Sunday, 31 December 2017

திண்ணனும் நாணனும் மலை ஏறல் 3.3.101


ஆவல் மேம்பட்டு, வேறு சிந்தை எதுவும் இல்லாமல், தேவர் சிவன் இருக்குமிடம் எங்கே என்று திண்ணனார் வினவினார். 746
மூங்கில் முத்து, அகில், சந்தனம், மணிகள் ஆகியவற்றை உருட்டிக்கொண்டு வரும் முகலியாற்றை அவர்கள் சென்றடைந்தனர். 747
அங்குக் காடன் தீக்கடைக் கோலால் தீ மூட்டி பன்றியைச் சுட்டுக்கொண்டிருந்தான். திண்ணன் சிவனைக் காண மலை ஏறும்போது நாணனும் உடன் சென்றான். 748
ஆற்றின் குளிர்ந்த நீரில் இறங்கி, கடந்து தேவர் இருக்கும் மலையைக் கண்டனர். 749
மலை ஏறும்போது நமசிவாய என்னும் ஐந்தெழுத்து ஓசை கேட்டது. திண்ணன் இந்த ஓசை என்ன என்று வினவினான். இங்குள்ள வண்டுகள் பாடும் ஓசை போலும் என்று நாணன் கூறினான். 750

746        
ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம்               3.3.97

747        
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும்
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார்    3.3.98

748        
ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு
வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி
ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார்          3.3.99

749        
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம்
களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு
குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்       3.3.100

750        
கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட
இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான்          3.3.101

3. இலை மலிந்த சருக்கம்
3.03. கண்ணப்ப நாயனார் புராணம்
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம்முகலியாறு – காளத்தி 3.3.96


பல காத தூரம் நாம் இதனைத் தொடர்ந்து வந்தோம். நம்மால் வேட்டையாட முடியாத இந்தப் பன்றியை தம் தலைவர் குத்திவிட்டார் என்று நாணனும் காடனும் பேசிக்கொண்டு தலைவனைத் தொழுதனர். 741
இதனைச் சுட்டு நீ அருந்திய பின்னர் நாங்களும் உண்டு தண்ணீர் குடித்துவிட்டு நம் வேட்டையைத் தொடர்வோம் என்று தலைவனிடம் நாணனும் காடனும் கூறினர். 742
தண்ணீர் எங்கே உள்ளது என்று திண்ணன் வினவினான். இந்தத் தேக்குமரக் காட்டைக் கடந்து சென்றால் முகலி ஆறு உள்ளது என்றுநாணன் கூறினான். 743
நாணன் சொன்னபடிச் செல்லும் வழியில் சிவன் வீற்றிருக்கும் திருமலைச்சாரல் வந்தடைந்தனர். 744
இது திருக்காளத்தி மலை. இதன் உச்சிக்குச் சென்றால் குடுமித் தேவர் என்று இலிங்கத்தை வழிபடலாம் என்று நாணன் கூறினான். 745

741        
வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் 3.3.92

742        
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றி கொள் வேட்டைக் காடு குறுகுவோம் மெல்ல என்றார் 3.3.93

743        
என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்
நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான்   3.3.94

744        
பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார்
செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை 3.3.95

745        
நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான்        3.3.96

3. இலை மலிந்த சருக்கம்
3.03. கண்ணப்ப நாயனார் புராணம்
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம்திண்ணன் பன்றி குத்தியது 3.3.91


இப்படி வேட்டையாடும்போது காட்டுப்பன்றி ஒன்று வலையைப் பிய்த்துக்கொண்டு ஓடியது. 736
அதன் காலடிகளை ஒற்றிப் பார்த்துக்கொண்டு இரண்டு பேர் பின் தொடர்ந்தனர். 737
நாணன், காடன் என்போர் அந்த இரு மறவர். 738
ஓடிய அந்தக் காட்டுப்பன்றி களைப்பால் மயக்கமுற்று ஒரு குன்றத்தின் அடிவாரத்தில் நின்றது. 739
அந்த நேரத்தில் மறவர் தலைவன் திண்ணன் விரைந்து பாய்ந்து தன் வாளால் குத்தினான். 740

736        
இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக்
கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம்
பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி
மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில்    3.3.87

737        
போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு
ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்
ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்           3.3.88

738        
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்             3.3.89

739        
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடக் குரல் நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடித்
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்
சென்று அதனிடை நின்றது வலிது தெருமர நிரையில்     3.3.90

740        
அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்
கைத் தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி
மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர்              3.3.91

3. இலை மலிந்த சருக்கம்
3.03. கண்ணப்ப நாயனார் புராணம்
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம்Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி