Monday, 8 June 2015

புறநானூறு 367

படம் மூவேந்தர் போர்க்கோலம்
பாடல் மூவேந்தர் நட்பு
மூவேந்தரும் சேர்ந்திருந்த காட்சியைக் கண்டு ஔவையார் வாழ்த்துகிறார்.
பார்ப்பார் முத்தீ வளர்ப்பர். (சமையல் தீ, வேள்வித் தீ, விளக்குத் தீ) இந்த மூன்று தீயும் ஓரிடத்தில் இருப்பது போல மூன்று வேந்தர்களும் ஓரிடத்தில் இருக்கிறீர்கள். வெற்றி [கொற்றம்] நிழல் தரும் வெண்கொற்றக் குடை உடையவர்கள் நீங்கள். ஒருங்கிருக்கும் உங்களது வாழ்நாள் பெருகவேண்டும். 
  • வானத்து மீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருக வேண்டும். 
  • ‘இம்’ என்று பொழியும் மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருகவேண்டும்.   
நில உலகினைச் சூழ்ந்துள்ள மண்டிலம் தேவருலகம் போல இனிமையானது. அது ஞாயிறு, திங்கள் இரண்டுக்கும் உரிமையானது. என்றாலும் இந்த இரண்டு சுடர்களும் இணைந்து செல்வதில்லை. நீங்களோ மூவரும் இணைந்து காட்சி தருகிறீர்கள். இது பெரும்பேறு.
இந்த உலகம் ஆளும் உங்களுடையதுதான். என்றாலும் அது நோன்பு இயற்றியவர்களுக்கே உரியது. நீங்கள் பார்ப்பார்க்கு வழங்க வேண்டும். ஏந்தி நிற்கும் அவர்களின் கையில் பூவும் பொன்னும் வழங்க வேண்டும். நீர் ஊற்றித் தாரை வார்த்து வழங்க வேண்டும்.
மகளிர் பொன்-கிண்ணத்தில் தரும் தேறலைப் பருகவேண்டும்.
இரவலர்களுக்கும் அரிய அணிகலன்களை வழங்கவேண்டும். தனக்கென வைத்துக்கொள்ளாமல் வழங்கவேண்டும்.
உங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் எல்லாம் வழங்கவேண்டும்.
இவ்வாறு வாழ்ந்து உங்கள் வாழ்நாள் பெருகவேண்டும்.
பிறரை வாழச்செய்வதுதான் நல்வினை. இந்த நல்வினை உங்களை ஏற்றிச் செல்லும் மிதவையாக உதவும். வாழ்க்கைத் துன்பத்தில் மூழ்கும்போது உதவும். இந்த நல்வினை போல வாழ்க்கைக்கு இன்பம் தந்து உதவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.
செங்கைப் பொதுவன் விளக்கம்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,           5
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது        10
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இதுவே: வானத்து      15
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மா மழை உறையினும்,
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே!

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி