Thursday, 31 March 2016

இப்பியீன்று இட்ட முத்தொள்ளாயிரம் Muttollayiram 72

பாண்டியன் | கொற்கை மாறன்

கண் முத்து
சங்குச் சிப்பிகள் பெற்றெடுத்த முத்துகள் கொற்கையில் மட்டுமா உதிர்கின்றன? கொற்கையை ஆளும் மாறனின், குருதி தோய்ந்த வேலை உடைய மாறனின், குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பினை அடையக் கருதிய பெண்கள் கண்களிலிருந்தும் உதிர்கின்றன. 

பாடல் 72

இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது – கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும். – 72

இப்பி ஈன்று இட்ட எறி கதிர் நித்திலம் கொற்கையே அல்ல படுவது கொற்கைக் குருதி வேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


கைய தவன்கடலுள் முத்தொள்ளாயிரம் Muttollayiram 71

பாண்டியன் | மாறன் பொதியில்

முத்தாரம்
கடல் கைக்கும்படிக் கடலில் படுத்துத் தவம் செய்துகொண்டிருப்பதால் திருமால்தான் மாறன் என்கிறேன். திருமால் கடல் சங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறான். நான் மாறன் கடலில் விளைந்த சங்கில் அறுத்த வளையல்கைக் கையில் அணிந்துகொண்டிருக்கிஅறேன். மாறன் கடல் முத்தை ஆரமாக அணிந்துகொண்டிருக்கிறேன். மாறனின் பெதியமலைச் சந்தனத்தைப் பூசிக்கொண்டிருக்குறேன். சங்கம், முத்து, சந்தனம் எல்லாமே அவனுடையவை. அப்படி இருக்கும்போது என் தோள் எதனைப் பெறாமல் வாடுகிறது? வியப்பாக உள்ளது.

பாடல் 71

கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால்
என்பெறா வாடும் என் தோள். – 71

கையது அவன் கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்ய சங்கு ஈன்ற செழு முத்தால் மெய்யதுவும் மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனமால் என் பெறா வாடும் என் தோள்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

அறிவரார் யாமொருநாள் முத்தொள்ளாயிரம் Muttollayiram 70

பாண்டியன் | மதுரையார் கோமான்

கடந்த கால மதுரை
மோதித் திரும்பும் வைகை ஆற்று நீர்த்திரையை மாடி வீடுகள் உரிஞ்சும் ஊர் மதுரை. அவன் அந்த மதுரை மக்களின் கோமான். என்றேனும் ஒருநாள் நான் அவனோடு சேர்ந்து கூடி இருப்போன். இப்போது ஊரார் என் வாயை அடைத்து வைக்கின்றனர். நான் அவனோடு கூடியிருப்பதை அன்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். இப்போது என்னை வீட்டுக்குள்ளே அடைத்துச் செறித்து வைப்பவர்கள் அப்போது தெரிந்துகொள்வர். அப்போது அவர்கள் தலைமேல் நான் நடப்பேன். பெண்களே! இதனைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பாடல் 70

அறிவரார் யாமொருநாட் பெண்டிரே மாகச்
செறிவார் தலைமே னடந்து – மறிதிரை
மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட வொருநாட் பெற. – 70

அறிவர் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆகச் செறிவார் தலைமேல் நடந்து மறி திரை மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொரு நாள் பெற.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

கார்நறு நீலங் கடிக்கயத்து முத்தொள்ளாயிரம் Muttollayiram 69

பாண்டியன் | வா மான் வழுதி

வேல் போல் நீல மலர் மொட்டு
கரிய நல்ல நீலமலர் மணக்கும் குளத்தில் நாள்தோறும் பூத்துநின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் போலும் வழுதி கழுத்தில் மாலை ஆகும் பேறு பெற்றுள்ளது. கூர்மையான நுனியை உடைய வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டு சிரிப்பொலி கேட்க மொய்க்கும் பூமாலை, வழுதி மாலை.

பாடல் 69

கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம். – 69

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர் நுனை வேலி வண்டு இருக்க நக்க தார் வா மான் வழுதியால் கொண்டிருக்கப் பெற்ற குணம்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


ஓராற்றல் என்கண் முத்தொள்ளாயிரம் Muttollayiram 68

பாண்டியன் | கூர் ஆர் வேல் மாறன்

கைப்பற்றல்
கை பற்றல்
அவனை எண்ணிக்கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு வகையில் என் இமைகள் மூடிக்கொண்டன. அப்போதே கூரிய வேலை உடைய மாறன் அருகில் வந்து என் கைகளைப் பற்றினான். கனவை நனவு என்று எண்ணி எழுந்திருந்தேன். அவன் இல்லை. கைப்பற்றிய கனவு இன்பமும் இல்லாமல் போய்விட்டது. எனக்கு நலவினைப்பேறு ஒன்றுகூட இல்லை.

பாடல் 68

ஓராற்றல் என்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற – வாரா
நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன்
கனவும் இழந்திருந்த வாறு. – 68

ஓராற்றல் என்கண் இமை பொருந்த அந் நிலையே கூர் ஆர் வேல் மாறன் என் கைப் பற்ற வாரா நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் கனவும் இழந்து இருந்த ஆறு.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


தளையவிழும் பூங்கோதைத் முத்தொள்ளாயிரம் Muttollayiram 67

பாண்டியன் | வாள் மாறன்

வாள் வீரன்
மலரும் பூமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து நிற்கும் தாய்மார்களே! “விடிந்துவிட்டது, கண்ணைத் திற” என்கிறீர்கள். என் உயிரே போனாலும் கண்ணைத் திறக்கமாட்டேன். மாறன் என் வளையல்களைக் கழன்று விழும்படிச் செய்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவன் கொடுமைக்காரன். வாளைக் கையில் உடையவன். கருநிற யானைமேல் வந்தான். வந்தவன் இரவில் என் கண்ணுக்குள் அகப்பட்டுக்கொண்டான். கண்ணுக்குள்ளே இருக்கிறான். திறந்தால் ஓடிவிடுவான். மால் = கருமை

பாடல் 67

தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி
களையினும்என் கண்திறந்து காட்டேன் – வளைகொடுப்போம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்
தென்கண் புகுந்தான் இரா. – 67

தளை அவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும் என் கண் திறந்து காட்டேன் வளை கொடுப்போம் வன் கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


கனவை நனவென்று முத்தொள்ளாயிரம் Muttollayiram 66

பாண்டியன் | மா மாறன்

கனவு
நனவு
கனவை நனவு என்று எண்ணிக்கொண்டு அவனைக் கொட்டைக் கண்ணோடு விழித்துக்கொண்டு பார்க்கிறேன். அப்போது உறங்கிக்கொண்டிருக்கும் என் கண்கள் அவனைப் பார்க்கவில்லை. நனவில் அவன் உலா வருகிறான். அப்போது என் நாணத்தால் அவனைப் பார்க்க முடியவில்லை. என் கண்ணுக்கே இந்த நிலைமை ஆனால் அவனது அருளைப் பெறுவது எப்போது?

பாடல் 66

கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம்
நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய்
என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன்
தன்கண் அருள்பெறுமோ தான். – 66

கனவை நனவு என்று எதிர் விழிக்கும் காணூம் நனவில் எதிர் விழிக்க நாணும் புனையிழாய் என் கண் இவை ஆனால் எவ்வாறே மா மாறன் தன் கண் அருள் பெறுமோ தான்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


களியானைத் தென்னன் முத்தொள்ளாயிரம் Muttollayiram 65

பாண்டியன் | தென்னன்

செங்காந்தள் மலர்
இந்த மலர் போல் மகளிர் கை விரல்கள் 
களிக்கும் யானைமேல் உலா வருபவன் தென்னன். அவன் என் கனவில் வந்தான். அவன் எனக்கு இன்பம் எதுவும் தரவில்லை. இன்பம் தருபவன் போல இருந்தான். உடனே செங்காந்தள் பூப் போன்ற என் விரல்களால் அவனைத் தடவினேன். உண்மையில் படுக்கையைத் தடவிக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர என் படுக்கையில் வேறு யாரும் இல்லை.

பாடல் 65

களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே
செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன்
என்காண்பேன் என் அலால் யான். – 65

களி யானைத் தென்னன் கனவின் வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் என் காண்பேன் என் அலால் யான்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


புகுவார்க் கிடங்கொடா முத்தொள்ளாயிரம் Muttollayiram 64

பாண்டியன் | கூடலார் கோமான்

அம்பு பட்ட மான்
அவன் கூடலார் கோமான். அவன் பின் என் நெஞ்சு சென்றது. என் நெஞ்சுக்குள்ளே புகுவார் யாருக்கும் அது இடம் கொடுக்கவில்லை. வழியில் யார் சென்றாலும் நெஞ்சம் தளரவில்லை. என் நெஞ்சைப் பார்த்து எள்ளி நகையாடுபவர்களைக் கண்டால் நாணி மறைந்துகொள்கிறது. இடிந்து விழுந்துகொண்டிருக்கும் ஆற்றங்கரையில் அம்பு பட்ட மான் நிற்பது போல என் நெஞ்சு அவனிடம் நிற்கிறது.

பாடல் 64

புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா
நகுவாரை நாணி மறையா – இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றவென் நெஞ்சு. - 64

புகுவார்க்கு இடம் கொடா போதுவார்க்கு ஒல்கா நகுவாரை நாணி மறையா இகு கரையின் ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் கோமான் பின் சென்ற என் நெஞ்சு.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

மன்னுயிர் காதல் முத்தொள்ளாயிரம் Muttollayiram 63


பாண்டியன் | செங்கோல் செழியன்

நெடுஞ்செழியன் கண்ணகி 
செழியன் நிலைபெற்ற உயிரினம் எல்லாவற்றின் மீதும் காதலன்பு கொண்டவன். அந்த உயிரினங்களில் என் உயிரும் ஒன்றாக எண்ணப்படுமாயின், என்மேல் செங்கோல் ஆட்சி செய்யவில்லையே! இதுவா அவன் சீர்மை?
  • பச்சைமண் பாண்டத்தில் பாலை ஊற்றிவைத்தால் அதில் உள்ள நீர் கசிந்து ஒழுகுகிறது. பால் கசிந்து ஒழுகவில்லை. இது என்ன விந்தை!
  • அவன் நீர்மை எல்லா உயிரினங்கள் மாட்டும் பாய்கிறது. அவன் பாலுணர்வு அப்படிப் பாயவில்லையே.
பாடல் 63

மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு. – 63

மன் உயிர் காதல் தனது ஆன அவ் உயிருள் என் உயிரும் எண்ணப்படும் ஆயின் என் உயிர்க்கே சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ நீர் ஒழுகப் பால் ஒழுகாவாறு.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

தானேல் தனிக்குடை முத்தொள்ளாயிரம் Muttollayiram 62

பாண்டியன் | மாறன்,

கொற்றவையின்
வெண்கொற்றக் குடை
மாறன் தான், தன் ஒப்புயர்வற்ற வெண்கொற்றக் குடையால் குடிமக்களுக்கு நிழல் தருபவன். வானுலகைத் தாங்கும் வையகத்தைக் காப்பவன். அவன் அப்படி. யானோ எளியவள். அதிலும் ஒரு பெண். அளி தந்து காப்பாற்றப்பட வேண்டியவள். இந்த உண்மையை அன்று என்று சொல்பவர் ஆர்? அப்படி இருக்க அவன் எனக்கு அளி செய்து காப்பாறவில்லையே!.

பாடல் 62

தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால் – யானோ
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர். – 62

தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ எளியேன் ஓர் பெண் பாலேன் ஈர்ம் தண் தார் மாறன் அளியானேல் அன்று என்பார் ஆர்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


வழுவில்எம் வீதியுள் முத்தொள்ளாயிரம் Muttollayiram 61

பாண்டியன் | மாறன், கொற்கையார் காவலன்

தோள் நலம் | தோள் வளம் | தோள் செழுமை | தோள் அழகு
மாறன் குறையில்லாத என் வீதியில் உலா வந்தான். அப்போது நான் அவனைத் தொழுதேன். அவன் என் தோள்-அழகை வாங்கிக்கொண்டான். திறையாக வாங்கிக்கொண்டான். நான் அவன் கொற்கை நகரில் வாழும் அவனது குடிமகள். எனக்குக் காவலன் அவன்தான். அவனே இந்தக் கொடுமையைச் செய்தால் நான் யாரிடம் சென்று முறையிட்டுக்கொள்வேன்?

பாடல் 61

வழுவில்எம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் – இமிழ்திரைக்
கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால்
யார்க்கிடுகோ பூசல் இனி. – 61

வழு இல் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள் நலமும் கொண்டான் இமிழ் திரைக் கார்க் கடல் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கு இடுகோ பூசல் இனி.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

களியானைத் தென்னன் முத்தொள்ளாயிரம் Muttollayiram 60

பாண்டியன் | தென்னன் இளங்கோ

பண்டைக் காலத் தமிழ் மகளிர்
மேனி நிறம்
களிப்புக் கொண்ட யானைமேல் வருபவன் தென்னன். அவன் இளையவன், எளிதாக வென்றுவிடலாம் என்று ஏளனமாகப் பேசிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தன் நாட்டை இழந்தனர். அது சரி. நான் தென்னனைத் தொழுதேன். ஆனால் என் மாந்தளிர் போன்ற மேனி அழகை இழந்துவிட்டேனே! இது சரியா?

பாடல் 60

களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க – அணியாகங்
கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம். – 60

களி யானைத் தென்னன் இளங்கோ என்று எள்ளிப் பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் கை தொழுதேனும் இழக்கோ நறு மாவின் கொய் தளிர் அன்ன நிறம்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


கோட்டெங்கு சூழ்கூடல் முத்தொள்ளாயிரம் Muttollayiram 59

பாண்டியன் | கூடற்கோமான்

குறும்பூழ்ப் பறவை
கொழுத்த தென்னைமரம் சூழ்ந்திருக்கும் ஊர் கூடல் நகரம். அவன் இந்தக் கூடல் அரசன். அவனை விரும்பி என் நெஞ்சு சென்றுவிட்டது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறும் உடம்புக் கூட்டுக்குக் காவல் போட்டிருக்கிறாள்.

  • குறும்பூழ் = காடை என்னும் பறவை.
  • காடை பிடிக்கும் வேடன் வலையை விரித்து வைப்பான். அதன் அருகில் தான் பழக்கி வைத்திருக்கும் பெண்-காடையைப் பறக்க விடுவான். அது ஆண்-காடையை அழைத்துவந்து கூட்டில் விழச்செய்யும். அன்னை அப்படிச் செய்கிறாளே!

பாடல் 59

கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள். – 59

கோள் தெங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என வேட்டு அங்குச் சென்ற எவன் நெஞ்சு அறியாள் கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை வெறுங்கூடு காவல் கொண்டாள்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

வளையவாய் நீண்டதோள் முத்தொள்ளாயிரம் Muttollayiram 58

பாண்டியன் | மாறன்

இப்படி ஒரு மாலை
அணிந்துகொண்டு
மாறன் வருகிறான்
வளையல் அணிந்த நீண்ட தோளும், வாள் போன்ற கண்ணும் கொண்ட தோழியே! அன்னை இளையவளா? மூத்தவளா? மூத்தவளாக இருந்தும் இளையவளாக இருக்கிறாளே! சிறுபிள்ளைத் தனமாய் நடந்துகொள்கிறாளே! மாறன் உலா வருவதைக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்கிறாளே. பூக்கும் மலர்மாலை அணிந்துகொண்டு, பகைவரைக் கைப்பற்றிய படையோடு, வீரம் வெளிப்படும் வேல் ஏந்திய கோலத்துடன் வருகிறானே. அவன் மாலையையாவது, படையையாவது, வேலையாவது நான் பார்க்கக்கூடாதா?

பாடல் 58

வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ – தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கல்என் பாள். – 58

வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ தளையவிழ் தார் மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல் என்பாள்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


காப்படங்கென் றன்னை முத்தொள்ளாயிரம் Muttollayiram 57

பாண்டியன் | கடுங்கோன்

கதவுக் கண்ணில் பார்த்தல் | இக்காலம்
கதவுக் கண் | இக்காலம்
கடுங்கோன் உலா வந்தான். அவனை நான் காணக்கூடாது என்று, “உன்னைக் காப்பாற்றிக்கொண்டு அடங்கு” என்று சொல்லி அன்னை என்னை இல்லத்தில் செறிவாக அடைத்துவைத்தாள். உள்ளேயும் ஓடியாட முடியாமல் கட்டியும் போட்டாள். ஆனால் கதவிலே முன்பே துளை ஒன்று போட்டுவைத்திருந்தார்கள். (அது வெளியே இருப்பவர் யார் என்று பார்க்க உதவும் கதவுக்கண்.) அது அவன் நல்லழகையெல்லாம் காணும் வகையில் அமைந்திருந்தது. இப்படிக் கதவுக்கண் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களே, அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். – அவள் கூறுகிறாள். | கடுங்கோ = சேரன் | கடுங்கோன் = பாண்டியன்.

பாடல் 57

காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து
யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க்
கென்னைகொல் கைம்மா றினி. – 57

காப்பு அடங்கு என்று அன்னை கடி மனையில் செறித்து யாப்பு அடங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நல் நலம் காணக் கதவம் துளை தொட்டார்க்கு என்னைகொல் கைம்மாறு இனி.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

Wednesday, 30 March 2016

அயிற்கதவம் பாய்ந்துழக்கி முத்தொள்ளாயிரம் Muttollayiram 56

சோழன் | கிள்ளி

நாவாய் 
கிள்ளியின் யானை கடலில் செல்லும் நாவாய்க் கப்பல் போலத் தோன்றுகிறது. எப்படி? நாவாய் கடலில் பாயும். களிறு வேல் தாங்கிய கோட்டைக் கதவுகளின் மீது பாய்ந்து அழிக்கிறது. நாவாய் பாய்மரம் கொண்டிருக்கும். களிறு கோட்டைக் கதவைப் பெயர்த்துத் தூக்கிக் கொம்பில் வைத்துக்கொண்டு வருகிறது. அதனால் களிறு கப்பல் போல் தோன்றுகிறது.

பாடல் 56

அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள்
பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சினவேல் கிள்ளி களிறு.  56

அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனிக் கடலுள் பாய்ந்து ஓய்ந்த நாவாய் போல் தோன்றுமே எங்கோமான் காய் சின வேல் கிள்ளி களிறு. 
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


இரியல் மகளிர் முத்தொள்ளாயிரம் Muttollayiram 55

சோழன் | செம்பியன்


ஊமம்
கோட்டான்
ஆந்தை
செம்பியனின் பெயரைப் பாராட்டாவர் நாட்டில் உறக்கம். வீட்டை விட்டு ஓடிப் பிழைத்திருக்கும் மகளிர் உதிர்ந்து கிடக்கும் இலைச் சறுகுகளில் குழந்தைகளைப் பெற்றனர். நள்ளிரவில் கோட்டான் அந்தக் குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடியது. இப்படி அவலநிலை.

பாடல் 55

இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற
வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில்
ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன்
நாமம்பா ராட்டாதார் நாடு. – 55

இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற வரி இளம் செங்கால் குழவி அரை இரவில் ஊமம் தாராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம் பாராட்டாதார் நாடு. – 55
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


முடித்தலை வெள்ளோட்டு முத்தொள்ளாயிரம் Muttollayiram 54

சோழன் | செம்பியன் சேஎய் | செம்பியனாகிய முருகன்

கார்த்திகை விளக்கீடு
பாடல் | போர்க்களத்தில் பேய் வைத்த விளக்கு 
செம்பியன் போரிட்ட களத்தில் பேய் விளக்கு வைத்திருந்தது. மன்னரின் தலைமண்டை விளக்கின் ஓடு. அவர்களின் மூளை நெய். அவர்களின் குடல் திரி. இப்படிப் பேய்கள் விளக்கு வைத்து (கார்த்திகை) விழாக் கொண்டாடின.

பாடல் 54

முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மாட்டி – எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம். - 54

முடித்தலை வெள்ளோட்டு மூளை நெய்யாகத் தடித்த குடர் திரியா மாட்டி எடுத்து எடுத்துப் பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம்.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

பாற்றினம் ஆர்ப்ப முத்தொள்ளாயிரம் Muttollayiram 53

சோழன் | இலங்கு இலை வேல் கிள்ளி

போரில் யானை
இலை உருவில் ஒளிறும் வேலேந்திய கிள்ளியின் களிறு போர்க்களத்தில் பெருமித நடை போட்டுக்கொண்டு வரும். அப்போது புலால் உண்ணும் பறவைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும். பருந்துகள் அந்த ஆண்யானையைப் பின்தொடரும். நரிகள் நாலாப்பக்கமும் ஓடித் திரியும். அணிகலன்களைப் பெருமையாக ஆட்டிக்கொண்டு பேய்மகளிர் ஆடுவர். காரணம் எங்கும் பிணம். பிணங்களுக்கு இடையே அந்தக் களிறு வரும்.

பாடல் 53

பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கிலைவேற் கிள்ளி களிறு. – 53

பாறு இனம் ஆர்ப்பப் பருந்து வழிப் படர நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற அலங்கல் அம் பேய் மகளிர் ஆட வருமே இலங்கு இலை வேல் கிள்ளி களிறு.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

கச்சி ஒருகால் முத்தொள்ளாயிரம் Muttollayiram 52

சோழன் | கோழியர் கோக் கிள்ளி

உஞ்சை மாநகரம் 
கிள்ளி அரசன், கோழி என்னும் உறையூர் மக்களின் தலைவன். அவன் போரிட்டபோது அதன் நான்கு கால்களும் நான்கு இடங்களை மிதித்துக்கொண்டிருந்தது. உறையூர், காஞ்சிபுரம், உஞ்சை (உஜ்ஜயினி), ஈழம் (இலங்கை) ஆகியவை அந்த ஊர்கள்.

பாடல் 52

கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு. – 52

கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப் பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே நம் கோழியர் கோக் கிள்ளி களிறு.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


கொடிமதில் பாய்ந்திற்ற முத்தொள்ளாயிரம் Muttollayiram 51

சோழன் | கல் ஆர் தோள் கிள்ளி

போரில் பகைவன் காலைக் கிழிக்கும் யானை
பாடல் | முடியை இடறும் யானை
கல்மலை போன்ற தோள் கொண்டவன் கிள்ளி. அவனது ஊர்தி ஆண்யானை. அது அவனது பறைவரின் கோட்டை மதில்களைப் பாய்ந்து இடித்தது. அதனால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. போரில் விழுந்த மன்னர்களின் தலைமுடியை (கிரீடத்தை) இடறி அதன் கால்நகங்கள் தேய்ந்து போயின. இவற்றைத் தன் பெண்யானைக்குக் காட்டுவதற்கு நாணிக் கட்டுத்தறியின் புறக்கடையிலேயை அந்த ஆண்யானை தயங்கிக்கொண்டு நின்றது. 

பாடல் 51

கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு. – 51

கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் முடி இடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல் ஆர் தோள் கிள்ளி களிறு.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

நின்றீமின் மன்னீர் முத்தொள்ளாயிரம் Muttollayiram 50

சோழன் | உறந்தையார் கோ

முனிவரை வணங்கல்
இப்படி மன்னனை மன்னன் வணங்கினான்
மன்னர்களே! சற்றே நில்லுங்கள். நேற்று, திறை தந்த மன்னர்கள் வணங்கியபோது அவர்களின் முடி தாக்கி உறையூர் மன்னன் காலடி புண்ணாகிக் கிடக்கிறது. அதனால் இன்று அவன் காட்சி தரவில்லை. அவன் பெருமையும் ஈரமும் கொண்டவன்.

பாடல் 50

நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ. – 50

நின்றீமின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் திருந்து அடி புண்ணாகிச் செவ்வி இலனே பெரும் தண் உறந்தையார் கோ.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


அந்தணர் ஆவொடு முத்தொள்ளாயிரம் Muttollayiram 49

சோழன் | கிள்ளிக் குடை

சிலந்தி வலை
கிள்ளி இரேவதி நாளில் பிறந்தான். அவனுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம். அன்று அந்தணர்கள் பசு, பொன் ஆகியவற்றைத் தானமாகப் பெற்றனர். நாவண்மை உடைய பாவலர் மலை போல் உயர்ந்த களிறு வழங்கப்பபட்டு அதில் ஊர்ந்தனர். ஆனால் சிலந்திப் பூச்சி மட்டும் தன் கூட்டை இழந்தது. அது ஏன்? இது முறை ஆகுமா?
(பொங்கல் நாள் அன்று பழம்பொருள்களைத் துடைத்துத் தூய்மை செய்வது போல் மன்னன் பிறந்த நாளிலும் அரண்மனை ஒட்டடை துடைத்துத் தூய்மை செய்யப்பட்டது. அப்போது சிலந்திப் பூச்சி தன் கூட்டை இழந்தது) 
பிறந்த நாளில் கிள்ளி உலா வந்தான். அவனைக் கண்ட சிலம்பி என்னும் பெண் மட்டும் தன் கூடாகிய உடல் நலத்தை இழந்தாள். இதுவா அவன் தரும் பிறந்தநாள் கொடை? – அவள் வினா.

பாடல் 49

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் – எந்தை
இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு. – 49

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ சிலம்பி தன் கூடு இழந்தவாறு.

முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

மந்தரங் காம்பாய் முத்தொள்ளாயிரம் Muttollayiram 48

சோழன் | கிள்ளிக் குடை

இது மயிலை கற்பகாம்பாள் கோயில் குடை
இது போன்றது மன்னனின்
வெண்கொற்றக் குடை
இதன் மேல்-கட்டி துணியால் அமைந்துள்ளது
மன்னன் குடையில் நிழல் தரும் கட்டி
பனை ஓலையால் செய்யப்பட்டிருக்கும்
கிள்ளியின் வெண்கொற்றக் குடைக்கு மந்தர-மலை காம்பு. நீலநிற வானம் குடையில் விரிந்திருக்கும் ஓலை. வானத்து நிலா அந்தக் குடையின் உள்முகட்டில் இருக்கும் நெற்றிப்பொட்டு. இப்படி இருந்துகொண்டு உலகம் முழுவதற்கும் நிழல் தந்து அந்தக் குடை காப்பாற்றுகிறது. அது சரி. என்னை மட்டும் ஏங்கவைக்கிறது. இது கொடுமை.

பாடல் 48

மந்தரங் காம்பாய் மணிவிசும் போலையாத்
திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை. 48

மந்தரம் காம்பாய் மணி விசும்பு ஓலையாத் திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும் வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. 


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி