Pages

Saturday, 20 August 2016

அகநானூறு Agananuru 188

செயலைத்தழை ஆடை


தலைவனுக்குக் குறியிடம் சொல்லும் தோழி 
மேகத்திடம் சொல்வது போல் சொல்கிறாள்.
1
பெருங்கடலில் நீரை முகந்துகொண்டு செல்லும் மேகக் கூட்டமே! வானம் இருளும்படி உலாவுகிறாய். போர் முரசம் போல முழங்குகிறாய். முறைமை தெரிந்து அறநெறி பிழையாமல் திறமையுடன் ஆளும் அரசனின் போர்க்களத்தில் திறமை மிக்க போர்வீரன் சுழற்றும் வாள் போல மின்னுகிறாய். முழக்கமும் மின்னலுமாக நாள்தோறும் சும்மா ஆரவாரம் செய்கிறாயா அல்லது மழை பொழிவாயா?
2
குறமகள் தினைப்புனம் காப்பாள். மலர்ந்த வேங்கை மலரைக் கட்டி அணிந்துகொண்டிருக்கும் தோழியர் ஆயத்தோடு மெல்ல மெல்ல நடந்தது தினைப்புனம் காப்பாள். தழலை, தட்டை கருவிகளில் ஒலியெழுப்பிப் பறவைகளை ஓட்டிக்கொண்டு காப்பாள். அவள் செயலை (அசோகு) தழையாடை அணிந்திருப்பாள். குறமகள் அப்படித் தினைப்புனம் காக்கும் பகுதியிலும் நீ மழை பொழிவாயா?

தலைவி தினைப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் வரலாம் என்பது குறிப்பு.


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி
1
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ,
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர் 5
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என
2
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி,
பொலிந்த ஆயமொடு காண் தக இயலி, 10
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய, மழையே!

இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.
வீரை வெளியன் தித்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

தழல்

தட்டை

8 comments:

  1. அற்புதமான விக்கங்கள்...
    தங்கள் சேவைக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள்

    ReplyDelete
    Replies
    1. அடியேன் எளிமை விரும்பி
      அன்பால் வெல்கிறீர்கள்
      வணக்கம்

      Delete
  2. மிகவும் அருமை ஐயா!

    ReplyDelete
  3. தமிழ் வாழ்க

    ReplyDelete
  4. Replies
    1. நல்லவர் தரும் அருள்

      Delete