Wednesday, 24 February 2016

பதிற்றுப்பத்து PatitrupPattu 38

சேரல் மன்னனின் கொடைச்சிறப்பு இப் பாடலில் முன்னிலைப்படுத்திக் கூறப்படுகிறது. 
வாணுதல் கணவன்
 • செல்வம் படைத்தவராக உலகில் வாழ்பவர்கள் பலர். அவர்களில் உன் புகழ் மட்டும் மேம்பட்டு விளங்குகிறது. 
 • வளம் இல்லாமல் செடிகொடிகள் மண்டி மயங்கிக் கிடக்கும் நிலத்தை விளையும் நிலமாகத் திருத்தியவன் நீ. 
 • உன்னைக் ‘களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்’ எனப் போற்றுகிறோம். 
 • கோட்டையின் முகப்பு அழியும்படி தோட்டி நகர்மீது (தொட்டபெட்டா, ஒரு காலத்தில் நள்ளி அரசன் ஆண்டது) நீ படையை ஏவினாய். அந்தக் கோட்டையை வளைப்பூண் அணிந்த உன் யானை கைப்பற்றியது. அந்த யானை, சிவந்த பிடரிமயிர் கொண்ட குதிரை ஆகியவற்றை நீ கொடையாக வழங்கினாய். 
 • நீ அணிந்திருக்கும் களங்காய்க் கண்ணி நார்முடி வேலைப்பாடுகள் (செயல் அமை கண்ணி) கொண்டது. 
 • பரிசில் வேண்டி வருபவர்களுக்குச் செல்வமாகக் கிடப்பவன் நீ. 
 • உன் அவைக்களத்தில் எப்போதும் யாழிசைக் கலையில் வல்ல பாணர்கள் சூழ்ந்திருப்பர். 
 • அழகிய நெற்றி கொண்ட அரசியின் கணவன் நீ. 
 • போராற்றல் மிக்க மள்ளர்களிடையே ஆண்சிங்கம் போன்றவன் நீ. 
 • உன் மார்பகம் தூய்மையாக போர்க்காயம் பட்டு ஆறிய தழும்புடன் காணப்படும். 
 • பழிப்பு இல்லாத புகழ்ச்செல்வம் கொண்டவன் நீ. 
 • வானவரம்பன் என்று போற்றப்படுபவன் நீ. 
 • இனியவை பெற்றால் தனித்தனியாக நுகர வேண்டும், எனக்கே தருக – என்று விரும்பாமல் பகுத்து உண்டு நுகரத் தரும் பாங்குள்ள நெஞ்சம் கொண்டவன் நீ. 
 • இது ஆண்மைக் குணம் (ஆளுமைக் குணம்)
 • பிறருக்கு என வாழும் பேராளன் நீ. அப்படித்தான் நீ வாழவேண்டும்.   


பாடல் சொல்-பிரிப்புப் பதிவு
பாடல் 38.

உலகத் தோரே பலர்மன் செல்வர்;
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
வளம் தலை மயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்!
எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின்,       5
தோட்டி தந்த தொடி மருப்பு யானை,
செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல்,
செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே!
பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை!
வாணுதல் கணவ! மள்ளர் ஏறே!             10
மை அற விளங்கிய, வடு வாழ் மார்பின்,
வசை இல் செல்வ! வானவரம்ப!
'இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்,
தருக' என விழையாத் தா இல் நெஞ்சத்து,
பகுத்தூண் தொகுத்த ஆண்மை,              15
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே.  

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்: பரிசிலர் வெறுக்கை         

காப்பியாற்றுக் காப்பியனார்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர வேந்தனைப் பாடிய 10 பாடல்களில் ஒன்று. நான்காம் பத்து
கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி