Tuesday, 31 January 2017

அறநெறிச்சாரம் 220 AraNeriSaram 220

முனைப்படியானுக்கு, முக்குடைச் செல்வனைப் பாடிவந்தேனுக்கு, பரிசில் தந்தான்.
நல்வினை, தீவினைக் கட்டுகளை அழித்து, வீடுபேற்று இன்பத்தை நல்கினான்.
உன் நூலைப் பாடி வந்தவர்க்கு, நிறைவிளக்குப் போல் இருந்துகொண்டு நீம-ஒளி (அருள் ஒளி) தருக என்று எனக்கு ஆணையிட்டான்.  

நீமம் > நேமம் = நியதி ஒழுங்கு 
நேயம் < நேமம் 

பாடல்

முனைப்பாடி யானைச்சூர் முக்குடைச் செல்வன்
றனைப்பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
வினைப்பாடு கட்டழித்து வீட்டின்ப நல்கி
நினைப்பாடி வந்தோர்க்கு நீமீக வென்றான்
நிறைவிளக் குப்போ லிருந்து. \ 220

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 219 AraNeriSaram 219

அவனா இவனா என்று ஐயப்படாதே. (சந்தேகப்படாதே)
சிவன் மேல் சிந்தையை வையுங்கள்.
இந்தச் சிவன் வேர் விட்டு மேல் படர்ந்து நிழல் தந்து விளங்கும் பிண்டி மரத்தின் கீழ் வெற்றிச் சிறப்புடன் கூடிய முக்குடை கொண்ட வேந்தனாக வீற்றிருக்கிறான்.

பாடல்

அவன்கொல் இவன்கொலென் றையப் படாதே
சிவன்கண்ணே செய்ம்மின்கள் சிந்தை – சிவன்றானும்
நின்றுகால் சீக்கும் நிழறிகழும் பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான் வேந்து. \ 219
 
பிண்டி மர நிழலில் முக்குடைக் கீழ்ச் சிவன்
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 218 AraNeriSaram 218

எந்த நூலாயினும், அந்த நூலை ஓதுவதாலும் கேட்பதாலும் என்ன பயன் விளையும்?
அதில் கூறப்பட்டுள்ள செய்திகளிலிருந்து பொய்ந்நூலா எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
 • அறநெறிச் சாரம் ஒரு மெய்ந்நூல்.
 • இதனை அறிந்தவன் வீடுபேறு எய்துவான்.
 • இதன் திறநெறியைத் தெளிந்து சார்ந்து ஒழுகுவதால் வீடுபேறு கிட்டும்.

பாடல்

எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
பொய்ந்நூல் அவற்றின் பொருள்தெரிந்து – மெய்ந்நூல்
அறநெறிச் சாரம் அறிந்தான்வீ டெய்தும்
திறநெறிச் சாரந் தெளிந்து. \ 218

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 217 AraNeriSaram 217

ஆதி என்னும் அருகன் நெறியினைச் சொல்லும் நூல் அறநெறிச்சாரம்.
 • இதனைப் படித்தும், படிக்கக் கேட்டும் உணர்ந்துகொள்ள  வேண்டும்.
 • இப்படி உணர்ந்துகொண்டவர்கள் உள்ளொளி பெருகிய உள்ளத்தவராக வாழ்வர்.
 • வினை வலிமையின் தாகம் தீர்ந்து வாழ்வர்.
 • அவர்கள் எண்ணமெல்லாம் நிறைவேறும்.
பாடல்

ஆதியின் தொல்சீர் அறநெறிச் சாரத்தை
ஓதியுங் கேட்டும் உணர்ந்தவர்க்குச் - சோதி
பெருகிய உள்ளத்த ராய்வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது. \ 217

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 216 AraNeriSaram 216

அருவினையாகிய தவநெறியும், செல்லும் வழிக்கண்ணே வரிந்து வந்து பயன் விளைவிக்கும் நன்மை, தீமை என்னும் இருவினைகளுக்குப் பின்னால் நிற்கும் விளைவுகளையும் ஐயந்திரிவு இல்லாமல் கண்டு உணர்ந்தவர்களுக்கு அல்லாமல் பிறருக்கு காட்டில் வாழும் வழியையும், நாட்டில் வாழும் வழியையும் கொண்டு சென்று உரைத்தல் வீண்.
 • குதர் = வீண்
 • அதர் = வழி
 • காட்டு அதர்
 • நாட்டு அதர்


பாடல்

அருவினையும் ஆற்றுள் வரிபயனும் ஆக்கும்
இருவினையும் நின்ற விளைவும் – திரிவின்றிக்
கண்டுணர்ந்தார்க் கல்லது காட்டதரும் நாட்டதரும்
கொண்டுரைப்பான் நிற்றல் குதர். \ 216

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 215 AraNeriSaram 215

தெளிவில்லாத ஒருவனை அவனுக்குப் பின்னே நின்றுகொண்டு 8 பேர் துன்புறுத்துவர். மிகவும் நல்லவர் போல இருந்துகொண்டு 5 பேர் பகை மூட்டுவர். 3 பேர் அவன் பின்னே தொடர்ந்து செல்வர்.

 • இருநால்வர் – 8 பேர் – 8 உணர்வுகள் – நகை, அழுகை, இளிவரல் என்னும் ஏளனம், மருட்கை என்னும் வியப்பு, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை – தொல்காப்பிய நெறி 
 • ஐவர் – 5 பேர் – மெய், வாய், கண், மூக்கு, செவி
 • மூவர் – 3 பேர் – காமம், வெகுளி, மயக்கம்


பாடல்

தேற்றமில் லாத ஒருவனைப் பின்னின்றாங்(கு)
ஆற்ற நலிவர் இருநால்வர் – ஆற்றவும்
நல்லார்போல் ஐவர் பகைவளர்ப்பார் மூவரால்
செல்லும் அவன்பின் சிறந்து. \ 215

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


ஐங்குறுநூறு பத்து 22 AinguruNuru 211 – 220

அன்னாய் பத்து

குறிஞ்சி


இப்பாடல்களில் அன்னை என்னும் சொல் தாயையோ, தோழியையோ, தலைவியையோ விளிக்கும் சொல்லாக வருகிறது. தோழியர் இக்காலத்திலும் ‘அம்மா தாயே’ என்று விளிப்பர்.

211  தோழி தலைவியிடம்
நெய் கனிந்திருக்கும் உளுந்து வயலில் காய்த்திருப்பது போல அவர் உனக்காக வயலை, செயலைத் தழைகளால் கட்டிய தழையாடை வாடிக்கொண்டிருக்கிறது தாயே. ஏற்றுக்கொள்.

212  தோழி செவிலியிடம்
சந்தன மரத்திலிருந்து எழும் துகள்-புகையின் மணம் எங்கும் கூடி மணக்கும் நாடன் அவன். அவனுக்கு மணம் முடித்துத் தருவதிலிருந்து நாம் ஏன் அகலவேண்டும்?

213  தலைவி தோழியிடம்
இனிக்கும் மாமரத்தின் வடுக்கள் காம்பு-மூக்கு அறுந்து பாலை நிலத்தில் பொழியும் மழையில் விழும் பனிக்கட்டி போல, விழும். அங்குள்ள நன்னாட்டுக் குறவர் மக்கள் அவற்றைத் தொகுத்து வைத்துக்கொள்வர். அவனுடைய அந்த நாட்டவர் அவனுக்கு என்னைப் பெண் கேட்டு வந்தால் நான் உயிர்வாழக் கூடும் தாயே.

214 தலைவி தோழியிடம்
மலைச்சாரலில் கொழுத்த இலைத் தளிருடன் இருக்கும் பலாப்பழம் கல்லுக் குகையில் விழ, அங்குள்ள தேன் கூடு சிதறும் நாட்டை உடையவன் அவன். விரும்பி மழை பொழியும் என் கண்ணை அழ விட்டுவிட்டுத் தன் நாட்டுக்குச் செல்கிறான், தாயே.

215 தலைவி தோழியிடம்
பொன்னை மாற்றுப் பார்க்கும் கட்டளைக் கல் போன்ற நிறம் கொண்ட தும்பி வண்டுகள் மூங்கிலில் குடைந்த துளை வழியாக உள்ளே செல்லும்போது குழல் இசை போல் ஒலிக்கின்றன. தட்டை, தண்ணுமை இசைக்கருவிகளின் இசைப் பின்னணியில் ஒலிக்கின்றன. முல்லைப் பூக்கள் புதர்களில் பூத்துக் கிடக்கின்றன. இது மாலை வேளை. இந்த மாலை வேளையில் இவரும் பிரிந்து சென்று கொடுமைப் படுத்துகிறாரே, சரியா தாயே.

216 தோழி தலைவியிடம்
இரையைப் பற்றுவதில் வல்லமை மிக்க குறுகிய கைகளை உடைய ஆண்புலியானது, நீண்ட புதருக்கு இடையில் பெண்யானை போட்டிருக்கும் யானைக் குட்டியைக் கவர்வதற்காக பலா மர நிழலில் பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டை உடையவன் அவன். அவனை நினைத்து உன் மேனியானது மாறுபட்டு, கொய்யப்பட்ட தழை வாடுவது போல வாடுகிறதே, தாயே           


வேங்கை மலர் 
217 தோழி தலைவியிடம்
பெருமலையில் வேங்கை மலர் பொன்னை மருட்டிக்கொண்டு பூத்திருக்கிறது. அந்தப் பூக்களை மான் சுற்றம் மேய்ந்து பசியாறுகிறது. இப்படிப்பட கானக நாட்டை உடையவன் அவன். அவன் வந்தும் இவளது மேனி பசலை பூத்துக் கிடக்கிறதே. சில நாட்களுக்கு வரமாட்டேன் என்று சொல்லியிருப்பானோ?   

218 தோழி தலைவியிடம்
உன் கண்ணின் அழகிய புருவங்கள் ஆடுகின்றன. மயிர் செறிந்த உன் கைகளில் வளையல்கள் செறிவாக உள்ளன. யானையைப் பற்றி ஏமாந்து போன புலி சினத்தில் முழங்கும் ஒலி இடி போல் முழங்குகிறது. உன் தலைவன் பெருங்கல் நாடன் வருகிறான் போலத் தோன்றுகிறது, தாயே.       

219 தலைவி தோழியிடம்       
கருநிறக் காம்பினை உடைய பொன்னிற வேங்ககைப் பூக்கள் பாறையின் மேல் உதிர்ந்து பாறைக்குப் பொன்தகடு வேய்ந்தது போல் போர்த்திக் கிடக்கும் நாட்டினை உடையவன் அவன். அவன் பிரிந்து சென்றுவிட்டான் என்று என் நெற்றி பசந்து கிடக்கிறதே, ஏன் தாயே?

220 தோழி செவிலியிடம்
அடித்துப் பொழிந்த மழையால் அகன்ற இடம் கொண்ட அருவி மூங்கில் அடர்ந்த காட்டில் பாயும் நாட்டை உடையவன் அவன். மலை போன்றதும், அழகில் வீறாப்பு கொண்டதுமான அவனது அகன்ற மார்பினைத் தழுவாமல், உன் மகளாகிய இவளது கண்களில் நீர் கசிகிறது, தாயே.   

புலவர் – கபிலர்
கி.மு. காலம்
ஐங்குறுநூறு 22 ஆம் பத்து
திணை – குறிஞ்சி - 2 ஆம் பத்து
பாடல் – 211 - 220
அன்னாய்  பத்து

பாடல் சொல் பிரிப்புப்பதிவு

211     

நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலைஅம் சிலம்பின் தலையது
செயலைஅம் பகைத் தழை வாடும் அன்னாய்!

தலைமகன் ஆற்றாமை கண்டு, கையுறை ஏற்ற தோழி தலைமகள் தழை ஏற்க வேண்டிக் கூறியது. 1

212     

சாத்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ, நாம் அகல்வு? அன்னாய்!

வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுத்தவழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 2

213     

நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்ந்த
ஈர்ந் தண் பெரு வடு, பாலையில், குறவர்,
உறை வீழ் ஆலியின், தொகுக்கும் சாரல்
மீமிசை நல் நாட்டவர் வரின்,
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்!

வரைவொடு வருதலைத் துணிந்தான் என்பது தோழி கூறக் கேட்ட தலைமகள் சொல்லியது. 3

214     

சாரல் பலவின் கொழுந் துணர் நறும் பழம்
இருங் கல் விடர் அளை வீழ்ந்தென, வெற்பில்
பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன்,
பேர் அமர் மழைக் கண் கலிழ, தன்
சீருடை நல் நாட்டுச் செல்லும் அன்னாய்!

தலைமகன், 'ஒருவழித் தணப்பல்' என்று கூறியவதனை அவன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 4

215     

கட்டளை அன்ன மணி நிறத் தும்பி,
இட்டிய குயின்ற துளைவயின் செலீஇயர்,
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீம் குழல் ஆம்பலின், இனிய இமிரும்
புதல் மலர் மாலையும் பிரிவோர்
அதனினும் கொடிய செய்குவர் அன்னாய்!

இரவுக்குறி நயந்த தலைமகள், பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியது. 5

216     

குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை,
நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின்
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு,
கொய்தரு தளிரின் வாடி, நின்
மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்!

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி கூறியது. 6

217     

பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ
மான் இனப் பெருங் கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவும், இவள்
மேனி பசப்பது எவன்கொல்? அன்னாய்!

வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சி உணர்ந்த தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது. 7

218     

நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்;
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்;
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி
எழுதரு மழையின் குழுமும்
பெருங் கல் நாடன் வரும்கொல்? அன்னாய்!

தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, 'இஃது என் ஆம் கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக்கண்டு, 'கடிதின் வந்து வரைவான்' எனச் சொல்லியது. 8

219     

கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ
இருங் கல் வியல் அறை வரிப்பத் தாஅம்
நல் மலை நாடன் பிரிந்தென,
ஒள் நுதல் பசப்பது எவன்கொல்? அன்னாய்!

வரைவிடை வைத்துப் பிரிந்த அணுமைக்கண்ணே ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 9

220     

அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு
முயங்காது கழிந்த நாள், இவள்
மயங்கு இதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்!

நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

அறநெறிச்சாரம் 214 AraNeriSaram 214

சேற்றில் தாமரையாக அழகிய மலர் தோன்றுகிறது.
உடம்பு அழுக்குதான்.
என்றாலும் அது நன்று.
நல்ல ஞானம், நல்ல காட்சி, நல்ல ஒழுக்கம் என்னும் இவை இந்த உடம்பில்தானே தோன்றுகின்றன.
சேற்றில் தாமரை தோன்றுவது போலத் தோன்றுகின்றன.

பாடல்

அளற்றகத்துத் தாமரையாய் அம்மலர்ஈன் றாங்கு
அளற்றுடம் பாமெனினும் நன்றாம் – அளற்றுடம்பின்
நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுத லான். \ 214
 
தாமரை
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 213 AraNeriSaram 213

தான் பெற்ற பிள்ளைகள், தன் மனைவி, மருமக்கள், தன்னைப் பெற்ற தாய், தந்தை, தன் தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் என்னும் இவர்கள் ஒருவன் துறவுக்குக் கடுமையான பகையாளிகள். இவர்களிடையே ஒருவன் உழன்றுகொண்டு துன்புறுவான். அவன் உயிர் நீண்ட தடுமாற்றத்தில் நின்றுகொண்டு உழலும்.

பாடல்

மக்களே பெண்டிர் மருமக்கள் தாய்தந்தை
ஒக்க உடன்பிறந்தார் என்றிவர்கள் – மிக்க
கடும்பகை யாக உழலும் உயிர்தான்
நெடுந்தடு மாற்றத்துள் நின்று. \ 213

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 212 AraNeriSaram 212

எனக்கு
 • நல்ல அறம் – தந்தை
 • நிறையுடைமை – தாய்
 • நன்கு உணரக்கூடிய கல்வி – தோழன்
 • துணிவு – தம்பி

இவர்கள் இல்லாத பொய்ச்சுற்றம் – பொருள்
நல்ல சுற்றம் இருக்கும்போது பொய்ச்சுற்றமும் எனக்கு வேண்டுமா? வேண்டாம்.

பாடல்

நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி – அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு. \ 212

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 211 AraNeriSaram 211

துன்பத்தில் ஊறி, துன்பத்தைப் போக்கும் அறிவு யாதொன்றும் தெரியாதவன் என்று பலராலும் இகழப்பட்டு, ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், அவனை மாற்றி, அவன் தன் மனைவியை விட்டுச் செல்லுமாறு, மாபெருங்காட்டில் வெயிலிலும், மழையிலும் நனையும்படி அவன் உடம்பைப் போட்டுவிடுதல் நல்லது.
இறந்த உடலை உயிரினங்களுக்கு உணவாகும்படி பெருங்காட்டில் போட்டுவிடுவது அக்காலச் சமணர் வழக்கம்.

பாடல்

ஆற்றாமை ஊற அறிவின்றி யாதொன்றும்
தேற்றா னெனப்பட்டு வாழ்தலின் – மாற்றி
மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில்
நனையில் உடம்பிடுதல் நன்று. \ 211

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 210 AraNeriSaram 210

காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றையும் ஓரிடத்தில் கூட்டி அவற்றை ஒருங்கே விட்டுவிட்ட பின்னர் ‘யான்’ என்னும் பேரையும் ஒழித்து, அதற்கப்பால் ‘துறவி’ என்று தான் பெறும் பேரையும் காயவைத்து எரித்துவிடுவானேல், அவனுக்கு எல்லாப் புகழும் வந்து சேரும்.

பாடல்

முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத்
தப்பிய பின்றைத்தம் பேரொழித்து – அப்பால்
பெறுபெயரைக் காயப் பெறுபவேல் வையத்(து)
உறுமவனை எல்லா மொருங்கு. \ 210

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 209 AraNeriSaram 209

இரண்டெழுத்துச் சொற்கள் வினை, விடு,
அஞ்சவேண்டிய எழுத்து இரண்டு – வினை
நட்புக் கொள்ள வேண்டிய எழுத்து இரண்டு – வீடு
ஒட்டியிருந்து இழுக்கடையால் இருக்கவேண்டிய எழுத்து ஒன்று – பூ (அருகதேவன் திருவடிக்கு இடும் தாமரை)
தண்கடல் அரசனே!
விழுமிய துணை வேண்டுபவர்க்கு இவை வேண்டும்.

பாடல்

உட்கப் படுமெழுத்(து) ஓரிரண் டாவதே
நட்கப் படுமெழுத்தும் அத்துணையே – ஒட்டி
இழுக்கா வெழுத்தொன் றிமிழ்கடல் தண்சேர்ப்ப
விழுச்சார்வு வேண்டு பவர்க்கு. \ 209

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 208 AraNeriSaram 208

அரிய பொருள்களை ஈ (பறவை)
இன்சொல் கொள் (முதிரை)
இவற்றில் உறுதியாக இருக்கும்போது ஊன் உண்ணும் விலங்கு (அரிமா என்னும் சிலகம் போல் இரு)
சிறியன உள்ளான் (உள்ளான் என்னும் நீர்ப்பறவை, நினைக்கமாட்டான்)
புல்லிய அற்பமானதை அகல் (குயவன் செய்யும் கலம், அகல் விளக்கு)
மீண்டும் உலகில் பிறவாமல் செய்யும் வழிகள் இவை.

பாடல்

பறவை அரும்பொருள் இன்சொல் முதிரை
உறுதிக்கண் ஊன்உண் விலங்கு – சிறியன
நீர்ப்புள் குயக்கலம் புல்லவை ஊர்வது
பேர்த்தீண்டு வாரா நெறி. \ 208

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 207 AraNeriSaram 207

ஆன்மா நல்வினை செய்யும்.
உடல் துன்பம் செய்யும்.
உறுதியும், உறுதி இல்லாததும் உடல்-புல்.
இறுதியில் அகத்தில் இருக்கவேண்டியது பேரின்ப நெறி.
கடைப்பிடித்து வாழ்க.

நாற்கால் விலங்கு – பசு - ஆன்மா
குயக்கலம் – குயவன் செய்த மட்கலம்
நாட்பேர் – அனுஷ்டம் நாள் – புல் (தமிழ்)
மரப்பேர் – அகத்தி மரம்

பாடல்

நல்வினை நாற்கால் விலங்கு நவைசெய்யும்
கொல்வினை யஞ்சிக் குயக்கலம் – நல்ல
உறுதியும் அல்லவும் நாட்பேர் மரப்பேர்
இறுதியில் இன்ப நெறி. \ 207

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 206 AraNeriSaram 206

“மூடுடா வாயை” என்று ஒருவர் ‘கட்’ எனச் சொல்லியதும் கல்லை உளியால் பிளக்கும்போது தீப்பொறி கிளம்புவது போல, ‘பொட்’ என்று பொடிப்பது குரோதம் என்னும் வஞ்சம். இப்படி ‘வெட்’ என்று காய்ந்து வரும் வஞ்சத்தைத் தன்னிடம் வராமல் காக்கும் திறமை உடையவரே பிறர் மோக்கும்படி நற்பண்பு மணம் வீசி மேல்நிலை எய்துவர்.

பாடல்

கட்டெனச் சொல்லியக்கால் கற்பிளப்பில் தீயேபோல்
பொட்டப் பொடிக்குங் குரோதத்தை  - வெட்டெனக்
காய்த்துவரக் கண்டக்கால் காக்குந் திறலாரே
மோக்க முடிவெய்து வார். \ 206

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 205 AraNeriSaram 205

ஒருவனுடன் சேர்ந்து பிறப்பவை மூன்று; காமம், வெகுளி, மயக்கம் என்பன அவை.
பிறந்தவன் ஒருவன் இந்த மூன்றில் ஒன்றனை அவ்வப்போது பற்றிக்கொண்டு சில காலம் வாழ்வான்.
இடமகன்ற இல்லத்தில் இருவரை விட்டுவிட்டு மயக்கம் என்னும் ஒன்றை மட்டும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அவனுடன் இடுகாட்டுக்குச் சென்றுவிடுவான். இதுதான் அவன் வாழ்வு.

பாடல்

உடன்பிறந்த மூவ ரொருவனைச் சேவித்
திடங்கொண்டு சின்னாள் இருப்பர் – இடங்கொண்ட
இல்லத் திருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன்பின் சிறந்து. \ 205

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 204 AraNeriSaram 204

குற்றங்களைக் குறைப்பவன், குறைவில்லாமல் மூவுலகிலும் வாழ்வோரின் குறைகளை மறைப்பவன், தன் அருள் ஒளியைப் பரப்புபவன், முழுவதையும் அறிந்தவன், என்னும் நிலையில் உள்ளவனைப் பாடாத நாக்கு என்ன நாக்கு? அவன் திருவடி சேராத தலை, தலை அன்று.

பாடல்

குற்றம் குறைத்துக் குறைவின்றி மூவுலகின்
அற்றம் மறைத்தாங்(கு) அருள்பரப்பி – முற்ற
உணர்ந்தானைப் பாடாத நாவல்ல; அல்ல
சிறந்தான்றாள் சேரா தலை. \ 204

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 203 AraNeriSaram 203

நடந்து சென்று கொல்வதும், திருடுவதும், அடுத்தவன் மனைவியிடம் செல்வதுமாகிய செயல்களைச் செய்வது கால் அன்று. பெருந்தவ முனிவர்களிடம் சென்று அவர் சொல்லும் பிறவி வராமல் தணிவிக்கும் அறவுரைகளைக் கேட்குமாறு நடந்து செல்வதே நல்ல கால்கள்.

பாடல்

கொல்வதூஉங் கள்வதூஉம் அன்றிப் பிறர்மனையிற்
செல்வதூஉஞ் செய்வன கால்லல – தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர் பாற்சென்(று)
அறவுரை கேட்பிப்ப கால். \ 203

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 202 AraNeriSaram 202

கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, உப்பு ஆகிய ஆறு சுவையின் தரம் காண்பது நா அன்று. அவற்றை வென்றவன் (அருகன்) செவ்விய அடியை விரும்பி வந்து எப்போதும் அவன் முன் நின்று அவன் புகழைப் பாடுவதே நாக்கு.

பாடல்

கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளிமதுரம்
உப்பிதரங் கொள்வன நாவல்ல – தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டுவந் தெப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா. \ 202

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 201 AraNeriSaram 201

சந்தனம், மணப்புகை, கத்தூரி, குங்குமம் ஆகியவற்றின் மணப்புகையை மோந்து இன்புறுவது மூக்கு அன்று. விரிந்த அரியணையில் வேந்தனாக வீற்றிருக்கும் அண்ணல் அருகனின் அடிகளில் தூவிக் கிடக்கும் மலர்களை மோந்து இன்புறுவதே சிறந்த மூக்கு.

பாடல்

சாந்தும் புகையும் துருக்கமுங் முங்குமமும்
மோந்தின் புறுவன மூக்கல்ல – வேந்தின்
அலங்குசிங் காதனத் தண்ணல் அடிக்கீழ்
இலங்கிதழ் மோப்பதா மூக்கு. \ 201
 
அரியணை அண்ணல் 
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


Monday, 30 January 2017

அறநெறிச்சாரம் 200 AraNeriSaram 200

பொருள் என்று சொன்னவுடன் பிளந்து விரிந்து, பொன்னும் மணியும் போல எங்கும் இருள் இல்லாமல் ஒளி வீசும் கண்ணானது கண் அன்று. மயக்கம் இல்லாமல், பொய்மையான காட்சிகளை விலக்கி, நல்ல காட்சியாக, ஒப்பில்லா மூன்று குடைகளை உடைய அருகப் பெருமானைக் காணும் கண்களே நல்ல கண்கள்.

பாடல்

பொருளெனப் போழ்ந்தகன்று பொன்மணிபோன் றெங்கும்
இருளறக் காண்பனகண் ணல்ல – மருளறப்
பொய்க்காட்சி நீக்கிப் பொருவறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண். \ 200
 
முக்குடையான் \ அருகன் 
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 199 AraNeriSaram 199

கண்டவர் காமம் கொள்ளும் வகையில் ஆசை மூட்டும் அழகிய காதில் குண்டலம் அணிந்துகொள்வது செவிக்கு அழகு அன்று. உலகம் மேற்கொண்டொழுகும் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் உணர்ந்து அவற்றில் முன்னதாகிய அறத்தை முட்டுபாடு இல்லாமல் கேட்டுச் சுவைப்பதே நல்ல செவி.  

பாடல்

கண்டவர் காமுறூஉங் காமருசீர்க் காதிற்
குண்டலம் பெய்வ செவியல்ல – கொண்டுலகில்
மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது முட்டின்றிச்
சூன்று சுவைப்ப செவி. \ 199
 
காதணி குண்டலம் 
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 198 AraNeriSaram 198

காதைப் புண் ஆகும்படி அறுத்து, அதன் கறிப்பகுதி ஆறி வளர்ந்து, அதில் வண்ண வண்ண அணிகலன்களைப் பூட்டிக்கொள்வது அழகிய காது அன்று.
நுட்பமான நூல்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டு, உணர்ந்து, அஞ்ஞான இருளை நீக்கிக்கொண்டு, அறமல்லா மறவுரை காதில் விழும்போது அதனை மனத்திலிருந்து விட்டுவிடுவதே நல்ல செவி (செவி > செவு) 

பாடல்

புண்ணாகப் போழ்ந்து புலால்பழிப்பத் தாம்வளர்ந்து
வண்ணப்பூண் பெய்வ செவியல்ல – நுண்ணூல்
அறிவுரை கேட்டுணர்ந்(து) அஞ்ஞான நீக்கி
மறவுரை விட்ட செவு. \ 198
 
காதணி \ பூச்சிக்கூடு முதலானவை
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 197 AraNeriSaram 197

பண் அமைந்த யாழ், குழல் போன்றவற்றின் இசையை விரும்பிச் சென்று கேட்டு மகிழ்பவை செவி அல்ல.
வெட்டிப் பேச்சை விட்டுவிட்டு வானுலக இன்பமும், வீடுபேறும் பற்றிய கட்டுரைகளை உறுதி பெறக் கேட்பதே செவியின் பயனாம்.

பாடல்

பண்ணமை யாழ்குழல் கீதமென் றின்னவை
நண்ணி நயப்ப செவியல்ல – திண்ணிதின்
வெட்டெனச் சொன்னீக்கி விண்ணின்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி. \ 197

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 196 AraNeriSaram 196

அருளால் அறம் வளரும்.
இடையறாமல் முயலும் ஆள்வினையால் விளைச்சல் ஆக்கம் வளரும்.
ஈட்டிய பொருளால் மேலும் பொருள் வளரும்.
நாள்தோறும் தெளிவற்று உடலின்பம் விழைவதால் காமம் வளரும்.
அந்தக் காமத்தை விரும்பாமல் இருந்தால் வீடுபேறு கிட்டும்.

பாடல்

அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள்வளரும் நாளும் – தெருளா
விழைவின்பத் தால்வளரும் காமமக் காம
விழைவின்மை யால்வளரும் வீடு. \ 196

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 195 AraNeriSaram 195

ஆசையையும் சினத்தையும் நீக்கி அடக்கத்துடன் இருத்தல் சிறப்பு மிக்க வீட்டுநெறி என்பது மேலோர் வாக்கு. பட்டிஎருது போல ஊர் மேயும் ஒருவன் நீரில் மூழ்கி எழுந்ததும் அடங்கிவிட்டான் என்பது, கேடுகெட்டவர் வழியை வியப்பது போன்றது.

பாடல்

ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டு நெறியென்பர் – நீர்புகப்
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழிவியக்கு மாறு. \ 195

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 194 AraNeriSaram 194

அறியாமை இருளே உலகத்து இயற்கை. 
அந்த இருளை ஒரு விளக்கால் அகற்றுவது போன்றதே நம் அறிவுடைமை. 
அந்தக் கைவிளக்கு எரிய ஊற்றும் எண்ணெய்-தான் நம் நெஞ்சத்தில் இருக்கும் அருளுடைமை. 
அந்த நெய்யை உண்டாக்கிய பால் போல் ஒழுக்கம் கொண்டவரே சுமை இல்லாத மேலுலகத்தை அடைவர்.

பாடல்

இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை – கைவிளக்கின்
நெய்யேதன் நெஞ்சத் தருளுடைமை நெய்பயந்த
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா
மேலுலகம் எய்து பவர். \ 194
 
விளக்கு
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 193 AraNeriSaram 193

உயிரை விதைத்து உடலை விளையவைத்துக் கூற்றுவனுக்கு உண்ணத் தருகிறோம். இந்த வாழ்க்கையில் தீவினைகளை விதைக்கும் குணத்தால் என்ன பயன்? குற்றத்தை மாற்றி மறுமைக்கு வேண்டுவனவற்றைச் செய்தால் கூற்றுவன் நம்மிடம் வரமுடியாது.

பாடல்

உயிர்வித்தி ஊன்விளைத்துக்  கூற்றுண்ணும் வாழ்க்கைச்
செயிர்வித்திச் சீலந்தின் றென்னை? – செயிரினை
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாங்
கூற்றுங் குறுகா இடம். \ 193

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 192 AraNeriSaram 192

அஞ்சாமைக்கு அஞ்சாமை தன்னைத் தான் நொந்துகொள்ளல்.
உறுதிக்கு உறுதி பிற உயிரினங்களைப் பாதுகாத்து வாழ்தல்.
அறிவுக்கு அறிவு எது என எண்ணிப் பார்த்தால் மறுபடியும் பிறந்து இந்த உலகுக்கு வாராமல் இருக்கும் நெறிமுறைகளைப் பின்பற்றுதல்.

பாடல்

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக் குறுதி உயிரோம்பி வாழ்தல்
அறிவிற் கறிவாவ தெண்ணின் மறுபிறப்பு
மற்றீண்டு வாரா நெறி. \ 192

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


அறநெறிச்சாரம் 191 AraNeriSaram 191

உணர்ச்சியை அச்சாக்கி, வினவி அறிதலை தேர்ச்சக்கரம் ஆக்கி, தம்மிடம் ஒன்றிக்கிடக்கும் ஐந்து புலன்களையும் தேரை இழுக்கும் யானைகளாகப் பூட்டி தேரில் ஊர்கின்ற பாகன் நல்ல உணர்வு உடையவனாக இருந்தால், அவனுக்குப் பிறவி இல்லை.

பாடல்

உணர்ச்சியச் சாக உசாவண்டி யாகப்
புணர்ச்சிப் புலனைந்தும் பூட்டி – உணர்ந்ததனை    
ஊர்கின்ற பாகன் உணர்வுடைய னாகுமேல்
பேர்கின்ற தாகும் பிறப்பு. \ 191

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி