Thursday, 11 February 2016

கலித்தொகை Kalittogai 16

தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

நீ தூங்காமல் உன் கண்களில் பாசி படிந்து கிடக்கிறது.
உன் தோள்களில் அழகு ஓடிப்போயிற்று. தோள் வளை கழன்று மணிக்கட்டுக்கு வந்துவிட்டது.
விளையாடும் ஒய்யார எழில் உன்னிடம் இல்லை.
உன்னை விட்டுவிட்டுப் போனவரையே நினைத்துக்கொண்டிருக்கிறாய்.
எண்ணிப் பார்த்தேன்.
உனக்கு ஒன்று சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

நீ இங்கு அழகு இழந்து துன்புறுவதை நினைக்காமல் அவர் பொருள் தேட உன்னை விட்டுவிட்டுப் போய்விட்டார். நீயோ, “அவர் செல்லும் வழியில் பொடி சுடாமல் இருக்க மழை பெய்யவேண்டும்” என்று மேகத்தெய்வத்தை வேண்டிக்கொண்டிருக்கிறாய். இது உன் தகுதிக்குப் பொருந்துமா?

அணிகலன் பூண்ட அழகியே! நாம் இங்குப் புலம்பிக்கொண்டிருக்கிறோம். அவர் பொருள் தேடும் போர்முனைக்குச் சென்றிருக்கிறார். அவர் செல்லும் வழியில் கிளையிலுள்ள இலையெல்லாம் வாடாமல் இருக்க அவற்றைக் காய்ச்சாமல் இருக்கும்படி வெயில்-தெய்வத்தை நீ வேண்டிக்கொண்டிருக்கிறாய். இது உன் தகுதிக்குப் பொருந்துமா?

அணிகலன் ஒளி வீசும் தோழி! நாம் இங்குத் துன்புற்றுக்கொண்டிருக்கும்போது, நமக்குத் தம்மைத் தராமல், பொருள் தேட அவர் போயிருக்கிறார். அவர் செல்லும் காய்ந்து கிடக்கும் வழியில் வெயிலின் கொடுமை தணியும்படி குளுமையான காற்றை வீசும்படி காற்றுத்-தெய்வத்தை நீ வேண்டிக்கொண்டிருக்கிறாய். இது உன் தகுதிக்குப் பொருந்துமா?   

பொருள் செய்யவேண்டியதன் சிறப்பினை எண்ணி சென்றவரைக் காப்பாற்றும்படி நீ தெய்த்தை வேண்டுகிறாய். இப்படி வேண்டிக்கொண்டு மயங்குவது உன் தகுதிக்குத் தகாது. நாட்டில் வறட்சி ஏற்பட்டால் மழை பொழியவைக்கும் கற்பினை உடையவள் நீ. இப்படிப்பட்ட கற்பினை உடையவர்கள் மேனிநிறம் மாறி பசப்புநிறம் அடைவார்கள் என்று அறக்கடவுளுக்குத் தெரியும். எனவே அவர் பொருளீட்டும் இடத்துக்கு அறக்கடவுள் சென்று அவரைக் காப்பாற்றும். நீ பிற தெய்வத்தை வேண்டிக்கொள்ளத் தேவையில்லை, - இப்படிச் சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.  
அவன் அவள் தோழி

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 16
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க,
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர,
ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர் திறத்து, இனி
நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன் அதுவும்தான் (தரவு)

தொல் நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து, உள்ளார், 5
துன்னி, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடை,
'கல்மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என,
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ;

புனையிழாய்! ஈங்கு நாம் புலம்புற, பொருள் வெஃகி,
முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை,         10
'சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக!' என,
கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?

ஒளியிழாய்! ஈங்கு நாம் துயர் கூர, பொருள்வயின்,
அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இடை,
'முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக!' என,            15
வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ? (இவை மூன்றும் தாழிசை)

என ஆங்கு, (தனிச்சொல்)

செய் பொருட் சிறப்பு எண்ணிச் செல்வார்மாட்டு, இனையன
தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் தேமொழி!
'வறன் ஓடின் வையத்து வான் தரும் கற்பினாள்     20
நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு' என,
அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினைத் திறத்தே (சுரிதகம்)
  • பாடின்றிதலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து அவன் போகிய காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைமகள் அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நங்கற்புக்கு இயைவதோவென, கேட்ட தோழி அவ்வாற்றானே மீண்டனர் நீ கவலவேண்டாவெனக் கூறியது.     
No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி