![]() |
| கம்பர் |
ஏர் எழுபது
பாயிரமும், வாழ்த்தும்
நீங்கலாக
70 பாடல்கள் இந்த நூலில் உள்ளன.
இதனை இயற்றிய ஆசிரியர்
கம்ப நாடர்
கம்பராமாயணம் இயற்றிய
கம்பர் தம் இளமைக்காலத்தில் இதனைப் பாடியிருக்கலாம்.
அல்லது
இந்தக் கம்ப நாடர்
பிற்காலத்தவராக இருக்கலாம்
கம்பராமாயணம் போன்ற செறிவோ, திண்மொழியோ, குழப்பமான சொற்றொடர் அடுக்குப் பெருக்கமோ இதில் இல்லை
உழவுத் தொழிலின்
மேன்மையை இந்த நூல் போற்றுகிறது
பாடலுக்குத் தெரியவரும் வேறு படங்கள் வேறு வண்ணத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
அடியேன் மனைவி செங்கைச் செல்வி
இதனை அச்சாக்கி உதவினார்
பாயிரம்
கங்கை பெறுங் காராளர் கருவிஎழு பதும்உரைக்க
அங்கை பெறும் வளைத்தழும்பும் முலைத் தழும்பும்
அணிய, மலை
மங்கை பெறும் திருவுருவாய் வந்துறைந்தார்
தமை, வலஞ்செய்
கங்கை பெறும் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1
நிறைக்குரிய அந்தணர்கள் நெறிபரவ, மநுவிளங்க,
தறைக்குரிய காராளர் தமதுவரம்பு இனிதோங்க,
மறைக்குரிய பூமனையும், வண்டுளபத் தாமனையும்,
பிறைக்குரிய நெடுஞ்சடிலப் பெம்மானை யும்,
பணிவாம். 2
திங்களின்மும் மாரிபெய்யஞ், செகத்திலுயிர்
செழித்தோங்கக்,
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத், தொழுகுலத்தோர்
துங்கமக, மநுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்றன் நாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 3
ஈழமண்டல முதலென, உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை
வேந்தர்
தாழு மண்டலக்கும், செம்பியன் மரபினோர் தாமெலாம்
பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங், கனகமு மமணிகளும் வரம்பில்
காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டலம், இதற்கிணை யாம்எனச் சொல்லு மண்டலஞ்
சொல்வதற் கிலையே 4
முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத் துடைய
கொடி யுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயரு டையான்,
இடியுடைய வொலிகெழு நீர் எழுபத் தொன் பதுநாட்டுக்
குடியுடையான், சென்னி பிறர் என்னு டையார்
கூறீரே? 5
மந்திரம் அனைய திண்டோள் மணிமுடி வளவன், சேரன்,
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட,
அந்தணர் குலமும் எல்லா அறங்களும் விளங்க,
வந்த
இந்திரன் ஓலக் கம்போல் இருந்தது, பெரிய நாடே. 6
ஆழித் தேவர் கடலானார், அல்லாத் தேவர் அம்பலத்தார்
ஊழித் தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ?
வாழித் தேவர் திருமக்கள், வையம் புரக்கும்
பெருக்காளர்
மேழித் தேவர் பெருமைக்கு வேறு தேவர் கூறேனே! 7
தொழுங் குலத்திற் பிறந்தாலென், சுடர்முடிமன்
னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென், இவர்க்குப்பின்
வசியரெனுஞ்
செழுங் குலத்திற் பிறந்தாராய்ச் சிறப்புடையா
ராய் வாய்மை
உழுங் குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே
! 8
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனால் என்
அழுங்குழவிக் கன்புடைய தாயேபோல் அனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர், எளியரோ யாம்பகழ!
உழுங்கொழுவிற் கருவீறி உலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்! 8
வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும்,
நீதிவளம் படைத்துடைய நிதிவளத்துத் திருக்குலமும்,
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலம் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே. 9
வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும்,
நீதிவளந் தருமுறையான் நிலநிறையு நிதிவளனும்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோ தில்குலந் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே (பாயிரம் முடிந்தது) 9
ஏரெழுபது – பாடல்கள் - நூல்
சீர்மங்க லம்பொழியும், தெண்டிரைநீர்க் கடல்சூழ்ந்த
பார்மங்க லம்பொழியும், பல்லுயிருமஞ் செழித்தோங்கும்,
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய இனிதுழநாட் கொண்டிடினே.
நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந், தம்முடைய
சீர்விழாக் கொளவிளங்கும் நிருவிழாப் பெருக்காளர்,
ஏர்விழாக் கொளினன்றி, எறுழ்க்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கொளமாட்டார், போர்வேந்த ரானோரே.
குடையாளும் முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளும் இவைநான்கும் படைத்துடைய ரானாலென்,
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்அலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே 3
வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்,
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்,
ஊழிபே ரினும் பெயரா உரையுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 4
நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாளர் இலராலே தொல்லுலகம் நிலைபெறுமோ?
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி உளதாயின் உலகுநிலை குலையாதே! 5
6 நுகத்தடிச் சிறப்பு
ஆற்றாணி வேணியர்பால் அம்மையிருந்து அனைத்துலகும்
போற்றாணி யாம் கச்சிப் புறமெல்லாம் அறம்வளர்க்கச்
சேற்றாணிக் கரமொதுக்கும் செல்வரணி ஏர்க்காலின்
ஊற்றாணி உறுதியினால் உலகுறுதி யானதுவே. 6
வேறு பதிப்பு
உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற இருநிலத்தோர் வறுமையொடு வீழாமே
கரையேற்றும் நுகமன்றோ காராளர் உழுநுகமே! 6
வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோர் எல்லோர்க்கும்
தொளைத்ததொளை பசும்பொன்னின் அணிகிடக்கும்
துணைத்தல்லால்
திளைளைத்துவருஞ் செழும்பொன்னித் திருநாடர்
உழுநுகத்தில்
தொளைத்ததொளை போலுதவும் தொளையுளதோ சொல்லீரே! 7
ஓராணித் தேரினுக்கும், உலகங்கள் அனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ!
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக்கு ஒப்பதொரு சிறந்தாணி செப்பீரே! 8
நாட்டுகின்ற சோதிடத்தின் நாண்பொருத்தம் நாட்பொருத்தம்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிரல்ல; கடைப்புவியில்
தீட்டுப்புகழ்ப் பெருக்காளர் செழுநுகத்தோடு
உழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகள்மங் கலக்கயிறே! 9
தடுத்தநெடு வரையாலும் தடவரைகள் எட்டாலும்
உடுத்ததிரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?
எடுத்தபுகழ்ப் பெருக்காளர் எழுநுகத்தோடு
இணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதோ! 10
வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவார் எல்லாரும் உழுவார்தம் தலைக்கடைக்கே!
கோதைவேன் மன்னவர்தம் குடைவளமும் கொழுவளமே
ஆதலால் அவர் பெருமை யாருரைக்க வல்லாரே! 11
செழுவான மழைவாரித் திங்கடொறும் பொழிந்தாலும்,
கெழுவார நிலமடந்தை கீழ்நீர்கொண் டெழுந்தாலும்,
வழுவாத காவேரி வளநாடர் உழுங்கலப்பைக்
கொழுவாணி கொண்டன் றிக் குவலயஞ்சீர் நிரம்பாவே. 12
வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும்,
பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்கும் சிறுகோலே. 13
வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே?
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே?
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்தில், செருக்குமத
யானைவலி எவராலே? இவரெருதின் வலியாலே! 14
கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை,
விண்ணவரை அமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்;
மண்ணவரை அமுதூட்டி வானுலகம் காப்பதுவும்,
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவல் இடுகறையே! 15
ஊட்டுவார் பிறருளரோ? உலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ?
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொல்? இந்தக் கடல்சூழ்ந்த
வையகத்தே! 16
பார்பூட்டும் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டும் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டும் கொடைத் தடக்கைக் காவேரி வளநாடர்
ஏர்பூட்டின் அல்லதுமற்(று) இரவியும்தேர்
பூட்டானே! 17
கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கும் எனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்கும் திறன்நடக்கும் திருவறத்தின்
செயல்நடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே! 18
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாரும்
தொழுதுண்டு பின்செல்வர் என்றேயித் தொல்லுலகில்
எழுதுண்ட மறைசொன்னால் இவர்ஏவன் மள்ளர்க்கும்
பழுதுண்டோ? பார்வேந்தர் படைமன்னர் ஒப்பாரோ? 19
அலகிலா மறைவிளங்கும், அந்தணர்ஆ குதிவிளங்கும்
பலகலையாம் தொகைவிளங்கும், பாவலர்தம் பாவிளங்கும்,
மலர்குலாந் திருவிளங்கும், மழைவிளங்கும்,
மனுவிளங்கும்,
உலகெலாம் ஒளிவிளங்கும், உழவர் உழும்ஃ உழவாலே! 20
பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்(கு)
உழுதுசால் வதுகலப்பை உயர்வான(து) என்றக்கால்,
எழுதுசால் பெருங்கீர்த்தி ஏராளும் பெருக்காளர்,
உழுதசால் வழியன்றி உலகுவழி அறியாதே! 21
மட்டிருக்கும் திருமாதும், மகிழ்ந்திருக்கும்
புவிமாதும்,
முட்டிருக்கும் சயமாதும், முன்னிருப்பார்
முதுநிலத்து
விட்டிருக்கும் கலிதொலைத்த விறல்தடக்கை வேளாளர்,
கொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே! 22
மேடுவெட்டி வளப்படுத்தி மெய்வரம்பு நிலைநிறுத்திக்
கோடுவெட்டிக் காராளர் குவலயத்தைக் காத்திலரேல்,
பாடுவெட்டிக் குறும்படக்கப் படைவேந்தர் அவர்விளைத்த
காடுவெட்டிப் பகையறுத்துக் கலிகளைய மாட்டாரே. 23
எழுதொணா மறைவிளங்கும், இயல்இசைநா டகம்விளங்கும்,
பழுதிலா அறம்விளங்கும், பார்வேந்தர் முடிவிளங்கும்,
உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்கால்
மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்,
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ?
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே! 25
அடுத்திரக்காக் கொடைசீர்த்தித் தாளாளர் அணிவயலில்
எடுத்தெருக்கொண்(டு) எழில்வளர இசையாரேல்,
இவ்வுலகில்
தொடுத்திருக்கும் அறத்துறையும், தொழுமிருக்கும
கத்துறையும்,
படுத்திருக்கும் அவையல்லால் பரிந்திருக்க
மாட்டாவே! 26
அடுத்திறக்கிப் பெருங்கூடை அளவுபட வேஎருவை
எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தாம் இடையிடையே
கொணுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேல்
படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே! 27
வெறுப்பதெல்லாம் பொய்யினையே, வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெல்லாம் கலியினையே, உள்ளத்தால் வெள்ளத்தால்
செறுப்பதெல்லாம் புல்லினையே, செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெல்லாம் சேற்றினையே, வளம்படுத்தற் பொருட்டாலே!-27
வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறுங்
குரம்படிக்க மணிகொழிக்கும் குலப்பொன்னித்
திருநாடர்,
பரம்படிக்க உடைந்தளைந்த பழனச்சேற்(று) உரமன்றி
உரம்படிக்க பிறிதுண்டோ உண்டாயின் உரையீரே! 28
பத்திவிளைத்து இருந்தெய்வம் பணிவார்க்கும்,
தற்பரமாம்
முத்திவிளைத் திடும்ஞான முதல்வருக்கும்,
இன்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும், வல்லவர்க்கும்,
பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே. 29
மறைமயங்காது, அருள்விளங்கும் மதிமயங்காது,
திறல்வேந்தர்
இறைமயங்கா, மனுநெறியும் இனமயங்கா, யாவர்க்கும்
நிறைமயங்காது, ஒருநாளும் நிலைமயங்காது, உலகமெல்லாம்
முறைமயங்கா, அவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே. 30
ஏறுவளர்த் திடும்முகிலும் இசைவளர்க்கும்
எனுரைப்பின்
ஆறுவளர்த் திடுவது சென்(று) அலைகடலைத் தானன்றோ!
வேறுவளர்ப பனகிடப்ப வேளாளர் விளைவயலின்
நாறுவளர்த் திடிலன்றி ஞாலமுயிர் வளராதே! 31
வெறுத்தமீன் சனிபுகிலென், வெள்ளிதெற்கே யாயிடிலென்,
குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்,
மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்
பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே! 32
மாணிக்கம் முதலாய மணியழுத்தித் தொழில் சமைத்த
ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியும் முடியாமோ?
பேணிப்பைங் கோலமுடிப் பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்கும் திசைப் புறத்தும் செங்கோன்மை
செல்லாதே! 33
தென்னன்முடி சேரன்முடி தேங்குபொன்னி நாடன்முடி
கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கள்முடி
இன்னமுடி அன்றியும்மற்று எடுத்துரைத்த முடிகள்எல்லாம்
மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ. 34
வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலில்
செய்யின்முடி விளம்பாரேல் விளம்புவன சிலுளவோ?
மையறுமந் தணர்விளம்பார் மறைம னுமன் னவர்விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே. 35
மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்?
பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்?
செய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்
உலகத்தில் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்தின் பகடுழக்கும் அதுவுமொரு முளையாமோ?
உலகத்தில் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவருழச் சிலவர்நடும் அவையன்றோ திருமுனையே! 37
ஏராலே சேறாக்கி எருவாலே கருவாக்கி
நீராலே பைங்கூழை நிலைப்பிப்பார் தமையன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசிதீர்வார் அகலிடத்தில் பிறந்தோரே? 38
அந்தணர்க்கு வேதமுதல். அரசர்க்கு வெற்றிமுதல்,
முந்தியசீர் வசியருக்கு முதலுழவாம், மூதுலகில்
வந்தவுயிர் தமக்கெல்லாம் மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழ்க்கு முதலாம்அத் திருவாளர் செய்முதலே! 39
சீர்வளரும், மறைவளரும், திறல்வேந்தர் முடிவளரும்,
பேர்வளரும் வாணிபத்தும் பெருநிதியம் மிகவளரும்,
ஏர்வளரும், திருவளரும், இசைவளரும், கடல்சூழ்ந்த
பார்வளரும், காராளர் பயிர்வளரும் திறத்தாலே! 40
காற்றுமேல் வருகின்ற கார்விடினும், கடல்சுவறி,
யாற்றுநீர் அறவெள்ளி அரசனும்தெற் காயிடினும்,
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்தும்
காத்துமே உயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. 41
கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்,
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடம் சூட்டுவதும்,
தலையிட்ட பொருள்நான்கும் தலைநீட்டப் படுவதுவும்,
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே. 42
கெட்டாரைத் தாங்குதலால், கேடுபடாத் தொழிற்குலத்தோர்
ஒட்டாரென்(று) ஒருவரையும் வரையாத உயர்நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோங்கும் பசியகலப் பைங்கூழை
நட்டாரே வையமெல்லாம் நலந்திகழ நட்டாரே! 43
கார்தாங்கும் காவேரி ந்திதாங்கும் காராளர்
ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்?
பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்
நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே! 44
வளைகளையும், மணிகளையும், மலர்களையும், வரும்பலவின்
சுளைகளையும் கொடுகரைக்கே சொரிபொன்னித் திருநாடர்,
விளைகளையுள் செஞ்சாலி வேரூன்றிக் கோடுகொள்ளக்
களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே. 45
திருவடையும், திறலடையும், சீரடையும், செறிவடையும்,
உருவடையும், உயர்வடையும், உலகெலாம் உயர்ந்தோங்கும்,
தருவடையும் கொடையாளர் தண்வயலில் செஞ்சாலி
கருவடையில் பூதலத்தில் கலியடைய மாட்டாதே! 46
ஏற்றேறும் அரன்சிறப்புக்(கு)எழிலேறும் மகத்துஅழல்கள்
மாற்றேறும் அரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்
ஊற்றேறும் குலப்பொன்னி உறைநாடர் இடும்சாலி
ஈற்றேறும் போதுகலி ஈடேற மாட்டாதே. 47
முதிராத பருவத்தும், முற்றியநல் பருவத்தும்,
கதிராகி உயிர்வளர்ப்ப(து) இவர்வளர்க்கும்
கதிரன்றோ!
எதிராக வருகின்ற எரிகதிரும், குளிர்கதிரும்
கதிராகி உயிர்வளர்ப்ப(து) உண்டாயிற் காட்டீரே! 48
அலைவளையும், புவிவேந்தர் அங்கையில்தங் கியவீரச்
சிலைவளையும், மதன்கருப்புச் சிலைவளையும்,
கொடுங்கலியின்
தலைவளையும், காராளர் தண்வயலில் செஞ்சாலிக்
குலைவளையும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே! 49
அறங்காணும், புகழ்காணும், அருமறையின் ஆகமத்தின்
திறங்காணும், செயங்காணும், திருவளர்க்கும்
நிதிகாணும்,
மறங்காணும், கருங்கலியின் வலிதொலைத்த காராளர்
புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகுந்திடினே. 50
மாயனார் வடிவாளும், மகபதிவச் சிரவாளும்,
தாயனார் அரிவாளின் தகைமைபெறுந் தன்மையவேல்,
தூயனார் அவர்வழியோர் சுடரரிவாட் கிணையென்ன
வாயினாற் புகலுதும்யாம் மன்னரொரு வாளினையே. 51
தோட்டியல்பூங் குழற்பெரிய பிராட்டிக்கு ஈராழிச்சொல்
பாட்டியல்சீர் பெறவளித்த பரமருவப் புறமுன்னோர்
காட்டியநென் முளையறுத்தார் கிளையறுத்தார்
ஊட்டியறுத் தார்மரபோர் ஊட்டவறுத் தாருலகே. 52
அருவுண்ட பொற்கதிரை நெற்கதிர்நேர் ஆதுலர்க்குப்
பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழமைத்தே!
விரிவுண்ட கடற்படியும் மேகங்கள் மறுத்தாலும்,
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே! 53
கோடுவரம் பிடையுலவும் குலப்பொன்னித் திருநாடர்
நீடுபெரும் புகழ்வளரும் நிலமடந்தைத் திருமக்கள்
பீடுவரம் பிடைவயலில் பிறைவாளில் கடிகின்ற
சூடுவரம் பெறாதேல் சுருதிவரம்
பேறாதே! 54
சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்வதுவும்,
பேரான மநுநீதி பிறழாது விளங்குவதும்,
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்தும்
காராளர் விளைவயலிற் வளம்பண்ணும் பொருட்டாலே. 55
கடிசூட்டு மலர்வாளிக் காமனடல் சூடுவதும்,
கொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்,
முடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்
படிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே, 56
விளக்கம் 55-56
முருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ்
வுலகமெல்லாம்
தெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்,
வெருட்டின்மிகுங் கருங்கலியை வேரோடும் அகற்றுங்கோல்,
சுருட்டிமிகத் தடிந்துசெந்நெற் சூடுமி தித்
திடுங்கோலே. 57
காராளும் கரியினமும் பரியினமும் கைவகுத்துப்
போராளும் முடிவேந்தர் போர்க்கோலம் எந்நாளும்
சீராளும் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்
ஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே ! 58
விளக்கம் 57-58
பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடாது ஒருநாளும்
ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால்
தேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்
ஏர்வேந்தர் போர்க்களத்துள் இரப்பவரும் தோலாரே. 59
வளம்பாடும் குடைமன்னர் மதயானை படப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்தன்று!
தளம்பாடும் தாரகலத் தாளாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறப்புடைத்தே! 60
விளக்கம் 59-60
நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்க்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்
பாவலோர் இசைவல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோர் எல்லோரும் கையேற்கும் பொருட்டாலே! 61
எடுத்தபோர்க் களத்தரசர் இனைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் பயந்ததனால் பார்தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்தபோர் உழவளரும் இனைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே! 62
விற்பொலியும் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலி யுண்டாமாகின் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலிவுண் டாமுலகம் புகழ்ப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே. 63
தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்
மன்னுபெருங் களத்தினிடை மாருதத்தில் தூற்றிவிடும்
செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை எனக்குவித்தே
அந்நெல்லின் பொலிவாலே அவனியுயிர் வளர்ப்பாரே! 64
ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்தம் உயர்ந்துலகம் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. 65
வலியாற்று மன்னவர்க்கும், மறையவர்க்கும்,
தேவருக்கும்,
ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை,
கலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய
பொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோபுகலீரே! 66
சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல்,
செகதலத்துக்
கூற்றங்கொள் மனுநெறியை உண்டாக்கி வளர்க்குங்கோல்
ஏற்றங்கொள் வயவேந்தர்க்கு எப்பொருளும் கொடுத்துலகம்
போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே. 67
திருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத்தோட்டுப் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற
வரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித்
திருநாடர்
விரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே! 68
தளர்ந்துயிர் அத்தனைக்கும், தாளாளர், எண்டிசையும்,
வளர்ந்தபுகழ் பெருக்காளர், வலிமையார் உரைப்பாரே?
அளந்துலகம் அனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைகள் உண்பாரேல். 69
அரியாதனத்தின் மேலிருந்தே அம்பொற்குடைக்கீழ்
அரசியற்றும்
பெரியார்பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்
சொரியாநிற்பச் சிலர்அளந்து தூற்றாநிற்பச்
சிலர் அளந்து
புரியாநிற்பப் பெறும்பேற்றுக்(கு) அதுநேரொக்கப்
போதாதே! 70
பார்வாழி! நான்மறைநூற் பருணிதரா குதிவாழி!
கார்வாழி! வளவர்பிரான் காவேரி நதிவாழி!
பேர்வாழி! பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி!
ஏர்வாழி! இசைவாழி! எழுபத்தொன் பதுநாடே! - வாழ்த்து
ஏர் எழுபது முற்றும்

இன்றுதான் இந்த ஏர் எழுபது பற்றி, ஜூம் கூட்டத்தில் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள் இந்த ஏர் எழுபது பற்றி சிறிது நேரம் முன்பு பேசியத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteமகிழ்ச்சி
Deleteதங்கள் குறிப்பு என்னைச் செப்பம் செய்யத் தூண்டியது
இப்போது பாருங்கள்
வெள்ளாளர்களின் வெள்ளாமை பற்றிய கம்பரின் கவி ஆற்றலே ஏர் எழுபது
ReplyDeleteவேளாளரே வெள்ளாளர் என்கிறீர்கள்.
Deleteவேளாண்மையை ‘வெள்ளாமை’ என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம்
வயலில் என்ன வெள்ளாமை
Deleteவயலில் என்ன பயிரிட்டிருக்கிறாய் - என்பதை
இப்படித்தான் கேட்பார்கள்
ayya pallar vellalar vayalil velai seyum ilisathi kool atkal thane.avargaluku vellalar eyar kodupathu sariya
Deleteஆங்கில எழுத்துக்களில் தமிழை எழுதி அழவைக்கிறீர்கள்.
Delete