Pages

Sunday, 9 October 2016

அகநானூறு Agananuru 326

செல்வம் படைத்தவர் தேர் தங்கும் சேறு


“நீ அவளிடமே செல்” என்று கூறித் தலைவி, தலைவனை விலக்குகிறாள்.

அவள் (பரத்தை, கணிகை) உனக்காக எச்சில் ஊறும் வாய், உறவுக்காக முகத்தில் உருத்தும் பருக்கள் (தித்தி), காமப்போர் புரியும் ஈரக் கண், பருத்த தோள், குறுகிய நெற்றி ஆகியவற்றைக் கொண்ட அவள்

அம்மம்ம, நல்லவள். 
இளமை நலம் மிக்கவள். 
செல்வம் படைத்தவர் தேர் தங்கும் சேறு. 
கொடி கட்டிப் பறக்கும் கள்ளுக்கடை. 
நெல் விளைந்திருக்கும் வயல். 

இப்படியெல்லாம் பாராட்டிக்கொண்டு, ஒய்யார நடை போட்டவண்ணம், விழாக் கோலத்துடன் அவளிடம் நீ செல். (செலீஇயர் வேண்டும்)

பழையன், சோழரின் போர்மறவன். வெற்றிவேல் ஏந்தி, அணிகலன் பூண்ட யானைமேல் வரும் சோழரின் போர்மறவன். காவிரியாற்று நீர் மதகு வழியாகப் பாயும் போர் என்னும் நாட்டுப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவன். அவன் ஓங்கிய வேலின் குறி தப்பவே தப்பாது. அது போல அவள் பார்வையில் விழாதவர் யாரும் இல்லை. நீயும் சென்று விழு.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  மருதம்

ஊரல் அவ் வாய் உருத்த தித்தி,
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல்,
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர்
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில்,               5
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து,
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
இழை அணி யானைச் சோழர் மறவன்
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை,         10
புனல் மலி புதவின், போஒர் கிழவோன்,
பழையன் ஓக்கிய வேல் போல்,
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே!

தோழி தலைமகனை வாயில் மறுத்தது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


5 comments:

  1. பழையன் பொருள்

    ReplyDelete
    Replies
    1. பழமை - திருக்குறளில் உள்ள ஒரு பத்து (அதிகாரம்)
      தொன்றுதொட்டுப் பழகிவரும் நட்பு என்பது இந்தச் சொல்லின் பொருள்
      இந்தப் பாடலில் குறிப்பிடப்படுபவன் சோழனின் நண்பன். படைத்தலைவனுமாம்.
      பழையன் மாறன் என்பவன் பாண்டியனின் நண்பன்

      Delete
  2. பழையன் என்பவன் போஒர் எனும் ஊரின் தலைவன். எனவே தான் போஓர் கிழவோன் பழையன் ஒக்கிய வேல் என வந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றைப் புரிந்துகொண்டு படிக்கிறீர்கள். மகிழ்ச்சி

      Delete