவன் பசப்பன் ஆகும்.
 • பசியோடு இருப்பவர்க்குக் கொடுக்காமல் தனே உண்பவன் பாவி ஆகும்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி தேனுகர் வண்டு VivegaSindamani 19

தேனுகர் வண்டு மதுதனை யுண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு 
தானதைச் சம்பு வின்கனி யென்று தடங்கையி லெடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென் றெண்ணி மலர்க்கரங் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான் புதுமையோ விதுமெனப் புகன்றாள். (19)

தேன் உண்ணும் வண்டு தேனை உண்டு பூவின் மேல் சோர்ந்து கிடந்ததைப் பார்த்தாள்.
அதனை நாவல் பழம் என்று கையில் எடுத்துக் கண் முன்னே வைத்துக்கொண்டு பார்த்தாள்.
அந்த வண்டு அவள் முகத்தைப் பார்த்தது.
வானத்தில் இருக்கும் நிலா வந்துள்ளதாக எண்ணியது.
அவள் கையில் வைத்து மூடிக்கொள்வாள் என்று எண்ணிப் பறந்து போய்விட்டது.
அவளோ, பழம் பறந்து போய்விட்டதே, என்ன புதுமை என்று வியந்தாள்.
கற்பனை நயம்

பூவில் வண்டு
யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி ஒருநான்கும் VivegaSindamani 18

ஒருநான்கும் ஈரரையும் என்றே கேளாய் உண்மையாய் ஐயரையும் அரையுங் கேட்டேன்
இருநான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே பின்னையோர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே சகிக்கமுடி யாதினியென் சகியே மானே. (18)

 • ஒருநான்கும் ஈரரையும் – நான்கும் இரண்டும் ஆறு – ஆறாவது ஓரை கன்னி – கன்னியே நான் அரையும் சொல்லை நீ கேளாய்
 • உண்மையாய் ஐயரையும் சொல்வனவற்றையும் கேட்டேன்.
 • இருநான்கு மூன்று – 2 * 4 * 3 = 24 – 24 ஆவது தமிழாண்டு விக்ருதி – இதன் தமிழ்ப்பெயர் வளமாற்றம். - நீ எனக்கு வளமான மாற்றம் (விடை) தரவில்லை.
 • என் மொழியைக் கேட்டபடி உன்னை எனக்குக் கொடுத்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பெருநான்கு பேறும் பெறுவாய். உன்னிடம் அறுந்து கிடக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கும் பெறுவாய்.
 • பெண்ணே!
 • பின்னை மேலும் ஒரு மொழி புகலவேண்டாம்.
 • இன்றே உன்னைத் தருக.
 • சரியாக நான்கு – நான்காவது தமிழாண்டு பிரமோதூத – இதன் தமிழ்ப்பெயர் பேருவகை
 • பத்து – பத்தாவது தமிழாண்டு தாது – இதன் தமிழ்ப்பெயர் மாழை – மாழை = தங்கம்
 • பதினைந்து – பதினைந்தாவது தமிழாண்டு விசு – இதன் தமிழ்ப்பெயர் விளைபயன்.
 • தங்கமே பேருவகையோடு விளையும் பயனைக் காண்.
 • சகியே (காதல் கனியே) என் ஆசையை இனிமேல் சகித்துக்கொள்ள முடியாது.

காதலன் காதலியிடம் இவ்வாறு உரையாடுகிறான்.

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி தன்னுடன் VivegaSindamani 17

தன்னுடன் பிறவாத் தம்பி தனைபெறாத் தாயார் தந்தை
அன்னிய ரிடத்துச் செல்வம் அரும்பொருள் வேசி யாசை
மன்னிய ஏட்டின் கல்வி மறுமனை யாட்டி வாழ்க்கை
இன்னவாங் கருமம் எட்டும் இருக்கத்துக் குதவா தன்றே. (17)

 1. தன்னுடன் பிறவாத தம்பி (சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள்)
 2. தன்னுடன் பிறவாத தம்பி (சின்னம்மா பெரியம்மா பிள்ளைகள்)
 3. தன்னைப் பெற்றெடுக்காத தந்தையர் (சித்தப்பா பெரியப்பா)
 4. தன்னைப் பெற்றெடுக்காத தாய் (சின்னம்மா பெரியம்மா)
 5. அன்னியரிடத்தில் உள்ள செல்வம்
 6. அரிய பொருளுக்காக உடலை விற்கும் வேசியர் மீது வைக்கும் ஆசை
 7. ஏராளமான ஏட்டுப் படிப்பு
 8. ஒரு மனைவி இருக்கும்போது மற்றொரு மனைவியை மணந்துகொண்டு வாழும் வாழ்க்கை

இவர்களின் செயல்கள் எட்டும் இருக்கமான உறவுக்கு உதவமாட்டா.

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி கெற்பத்தால் VivegaSindamani 16

கெற்பத்தால் மங்கையர்க் கழகு குன்றும் கேள்வியில்லா வரசனா லுலகம் பாழாம்
துற்புத்தி மந்திரியா லரசுக் கீனஞ் சொற்கேளாப் பிள்ளைகளாற் குலத்துக் கீனம்
நற்புத்தி கற்பித்தா லற்பர் கேளார் நன்மைசெய்யத் தீமையுட நயந்து செய்வார்
அற்பரோ டிணங்கிவிடிற் பெருமை தாழு மரியதவங் கோபத்தா லழிந்து போமே. (16)

 • கருவுற்றால் பெண்களுக்கு அழகு குறையும்.
 • குடிமக்கள் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாத அரசனால் உலகம் பாழாம்.
 • கெட்ட புத்தி கொண்ட மந்திரியால் அரசனுக்கு ஈனம்.
 • பெற்றோர் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்காத பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்.
 • நல்ல புத்தியைக் கற்பித்தால் அற்பர்கள் கேட்க மாட்டார்கள்.
 • அற்பருக்கு நன்மை செய்தால் தீமையைத் திருப்பிச் செய்வர்.
 • அற்பர்களோடு சேர்ந்தால் இருக்கின்ற பெருமை தாழும்.
 • கோபம் கொண்டால் அரிய தவ வலிமை அழிந்து போகும்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி வெம்புவாள் VivegaSindamani 15

வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல்விழுந் தழுவாள் பொய்யே
தம்பலந் தின்பாள் பொய்யே சாகிறே னென்பாள் பொய்யே
அம்பிலுங் கொடிய கண்ணா ளாயிரஞ் சிந்தை யாளை
நம்பின பேர்க ளெல்லாம் நாயினுங் கடையா வாரே. (15)

விலைமாது ஒருவனிடம் எப்படி நடந்துகொளுவாள்?
 • வாட்டத்துடன் கீழே விழுவாள். அது பொய்.
 • அவன் மேல் விழுந்து அழுவாள். அது பொய்.
 • அவன் தன் வாயிதழைச் சுவைக்க வேண்டும் என்பதற்காக வெற்றிலைப் பாக்குப் போட்டுக்கொள்வாள். அது பொய்.
 • நீ இல்லாதபோது சாகின்றேன் என்பாள். அது பொய்.
 • அவள் அம்பைக் காட்டிலும் கொடிய கண்ணினை உடையவள்.
 • மனத்தில் ஆயிரக் கணக்கான சிந்தை உடையவள்.
 • அவளை நம்பின பேர்கள் எல்லாம் அவளுக்கு நாயைக் காட்டிலும் கடைப்பட்டவர்கள்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி நாய்வால் VivegaSindamani 14

நாய்வாலை யளவெடுத்து நறுக்கித் தீட்டின் நற்றமிழை யெழுதவெழுத் தாணி யாமோ
பேய்வாழுஞ் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப் பெரியவிளக் கேற்றிவைத்தால் வீட தாமோ
தாய்வார்த்தைக் கேளாத சகசண் டிக்கென் சாற்றிடினு முலுத்தகுணம் தவிரமாட்டான்
ஈவாரை ஈயவொட்டா னிவனு மீயா னெழுபிறப்பி னுங்கடையாம் யிவன்பி றப்பே. (14)

 • நாயின் வாலை அளவு எடுத்து நறுக்கித் தீட்டினால் நல்ல தமிழை எழுத உதவும் எழுத்தாணி ஆகுமா?
 • பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கித் தூய்மை செய்து பெரியதோர் விளக்கை ஏற்றி வைத்தால் வீடு ஆகுமா?
 • தாயின் சொல்லைக் கேளாத சகடனுக்கு மற்றவர்கள் என்னதான் சொன்னாலும் அவன் தன் உலுத்த குணத்திலிருந்து மாறமாட்டான்.
 • கொடுப்பவர்களைக் கொடுக்க விடமாட்டான்.
 • தானும் கொடுக்கமாட்டான்.
 • இவன் பிறப்பு ஏழு பிறப்பிலும் கடைகெட்ட பிறப்பாகும்,


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி சங்கு VivegaSindamani 13

சங்குவெண் டாம ரைக்குத் தந்தையா யிரவி தண்ணீர்
அங்கதைக் கொய்து விட்டா லழுகச்செய் தண்ணீர் சொல்லும்
துங்கவெண் கரையிற் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டா லிப்படித் தயங்கு வாரே. (13)

 • சங்கு போல் மொட்டு விட்டுப் பூக்கும் வெண்டாமரைப் பூவுக்குத் தந்தை சூரியன்; தாய் தண்ணீர்.
 • அந்தப் பூவைக் கொடியிலிந்து கொய்துவிட்டால்
 • தாயாகிய தண்ணீர் மடியில் கிடத்தினால் அழுகிப் போகும்.
 • தாயிடமிருந்து பிரித்துத் தரையில் போட்டால் தந்தையாகிய வெயில் காய்ந்து கொல்லும்.
 • ஒருவன் தன் உறவு நிலைமையில் கெட்டுப்போனால் தாமரை அழுகுவதும், காய்வதும் போன்ற நிலைமை எய்துவர்.


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி ஆலகால VivegaSindamani 12

ஆல கால விஷத்தையும் நம்பலா மாற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
கால னார்விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாஞ்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பவரே. (12)

 • மூச்சுக் காற்றில் வந்தாலே ஆளைக் கொல்லும் ஆலகால விசத்தையும் நம்பலாம்.
 • வெள்ளம் அடித்துச் செல்லும் ஆற்றையும் நம்பலாம்.
 • சாறாவளிப் பெருங்காற்றையும் நம்பலாம்.
 • வளைந்தோடும் மதம் பிடித்த யானையையும் நம்பலாம்.
 • கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்.
 • உயிரைப் பறிக்க எமன் விடும் தூதரையும் நம்பலாம்.
 • கள்ளர், வேடர், மறவர் முதலான போராளிகளையும் நம்பலாம்.
 • சேலை கட்டிய வேசி மாதரை நம்பினால் தெருவில் நின்றுகொண்டு வாடித் தவிக்க வேண்டியதுதான்.   


யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி கற்பகம் VivegaSindamani 11

கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேக முள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப்புவி தன்னில் என்றும் இலவுகாத் திடுங்கி ளிப்போல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வ தரிதரி தாகு மம்மா. (11)
 • கற்க மரத்தைச் சேர்ந்த காக்கையும் அமிழ்தம் உண்ணும்.
 • வித்தையில் சிறந்த விற்பனராகவும், இடம் காலம் அறிந்து நடந்துகொள்ளும் விவேகம் உள்ளவராகவும் இருப்பவதைச் சேர்ந்தவர் இன்ப வாழ்வைப் வெறுவர்.
 • இது உலகியல்.
 • இலவ மரம் பழுக்கும்; உண்ணலாம்; என்று காத்திருந்த கிளியானது இலவங்காய் பழுக்காமல் நெற்றாகிப் பஞ்சு வெடித்துப் பறப்பதைப் பார்த்து ஏமாந்து போகும்.
 • அதுபோல அற்ப குணமுள்ளோரைச் சேர்ந்தவர் வாழ்வது அரிதினும் அரிதாகும்.   

இலவங்காய்

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


திணைமாலை நூற்றைம்பது 11 TinaiMalai 11

கரவில் வளமலைக் கல்லருவி நாட
உர வில் வலியாய் ஒருநீ இரவின்
வழிகள்தாம் சால வரவரிய வாரல்
இழிகடா யானை எதிர்       11
தோழி நெறி விலக்கியது

மறைக்காமல் வளம் தரும் மலை.
அந்த மலையின் கல்லில் இறங்கும் அருவி.
இப்படிப்பட்ட மலையருவி பாயும் நாட்டின் தலைவனே!
நீ நெஞ்சுரம் கொண்டவன்.
வில்லாற்றல் மிக்கவன்.
எனினும் இரவில் வருகிறாய்.
தனியொருவனாக வருகிறாய்.
வழிகளோ பலப்பல.
இறங்கி வரும் கரிய ஆண் யானை இரவில் கண்ணுக்குத் தெரியாது.
எனவே இரவில் வரவேண்டாம்.
தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.திணைமாலை நூற்றைம்பது 10 TinaiMalai 10

கருவிரல் செம்முக வெண்பல் சூல்மந்தி
பருவிரலால் பைஞ்சுனை நீர்தூஉய் பெருவரைமேல்
தேன்தேவர்க்கு ஓக்கும் மலைநாட வாரலோ
வான்தேவர் கொட்கும் வழி         10
தோழி நெறி விலக்கியது

கருநிற விரல்களும், சிவந்த முகமும், வெண்ணிறப் பற்களும் கொண்ட மந்தி
கருவுற்றிருக்கும் மந்தி
தன் பெரிய விரல்களால் சுனையில் உள்ள நீரை அள்ளித் தூவும்.
தேவர்க்குப் பூசை செய்வது போலத் தூவும்.
அந்த மலையில் தேவர்களுக்கு வழங்குவது போலத் தேனானது கூடு கட்டியிருக்கும்.
இப்படிப்பட்ட மலைநாட்டை உடையவனே!
வானுலகத் தேவர் நடமாட்டம் உள்ள வழியில் நீ வரவேண்டாம்.
பெண் அணங்கால் துன்பம் நேரும்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி