Monday, 1 June 2015

புறநானூறு 348

இந்தத் தேன்கூடு அரச மரத்தில் கட்டப்பட்டுள்ளது
பாடலில் பனைமரத்தில் கட்டப்பட்டுள்ள தேன்கூடு குறிப்பிடப்படுகிறது.
நெல் அறுக்கும்போது தண்ணுமை-மேளம் கொட்டுவர். அதன் ஓசை அதிர்வால் கண்ணகன்ற பனைமடலில் கட்டியிருந்த தேன்கூடு கிழியும். அதில் ஒழுகும் தேன்-கள்ளைப் பானையில் பிடித்துக்கொள்வர். அங்குள்ள வீடுகளில் வயலில் பிடித்த மீன்களின் செதிளைச் சீவுவர். இப்படிப்பட்ட நன்செய்-நில வளம் மிக்க ஊர் ஊணூர் [ஊண் = உணவு]. அதன் அரசன் தழும்பன். தழும்பன் சொன்னசொல் தவறாமல் வழங்குபவன்.
அவள்
  • அவள் குவளை மலரைத் தின்பது போல அழகான கண் கொண்டவள். இவளை இவளது தாய் பெற்றிருக்காவிட்டால் இங்கே இது நிகழாதே!
  • ஊரிலுள்ள நிழலிலெல்லாம் தேர்கள் நிற்கின்றனவே!
  • மேலும் அங்குள்ள துறைகளில் உள்ள மரங்கள் எல்லாம், குருதியால் செந்நிறம் கொண்ட யானைகள் கட்டப்பட்டு மரங்கள் வருந்துகின்றனவே!
இனி நிகழப்போகும் போர் மூளாமல் இருக்குமே!
செங்கைப் பொதுவன் விளக்கம்

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ,
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய,
கள் அரிக்கும் குயம், சிறு சில்
மீன் சீவும் பாண் சேரி,
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,      5
குவளை உண்கண் இவளை, தாயே
ஈனாளாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும்,
செந் நுதல் யானை பிணிப்ப,
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே!       10

திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
பரணர் பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி