வெள்ளிவீதி போல
அவர் பொருளீட்டச் சென்ற பின்னர் நான் இங்கே
இருந்துகொண்டு என்ன செய்யப்போகிறேன்? நானும் அவருடன் செல்கிறேன், அவள் தோழியிடம் சொல்கிறாள்.
1
மலைச்சோலையில் பிடவம் பூவுடன் வேங்கைப் பூ மலர்ந்திருப்பதானது போலப் புலி தோற்றமளிக்கும். கட்டுச்சோற்று மூட்டையை அவிழ்த்து வைத்திருப்பது போல பெண்புலி பெரும்பாறை நிழலில் மூன்று குட்டிகள் போட்டுக்கொண்டு முடங்கிடக்கும். அந்தப் பெண்புலிக்குப் பசிக்கிறது என்று, இரையாகப் பிடித்து வர, கிளைத்த கொம்புகளை உடைய ஆண் உழைமானின் குரல் எங்காவது கேட்கிறதா என்று ஆண்புலி உற்றுக் கேட்கும். இப்படிப்பட்ட வழியில்,
2
வெள்ளிவீதி என்பவள் தன் கணவனைத் தேடிக்கொண்டு சென்றது போல் நானும் செல்ல இருக்கிறேன்.
3
அவர் சென்ற பின்னர் உண்ணமுடியாத வாட்டத்துடன் உயிர் சென்றுகொண்டிருக்கும் நிலையில், தோள் பண்டைய அழகினை இழந்து வாட, ஒவ்வொரு நாளும் பிரிந்திருப்பவரை நினைத்து வருந்திக்கொண்டு, இங்கே இருந்து என்ன செய்யப்போகிறேன்? வருத்தத்தைப் போக்க மருந்து என்ன இருக்கிறது?
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, 5
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
2
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, 10
3
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினை
இலனே!
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
ஒளவையார் பாடியது
கி.மு. காலத்துப் பாடல்

நீண்ட காலமாக தேடிவந்தேன் என் தேடலுக்கு நற் பாலன் கிடைத்து விட்டு வாழ்க வளமுடன்
ReplyDeleteஉவமை நலம்
Deleteஆண் புலி ஆண்மானைத் தேடுகிறது.
Deleteபெண்மானைப் பிடிக்காது.
பண்பு நலம்