Monday, 15 August 2016

அகநானூறு Agananuru 172

தோழி தலைவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.
1
யானை பிளிறும் நீர்வளம் மிக்க மலைக்காடு. அங்குத் தேன் கூடு. ஒலித்துக்கொண்டு இறங்கும் மலையருவி. யானை, தேனீ, அருவி ஆகியவற்றின் ஒலிகள் கல்லுக் குகைகளில் “இம்” என்று எதிரொலிக்கும். அது மூங்கில் அடர்ந்த மலைச்சாரல்.
2
அப் பகுதியில் வாழ்பவன் கானவன். அவன் இரும்பில் வடித்தெடுத்தது போன்ற வலிமை மிக்க கைகளைக் கொண்டவன். பூத்துக் கிடக்கும் மரா மரத்தில் இருந்துகொண்டு யானை முதுகில் அம்பைப் பாய்ச்சுவான். அதன் வெள்ளை நிறக் கொம்புகளை வெட்டி எடுத்துக்கொள்வான். அதனைத் தன் புல்லால் வேயப்பட்ட குடிசையின் கூரையில் செருகிக் காயவைப்பான்.
3
அவன் முற்றத்தில் முழவு போல் பழுத்திருக்கும் பலா இருக்கும்.  அதனைப் பிழிந்து மகிழ்ச்சியோடு உண்பான். சுற்றத்தாரோடு களித்திருப்பான். சந்தன மர விறகில் கறித் துண்டுகளைச் சுட்டுத் தின்பான். இப்படிப்பட்ட குன்ற நாட்டுத் தலைவன் நீ. குன்ற நாட! நீ அன்பில்லாதவனாக இருப்பாய் என்று முன்பு அறியாமல் போனேன்.
4
அறிந்திருந்தால், இவளை உன்னிடம் விட்டிருக்க மாட்டேன். உனக்கு இவளைத் தந்ததால்தானே இப்போது இவள் மணி போன்ற தன் மேனியின் அழகினை இழந்து பொன்னிறப் பசலை பாய்ந்து ஏங்கிக்கொண்டிருக்கிறாள்? இவளை இப்படி வாட விடாமல் திருமணம் செய்துகொள்.
 
தந்தம் அறுத்தல், இக்காலம்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி
1
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக்
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்;   5
2
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி,       10
3
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்,
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
4
அறியேன் யான்; அஃது அறிந்தனென் ஆயின்  15
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
மணி ஏர் மாண் நலம் சிதைய,
பொன் நேர் பசலை பாவின்று மன்னே!

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது.
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி