Monday, 29 February 2016

பதிற்றுப்பத்து PatitrupPattu 43

செங்குட்டுவன் இமயம்-குமரி இடைப்பட்ட நாடுகளை வென்றான். யாழிசை வயிரியர் சுட்ட புலவை உண்டதோடு ஏணித்தூக்கிலும் கொண்டுசென்றனர். இன்னின்னாருக்கு இன்னின்ன பரிசு என்று முரசு முழங்கி வழங்கினான்.
இக்காலக் கவரி (சவரி) முடி
அக்காலத்தில்
கவரிமான் மயிராலான முடி
 
1
கவரிமான் மயிர்முடிச்சை இக்காலத்தில் ‘சவரி’ என்பர். மகளிர் விரிந்த கூந்தலில் கவரி வைத்துப் பின்னி உச்சிக் கொண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தனர். முச்சி = தலை உச்சிக் கொண்டை
2
அங்கே மதம் பிடித்த யானைக் கூட்டம் வருவதுண்டு. அங்குப் பழக்கி வைக்கப்பட்டிக்கும் பெண்யானையின் காதல் வலையில் ஆண்யானைகள் விழும். அவற்றைப் பாகர் பிடித்துக்கொள்வர். இப்படிப் பிடிபடும் யானைகள் எண்ணமுடியாதனவாக இருந்தன.
3
சிவன் கடவுள் நிலைகொண்டிருக்கும் ஓங்கி உயர்ந்த கல்மலை இமயம் வடதிசையின் எல்லையாக உள்ளது. தென்திசையில் குமரித்தெய்வம் காக்கும் கடல் உள்ளது. இவற்றுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் ஆளும் மன்னர்களை முரசு முழக்கத்துடன் தாக்கி வென்றழித்த பெரும்படைக் குட்டுவன் இவன்.கடுக்கை மலர்
கொன்றை மலர்
சரக்கொன்றை மலர்
உழவர்
கடியேர் (நல்லேர்)
பூட்டி உழும்போது
இந்த மலரைச்
சூடிக்கொள்வர்
4
வளமான பண்ணைவயல்கள் காயும்படியும், மலைக்குன்றுகள் வறண்டு போகும்படியும், அருவிகள் நீர்வற்றிப் போகும்படியும் வெயில் கொளுத்தும் காலத்தில், பேராற்று (இக்காலத்தில் பெரியாறு) வெள்ளம் கரை உடையப் பாய்ந்து, உழவர் கடுக்கை மாலை (கொன்றை மாலை) சூடிக்கொண்டு கடியேர் (நல்லேர்) பூட்டி உழும்படி வானம் மழை பொழிவது போல,
5
உறுவர் (துன்புற்றவர்) நிறைவடையும்படி உணவளித்து உடனிருந்து உண்டான். நகைவர் (நண்பர்) நிறைவடையும்படி நல்ல அணிகலன்களை வழங்கினான். யாழிசைக்கேற்பக் குரலெழுப்பிப் பாடும் விறலியர்களுக்குப் பெண்யானைகள் பல பெறுக. உழிஞைப்பூச் சூடிப் போரிட்டு வாகைப்பூ சூடி மீண்ட மள்ளர் கொல்லும் ஆற்றலுள்ள யானைகள் பெறுக. தெருக்களிலும், போர்க்களத்திலும் நுழைந்து வீரர்களுக்கு ஊக்கம் தந்து பாடும் ‘அகவலன்’ குதிரைகள் பெறுக. – என்றெல்லாம் பறைசாற்றினான்.
6
இப்படிப் பறைசாற்றிக்கொண்டு போரிட்டான். அப்போது பகைவரும் செங்குட்டுவனைப் புகழ்ந்தனர். இந்தப் புகழோடு முரசை முழக்கினான். கற்பகமரம் (கற்ப) போல மக்கள் விரும்பியதெல்லாம் கொடுத்தான். இப்படி வழங்கிய கற்ப! உன்னையும் பார்க்கிறேன்.ஏறா ஏணி (தோள் மாட்டி) 
7
உண்ணுவதற்காகப் புலால் கறித்துண்டங்களைச் சுடும் புகை கமழ்ந்தது. உணவுப் பண்டம் சுடச்சுட ஏறா ஏணியிலும் (தோள்மாட்டி முடிச்சிலும்) வழங்கப்பட்டது. தசும்பு மொந்தையில் இருக்கும் கள் பருகத் தரப்பட்டது. இப்படி இருக்கும் உன் மன்றத்தையும் பார்க்கிறேன். – உன்னையும், உன் மன்றத்தையும் பார்க்கிறேன் என்று புலவர் விளித்துப் பாராட்டுகிறார்.

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு
பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்து பாடல் 43
1
கவரி முச்சிக் கார்விரி கூந்தல்
ஊசல் மேவல் சேய்இழை மகளிர்
2
உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்
பெரும்கை மதமாப் புகுதரின் அவற்றுள்
விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெறாஅக்    5
3
கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமய மாகத்
தென்னங் குமரியொ(டு) ஆயிடை அரசர்
முர(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த 10
போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
4
இரும்பணை திரங்கப் பெரும்பயல் ஒளிப்பக்
குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ
அருவிஅற்ற பெருவறல் காலையும்
அருஞ்செலல் பேராற்(று) இருங்கரை உடைத்துக் 15
கடிஏர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்(து)
ஆர்கலி வானம் தளிசொரிந் தாஅங்(கு)
5
உறுவர் ஆர ஓம்பா(து) உண்டு
நகைவர் ஆர நன்கலம் சிதறி  20
ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல்
பாடு விறலியர் பல்பிடி பெறுக
துய்வீ வாகை நுண்கொடி உழிஞை
வென்றி மேவல் உருகெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக     25
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும்
6
இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்     30
தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே
ஏணை
7
நிணம்சுடு புகையொடு கனல்சினந்(து) அவிராது
நிரம்(பு)அகல்(பு) அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடி(து)இராத் தசும்பின் வயிரியர்
உண்(டு)எனத் தவாஅக் கள்ளின்    35
வண்கை வேந்தேநின் கலிமகி ழானே. (43)

பெயர்: ஏறாவேணி
துறை: இயன்மொழிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு

(காசறு செய்யுள்) பரணர்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்னும் சேர வேந்தனைப் பாடிய 10 பாடல்களில் ஒன்று. ஐந்தாம் பத்து
கி.மு. காலத்துப் பாடல்


Sunday, 28 February 2016

பதிற்றுப்பத்து PatitrupPattu 42

தையல் போட்டுப் போர்த்தழும்பு ஆறியவர்களின் நண்பன். நல்லவளின் கணவன். பாணர் வாழ இவன் வழங்கிய குதிரை கடலலைப் பிசிரைக் காட்டிலும் அதிகம். – இவ்வாறு செங்குட்டுவன் போற்றப்படுகிறான்.
உடம்பில் தையல்
உடம்பில் தைத்தல்
மணிச்சிரல் | மீன் கொத்திப் பறவை
மணிச்சிரல் பறத்தல்
1
பனம்பூ மாலை அணிந்தவன். மழையைப் போன்று கொடை வழங்குவதைக் காப்பாகக் கட்டிக்கொண்டவன். நீருக்குள் மூழ்கி மீனை எடுத்துக்கொண்டு வரும் சிரல் பறவை போல, நெஞ்சில் காயம் பட்ட இடத்தில் ஊசியை நுழைத்து வெளியில் எடுத்துத் தையல் போட்டுக் காயம் ஆறிய தழும்புகளை மார்பில் கொண்ட உடம்பினர் அல்லது வேறு சேர்த்தாளிகள் இல்லாதவன். தும்பைப் பூச் சூடிப் போர் புரியாமலேயே வாகைப்பூ சூடியவர்களை நண்பர்களாகக் கொண்டவன். நல்ல முகவெட்டு கொண்டவளின் கணவன்.
நுதல் = நெற்றி, ஆகுபெயராக முகத்தை உணர்த்தியது.
வாகை = வெற்றி
வடு = தழும்பு
சிரல் = மீன்கொத்திப் பறவை
கழல் = காப்பு
2
தலைமையான யானைமீதேறிப் போரிடுபவன். மதில்வெற்றிப் பூக்களையும், பச்சையான (வாடாத) பூக்களையும் கலந்து கட்டிய மாலையைத் தன் படைவீரர்களுக்கு அணிவிப்பவன். இனிய குழம்பாக விளைந்து, மணி போல் நீல நிறத்துடன் இருக்கும் மட்டம் என்னும் கள்ளை அவர் மகிழும்வண்ணம் கையிருப்பு வைத்துக்கொள்ளாமல் வழங்குபவன்.
3
யாழிசைப் பாணர் நல்வாழ்வுக்காக நன்னடை போடும் குதிரைகளை வழங்கியவன். அந்தக் குதிரைகளை எண்ணிக் கணக்கிட்டால், கடலலை உடைந்து விசிறும் சீர்த்துளிகளைக் காட்டிலும் அதிகம்.
4
உலகம் வியக்கும்படி, எதிரி அரசர்களைக் கொன்றுவிட்டுப் போராளிகளுடன் நீ திரும்புவதைக் காண்பதற்கு, யானைமீதும், தேர்மீதும், மானமுடைய மைந்தர் புடைசூழ, உலகமே உன்னை மொய்த்துக்கொண்டு எதிர்கொள்ளும்.
5
கடல் அலையில் வெள்ளைத்-தலை உடைந்து சிவப்புத் துளிகள் விசிறப்படுவதைப் காட்டிலும் நீ பாணர்க்கு வழங்கிய குதிரைகள் அதிகம், (கடல்-போரால் கலந்த குருதி கடல்நீரைச் செந்நிறமாக்கியது)

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு
பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்து பாடல் - 42
1
இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்
மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த வடுஆழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது     5
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நல்நுதல் கணவ
2
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ
மைந்(து)உடை நல்அமர்க் கடந்து வலம்தரீ
இஞ்சிவீ விராய பைந்தார் சூட்டிச்   10
சாந்துபுறத்(து) எறித்த தசும்புதுளங்(கு) இருக்கைத்
தீம்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து
3
கோடியர் பெரும்கிளை வாழ (டு)இயல்
உளைஅவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்  15
4
மன்பதை மருள அரசுபடக் கடந்து
முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்
ஒளிறுநிலை உயர்மருப்(பு) ஏந்திய களி(று)ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
தேரொடு சுற்றம் உல(கு)உடன் மூய 20
5
மாஇருந் தெள்கடல் மலிதிரைப் பெளவத்து
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண்பல வரூஉம் புணரியின் பலவே. (42)

பெயர்: தசும்புதுளங்(கு) இருக்கை
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு

(காசறு செய்யுள்) பரணர்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்னும் சேர வேந்தனைப் பாடிய 10 பாடல்களில் ஒன்று. ஐந்தாம் பத்து
கி.மு. காலத்துப் பாடல்


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி