Monday, 22 June 2015

புறநானூறு 393

பாம்பின் பிளவு பட்ட நாக்கு
இந்த நாக்கு போல் புலவர்
ஆடை கிழிந்திருந்ததாம் 
ஊர் மக்களோடு சேர்ந்து பழகமுடியாத நிலையில் புலவர் துன்பப்பட்டுக்கொண்டிருந்தார். சிறியனவும் பெரியனவுமான கழிகளால் கட்டப்பட்டிருந்த அவரது வீட்டுக்கூரை [கூமை] இடிந்து விழுந்துவிட்டது. தன் வீட்டுப் பானையில் இட்டுச் சமைக்க அரிசி கிடைக்குமா என்று வீடு வீடாகச் சென்று கடன் கேட்டார். தருவார் யாரும் இல்லை. எனவே கொடை வழங்கும் வள்ளல் யார் எனத் தேடிக்கொண்டு அலைந்தார். அப்போது அவருக்குத் துணையாக இருந்தது நப்பாசை ஒன்றுதான்.
அரசே! மலர்தார் மார்ப! உன் புகழைக் கேள்விப்பபட்டு உணவு உண்ட ஈரக் கையே மறந்துபோன என் சுற்றத்தாரோடு வந்திருக்கிறேன்.
நீ எனக்குப் பரிசில் நல்கவேண்டும். என் வறுமைத் துன்பம் நீங்கவேண்டும். கொழுத்த கறியைக் கிழித்து உண்ணவேண்டும். வீடு நிறைய பருத்தி மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பது போல் கொழுப்பு மூடிக்கிடக்கும் கறியை உண்ணவேண்டும். பாம்பு நாக்குப் பிளவுபட்டிருப்பது போல் கிழிந்திருக்கும் என் ஆடையை நீக்கிவிட்டுப் பகன்றைப் பூப் போன்ற வெண்ணிறப் புத்தாடை நல்கவேண்டும். அத்துடன் கெடுதல் இல்லாத செல்வமும் நல்கவேண்டும்.
நிலாவைப் போல உருவம் கொண்ட கிணைப்பறையை முழக்கிக்கொண்டு ஆடுமகள் ஆடுவாள். அவள் இடை போல, கோடைக்காலத்தில் நிலம் வறண்டுபோகும். அப்படிப்பட்ட கோடைக்காலத்திலும் காவிரி உன் நாட்டைக் காப்பாற்றும். அப்படிப்பட்ட காவிரிநாட்டுக்கு நீ தலைவன். உன் வாள்வீச்சுத் திறனால் ‘வாய்வாள் வளவன்’ என்று போற்றப்படுபவன். நீ நீடூழி வாழ்க. வாழ்க என்று நான் பாடுவேன். நீ வழங்குக. – இவ்வாறு புலவர் வேண்டுகிறார்.
செங்கைப் பொதுவன் விளக்கம்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின்,
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி,
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்,                   5
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என,
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா,
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென,
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி,
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்    10
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப,
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன,
வெண் நிண மூரி அருள, நாள் உற
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என்     15
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி,
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன,
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும்,
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல்
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,           20
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி,
'கோடை ஆயினும், கோடி...............................
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந!
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப்
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே.             25

திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி