Wednesday, 10 June 2015

புறநானூறு 372

போர்க்களம்
தலையாலங்கானம் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் வெற்றி கண்ட நெடுஞ்செழியன் தன் மார்பில் நிலாப் போல ஒளி வீசும் ஆரம் அணிந்திருந்தான். போர்க்களத்தில் அவனைக் கண்டு பாடிய புலவர் மாங்குடி மருதனார் அந்த ஆரத்தைப் படிசாகக் கேட்டார். (அவனும் வழங்கினான்).
கயிற்றால் விசித்துக் கட்டிய தடாரிப்பறை ‘விம் விம்’ என்று ஒலிக்கும்படி முழக்கி உன்னைப் புகழ்ந்து பாடிக்கொண்டு உன் ஆரத்தைப் பெற வந்திருக்கிறேன்.
  • நீ புலால் நாறும் களத்தில் வேள்வி செய்துகொண்டிருக்கிறாய்.
  • வாள் மின்னுகிறது.
  • அம்பு மழை கூடாரமாக உள்ளது.
  • பகைவர் தலைகளை வெட்டி கல்லெனக் கொண்டு அடுப்புக் கல்லாக ஆக்கிக்கொண்டுள்ளாய்.
  • பிணத்தின் கைகால்களை எரியும் வில்வமர விறகாக ஏற்றியுள்ளாய்.
  • உடலில் வரிந்துகொண்டுள்ள கொழுப்பில் கஞ்சி காய்ச்சுகிறாய்.
  • ஈரம் புலராத மண்டை ஓடு உணவு சமைக்கும் பாண்டம்.
  • கொதிநெருப்பில் இட்டுத் துளாவிப் பேய்மகள் சமைக்கிறாள்.
  • விலங்குக் கறிகளை மறித்துக் கூறுகூறாக்கி வழங்கும் சமையல்காரனாக நீ இருக்கிறாய்.
  • பூதங்களுக்குச் செய்யும் திருமண விழாவுக்கு வந்தவர்களுக்கெல்லாம் இப்படிச் சமைத்த உணவை வழங்குகிறாய்.
இந்த இடத்துக்கு வந்து உன்னை வேண்டுகிறேன். நிலாப் போல ஒளிறும் உன் ஆரத்தை எனக்குப் பரிசாக வழங்குக.
அருஞ்சொல்
ஈனா வேண்மாள் = பேய்
கண்கூடு பாசறை = மண்ணைப் பறிக்கும் பாடிவீடு
கூவிளம் = வில்வமரம், (பிணத்தின் கைகால்)
நுடங்கல் = கஞ்சி
பூதநீர் = குருதி
முழுத்த = கூர்மையில் முழுமை பெற்ற
வன்னி = கொதிநெருப்பு
வாலுவன் = சமையல்காரன்
செங்கைப் பொதுவன் விளக்கம்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி,
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை,
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்,         5
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்,
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின்,
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த,
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் 10
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப்
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே.

திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை மாங்குடி கிழார் பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி