Pages

Friday, 29 April 2016

நற்றிணை Natrinai 103

மாயா வேட்டம்


பொருள் தேடச் சென்ற தலைவன் காட்டு வழியில் ஆண்-செந்நாய் ஒன்று தன் பெண்-செந்நாய் குட்டிக்கு ஊட்டப் பால் இல்லாமல் வருந்திக்கொண்டிருப்பதைப் பார்த்து, தன் நெஞ்சைக் கேட்கிறான்.

நெஞ்சே! 
எது நல்லது என்று நீயே தெரிந்து சொல். 

ஈர்க்கில் சிறிய இலைகளை உடைய பெரிய வேப்ப-மரத்தை வீழ்த்தி உண்ட ஆண்யானை மதமும், சினமும் கொண்டு, கடந்து சென்றுவிட்ட காடு இது. 

இங்கே பெண்-செந்நாய் நீர் அல்லாத ஈரம் அதாவது குட்டி போட்ட ஈரம் பட்டுக் கிடக்கிறது. பசியோடு கிடக்கிறது. பால் இல்லாத வெற்று முலை கொண்ட தன் வயிற்றை நிலத்தில் கிடத்திக்கொண்டு கிடக்கிறது. 

அதனைப் பார்த்த அதன் கணவன்-செந்நாய் மாயமாக வேட்டைக்குச் செல்கிறது. வேட்டை கிடைக்கவில்லை. 

தன் பிணாவை நினைத்துக்கொண்டு பொய்மை அறியாத தன் நெஞ்சில் வருத்தம் கொள்கிறது. 

இப்படிப்பட்ட புதுமை அனுபவம் உள்ள கொடிய காட்டு வழியில் நாம் வருந்திக்கொண்டிருக்கிறோம். 

மேலும் பொருளுக்காக முயலலாமா, அல்லது திரும்பலாமா, நெஞ்சே, நீதான் தெரிந்துகொண்டு சொல்லவேண்டும்.
 


(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 103 பாலை

ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் 
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று 
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் 
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து 
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் 
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் 
மாயா வேட்டம் போகிய கணவன் 
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் 
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே 
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் 
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே

பொருள்வயிற் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக் கழறியது
மருதன் இள நாகனார் பாடியது

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்


ஆண் செந்நாய்
செந்நாய் வேட்டை

No comments:

Post a Comment